Results 1 to 10 of 123

Thread: அந்த நாள் ஞாபகம்...

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அந்த நாள் ஞாபகம்- தொடர்ச்சி

    அடுத்த கட்டமாக இரண்டு படங்களின் சாதக பாதகங்களை பற்றிய விவாதம் ஆரம்பித்தது. தேவர் சில வருடங்களுக்கு முன் தமிழில் தயாரித்த {வெற்றிப் பெறாத) தெய்வச் செயல் படத்தை ஒரு சில மாற்றங்களோடு இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயரில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க, அது ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது. அதையே தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து நல்ல நேரம் என்று எடுத்தார்

    ஏற்கனவே வேற்று மொழியில் வெற்றி பெற்ற படம். அதுவும் தவிர எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர் முதன் முறையாக கலர் படம் எடுக்கிறார். [ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த கடைசி கலர் படமும் இதுதான். இதற்கு பிறகு தேவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை].

    இந்த பக்கத்தில் ஞான ஒளி மேஜர் நாடக குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு பிரபலமானது. நாடகத்தை பார்த்தவர்கள் கதை அம்சத்தை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வியட்நாம் வீடு படத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்காக சுந்தரம் கதை வசனம் எழுதிய படம். பி.மாதவன் இயக்கம். ஆனால் கருப்பு வெள்ளை படம். மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ். ராஜாவிற்கும் இந்த படத்திற்கும் 45 நாட்கள் தான் இடைவெளி.

    நான் தெய்வ செயல், ஹாத்தி மேரா சாத்தி இரண்டுமே பார்த்தேன். ஆனால் ஞான ஒளி நாடகம் பார்க்கவில்லை.

    இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். படம் வெளியானது மார்ச் 11 சனிக்கிழமை. மார்ச் 13 திங்கள்கிழமை முதல், ஆண்டு தேர்வுகள் [annual exams]ஆரம்பம். அதற்கு முன்னோடியாக சனிக்கிழமை அன்று டிராயிங் [drawing] தேர்வு. ஆக ஓபனிங் ஷோ மட்டுமல்ல, படமே எக்ஸாம்ஸ் முடியும் வரை பார்க்க முடியாது. என் கசினுக்கு பிரச்சனையில்லை. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எளிதாக செல்ல முடியும். அந்த காலக் கட்டங்களில் எப்போதுமே ஒரு படம் வெளியாகும் நேரம் நெருங்க நெருங்க படத்தை பற்றி வெளி வரக் கூடிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பேசப்படும். இது போன்ற செய்திகளை என் கஸின் எனக்கு சொல்லுவான். அப்படிப்பட்டச் செய்திகளில் ஒன்று தான் சென்னையில் ஞான ஒளி ஐந்து அரங்குகளில் திரையிடப்படும் செய்தி. நாங்கள் முதன் முறையாக இப்படிப்பட்ட சாதனை நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது இந்த சாதனையை நடிகர் திலகமே 1954-ம் ஆண்டில் எதிர்பாராதது படம் மூலமாக செய்திருக்கிறார் என்று.

    நல்ல நேரம் வெளியானது. படத்திற்கு Divided Opinion. அதாவது யானைகள் வரும் காட்சிகள், அவை செய்யும் சில சாகசங்கள் என்று அமைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் நாயகனின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டன என்று தீவிர ரசிகர்கள் குறைப்பட்டார்கள். பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கருத்து வந்தது.

    மறு நாள் ஞான ஒளி வெளியானது. நான் தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டேன். எங்கள் வீடு சென்ட்ரல் மற்றும் நியூ சினிமா இடையில் அமைந்திருக்கும். திடீரென்று சரவெடி பட்டாசு சத்தம். ஓடி சென்று பார்த்தால் ஓபனிங் ஷோ காலைக் காட்சி முடிந்து மக்கள் வெளியே வருகிறார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அணை உடைந்து பாயும் மகிழ்ச்சி ரசிகர்கள் மத்தியில். விசில், வாழ்க கோஷம் முதலியன உச்ச ஸ்தாயில் ஒலிக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த என் கஸின் சொன்னது நடிப்பு + ஸ்டைல் - பிச்சு ஒதறிட்டார். அவன் முக்கியமாக சொன்ன மற்றொரு விஷயம் வசனம். அதாவது ஆண்டனி மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் One upmanship போட்டியில் பேசப்படும் வசனங்கள். ஏற்கனவே பார்க்க முடியவில்லையே என்று இருந்த என்னை மேலும் ஏங்க வைத்தன அவனது வார்த்தைகள்.

    மாலையில் சுமார் 5 மணி அளவில் வேறொரு வேலையாக டவுன் ஹால் ரோடு சென்ற நாங்கள் இருவரும் அவனது நண்பர் ஒருவரை (சொல்லாமலே தெரிந்திருக்கும் சந்தித்தவர் சிவாஜி ரசிகரென்று) பார்த்தோம். அவரும் படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். என் கசினிடம் படத்தைப் பற்றி கேட்டார். நைட் ஷோ போகப் போவதாகவும் மாலை சுமார் 7 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டிக்கெட் கிடைக்காது? என்று அவர் கேட்க, ட்ரை பண்ணுங்க என்றான் என் கஸின். இந்த நிகழ்வெல்லாம் என் ஏக்கத்தை அதிகரித்தது.

    நான் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் மார்ச் 26 அன்று ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தேன். அப்போதும் படத்திற்கு பெரிய ஆரவாரம். குறிப்பாக பிரசவத்தின் போது மனைவி இறந்து போன செய்தி வரும்போது எந்த வசனமும் இல்லாமல் அந்த முகத்தின் தசைகள் மட்டுமே துடிக்கும் காட்சி, யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப் போவதை எண்ணி குமுறும் சீன், அதன் பிறகு தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சி. குறிப்பாக நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே என்ற வரிக்கு முன்னால் வரும் நடைக்கும் அந்த போஸிற்க்கும் தியேட்டர் அலறியது. அந்தோனி, அருணாக மாறிய பின் வரும் ஒவ்வொரு ஸ்டைல்- கும் பெரிய ஆரவாரம். படத்தில் ஒரு சில அரசியல் பொடிகள் வரும். இறந்து போன பாதிரியார் சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது அருணாக வரும் நடிகர் திலகம் சொல்லுவார். "மறைந்து போன தலைவர்கள் சொன்ன நல்ல கொள்கைகளை கடைப்பிடிப்பது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. சிலை வைப்பது அல்ல". இது அன்று தமிழகத்தில் நிலவிய சிலை வைக்கும் obsession-ஐ குறித்ததால் தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.

    இப்படியாக படம் பார்த்தேன். படம் ஓடி முடிப்பதற்குள் மொத்தம் மூன்று முறை பார்த்தேன்.

    அன்புடன்

  2. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •