'ஒளி பிறந்தது 'அரசாங்க மருத்துவ மனையையும், அங்கு பணி புரிவோர், அதைச் சுற்றி கடை வைத்துள்ளோர், மார்ச்சுவரி, பிண ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோரை களமாகக் கொண்டு துரை இயக்கிய படம். மறைந்த நடிகர் உதிரிப்பூக்கள் விஜயன், இதில் பிண ஊர்தி ஓட்டுநராக நடித்திருப்பார். சுருளிராஜனுக்கு குதிரை (ஜட்கா) வண்டி ஓட்டும் வேடம். தொடர்ந்து பிணத்தையே ஏற்றிச் சென்றதால் அந்த குதிரை வெள்ளைத்துணி போர்த்திய பிணத்தை பார்த்தாலே நின்றுவிடும். பயணிகளை ஏற்றிச் செல்லும் சுருளிராஜன் இதனால் பாதிக்கப்படுவார். இதை அறிந்த ஒரு கூட்டம் அவரை, குதிரையின் வீக்னெஸ்ஸை வைத்து பிளாக்மெயில் செய்யும். ஒருவழியாக குதிரையை மாற்றி தப்பிப்பார்
.முரட்டுக்காளை தன் தந்தையைக் கொன்றதற்க்காக பண்னையார் வம்சத்தையே அழிக்க சபதம் எடுக்கும் கண்க்குப்பிள்ளை வேடம். (சகுனி )படத்தை நகர்த்திச் செல்லும் மையப் புள்ளியே கணக்குப்பிள்ளை சுருளிராஜன் தான். ஜெய்சங்கரிடமும், ரஜினியிடமும் நயவஞ்சகமாகப் பேசி இருவரையும் மோதவிட்டு தன் காரியத்தை சாத்தித்துக் கொள்வார். ஒரு காட்சியில் ரஜினியின் தம்பிகளின் மேல் திருட்டுக் குற்றம் சாட்டி கட்டி வைப்பார்கள். இதனால் ரஜினி சண்டைக்கு வருவார். அவர் கைகாலை எடுத்து விட வேண்டும் என பேசிக் கொள்வார்கள். சுருளிராஜன் வெளியே வந்து சொல்வார். உடையப் போவது யாருடையது என்பதை நானல்லவா முடிவு செய்யவேண்டும் என்று. கடைசியில் ஜெய்சங்கரை சிறைக்கு அனுப்பிவிட்டுத் தான் ஓய்வார்.
ஹிட்லர் உமாநாத்தன் சுய உழைப்பால் முன்னேறிய வேடம் சிவாஜி கணேசனுக்கு. அதனால் அலுவலகத்தில் கடுமையாக ஹிட்லர் போல நடந்து கொள்வார். அவரை குளிர்விக்க அவரை புகழ்ந்து சுருளிராஜன் பாடும் வில்லுப் பாட்டு மிக பிரபலமான ஒன்று.பாலாபிஷேகம் ஜெய்ஷங்கர் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அரவாணி வேடம் சுருளிராஜனுக்கு
அவர் ஏற்று நடித்த வேடங்களுக்கு ஏற்பவே அவரது வசனங்களும் இருக்கும். ஒரு படத்தில் தண்டனையாக அவரை வடைக்கு ஆட்டச் சொல்லும் போது உளுந்த வடைக்கா? மசால் வடைக்கா? என்று கேட்பார். அவருடன் வருபவர் எதற்கா இருந்தா என்ன? என்பார். உடனே இவர் சொல்வார். மசால் வடைக்கின்னா ஒன்னு ரெண்டா ஆட்டினா போதும். உளுந்த வடைன்னா மையா ஆட்டனும்ல என்பார். சமையல் தொழிலாளியாக, மெக்கானிக்காக எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றார்போல தன் வசன்ங்களை அமைத்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.
இதற்க்கு முக்கிய காரணம், அவரின் கூர்ந்த கவனிப்பே. பெரியகுளத்தில் 1938ல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு மனிதர்களும் அவரின் பிற்கால வேடங்களுக்கு கச்சாப் பொருளாய் இருந்தன. தற்போது வடிவேலுவின் முக்கிய பாணியாய் விளங்கும் உதார் விடும் சாமான்யன் வேடம், மதுரையில் அவர் பார்த்த பல உதார் பார்ட்டிகளிடம் இருந்து எடுக்கப்பட்டதே. மதுரையில் தெருவுக்கு நாலு பேர் அப்படி இருப்பார்கள்.
சுருளிராஜனின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று. அடித் தொண்டையில் உருவாகி கீச்சுக்குரல் போல ஒலிக்கும். எம் ஆர் ராதாவுக்கு பின்னால் வந்த குரல்களில் தனித்தன்மை வாய்ந்த குரல் அது. மிமிக்ரி கலைஞர்களால் அதிகம் உபயோகிக்கப்படும் குரலும் கூட. அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு மெருகேற்றியது அவர் குரலே.
1980 ல் அவர் இறந்தார். 82 ஆம் ஆண்டுவரை அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. 79 மற்றும் 80 ஆண்டுகளில் மட்டும் அவர் 80 படங்களுக்கும் மேல் நடித்திருந்தார். இடைவிடா படப்பிடிப்பும், அவரது குடிப்பழக்கமும் அவர் 42 வயதிலேயே மறையக் காரணமாய் இருந்தன. 10 ஆண்டுகள் போராடி முதல் இடத்துக்கு வந்தார். தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே நம்மிடம் இருந்து விடை பெற்றுவிட்டார்.
இவர் ஜெய்சங்கருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்
காமெடிக்கு சுருளிராஜன். ('மறைந்த கலைஞர்' என்று டைட்டில் போடுவார்கள்). படம் வரும் போது அவர் உயிருடன் இல்லை. படத்தில் இவர் பாடும் வில்லுப்பாட்டு மிக பிரசித்தம். இன்றளவில் கூட அந்த நடிகர் திலகம் புகழ் பாடும் வில்லுப்பாட்டை பலர் ரசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். (வில்லுப்பாட்டு எழுதி அமைத்தவர் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்கள்). மேலும் இலங்கை வானொலியில் அந்த நாட்களில் இந்த வில்லுப்பாட்டை ஒருநாள்கூட ஒளிபரப்பாமல் இருக்கவே மாட்டார்கள். கோவில் விசேஷங்களிலும், கல்யாண வைபவங்கள், இதர விசேஷங்களிலும் நான் இந்த வில்லுப் பாட்டை பலமுறை கேட்டதுண்டு.
வில்லுப்பாட்டு பற்றி சில வரிகள்.
தன் முதலாளி உமாநாத்தைக் காக்கா பிடிக்க சுருளிராஜன் உமாநாத்தின் புகழை வில்லடித்துப் பாடுவது போல காட்சி அமைப்பு. ஆனால் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா? நடிகர் திலகத்தின் புகழ்தான் இந்த வில்லுப் பாட்டில் பாடப்படும் ஹிட்லர் உமாநாத்தின் பெயரை சாக்காக வைத்துக் கொண்டு.
நம் ரசிகர்கள்கொண்டாடி மகிழும் வில்லுப்பாட்டு இது. நடிகர் திலகம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததை ஹிட்லர் உமாநாத் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்ததோடு ஒப்பிட்டு இப்பாடலை வடிவமைத்திருப்பார்கள் சுருளியின் இடையிடை காமெடி பஞ்ச்களோடு (அண்ணே! புல்லரிக்குதுண்ணே!... போர்வையிருந்தா போர்த்திக்கோடா... கன்னுக் குட்டி மேஞ்சிடப் போகுது!) சேர்த்து. இதில் சில வரிகளை தருகிறேன். கவனியுங்கள்.
சுருளி கடவுளை வேண்டி துவக்கி வில்லடித்துக் கொண்டே பாடும் ஆரம்ப வரிகள்.
பூப்பறிச்சு மாலை கட்டி... (ஆமடி தங்கம்)
பூசை பண்ணி வந்திருக்கேன்... (ஆமாஞ் சொல்லு)
காப்பாற்ற வரணுமய்யா... (ஆமடி தங்கம்)
கணேசனே சரணமய்யா... (ஆமாஞ் சொல்லு)
இந்த இடத்தில் கணேசன் யாரென்று தெரிகிறதா?
ஒரு டீயை இரண்டாக்கி
உறிஞ்சி நாங்க குடிச்சதிலே
ஒருத்தன் மட்டும் ஒசந்தானே!
இன்னொருத்தன் அசந்தானே!
(இதில் மூன்றாவது வரியையும் நான்காவது வரியையும் நன்றாகப் படித்து புரியும் சக்தி உடையவர்கள் புரிந்து கொள்ளுங்கள்)
ஹிட்லர் மீசையுடன் பிறந்தார் எங்க ஹீரோ
இங்கிலிஷும் பேசிடுவார் ஆரீராரோ
(நடிகர் திலகம் பைல்களைப் பார்த்தவாறு வில்லுப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருப்பார்)
வாய் தொறந்தா வசனமல்லோ எங்க ஹீரோ
அந்த வசனமே கவிதையல்லோ ஆரீராரோ
என்னைக்கும் வாடாத பாசமலரு
பெத்த அன்னைக்கு உத்தம புத்திரன் இவரு
இந்த ஊரில் இதுதான் ஒசந்த மாளிகை ஆமா(ம்)
ஹிட்லர் மீசை குடியிருக்கும் வசந்த மாளிகை
இப்படியாக இப்பாடல் நடிகர் திலகத்தின் புகழ் பாடியே வளரும். பிரபல ராகங்களின் பெயர்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு வில்லுப்பாட்டின் மூலம் பெருமைப் படுத்தப்படும்.
அழுதிடுவார் அது ஆரபி ராகம்...
கர்ஜனை செய்வார் இது கல்யாணி ராகம்...
சிரிச்சிடுவார் அது செஞ்சுருட்டி
சிணுங்கிடுவார் இது சிந்து பைரவி...
சீட்டியடிப்பார் அது நாட்டைக்குறிஞ்சி
சத்தமிடுவார் அது சங்கராபரணம்
நடையழகு இது ரூபக தாளம்
நாடித்துடிப்பினிலே ஆதிதாளம்
அப்படியே படம் பிடிக்க கேமரா இல்ல
அம்புட்டையும் சொல்ல நானு கம்பனுமில்ல
மகராசன் கோட்டையிலே கோயில் வாசலு (நடிகர் திலகத்தின் 'அன்னை இல்ல' வாசலின் முன் உள்ள விநாயகர் கோயில்!?)
நமக்குப் பெருமை பிடிபடாது.
(இந்த வில்லுப்பாட்டில் திரு.சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுக் குழுவினரும் சுருளிராஜனுடன் இணைந்து நடித்திருப்பார்கள். மலேஷியா வாசுதேவன் சுருளிராஜனின் குரலில் அருமையாக சுருளிராஜனுக்குப் பின்னணி பாடியிருப்பார்).
ஆனால் ஒரு குறை. இன்னும் முழுமையாக கவனம் செலுத்தி இப்பாடலைத் தந்திருந்தால் அற்புதமான தலைவரைப் பற்றிய முழுமையான சாதனை வில்லுப் பாட்டாக இது அமைந்திருக்கும். இடையில் சில சொதப்பல் வரிகள், காமெடி வசனங்கள் என்று இடையிடையே அடிக்கடி ட்ராக் மாறுவதால் நமக்கு இந்த வில்லுப் பாட்டு முழு திருப்தி இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றமே!
என்றாலும் மறக்க முடியாத ஜனரஞ்சகமான சூப்பர் ஹிட் வில்லுப்பாட்டு. அனைவராலும் விரும்பப்பட்ட ஒன்று.
Bookmarks