-
1st May 2014, 12:57 AM
#2551
அந்த நாள் ஞாபகம்
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014 12:57 AM
# ADS
Circuit advertisement
-
1st May 2014, 12:58 AM
#2552
அந்த நாள் ஞாபகம் - தொடர்ச்சி.
நடிகர் திலகம் படங்களின் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதுங்கள் என்று சொன்னபோது, அதை பற்றி மட்டும் எழுதாமல் தொடர்ச்சியாக வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அந்த படங்கள் வெளியான காலக் கட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் எழுதியிருந்தேன். அது ராஜா வரை வந்து நின்றது. அதன் பின் வெளியான படங்களை பற்றியும் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். அதை ஒரு சில பாகங்களாக (அதாவது நேரம் கிடைக்கும் போது) எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் ஒரு சின்ன குறிப்பு. அந்த காலக் கட்டத்தைப் பற்றி எழுதும் போது ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட வேண்டிய சூழல் வரும். அது நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமே தவிர, உயர்த்துதல், தாழ்த்துதல் என்ற அளவிற்கு போகாது. இனி விட்ட இடத்திற்கு, அதாவது 1972 -ம் ஆண்டுக்கு செல்வோம்.
ராஜா ஒரு மிகப் பெரிய வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. அது வரை பாலாஜி எடுத்த படங்களிலே மிக பெரிய வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் தடவையாக படம் வெளியான ஐந்து வாரங்களில் நான் ஐந்து முறை பார்த்த படம். சிவாஜி ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த நேரம். காரணம் போட்டியில் தொடர்ந்து இரண்டு படங்கள் ஜெயித்த சந்தோஷம். 1971-ம் வருட தீபாவளியன்று பாபுவும், நீரும் நெருப்பும் வெளியானது. அதில் பாபு வெற்றி. 1972 -ல் ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஒரு வாரம் கழித்து பிப் 4 அன்று சங்கே முழங்கு வெளியானது. ராஜா மிகப் பெரிய வெற்றி. அந்த நேரத்தில் அடுத்த படமும் போட்டியில் தான் வெளியாகப் போகிறது என்றவுடன் த்ரில் + எதிர்பார்ப்பு. ஆம், ஞான ஒளியும் நல்ல நேரமும் போட்டி போடப் போகின்றன என்ற சேதி வருகிறது.
இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 1971 அக்டோபர் 18 தீபாவளியன்று ரிலீஸான பாபுவும், நீரும் நெருப்பும் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் கடைசியாக ஒரே நாளில் வெளியான படங்கள். அதற்கு பிறகு இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவில்லை. மிக கிட்டத்தில் வெளியானது என்று சொன்னால் அது ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள் தான்.
1972 -ம் வருடம் மார்ச் 10ந் தேதி வெள்ளிக்கிழமை நல்ல நேரம் ரிலீஸ். மறு நாள் 11ந் தேதி சனிக்கிழமை ஞான ஒளி ரிலீஸ். இதற்கு பிறகு நெருங்கிய இடைவெளி என்றால் 1975 -ம் வருடம் அக்டோபர் 31 வெள்ளியன்று பல்லாண்டு வாழ்க வந்தது, இரண்டு தினங்கள் கழித்து நவம்பர் 2 தீபாவளியன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. அது போல் 1974 -ம் வருடம் நவம்பர் மாதம் 7ந் தேதி உரிமை குரல் வெளியானது. 6 நாட்களுக்கு பிறகு 13ந் தேதி தீபாவளியன்று அன்பை தேடி ரிலீஸ் ஆனது. மற்ற நேரங்களில் இருவர் படங்களுக்கும் இடைவெளி இருந்தது.
மீண்டும் 1972-க்கு வருவோம். சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை குறிப்பிட்டேன். மதுரை சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்துவது போல சில நிகழ்வுகள் நடந்தன. சங்கே முழங்கு பிப் 4 அன்று மதுரை சிந்தாமணியில் வெளியானது. அந்த நேரத்திலே நல்ல நேரம் விளம்பரம் வருகிறது. மார்ச் 10 முதல் என்று. அதுவும் மதுரை சிந்தாமணியில் என்று. எங்களுக்கு சந்தோஷம் அதிகமானது. அந்த நேரத்தில் ராமன் தேடிய சீதை ஏப்ரல் 14 முதல் ரிலீஸ் என்று விளம்பரம். அதுவும் மதுரை சிந்தாமணி. இது அனைத்தும் அறிவித்தபடி ரிலீசானால் சங்கே முழங்கு 35 நாட்களில் மாற்றப்படும், நல்ல நேரம் அதே 35 நாட்களில் தூக்கப்படும்.
இதைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்செட் ஆகி இதை மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு உதவவில்லை. சங்கே முழங்கு வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம். ஆகவே ரிலீஸ் மாற்ற முடியாது. நல்ல நேரம் தேவர் படம். அவரிடம் சென்று தேதியை மாற்றுவது என்பது impossible. ராமன் தேடிய சீதையோ 1970 -ம் வருடம் மாட்டுக்கார வேலன் வெளி வந்த உடனே அதே தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ் ஆரம்பித்த படம். 1971 பொங்கலன்று வெளி வருவதாக விளம்பரம் செய்ப்பட்ட படம். ஆனால் டிலே ஆகி கடைசியாக 1972 -ம் வருடம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் முடிவு செய்யப்பட்டது. தவிரவும் மாட்டுக்கார வேலன் சிந்தாமணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் சென்டிமென்டாக அவர்கள் சிந்தாமணியில் தான் திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆகவே அவர்களும் மாற்ற தயாரில்லை. தவிரவும் இந்த பிரச்சனை மதுரையில் மட்டுமே இருந்தது. ஒரு ஊரில் ஏற்படும் சிக்கலுக்காக மொத்த ரிலீசையும் தள்ளி போட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.
பிறகு நல்ல நேரத்தின் மதுரை விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அந்த படத்தை சிந்தாமணியில் இருந்து மாற்றி வேறு தியேட்டர் தேட ஆரம்பித்தார்கள். மெயின் தியேட்டர்கள் எல்லாம் ஏற்கனவே புக்ட் [booked]. சென்ட்ரலில் ராஜா ஓடிக் கொண்டிருக்கிறது. தேவியில் அகத்தியர் ஓடிக் கொண்டிருக்கிறது. நியூசினிமாவில் ஞான ஒளி வெளியாக போகிறது. சிந்தாமணிதான் பிரச்சனை. கடைசியில் அலங்கார் தியேட்டர் புக் செய்யப்பட்டது. ரசிகர்கள் அவ்வளவாக திருப்தி படவில்லை என்பதால் மூவிலாண்ட் [பின்னாளில் ஜெயராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது] அரங்கமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 12:59 AM
#2553
அந்த நாள் ஞாபகம்- தொடர்ச்சி
அடுத்த கட்டமாக இரண்டு படங்களின் சாதக பாதகங்களை பற்றிய விவாதம் ஆரம்பித்தது. தேவர் சில வருடங்களுக்கு முன் தமிழில் தயாரித்த {வெற்றிப் பெறாத) தெய்வச் செயல் படத்தை ஒரு சில மாற்றங்களோடு இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயரில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க, அது ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது. அதையே தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து நல்ல நேரம் என்று எடுத்தார்
ஏற்கனவே வேற்று மொழியில் வெற்றி பெற்ற படம். அதுவும் தவிர எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர் முதன் முறையாக கலர் படம் எடுக்கிறார். [ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த கடைசி கலர் படமும் இதுதான். இதற்கு பிறகு தேவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை].
இந்த பக்கத்தில் ஞான ஒளி மேஜர் நாடக குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு பிரபலமானது. நாடகத்தை பார்த்தவர்கள் கதை அம்சத்தை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வியட்நாம் வீடு படத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்காக சுந்தரம் கதை வசனம் எழுதிய படம். பி.மாதவன் இயக்கம். ஆனால் கருப்பு வெள்ளை படம். மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ். ராஜாவிற்கும் இந்த படத்திற்கும் 45 நாட்கள் தான் இடைவெளி.
நான் தெய்வ செயல், ஹாத்தி மேரா சாத்தி இரண்டுமே பார்த்தேன். ஆனால் ஞான ஒளி நாடகம் பார்க்கவில்லை.
இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். படம் வெளியானது மார்ச் 11 சனிக்கிழமை. மார்ச் 13 திங்கள்கிழமை முதல், ஆண்டு தேர்வுகள் [annual exams]ஆரம்பம். அதற்கு முன்னோடியாக சனிக்கிழமை அன்று டிராயிங் [drawing] தேர்வு. ஆக ஓபனிங் ஷோ மட்டுமல்ல, படமே எக்ஸாம்ஸ் முடியும் வரை பார்க்க முடியாது. என் கசினுக்கு பிரச்சனையில்லை. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எளிதாக செல்ல முடியும். அந்த காலக் கட்டங்களில் எப்போதுமே ஒரு படம் வெளியாகும் நேரம் நெருங்க நெருங்க படத்தை பற்றி வெளி வரக் கூடிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பேசப்படும். இது போன்ற செய்திகளை என் கஸின் எனக்கு சொல்லுவான். அப்படிப்பட்டச் செய்திகளில் ஒன்று தான் சென்னையில் ஞான ஒளி ஐந்து அரங்குகளில் திரையிடப்படும் செய்தி. நாங்கள் முதன் முறையாக இப்படிப்பட்ட சாதனை நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது இந்த சாதனையை நடிகர் திலகமே 1954-ம் ஆண்டில் எதிர்பாராதது படம் மூலமாக செய்திருக்கிறார் என்று.
நல்ல நேரம் வெளியானது. படத்திற்கு Divided Opinion. அதாவது யானைகள் வரும் காட்சிகள், அவை செய்யும் சில சாகசங்கள் என்று அமைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் நாயகனின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டன என்று தீவிர ரசிகர்கள் குறைப்பட்டார்கள். பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கருத்து வந்தது.
மறு நாள் ஞான ஒளி வெளியானது. நான் தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டேன். எங்கள் வீடு சென்ட்ரல் மற்றும் நியூ சினிமா இடையில் அமைந்திருக்கும். திடீரென்று சரவெடி பட்டாசு சத்தம். ஓடி சென்று பார்த்தால் ஓபனிங் ஷோ காலைக் காட்சி முடிந்து மக்கள் வெளியே வருகிறார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அணை உடைந்து பாயும் மகிழ்ச்சி ரசிகர்கள் மத்தியில். விசில், வாழ்க கோஷம் முதலியன உச்ச ஸ்தாயில் ஒலிக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த என் கஸின் சொன்னது நடிப்பு + ஸ்டைல் - பிச்சு ஒதறிட்டார். அவன் முக்கியமாக சொன்ன மற்றொரு விஷயம் வசனம். அதாவது ஆண்டனி மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் One upmanship போட்டியில் பேசப்படும் வசனங்கள். ஏற்கனவே பார்க்க முடியவில்லையே என்று இருந்த என்னை மேலும் ஏங்க வைத்தன அவனது வார்த்தைகள்.
மாலையில் சுமார் 5 மணி அளவில் வேறொரு வேலையாக டவுன் ஹால் ரோடு சென்ற நாங்கள் இருவரும் அவனது நண்பர் ஒருவரை (சொல்லாமலே தெரிந்திருக்கும் சந்தித்தவர் சிவாஜி ரசிகரென்று) பார்த்தோம். அவரும் படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். என் கசினிடம் படத்தைப் பற்றி கேட்டார். நைட் ஷோ போகப் போவதாகவும் மாலை சுமார் 7 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டிக்கெட் கிடைக்காது? என்று அவர் கேட்க, ட்ரை பண்ணுங்க என்றான் என் கஸின். இந்த நிகழ்வெல்லாம் என் ஏக்கத்தை அதிகரித்தது.
நான் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் மார்ச் 26 அன்று ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தேன். அப்போதும் படத்திற்கு பெரிய ஆரவாரம். குறிப்பாக பிரசவத்தின் போது மனைவி இறந்து போன செய்தி வரும்போது எந்த வசனமும் இல்லாமல் அந்த முகத்தின் தசைகள் மட்டுமே துடிக்கும் காட்சி, யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப் போவதை எண்ணி குமுறும் சீன், அதன் பிறகு தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சி. குறிப்பாக நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே என்ற வரிக்கு முன்னால் வரும் நடைக்கும் அந்த போஸிற்க்கும் தியேட்டர் அலறியது. அந்தோனி, அருணாக மாறிய பின் வரும் ஒவ்வொரு ஸ்டைல்- கும் பெரிய ஆரவாரம். படத்தில் ஒரு சில அரசியல் பொடிகள் வரும். இறந்து போன பாதிரியார் சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது அருணாக வரும் நடிகர் திலகம் சொல்லுவார். "மறைந்து போன தலைவர்கள் சொன்ன நல்ல கொள்கைகளை கடைப்பிடிப்பது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. சிலை வைப்பது அல்ல". இது அன்று தமிழகத்தில் நிலவிய சிலை வைக்கும் obsession-ஐ குறித்ததால் தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.
இப்படியாக படம் பார்த்தேன். படம் ஓடி முடிப்பதற்குள் மொத்தம் மூன்று முறை பார்த்தேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 01:00 AM
#2554
அந்த நாள் ஞாபகம்
ஞான ஒளி படம் தமிழகம் எங்கும் மிகப் பெரிய வெற்றி. சென்னையில் ஐந்து அரங்குகளில் திரையிடப்பட்டும் மக்கள் வெள்ளம் அலை மோதுவதாக வந்த செய்தி மேலும் ரசிகர்களை மகிழ்ச்சிகுள்ளாக்கியது. நாடகமாக நடத்தப்பட்டு படமானதால் அதை பார்ப்பதற்கு சபாக்கள் சார்பில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடைபெற்றது. அது மட்டுமல்ல அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது மற்றொரு சாதனையாகும்.
நல்ல நேரம் திரைப்படமும் நன்றாகவே ஓடியது.
அடுத்த படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குனர் பி.மாதவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவிஸ், எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி படங்களுக்கு பிறகு தயாரித்த படம். கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்பது தெரியும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. நடிகர் திலகத்தின் இரண்டு வித கெட் அப்கள் [குடுமி வைத்த கெட் அப் மற்றும் ஹிப்பி ஸ்டைல் தலை முடி வைத்த கெட் அப்] ஆவலை தூண்டியிருந்தாலும் ஆவேசம் இல்லை. அதற்கு ஒரு காரணம் அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் திலகத்தின் படங்கள் தான்.
ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆவலை தூண்டியிருந்த படங்கள் தர்மம் எங்கே, வசந்த மாளிகை, என்னைப் போல் ஒருவன், ராஜ ராஜ சோழன், பாலாஜியின் புதிய படம் [நீதி என்று பெயர் வைக்கப்படவில்லை], என்.வி.ராமசாமி தயாரிக்கும் படம் [ரோஜாவின் ராஜா] என்பவை. மேற் சொன்னவை எல்லாமே கலர் படங்கள் என்பது கூட பட்டிக்காடா பட்டணமா என்ற கருப்பு வெள்ளை படத்திற்கு எதிர்பார்ப்பை குறைப்பதற்கு ஒரு காரணமானது.
இதற்கிடையே ராஜா, ஞான ஒளி விடுத்த சவாலையும் சமாளித்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நூறு நாட்களை கடந்தது. ஞான ஒளி 50 நாட்களை கடந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் மதுரை விநியோகஸ்தரான பாரத் மூவிஸ் கார்பரஷேன், சென்ட்ரலில் படத்தை ஒப்பந்தம் செய்து விட்டு மூன்று வார டெர்ம்ஸ் போட்டுக் கொண்டார்கள். இது என்னவென்றால் அன்றைய சூழலில் நிலவி வந்த பங்கு விகிதாசார முறை. அதாவது முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தருக்கு வசூலின் பங்கில் அதிகம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு வசூலாவதில் சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்று அமையும். பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்பதால் மூன்று வாரம் மட்டுமே போடப்பட்டது.
1972 -ம் வருடம் மே 6 அன்று ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. இதை எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
(தொடரும்)
அன்புடன்
-
1st May 2014, 01:07 AM
#2555
அந்த நாள் ஞாபகம்
சம்மர் லீவ் என்பதால் படம் பார்க்க போவது பெரிய விஷயமில்லை. போகலாம் என்று முடிவு எடுத்தவுடன் டிக்கெட் வாங்க முயற்சி எடுத்தோம்.மன்ற டிக்கெட்கள் கிடைக்கவில்லை. படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் கூட அவரின் மாபெரும் ரசிகர் கூட்டம் படத்தை வரவேற்க தயாராகி விட்டது என்பது புரிந்தது. சரி எப்படியும் வாங்கி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. முதல் நாள் இரவு வரை முயற்சி எடுத்தோம். ஆனால் பலன் இல்லை. சரி எப்படியும் மறு நாள் காலை தியேட்டர் பக்கம் போய் ட்ரை பண்ணலாம் என்று முடிவானது.
6ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கே சென்ட்ரல் சினிமா வாசலில் ஆஜர். ஆனால் அங்கேயும் ஏமாற்றம். படம் பார்க்க வந்திருந்த எங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்து விட்டோம். பலன் பூஜ்யம். டைம் போய்க் கொண்டிருக்கிறது. Q -வில் நின்று டிக்கெட் வாங்குவதெல்லாம் நடக்காத விஷயம். காரணம் சரியான கூட்டம். ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள். தியேட்டரின் பின் பக்க வாசல் பக்கம் போய் பார்க்கலாம் என்று அங்கே போனோம். அப்போதுதான் மன்ற டிக்கெட்கள் வைத்திருந்தவர்களை உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையில் நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம். உள்ளே போனாலும் டிக்கெட் இல்லை. ஆபிஸ் ரூம், கவுன்ட்டர் என்று எங்கே கேட்டாலும் டிக்கெட் இல்லை என்ற ஒரே பதில். மட்டுமல்ல, டிக்கெட் இல்லாதவங்களை எல்லாம் வெளியே அனுப்புங்க என்ற சத்தமும் கேட்கிறது. நாங்கள் அப்படி இப்படி என்று சுத்திக் கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை என்பதால் ராகு கால நேரம் முடிந்தவுடன் [9 -10.30 ] படம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கடைசியாக உள்ளே இருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் ஸ்டால் அருகில் போனோம். அங்கே என் கசினுக்கு தெரிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடமும் விஷயத்தை சொல்லி புலம்ப, எத்தனை டிக்கெட் வேணும் என்று அவர் கேட்டாரே பார்க்கலாம். எங்களுக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு என்று சொன்னவுடன் உடனே இரண்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். எங்களுக்கு புதையல் கிடைத்த சந்தோஷம். [குறிப்பிட வேண்டிய விஷயம் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர்].
அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 04:58 AM
#2556
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
ஒரு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது நமது திரியைப் பற்றி பேச்சு வந்தது. அவர்கள் நமது திரியின் silent readers. அவர்களில் சிலர் நமது மெயின் திரியை மட்டும் படிப்பவர்களாகவே இருப்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. Book Mark போல ஒன்றை வைத்துக் கொண்டு மெயின் திரிக்கு மட்டுமே வந்து செல்கிறார்கள். அவர்களிடம் ஏனைய திரிகளைப் பற்றி சொல்லும்போது அதைப் பற்றிய awareness இல்லை என்பது புரிந்தது. வாசகர்கள் மன்னிக்கவும்.
அன்புடன்
பாவி மக்கா நாட்டாமை ,
இதைத்தான் நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன்?கேட்டியா?இப்போ புரியுதா?பெரியவரோடு சேர்ந்து சேம் சைடு கோல் போட்டியே?இப்ப மாட்டிக்கினு வழிக்கு வந்தியா?
-
1st May 2014, 07:50 AM
#2557
Junior Member
Newbie Hubber
தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 1960 பொங்கலுக்கு வந்து வெள்ளிவிழா கொண்டாடி வெற்றி வாகை சூடிய காவியம் இரும்பு திரை படத்தின் விமரிசனம் மீள்பதிவு செய்ய படுகிறது..
தொழிலாளர் பிரச்சினையை தீவிரமாய் பேசிய படம்.
இரும்புத்திரை (iron curtain )- 1960
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம்.
நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார்.
அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.
நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1954,1958,1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில்(Stanislavsky Method Acting) நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடத்துவார், தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).
ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
-
1st May 2014, 07:51 AM
#2558
Senior Member
Devoted Hubber

Originally Posted by
sivaa
இந்த விளம்பரத்தில் கீழ் பக்கத்தில் மேற்கண்ட படத்தின்
விநியோகிஸ்த்தர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது
இலங்கை விநியோகஸ்தரின் விபரமும் உண்டு
கவனித்து பாருங்கள் விபரம் பின்னர்
இது படத்தைபற்றிய தகவல் அல்ல
பட வினியோகஸ்தர்கள் பற்றியது
விளக்கமாக எழுதாததற்கு மன்னிக்கவும்
ஆரம்பகாலங்களில் இலங்கையில்
சினிமாஸ் விமிட்டட்
சிலோன் தியேட்டர்ஸ்
சிலோன் எண்டற்ரைமன்ஸ்
ஆகிய தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து படங்களை தருவித்து
திரையிட்டு வந்தன.
1965ஆம் ஆண்டளவில் என நினைக்கின்றேன்
எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் நிறுவனமும் புதிதாக ஆரம்பித்து
படங்கள் தருவித்து திரையிட்டு வந்ததுகாலப்போக்கில் 70 வதுகளின் ஆரம்பத்தலிருந்து
தனியார் துறையிடம் இருந்து படங்கள் தருவிக்கும் உரிமையை
அரசு தனதாக்கிக்கொண்டது
அரச திரைப்பட கூட்டுத்தாபனம் என்ற பெயரில் படங்களை இறக்குமதி செய்து
மேற்படி தனியார் துறையினருக்கு திரையிட கொடுத்து வருகின்றது
இந்த எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் அதிபர் மிக தீவிர எம் ஜீ ஆர் ரசிகர்
எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் தருவித்த முக்கியமான படங்கள்
தங்கை காவல்காரன் ஒளிவிளக்கு முதலியன
யாழ்நகர் ராஜா தியேட்டர் உரிமையாளர் எஸ் ரீ ஆர் பிலிம்ஸ் அதிபர்
மேலும் பல தியேட்டர்களுக்கு அவர் உரிமையாளர்
அட காவல்காரன் ஒளிவிளக்கு படங்களை
இவரா தருவித்து திரையிட்டாh அதுதான்.....?
நீங்கள் நினைப்பது புரிகிறது நீங்கள் நினைப்பது சரிதான்
ஆமாம் அதேதான் அதுவேதான்
நீங்கள் நினைப்பது 100 க்கு 100 வீதம் சரி
-
1st May 2014, 07:52 AM
#2559
Junior Member
Newbie Hubber
((தொழிலாளர் தினமாம் மே முதல் தேதி முன்னிட்டு 03/07/1971 இல் நடிகர்திலகத்தின் 150 வது காவியமாய் வந்து பெரு வெற்றி பெற்ற அற்புத காவியத்தின் மீள்பதிவு .)
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st May 2014, 08:05 AM
#2560
Senior Member
Devoted Hubber
இலங்கை சாதனையில் ஒரு துளி
ராமன் எத்தனை ராமனடி.................கொழும்பு...............சென் ட்ரல்..............106...நாட்கள்
ராமன் எத்தனை ராமனடி.................யாழ்நகர்................ராண ி.......................85...நாட்கள்
...
அடிமைபெண்......................................கொழ ும்பு................சென்ட்ரல்...............105.. நாட்கள்
அடிமைபெண்......................................யாழ ்நகர்................ராணி......................... 77..நாட்கள்
Bookmarks