-
8th August 2014, 04:42 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
poem
ஆஹா... மலரும் நினைவுகள். 1983ல் நடந்த நிதி திரட்டு விழா நினைவில் இல்லை என்றாலும்,
1987ல் , +1 படிக்கும் போது ஸ்ரீ ரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது. பழைய கரூர் ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கி கொண்டு, நான் தெப்பகுளம் பிஷப் ஹீபரில் படித்துகொண்டிருந்தேன்.
விழாவை முன்னிட்டு ராஜா சார் கச்சேரி என்று விளம்பர படுத்தி இருந்ததால், மதத்தின் பால் அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், ராஜா சார் மீதிருந்த பற்றுதலால் அவரை பார்க்க இரவு கச்சேரிக்கு நானும் சில நண்பர்களும் காவேரி பாலத்தின் வழியாய் நடந்தே சென்று விட்டோம். கங்கை அமரன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கடைசி வரை மேடையில் ராஜா சாரை பார்க்க முடிய வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், மறுநாள் காலைஎப்படியும் அவரை பார்த்து விடலாம் என்று நினைத்து ஸ்ரீரங்கம் சென்ற நாங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரை பார்த்தோம், கோபுர கலச நீர் துளி என் தலையிலும் விழுந்தது. இந்த புண்ணியம் ராஜா சாரையே சேரும், அவர் இல்லை என்றால் நிச்சயம் நான் ஸ்ரீரங்கம் போயிருக்கமாட்டேன். என்னை போல் எத்தனை ஆயிரம் பேர் அவருக்காக ஸ்ரீரங்கம் வந்தார்களோ..
ஸ்ரீரங்கம் விழா முடிந்த சில மாதங்களிலேயே , மறுபடியும் திருச்சி கண்டோன்மெண்டில் ஒரு கச்சேரி நடந்தது. சினி மியுசசியன்ஸ் அசோசியஷன் கட்டிட நிதிக்காக எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் வந்திருந்த கச்சேரி அது (யேசுதாஸ் மட்டும் வரவில்லை). நிகழ்ச்சிக்கு என் தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் சென்ற போது தான் எனக்கு முதன் முதலில் ராஜா சார் தரிசனம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியையும் கங்கை அமரன் தான் தொகுத்து வழங்கினார்.
நிகழ்சியில் ராஜா சார் அதிகம் பாடவோ பேசவோ இல்லை. இப்போது போல் அப்போதும் வெள்ளை உடையில், தோளின் இருபுறமும் சால்வை மடித்து போட்டிருந்தார். TMS உடன் அதிகம் பேசி கொண்டிருந்தார். தென் பாண்டி சீமையிலே பாடலும், இறுதியில் எல்லோரும் சேர்ந்து பாடிய மெட்லி பாடல்களில் துப்பாக்கி கையிலெடுத்து பாடலை பாடியதும் , MSV யின் எங்கே நிம்மதி பாடலில் வரும் ஆண்கள் கோரஸில் ராஜா சாரும் சேர்ந்து பாடியது எல்லாம் இப்போது நினைத்தாலும் கண் கலங்கும்.
10th, 11th 12th படித்த அந்த காலகட்டங்களில்(1985 - 1988) ராஜா சார் இசை அமைத்து வெளிவந்த அத்தனை படங்களையும் மாரிஸ், சோனா மீனா, ரம்பா ஊர்வசி, ஸ்டார், கலையரங்கம், காவேரி திரை அரங்குகளில் பார்த்த சுகம் இன்று வரை வேறெங்கும் கிடைத்ததில்லை. அப்போது பார்த்த படங்களையும், கேட்ட பாடல்களையும் பட்டியலிட்டால், படிக்க யாருக்கும் நேரமிருக்காது.
ராஜா சாரை என் ஆழ் மனதில் பதித்த இலங்கை மற்றும் விவித்பாரதி ரேடியோவும், பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்த ஒரு ஆசிரியரின் டேப் ரிக்கார்டரும், டி கடையில் ஓசியில் படித்த தினதந்தியில் ராஜா சார் வேலை செய்த திரைபட விளம்பரங்கள், செய்திகள் மற்றும் தேவி வார இதழில் ராஜா சார் பற்றிய வாழ்கை கதை - எதுவும் மறக்கவில்லை.
அன்று போல் இன்றும் ராஜா சார் பற்றிய பக்தியும் அவர் மீது கொண்டுள்ள பற்றும் குறையவில்லை. அவரை யாரேனும் குறை சொன்னால் எதிரியாய் தெரிகிறார்கள். நான் வளர்ந்தும் பக்குவ படாததால், மல்லுக்கு நிற்க தோன்றுகிறது.
ஒரு 30 வயது குறைந்து போய் மறுபடியும் டீன் பருவத்தில் காலடி வைத்து திருச்சி வீதிகளில் அலைந்து திரிந்து ராஜா சாரின் படங்களை இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு, இருட்டு கடைகளில் பரோட்டா சால்னா சாப்பிட ஆசையாய் இருக்கிறது..
-
8th August 2014 04:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks