-
6th May 2014, 08:55 AM
#41
Junior Member
Newbie Hubber
எங்களுக்கு பார்த்த ஞாபகம் அற்று போகும் அளவு திரியில் அவ்வப்போது அந்தர்த்யானம் ஆகி விடும் மாயாவியே? மாய்ந்து மாய்ந்து நாங்கள் எவ்வளவு எழுதினாலும்,நீ வரும் போது ,திரிக்கு வரும் உற்சாகம்,களை தனிதான்.எனக்கே மனசு துள்ளி,உடனே முரளி சாருக்கு நாலு missed call போட்டு,என்ன ஏது என்று பதற வைத்தேன்.
எங்களை விட்டு எங்கும் ஓடாதே. எங்களுடன் இரு. நாங்கள் கண்ணால் காண முடியாத திரியின் மாய கடவுளாய்.
-
6th May 2014 08:55 AM
# ADS
Circuit advertisement
-
6th May 2014, 01:33 PM
#42
Senior Member
Veteran Hubber
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (7)
கவரிமான் (06.04.1979) .
நடிகர்திலகத்துக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அதுவரை தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை விட்டு, அப்போது கொடிநாட்டத்துவங்கியிருந்த புதிய தலைமுறையினருடன் நடிகர்திலகம் இணைந்த முதல் படம். இசைஞானி இளையராஜாவுடன் மூன்றாவது படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கம், பஞ்சுவின் கதை வசனம், பாபுவின் ஒளிப்பதிவு என முற்றிலும் புதிய கூட்டணி அமைந்த படம். ஆச்சாரமாகவும் கௌரவமாகவும் வாழும் ஒரு மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் நாகரிக மோகம் கொண்ட ஒரு மனைவியால் / மகளால் ஏற்படும் சீரழிவை மிக அற்புதமாக சொன்ன படம்.
1979 ஏப்ரல் துவக்கம், ஜனவரியில் வெளியாகியிருந்த திரிசூலம் தமிழகமெங்கும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த மகத்தான காலகட்டத்தில், திரிசூலம் அனைத்து அரங்குகளிலும் 71-வது நாளாக வெற்றி நடை... இல்லையில்லை.. வெற்றி ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏப்ரல் 6 அன்று வெளியானது கவரிமான் என்ற அற்புத திரைக்காவியம்.
சென்னையில் மிட்லண்ட், பிராட்வே, உமா, லிபர்ட்டி திரையரங்குகளில் வெளியானது. ஏப்ரல் 6 காலை சாந்தியில் அகில இந்திய சிவாஜி மன்றத்துக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதற்காக இரண்டு நாட்கள் முன்பாகவே எங்கள் மன்ற தலைவர் பார்த்தசாரதி மூலம் டிக்கட்டுகளை வாங்கி விட்டோம். அதற்கு முதல் நாளிரவு 12 மணி வரை மிட்லண்ட் தியேட்டரில் அலங்காரங்கள் நடப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம. எங்கள் மன்றத்தின் சார்பில் வழக்கம்போல தலைவரின் கட் அவுட்டுக்கு ராட்சத காகித மாலை ஏற்பாடு செய்திருந்தோம். வடசென்னை மிண்ட் (Seven Wells) ஏரியாவில் காகித மாலைகள் செய்யும் ஒரு குழுவினரிடம் ஆர்டர் கொடுத்திருந்ததை இரவு 9 மணிக்கு நானும் எங்கள் மன்ற நண்பர்கள் கோவை சேது, மந்தவெளி ஸ்ரீதர் முவரும் ஆட்டோவில் சென்று வாங்கி வந்ததும் மற்ற நண்பர்கள் மேலே ஏறி அதனைபபொருத்தும் வேலையில் ஈடுபட்டனர். மற்ற மன்றங்களின் அலங்காரங்களும் விமரிசையாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. தியேட்டர் ஊழியர்களும் ஒத்துழைத்தனர்.
மறுநாள் காலை 8 மணிக்கே சிறப்புக்காட்சிக்காக சாந்தியில் கூடி விட்டோம். அங்கங்கே சிறுசிறு வட்டங்களாக ரசிகர்கள் கூடி நின்று தமிழகமெங்கும் திரிசூலத்தின் அபார ஓட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டும், வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்தித்தாள்கள் ஆகியவற்றை ரசிகர்கள் மத்தியில் பரவ விட்டுக்கொண்டு இருந்தனர். சென்னை மாரீஸ் ஹோட்டலில் பணி செய்த நண்பர் சந்திரசேகர், திருச்சி தினத்தந்தி பதிப்புகளை வரவழைத்து அங்கு சுழற்சி முறையில் வலம் வரச் செய்து கொண்டிருந்தார். திருச்சி, தஞ்சை, கரூர், கும்பகோணம், மாயவரம், பகுதிகளில் திரிசூலம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தசெய்தி மனதுக்கு உற்சாகமாக இருந்தது.
சாந்தியில் ஒன்பது மணிக்கு ஸ்பெஷல் ஷோ துவங்கியது. ஆரம்பமே மிக வித்தியாசமான படமாக இருந்தது. யேசுதாஸின் கர்னாடக பாடலுக்கு நடிகர்திலகத்தின் வாயசைப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. பாத்திரங்களின் அறிமுகம் சற்று குழப்பமாக இருந்தபோதிலும் அந்த டைனிங் டேபிள் காட்சி சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. பூப்போலே பாடலுக்கு தலைவர் ஸ்டைலுக்கு நல்ல கைதட்டல் கிடைத்தது. ரசிகர்மன்ற ஷோவாச்சே. அதனால் காட்சிக்கு காட்சி கைதட்டல். பூப்போலே பாடலுக்கு பிரமீளாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு எடுத்ததால் சற்று உறுத்தியது. (நடிகர்திலகத்தின் படத்துக்கு கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிரமீளா பிஸியா என்ன)
ரவிச்சந்திரன் வரும் காட்சிகள் சைலன்ட்டாக ஓடின. ரசிகர்கள் ரொம்பப்பேர் அந்த ரோலில் ரவிச்சந்திரனை விரும்பவில்லை. டெல்லி போன தலைவர் பயணம் ரத்தாகி வீட்டுக்கு வர, பஸ்ஸர் ஒலிக்கும் காட்சியிலேயே கைதட்டல் துவங்கி விட்டது. வேலைக்காரியின் சமாளிப்பை ஏற்று வேறு பக்கம் செல்ல இருந்தவர், மாடியில் தன அறையில் சிரிப்பு சத்தம் கேட்டு நின்ற இடத்திலிருந்தே தலையைத் திருப்பிப் பார்க்கும் இடத்தில் மீண்டும் பலத்த கைதட்டல். அப்போது ஆரம்பித்த ஆரவாரம், அவர் தன மனைவியை அந்நியனுடன் காணும் கோலம் கண்டு துடித்து, செய்வதறியாது தவித்து இறுதியில் பாட்டிலால் மனைவியின் தலையில் அடிக்கும் வரை ஆரவாரம் அடங்கவில்லை. படத்தின் ஹைலைட்டே அந்த இடம்தானே.
(ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த இக்காட்சி பற்றி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி வியப்படைவார்)
படம்பார்த்த அந்த தருணத்தில் ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாயிருப்பதாகவே சொன்னார்கள். ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அல்லாது அன்றைய மாலைக் காட்சிக்கும் மிட்லண்ட் அரங்கில் ரிசர்வ் பண்ணியிருந்தோம். வழக்கம்போல நான்கு மணிக்கே தியேட்டரில் கூடி விட்டோம். எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் ரோட்டை அடைத்து நின்றிருந்தது. ஐந்து மணி சுமாருக்கு இயக்குனர் எஸ்.பி.முததுராமன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் வந்து, படம் துவங்கும்வரை தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். நடிகர்திலகத்துடன் பணியாற்றிய பெருமை அவர்கள் பேச்சில் எதிரொலித்தது. தான் ஒளிப்பதிவு இயக்குனர் ஆனபின்னர் நடிகர்திலகத்துடன் முதல் படம் இது எனக்குறிப்பிட்ட பாபு, தில்லானா மோகனாம்பாளில் கே.எஸ்.பிரசாத்தின் உதவியாளராக நடிகர்திலகத்துடன் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்தார். தன்னுடைய பிஸ்கட் கலர் பியட் காரைத் தானே ஓட்டிவந்த விஜயகுமார், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்து இயக்குனரோடும் ரசிகர்களோடும் பேசிக்கொண்டு நின்றார்.
தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். (தியேட்டர் உள்ளே மேட்னி ஷோ இன்னும் முடியவில்லை என்பதால் உள்ளே போக முடியவில்லை). சற்று நேரத்தில் (மாஸ்ட்டர்) சேகரும் வந்தார். ரோஸ்கலர் புல்ஷர்ட்டும் கருப்பு பேண்ட்டும் அணிந்து மோட்டார் பைக்கில் வந்து இறங்கியவரை ரசிகர்கள் சூழ்ந்து, அவரது சிறப்பான நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர். (படத்தில் ஸ்ரீதேவியின் ஜோடி, மற்றும் இரண்டாவது வில்லன்). முதல் எபிசோட்டில் மனைவியே ஒரு அயோக்கியனுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்யும் சூழல் என்பதால் அதில் மனைவி கொல்லப்படுகிறாள். அயோக்கியன் தப்பிவிடுகிறான். ஆனால் இரண்டாவதில் மகளின் சம்மதமின்றி கற்பழிக்க முயற்சிக்கும் சூழலில் அயோக்கிய காதலன் கொல்லப்படுகிறான். சேகருக்கு இது வித்தியாசமான ரோல். நன்றாக செய்திருந்தார். அவரும் தான் சிறுவனாக இருந்தபோது நடிகர்திலகத்தின் பல படங்களில் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். நடிகர்திலகத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்', சிவாஜி அங்கிள்' என்று குறிப்பிட்டார். (பாவம், மிகச்சிறிய வயதில் விபத்தில் பலியாகிவிட்டார்).
மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்து, ஏற்கெனவே திரண்டிருந்த கூட்டத்துடன் சேர, குறுகலான ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு டிராபிக் ஜாம் ஆனது. மாலைக்காட்சியின்போது காலையில் ரசித்ததை விட ரசிகர்களும் பொதுமக்களும் நன்றாக ரசித்தனர். அதிலும் "பூப்போலே உன் புன்னகையில்" பாடல் இரண்டாம் முறையாக ஹோட்டலில் பாடும்போது நடிகர்திலகத்தின் ஸ்டைலை ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தனர். படத்தை உருவாக்கியவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது, ஆனால் நாட்கள் நகர நகர புன்னகை நீடிக்கவில்லை.
சமீபத்தில் கூட தொலைகாட்சியில் கவரிமான் பார்த்தபோது, முற்றிலும் வித்தியாசமான இப்படம் ஏன் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th May 2014, 05:54 PM
#43
Junior Member
Seasoned Hubber
திரு கார்த்திக் - உங்கள் இந்த அருமையான பதிவுகளை பார்த்து மிகுந்த நாட்கள் ஆகி விட்டன - மீண்டும் நீங்கள் திரும்பி வந்தது சந்தோஷமாக உள்ளது - உங்கள் திறமை , எழுத்தின் வளமை , ஞாபக சக்தி , பதிவுகளை கொண்டு போகும் விதம் இவைகளில் மனதை பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் - விரைவில் main திரியிலும் வருவீர்கள் என நம்புகிறேன்
-
7th May 2014, 06:40 PM
#44
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
"ஆயிரம் தான் சொல்லுங்க.. தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்த அனுபவத்திற்கு ஈடாக எதுவுமே கிடையாது. அந்த காலத்திலே தியேட்டரில் நாங்க பண்ணிய அளப்பரை இருக்கே...
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' (14.01.1981)
இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது சாரதி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.
நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக பாவை விளக்கில் நான்கு கதாநாயகிகள். அதனை அடுத்து இப்படத்திலும் நான்கு அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.
சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் சித்ராவில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, Oasis Entertainers என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).
ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ரா தியேட்டரில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். சைதை சிவந்த மண் சிவாஜி மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணாடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).
ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.
நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச் சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.
கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.
குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.
பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.
இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.
-
8th May 2014, 07:59 PM
#45
Junior Member
Newbie Hubber
Nice Experiences.
Please Continue your Memories for More Films.
-
9th May 2014, 10:59 PM
#46
நண்பர் கார்த்திக் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ரவுண்டு வந்ததால் அவரின் சுவையான எழுத்துக்களை மீண்டும் படிக்கவும் மற்றவர்களும் இடையூறு இல்லாமல் அதை தொடர்ந்து வாசிக்கவும் சற்று இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து
விட்ட இடம் 1972-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கம். பட்டிக்காடா பட்டணமா ஓபனிங் ஷோ. அதை பற்றிய சென்ற பதிவின் இறுதி பாரா.
அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.
உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.
இரண்டாவது சரணம் வந்தது
ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி
வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்
சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,
ரசிகர்களை அளப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.
அன்புடன்
-
14th May 2014, 11:19 PM
#47
அந்த நாள் ஞாபகம்
இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்தது. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து வருந்தும் மூக்கையாவிடம் அப்பாத்தா எஸ்.என்.லட்சுமி சொல்லும் " ஆடிக் கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும்! பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!" என்ற வசனத்துடன் படம் பட்டிக்காட்டிலிருந்து பட்டணத்திற்கு மாறும். தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம் ஹிப்பி ஸ்டைல் தலை முடியுடன் முகேஷ் என்ற பெயரில் நடிகர் திலகம் அறிமுகமாக, அடுத்த ஆட்டம் தியேட்டரில் ஆரம்பமானது. நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் உடனே. இடைவேளைக்கு முன் கிராமத்து குத்து என்றால் இப்போது வெஸ்டர்ன் பீட்ஸ். எதுவாக இருந்தால் என்ன, நம்ம ரசிகர்கள் சளைத்தவர்களா என்ன? அதற்கும் தியேட்டரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.
அடுத்து நடிகர் திலகம் ஜெஜெ-வை சீண்டும் காட்சிகள். அந்த கிண்டல் வசனங்கள், கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் சொல்லும் கேலி பேச்சுகள் இதற்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ். ஆளை விட்டு கடத்தி கொண்டு போய் நடிகர் திலகத்தை சென்னையை சுற்றி காண்பிப்பார்கள். ஊருக்கு வெளியே போன பிறகு அவர் அவர்களை புரட்டி அடிப்பார். "சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?" டயலாகிற்கு தியேட்டர் குலுங்கியது.
ஆனால் அவர் மீண்டும் சோழவந்தான் வந்தவுடன் அது வரை இல்லாத சீரியஸ் நடிப்பு வெளிப்பட, நடிப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சந்தோஷம். பஞ்சாயத்து கூட்டத்திற்கு போய் விட்டு வந்த நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியிடம் பேசும் காட்சி
"பஞ்சாயத்துல எனக்கு கிடச்ச வரவேற்பை நீ பார்த்திருக்கணும்.அப்படியே பூரிச்சு போயிருப்பே.
அப்படியா? நான் வராமே போயிட்டனே
நான் வந்திருக்கனே உயிரோடு
நாக்கு மேல பல்லைப் போட்டு உன்னை எவன்யா பேசினான்?"
மற்றும் நடிகர் திலகம் சொல்லும் "கை கழுவிட்டேன்" போன்ற வசனங்களுக்கு பெரிய வரவேற்பு [கதை வசனம்: பாலமுருகன்]. என்னடி ராக்கமாவின் pathos version -கும் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த கிராமத்து வீட்டின் மாடிப்படியில் அமர்ந்தவாறே அவருக்கே உரித்தான கன்னத்தில் வழியாமல் கண்களில் நீர் கரை கட்டி நிற்க
எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்! அதில் ஒரு கட்டம் முடிந்ததடி!
தாயாருக்கும் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி
என்ற வரிகளின் போதெல்லாம் செம அப்ளாஸ்.கிளைமாக்ஸ் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் அந்த சஸ்பென்சை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர் மாதவன்.
படம் முடிந்தது. ஹாலை விட்டு வெளியே வந்தவுடன் தியேட்டர் காம்பவுண்ட்குள்ளேயே ஒரு வெங்காய வெடி சத்தம் காதை அடைத்தது.
தொடர்ந்து படபடவென்று தௌசன் வாலா சர வெடி வெடிக்க, ராஜா திரைப்படத்திற்கு நடந்தது போல ரசிகர்கள் கூட்டம் மேல மாசி வீதியில் ஊர்வலம் வந்து தியேட்டர் வாசலில் குழுமி ஒரு ஆட்டம் போட்டு விட்டு போனார்கள். தொடர்ந்து நான்காவது படம் வெற்றி. 1972 -ம் வருடத்தை பொறுத்த வரை ஹாட்ரிக் வெற்றி.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழ கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th May 2014, 03:29 PM
#48
Senior Member
Veteran Hubber
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (9)
"உத்தமன்"
இப்போதுதான் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதுபோல் இருக்கிறது. அதற்குள் 38 ஆண்டுகள் முடிந்து விட்டனவா?. நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நடிகர்திலகம் மெலிந்திருந்த காலங்களில் வந்த படம். எப்போதும் இப்படியேதான் இருக்கப்போகிறார் என்றெண்ணிய காலத்தில் அதன் அருமை அவ்வளவாகப் போற்றப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் உருவம் மாறத்துவங்கியபின் அவையனைத்தும் பொக்கிஷங்களாகி விட்டன. அதில் ஒன்றுதான் உத்தமன்.
1976 பொதுவாக தமிழ்ப்பட உலகுக்கும், குறிப்பாக நடிகர்திலகத்துக்கும் சற்று தேக்கமான காலகட்டம் என்பதில் சந்தேகமில்லை. அப்போது வெளியான படங்களின் வெற்றிகளைப் பார்த்தாலே தெரியும். அன்பே ஆருயிரே வில் துவங்கிய மந்த நிலை, படங்கள் சரியில்லாத காரணத்தாலும், பெருந்தலைவர் மறைவுக்குப்பின் ஏற்பட அரசியல் சூழல்களாலும் தொடர்ந்தது. 'பாட்டும் பரதமும்' போன்ற நல்ல படங்களும் இதில் பாதிக்கப்பட்டன.
அந்த ஆண்டில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வந்த ஒரே படம் என்றபோதிலும், உண்மையில் லக்கி காம்பினேஷனா என்பது பின்னர் ஐயப்பாடானது. இதற்கு மாறாக மிட்லண்ட், மகராணி, ராக்ஸி என்ற காம்பினேஷனில் வந்திருந்தால் சென்னையிலும் மதுரையைப்போல 100 நாட்களைக் கடந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் பத்தாவது வாரத்தில் படம் எடுக்கப்பட்டபோது நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது உண்மை என்பதை மறுக்க முடியாது. எது எப்படியோ சென்னையில் அந்த ஆண்டில் 100 நாள் படமே இல்லாமல் போனது.
உத்தமன் படம் வெளியாவதற்கு முன் பாடல்கள் வெளிவந்து டீக்கடைகளில் சக்கைபோடு போட்டன. இப்போது போல இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் திரையுலகையே அழைத்து விழா நடத்தும் கூத்து எல்லாம் அப்போது ஏது?. முதலில் டீக்கடைகளில் பாடலைக் கேட்டு பின்னர் ஹோட்டல் ஜுக் - பாக்ஸ்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உத்தமன் பாடல்கள் முதலில் கேட்டபோது சுமாராக இருந்தவை, பின்னர் திரும்பத்திரும்பக் கேட்டதும் மனதுக்குப் பிடிக்க ஆரம்பித்தன. 'படகு படகு' பாடலும் 'தேவன் வந்தாண்டி' பாடலும் மனத்தைக் கிறங்கடித்தன. இயக்கம் ராஜேந்திர பிரசாத் என்பதால் பிக்சரைசேஷன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.
வீட்டுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் உத்தமன், ஊருக்கு உழைப்பவன், மன்மத லீலை, கிரஹப்பிரவேசம் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் ஏரியா பெரியவர்களால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு தெரு அமைதியானது. இருந்தாலும் உத்தமன் பாடல்களைக்கேட்டு பழகி விட்டதால் காதுகள் அனிச்சைசெயலாக 'ஜுக் - பாக்ஸ்' ஹோட்டல்களை நாடின. அப்போது ஆடியோ கேசட்டுகள் புழக்கதில் வந்துவிட்ட போதிலும், பாடல்களை கேசட்களில் பதிவு செய்துதர கடைக்காரர்கள் மறுத்து விடுவார்கள். இசைத்தட்டு விற்பனை குறைந்து விடும் என்ற காரணம். ஒவ்வொரு கிராமபோன் ரிக்கார்ட் கடையிலும் எச்.எம்.வி. நிறுவனத்தினரின் “Please do not ask us to tape, it is illegal” என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
நண்பன் ஒருவன் வீட்டில் ஆடியோ கேசட் பிளேயர் இருந்ததால், காசினோ திரையரங்கின் பின்புறமுள்ள ரிட்சி தெருவிலிருந்த ஒரு ரிக்கார்ட் விற்பனையாளரை நச்சரித்து 'உத்தமன்' பாடல்களை மட்டும் ஒரு கேசட்டில் பதிவிட்டு, திரும்பத்திரும்பக் கேட்டு வந்ததில் படம் வரும் முன்பே பாடல்கள் மனப்பாடமாகி இருந்தன. இதனிடையே சினிமா பத்திரிகைகளான பேசும்படம், பிலிமாலயா, பொம்மை, மதிஒளி, திரைவானம் ஆகியவற்றில் உத்தமன் பற்றிய செய்திகளும் வண்ணப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தன. நடிகர்திலகம் அருமையான ஹேர்ஸ்டைலுடன், அற்புதமான காஸ்ட்யூம்களில், மஞ்சுளாவுடன் செம கியூட்டாக இருந்தார். இதற்கு முந்தைய கிரஹப்ரவேசம், சத்யம் படங்கள் கொஞ்சம் டல்லாக அமைந்து தாய்க்குலத்துக்கு ஏற்றவையாக அமைந்திருந்தனவே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடவில்லை.
ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் வெளியாகும் அறிவிப்பும், ரிசர்வேஷன் விளம்பரமும் வந்தது. (அப்போதெல்லாம் நடிகர்திலகத்தின் படங்கள் சனிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும். அதற்கேற்றாற்போல ஞாயிற்றுக்கிழமை ரிசர்வேஷன் துவங்கும்). அப்புறம் என்ன? கிரௌன் தியேட்டருக்கு மொத்த நண்பர்கள் கூட்டமும் படையெடுத்தோம். ஏற்கெனவே பலமுறை இங்கே பேசியதுபோல அந்த ஆண்டு கொஞ்சம் சுமார் ஆண்டு என்பதால் ரிசர்வேஷனுக்கும் கூட்டம் அவ்வளவு இருக்காது என்று எண்ணி அசால்ட்டாக போனோம். ஆனால் நிலைமை வேறாக இருந்தது.
எவ்வளவு ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்துள்ளனர் என்பது கூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்தது. வழக்கமாக ரிசர்வேஷன் என்றால் ஏழு ஏழரைக்குள் போய்விடும் எங்களுக்கு அன்று அசால்ட்டாக சற்று தாமதமாக போனது எவ்வளவு பெரிய தப்பு என்பதை எங்களுக்கு முன் சென்றிருந்த ரசிகர்கள் உணர வைத்தனர். நாங்கள் போவதற்கு முன்பே ரிசர்வேஷன் துவங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. கியூவில் நின்ற சிறிது நேரத்தில் முதல்நாள் மூன்று காட்சிகளும் புல்லாகிவிட்டன. முதல்நாளே படம் பார்க்கப்போகிறோம் என்ற கனவு 'பணால்' ஆனது. கியூ நகர அடுத்த நாள் மேட்னியும் 'புல்'. அவ்வளவுதான் எங்களுக்கு பதைபதைப்பு அதிகமானது. 'உன்னாலதாண்டா லேட்' என்று ஒருவருக்கொருவர் பழிபோட ஆரம்பித்தோம். கவுண்டரை நெருங்கி விட்டோம். எங்கள் கண்கள் ரிசர்வேஷன் சார்ட்டிலேயே இருந்தது. இரண்டாவதுநாள் மாலைக் காட்சியாவது கிடைக்கணுமே என்ற படபடப்பு. (இரவுக்காட்சி பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது).
சொன்னால் நம்ப மாட்டீர்கள். (எங்களாலேயே நம்ப முடியவில்லையே, அப்புறம் எப்படி உங்களை நம்பச்சொல்ல?) எங்கள் நண்பர் குழுவின் கடைசி ஆள் டிக்கட் வாங்கியதும் இரண்டாவதுநாள் ஈவினிங் ஷோ புல். எங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும். முதல்நாள் பார்க்கமுடியாமல் போனதற்கு ஆறுதல் பரிசு என எண்ணியவாறு வீடு திரும்பினோம். அடுத்த ஐந்துநாட்களும் நண்பர்களுக்குள் உத்தமன் பற்றியேதான் பேச்சு. பள்ளிப்படிப்பை முடித்து அந்த ஆண்டுதான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம் உத்தமன் ரிலீஸ். தினமும் பஸ்ஸில் சாந்தி வழியாகத்தான் கல்லூரிக்கு போவோம் வருவோம். ஆனால் ஏனோ சாந்தியில் பார்க்கலாமே என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ('அண்ணன் ஒரு கோயிலில்' இருந்துதான் சாந்தி சங்கமம்).
முதல் நாள் மேட்னிஷோ விடும் முன்பே கிரௌன் தியேட்டருக்குப் போய்விட்டோம். முதல்நாள் படம் பார்க்காவிட்டால் என்ன ‘ரிலீஸ் மேளா’வை மிஸ் பண்ணலாமா?. நண்பன் ஒருவனுக்குத் தேவையில்லாத நப்பாசை. கரண்ட் புக்கிங் டிக்கட் கிடைத்தால் முதல்நாளே பார்த்துவிடலாமே என்று நான்கு மணிக்கே போய்விட்டான். நாங்கள் போய் அவன் நின்ற இடத்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு வந்தது. ஒரு ஷோவுக்கு டிக்கட் வாங்க நான்கு ஷோவுக்கான கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அவனும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தான் பாவம். கவுண்டர் மூடியதும் எங்களுடன் ஐக்கியமானான். 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் கிரௌன் தியேட்டர் களைகட்டியது உத்தமனுக்குத்தான். அரசியலில் அப்படி இப்படி மதில்மேல் பூனைகளாக இருந்த ரசிகர்களும், நடிகர்திலகத்தின் முடிவை ஏற்று, இந்திராவின் தலைமையின் கீழ் ஒன்று கூடி வந்துவிட்டனர். மேட்னிஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், வெளியே நின்றிருந்த ரசிகர்களுடன் ஒன்று கலந்து படத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினர். எல்லோருடைய ஒட்டுமொத்த முடிவு, ரொம்ப நாளைக்குப்பிறகு ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான படம் என்பதுதான். இரவு எட்டுமணிவரை அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம்.
ஏற்கெனெவே பார்த்த ரசிகர்களின் வர்ணனைகள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட, ஆவலுடன் அடுத்தநாள் மாலைக்காட்சிக்குச் சென்றோம். முதல்நாளுக்கு சற்றும் குறையாத கூட்டம். எங்களுக்கோ சந்தோஷம் தலைக்கேறி ஆடியது. மாலைநேரம் கிரௌன் தியேட்டர் ஓரம் நல்ல நிழலாக இருக்கும். கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டது. சாந்தி மற்றும் புவனேஸ்வரியிலும் மிக நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொன்னார்கள். வெளியூர் ரிப்போர்ட்கள் இன்னும் கிடைக்கவில்லை, ஆனாலும் படத்தின் கெப்பாஸிட்டியை வைத்துப் பார்க்கும்போது ரிசல்ட் இன்னொரு ‘அவன்தான் மனிதனாக’ அமையும் என்றார்கள். ஆஹா, அந்தப்பொற்காலம் திரும்புமா என்று மனம் ஏங்கியது. (அப்போதெல்லாம் வெளியூர் ரிசல்ட்கள் கடிதம் மூலம்தான் வர வேண்டும். இப்போது போல செல்போனை அழுத்தி "ஹலோ மச்சி, மதுரைல எப்படி போகுது?" என்ற வசதியெல்லாம் அப்போது ஏது?) . இதன்பிறகு 'அவன் ஒரு சரித்திரத்துக்குத்தான்' (பக்கத்து ஸ்ரீ கிருஷ்ணா) தியேட்டரில் இப்படி ஒரு எழுச்சியைக் காண முடிந்தது. அது உத்தமனை விட அதிகம்
மாலைக்காட்சிக்கு தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். முதல் ஒருவாரம் அது ரசிகர்களுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் அன்றைக்கும் ஆரவாரம் அமர்க்களப்பட்டது. படம் துவங்கியது முதலே அட்டகாசமும் துவங்கி தொடர்ந்தது. தலைவரின் ஹேர்ஸ்டைல், உடைகள் மேக்கப் அனைத்தும் செம தூக்கல். அதுவே உற்சாகத்தை அதிகப்படுத்தியது. சரிதான், தலைவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பாடல் காட்சிகளனைத்தும் அட்டகாசமாக இருந்தன. 'மஞ்சுக்குட்டியும்' சரியாக ஈடுகொடுத்திருந்தார். 'படகு படகு ஆசை படகு' பாடல் காட்சியில் இடையே வரும் லைலா - மஜ்னு மற்றும் சலீம் - அனார்கலி இடைச்செருகல்களுக்கு நல்ல கைதட்டல்....
நிலவு முகத்திலே முக்காடு மூடும் மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா
வரிகளின்போதும்....
அனார் என்றால் மாதுளம், ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன் சலாம் உரைத்தான் உன்னிடம்....ம்.....ம்....ம்.
உண்மைக் காதல் காதல் காதல் - இன்பக்
காதல் போயின் சாதல்
என்ற வரிகளின்போதும், மாமாவின் தபேலா லயத்துக்கேற்ப ரசிகர்கள் கைதட்டியதுடன், பல ரசிகர்கள் எழுந்து ஆடத்துவங்கி விட்டனர். ஏகப்பட்ட ஆரவாரம். (அதானே, வடசென்னை ரசிகர்களா கொக்கா?).
(படகு படகு பாடலில் பின்னணியில் ஸ்கேட்டிங் செய்பவர் நம்ம பிரபு என்பது சமீப காலம்வரை எனக்குத் தெரியாது. தெரிந்தபின் இப்போதெல்லாம் அப்பாடலில் அவரை உற்று உற்றுப் பார்க்கிறேன். சூப்பராக ஸ்கேட்டிங் பண்ணுகிறார்).
அதுபோல 'தேவன் வந்தாண்டி' பாடல் காட்சியும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தலைவரை அழகழகு உடைகளில் காண்பிப்பதில்தான் இந்த தெலுங்கு தயாரிப்பாளர் / இயக்குனருக்கு எவ்வளவு ஒரு ஆர்வம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்தை நடக்க வைத்தே டூயட் பாடல்களை எடுக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில் தலைவரை ஓட வைத்து டூயட் எடுப்பவரும் இவர்தான். அருமையான காஷ்மீர் பின்னணி லொக்கேஷனில் கருப்பு நெக்-ஸ்வெட்டர், சிவப்பு கோட் அணிந்து தலைவர் வரும் காட்சி கண்ணிலேயே தங்கிவிட்டது. முரளிசார் குறிப்பிட்ட (சுசீலாவின்) 'இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி' என்ற குழைவு ஐயோ ஐயோ என்ன அருமை. அதுபோல 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலிலும் தலைவரை நன்றாக ஓடவிட்டு பெண்ட் எடுத்திருப்பார் ராஜேந்திர பிரசாத். (ஏற்கெனவே 'கல்யாண ஆசைவந்த' மற்றும் 'இரவுக்கும் பகலுக்கும்' பாடல்களிலும் ஓட்டத்தைப் பார்த்தோமே).
ஆரவாரமும் அட்டகாசமுமாக படத்தைப்பார்த்து விட்டு வெளியே வந்தபோது மனம் நிறைந்திருந்தது. தலைவர் ட்ராக்குக்கு வந்துவிட்டார். இனி அதகளம்தான் என்று பூரிப்படைந்தோம். இதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைக்காட்சி 'உத்தமன்' பார்ப்பது என வழக்கம் வைத்து ஏழுமுறை கிரௌன் தியேட்டரிலேயே பார்த்தேன். முந்தைய ஆறு படங்களின் ரிசல்ட்டைப்பார்த்து, 'கணேசன் இத்துடன் ஒழிந்தான்' என்று எக்காளமிட்டோருக்கு சாவுமணி அடிக்க வந்த படம் "உத்தமன்". (மதுரை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி).
Last edited by mr_karthik; 17th May 2014 at 04:15 PM.
-
23rd May 2014, 01:51 PM
#49
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.
இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.
இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.
(தொடரும்)
அன்புடன்
-
29th May 2014, 12:39 AM
#50
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு. கடந்த பதிவின் இறுதி பகுதி.நடிகர் திலகத்தின் தயாரிப்பில் இருந்த படங்களைப் பற்றிய நினைவலைகள்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு வருவோம். மூன்றாவது வாரம் நான்காவது வாரம் grip சற்றும் குறையவில்லை. பொதுவாக சினிமா விநியோக துறையில் சில குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகமாக புழங்கும். அவறில் ஒன்று opposition, இது என்னவென்றால், ஒரு படத்தின் ஓட்டத்திற்கு போட்டியாக இருக்கக் கூடும் என விநியோகஸ்தர்கள் கருதும் வேறு படங்களை opposition என்று கூறுவார்கள். ஆனால் இதில் இன்னார் படத்திற்கு இன்னார் படம் மட்டுமே opposition என்று எடுத்துக் கொள்ள முடியாது. எந்த படங்கள் வேண்டுமானாலும் opposition ஆக வர முடியும்."நம்ம படம் போடும்போது இந்தப் படம் [படத்தின் பெயரை சொல்லி] opposition-னா விழுந்துருச்சு. அதிலே நம்ம படம் கொஞ்சம் அடி வாங்கிருச்சு" போன்ற சால்ஜாப்புகளையும், அடுத்தவர் படத்தை பற்றி குறிப்பிட்டும் போது "opposition-யே இல்லை. அதனாலே நல்லாப் போயிருக்கு" போன்ற வயித்தெரிச்சல் வசனங்களையும் ரெகுலராக கேட்கலாம். பட்டிக்காடா பட்டணமாவைப் பொறுத்தவரை அந்த opposition கூட எடுபடவில்லை. ஓரளவிற்கு அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த படம் என்று சொன்னால் KSG-யின் குறத்தி மகன் படத்தை சொல்ல வேண்டும். ஜெமினியும் கே ஆர் விஜயாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் B அண்ட் C ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது. மதுரையில் கல்பனா திரையரங்கில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. மற்றபடி நோ opposition என்றே சொல்ல வேண்டும். ஜூன் 1 அன்று பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. பொதுவாக அந்த நேரம் படங்களுக்கு ஒரு drop இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதையும் மீறி பட்டிக்காடா பட்டணமா தன வெற்றியோட்டதை தொடர்ந்தது. ஜூன் 4 ஞாயிறன்று இரவுக் காட்சி வரை நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ் புஃல். அடுத்த நாள் திங்கள் முதல் drop ஆகும் என்று சிலர் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க அதுவும் பொய்த்து போய் திங்கள் செவ்வாய் எல்லாம் புஃல். [House Full]
இதற்கு நடுவில் நியூசினிமாவில் ஞான ஒளி 13-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அப்போது disturbing news ஒன்று வருகிறது. படத்தை 100 நாட்கள் ஓட விடாமல் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்திதான் அது. கேஆர்விஜயாவின் பினாமி தயாரிப்புகளில் ஒன்றான அவரும் முத்துராமனும் இணைந்து நடித்த கண்ணம்மா என்ற திரைப்படம் [மாதவன் இயக்கம்?] ஜூன் 23 வெளியாவதாக இருந்தது தெரியும். அது மதுரையில் நியூசினிமாவில் chart செய்யபட்டிருந்ததும் தெரியும். அப்படி ரிலீஸ் ஆகும் பட்சத்தில் ஞான ஒளி 104 நாட்களை நிறைவு செய்திருக்கும் என்பதனால் முதலில் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜூன் 9 அன்றே ஞான ஒளி படத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். விநியோகஸ்தர் அலுவலகத்திற்கும் திரையரங்க அலுவலகத்திற்கும் ரசிகர்கள் சென்றனர். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் வியட்நாம் வீடு படத்திற்கு இதே போன்ற நிலைமை ஏற்பட்டதை அனைவரும் நினைவு கூர்ந்தனர். மீண்டும் அப்படி நடந்து விடக் கூடாது என முயற்சித்தார்கள். இத்தனைக்கும் படத்திற்கு overall hold over குறையவில்லை. அப்படியிருந்தும் திரையரங்க உரிமையாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தனர். விநியோகஸ்தரால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. ஜூன் 8 அன்று 90 நாட்களை நிறைவு செய்த ஞான ஒளி ஜூன் 9 அன்று மாற்றப்பட்டு தெலுங்கு டப்பிங் படமான ரிவால்வர் ரீட்டா வெளியானது. ரசிகர்களுக்கெல்லாம் பெருங்கோபம் மற்றும் வருத்தம். வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி என தொடர்ந்து மூன்று படங்கள் மதுரையில் 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படங்கள் 90 நாட்களில் எடுக்கப்பட்டது இன்று வரை மனதில் மாறாத வடுவாக இருந்துக் கொண்டேயிருக்கிறது. இதற்க்கெல்லாம் ஆறுதலாக பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continuous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?
(தொடரும்)
அன்புடன்
Bookmarks