Results 1 to 10 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மஞ்சூரில் பாடல்களை ரெக்கார்ட் செய்து தருவதற்கு இரண்டு கடைகள் இருந்தன. ஒன்று ”அருண் ரெக்கார்டிங் செண்டர்”, மற்றொன்று ”காஜா ரெக்கார்டிங் செண்டர்”. நாங்கள் காஜா ரெகார்டிங் செண்டர் போவதே இல்லை. இத்தனைக்கும் காஜா ரெக்கார்டிங் செண்டர் சாலை ஓரமாக எளிதில் அடையக்கூடிய இடமாக இருக்கும் பரப்பளவிலும் சற்று பெரியது. ஆனால் அருண் ரெகார்டிங் செண்டர் மஞ்சூர் பஜாரின் ஒரு மூலையில் , குறுகலான மாடிப்படிகள் ஏறி முதல் தளத்தை அடைந்து, சற்றே அகலம் குறைந்த சிறிய அறையில் நின்றுகொண்டுதான் பாடல்களைத் தேர்வு செய்யவேண்டும். இத்தனையும் தாண்டி நாங்கள் அருண் ரெக்கார்டிங் செல்வதற்கு காரணம்

    ‘சேவியர்’ அண்ணா.

    அண்ணா கோயம்புத்தூர் ஸ்டேஷன்ல நேத்து காலைல ஒரு பாட்டு போட்டாண்ணா. நேத்தைக்கு வரைக்கும் ஞாபகம் வச்சுருந்தேன்….ஆனா இப்போ மறந்து போய்ட்டேன்”. என்றான் மோசஸ் ஒருநாள்.
    ”தனிப்பாட்டா, ஜோடிப்பாட்டா?”.
    ”ஜோடிப்பாட்டுதாண்ணா”
    “பூஜைக்கேத்த பூவிதுதானே”
    ”இல்லண்ணா, அது இளையராஜா பாடுறது – எனக்கு புடிக்காது, இது வேற”
    ”டேய் அது அவரோட தம்பி பாடினது, அந்த பாட்டு இல்லேன்னா அது ’சின்னத்தம்பி பெரியதம்பி’ பாட்டாதான் இருக்கும்”, என்று அடுத்த கணத்தில் ”ஒரு காதல் என்பது’ பாடலை ஒலிபரப்பினார்.

    இதைக் கேட்டபோது நாங்கள் ஏழாவதுதான்
    படித்துக்கொண்டிருந்தோம். பாடல் ரெக்கார்டிங் செய்யக்கூட செல்லவில்லை. இவ்வளவு நேரம் செலவு செய்து எங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் ஏதும் அவருக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் அதுதான் சேவியர் அண்ணா, யார் போய் திரைப்பாடல் குறித்து என்ன கேட்டாலும் இதே அளவு பொறுமையுடன் பதில் சொல்வார். எல்லார்க்கும் எளியனாய், இன்சொலனாய் இருந்தார் அவர். சில நாட்களில் வெறும் ஹம்மிங் மட்டும் செய்து காட்டினாலே போதும் அது என்ன பாடலென்று கண்டுபிடித்துத் தருவார் என்பதை பார்த்திருக்கிறேன்
    மிக அழகாக லெட்ஜர் செய்யப்பட்ட ஃபைல் ஒன்று அவரிடம் இருந்தது. படத்தின் பெயர் பச்சை மையில் எழுதியிருக்கும். கீழே வரிசையாக நீல நிறத்தில் பாடல்களின் பெயரும்– அதன் நேரெதிரே பாடகர்களின் பெயரும் – சிவப்பு மையில் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கோட் நம்பர் எழுதி வைத்திருப்பார். இதனால் எந்த ஒலிநாடாவையும் அவரால் எளிதில் கண்டடைய முடிந்தது.
    இது தவிர கடையெங்கும் புதிய திரைப்படங்களில் போஸ்டர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார். அப்போது மஞ்சூருக்கு கோகுல் தியேட்டர் வந்திருக்கவில்லை. ஊட்டி அலங்காரும், லிபர்டியும் தான் எங்களுக்கு கதி. அதனால் போஸ்டர்களுக்கும் மஞ்சூர்களுக்கு வரும் வேலை இருக்காது. இந்த அண்ணா ஒருவர்தான் எங்களை காஜா ரெகார்டிங் செண்டர் போகவிடாமல் செய்யும் அந்த ரகசியச்சாவியைக் கைக்கொண்டிருந்தார்.

    நான் கண்ட முதல் முற்றிலுமான திரைப்படத் தகவல் களஞ்சியம் அவர்தான். எப்போது அங்கே போனாலும் சென்ற வேலையை முடித்துவிட்டு உடனே வரமாட்டேன். சேவியர் அண்ணா அவர் நண்பர்களோடு நட்த்தும் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்களை கேட்டுவிட்டுதான் வருவேன். அந்த நாளில் இன்று போல திரைச்செய்திகளைத் தர இணையதளங்கள் இல்லை, வானொலிகள் இல்லை, சாட்டிலைட் சானல்கள் இல்லை. ஆனால் சேவியர் அண்ணா இருந்தார். அவருக்குத் தெரியாமல் திரையுலகில் ஒன்றும் நடந்துவிடாது என்பதை அவர் நம்பினாரோ இல்லையோ, என்னைப்போன்ற சேவியர் அண்ணாவின் ரசிகர்கள் நம்பினோம்.

    ”GM குமாருக்கும், பல்லவிக்கும் கல்யாணம். பிரியதர்ஷன் – விக்ரம் ’ப்ரீதி’ யை லவ் பண்றாரு – மணிரத்னத்துக்கும், சாமிக்கும் பாம்பேல பெரிய சண்டையாகி ரஜினி படம் நிக்கப்போகுது – கார்த்திக் ஒரு படுகா பொண்ணை கல்யாணம் பண்ணப்போறாரு – பிரபு குஷ்பு காதல்” என பல பெரிய கிசுகிசுக்கள் அவர் மூலம்தான் எனக்குத்தெரிய வந்தன.

    இவை எல்லாவற்றையும் தாண்டி சேவியர் அண்ணா ஒரு இளையராஜா பக்தர். சரியாகத்தான் எழுதியிருக்கிறேன். ரசிகன் அல்ல பக்தர். ’சாமி’ என்றுதான் அழைப்பார் ராஜாவை. சாமியோட 3 படம் வருது மக்கா இந்தவாரம். கீதாலயாலயும், ராகம் காம்ப்ளக்ஸ்லயும் டிக்கெட் போட சொல்லிருக்கேன் என்பார். (இன்டஸ்ட்ரியில் எல்லாரும் அப்படிதான் கூப்பிடுவார்கள் என்று ஒரு முறை சொன்னார்)

    பாட்டு நிறைய கேட்பேனே தவிர வெகுகாலம் வரையில் சினிமா பாட்டு என்பது குரலும், வரிகளும் மட்டும்தான் எனக்கு. அதைத்தாண்டி இசைக்கருவிகளையும், தாளங்களையும் ரசிக்க கற்றுக்கொடுத்தது சேவியர் அண்ணாதான். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் வரும் ‘மதுரை மரிக்கொழுந்து வாசம்’ பாடலை எண்ணற்ற முறைகள் ரசித்திருக்கிறோம் இல்லையா. அந்தப்பாடல் வந்து நான்கு வருடம் ஆகியிருந்தது அப்போது.
    யாரோ ஒரு நண்பருக்காக இந்த பாட்டை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு நாள். “மக்கா, நீ பரீச்சை எழுதும்போது என்ன பண்ணுவ, எல்லாத்தையும் நீலப்பேனால எழுதிட்டு, முக்கியமான வரிக்கு மட்டும் சிகப்பு கோடு போடுவேல்ல… அந்த மாதிரியே சாமியும், இந்த பாட்டுக்கு நடுவுல ரெண்டு இடத்துல சிகப்பு கோடு போடுவாரு கவனி…” என்றார். எனக்குப்புரியவில்லை. அந்தப் பாட்டை பல தடவை கேட்டிருக்கிறேன். இந்த விஷயம் புதிதாக இருந்தது. இது நம் சிற்றறிவைத் தாண்டிய சூத்திரம் ஏதோ போல என்று நினைத்துக்கொண்டேன்.
    தபேலாக்களால் இறுக்கமாக கட்டப்பட்டு இனிய தாளக்கட்டுகளைக் கொண்டு வரும் முதல் சரணத்தைக் கேட்டோம். முதலில் மனோ ‘பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிகிட்டு…..” என்று ஆரம்பித்து நான்கு வரிகளை பாடிமுடித்து…”…… வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக்கட்டிப்போட்டுப்புட்ட….” என்று சுருதியை கீழே இறக்கி முடிப்பாரில்லையா….அதே சுருதியை சித்ரா மீண்டும் ஏற்றி “கட்டு அது உனக்கு மட்டும்தானா, இந்த சிட்டுங்கூட சிக்கியது ஏனாம்..” என்று ஆரம்பிக்கும்போது கைகளை உயர்த்தி ’கவனி’ என்பது போல சுட்டு விரலால் பிளேயரைக்காட்டினார் அண்ணா. அதற்கு பின்னணியில் மெல்லியதாய் வயலின் கீற்று ஒன்று அடுத்த இரு வரிகளுக்கு வரும்…. இரண்டே வரிகள்..பின்னர் காணாமற்போய் பின் மீண்டும் பல்லவியில் இன்னும் அதிக எனர்ஜியோடு இணைந்து கொள்ளும். அதே அடிக்கோடிடும் விளையாட்டு இரண்டாம் சரணத்திலும் தொடரும்.

    பளீரென ஒரு சந்தோஷ மின்னல் வந்தது எனக்குள். அதுதான் தொடக்கம். பின்னர் ஒவ்வொரு பாடலிலும் ராஜா எந்தெந்தெ லேயர்களில் எந்தெந்த இசைக்கருவிகளால் தோரணம் கட்டுகிறார் (interlude க்கு சேவியர் அண்ணா வைத்திருந்த பெயர் தோரணம்), எந்தக்கருவியால் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே கமா போடுகிறார், புள்ளி வைக்கிறார், ஒரு வாக்கியம் முடித்தவுடன் ஒரு சிறிய செர்ரி பீஸை வெனிலா கேக்கின் மேல் வைத்து அலங்காரம் செய்வது போல ஒரு வயலின் கீற்றையோ, புல்லாங்குழல் நறுக்கையோ போகிற போக்கில் செருகி வைத்துப்போகிறார் என்று அனுபவித்து அனுபவித்து கேட்க ஆரம்பித்தேன்.

    நாடோடித் தென்றல் கேசட் வந்த அன்று அண்ணாவிற்கு உற்சாகம் கரைபுரண்டோடியது. நான் சண்முகம் அண்ணாவோடு அன்று கடைக்குப்போயிருந்தேன். ஏற்கனவே இந்த படத்திற்கு பாடல்கள் முழுவதும் இளையராஜாதான் எழுதுகிறார் என்ற தகவலை சேவியர் அண்ணா சொல்லி, அதை சண்முகம் அண்ணா மறுத்திருக்கிறார் போல. “வா, மக்கா, வா உன்னைதான் பார்த்துட்ருந்தேன். நல்லா கவரைப் படி ,கதை, பாடல்கள் – சாமின்னு போட்ருக்கா’ என்று சொல்லி சிரித்தார். சண்முகம் அண்ணா அதை கவனிக்காதவாறே, ’உட்றா ஸ்பெல்லிங் மிஸ்டேக்காட்ருக்குது ‘ என்றார் சிரித்தவாறே.

    ”சாமி நல்லா முயூசிக் போடுவார்ன்றதெல்லாம் நியூசே இல்லை சம்மு. எழுதிருக்காரு பாரு பாட்டு. ‘பூமரப் பாவை நீயடி’ ன்னு ஒரு லைனு. என்ன அர்த்தம்னு நினைக்கிற. முத வரில ‘தொட்ட இடம் பூமணக்கும், துளிர்க்கரம் தொட இனிக்கும்’ அதுனால ”நீ ஒரு பூமரம் மாதிரியான பொண்ணு” அப்படின்னு ஒரு அர்த்தம். அப்புறம் ’பூமரத்துல செஞ்ச பொம்மை (பாவை) மாதிரி நீ – என் கையில் விளையாட” அப்படின்னு ஒரு அர்த்தம் , பூமரத்திலயே விளைஞ்ச பொண்ணு நீ –அதுனால அதோட features உங்கிட்ட இருக்குன்னு ஒரு அர்த்தம்….சே கொன்னுட்டாருடா…இனிமே எந்த திமிர் பிடிச்ச கவிஞனும் சாமிக்கு தேவையில்லை அவரே போட்டுப்பாரு எல்லா பாட்டையும் என்றார் சேவியர் அண்ணா. சண்முகம் அண்ணா, “டேய் அவரே இவ்ளோ யோசிச்சிருக்கமாட்டாரு, லூஸ்ல விடு” என்றார்

    அவர் சொன்ன பல விஷயங்கள் ஆச்சயர்யமாக பின்னாளில் உண்மையான Facts உடன் ஒத்துப்போனதைப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக அவர் சொல்லியிருந்த ஒரு ஸ்டேட்மெண்ட் “சாமியோட காலைல ஆறு மணிக்கு முதல் சிட்டிங் உக்கார்ரவங்களுக்குதான் ஜாக்பாட்டு. அப்போதான் அவரோட எல்லா நல்ல பாட்டுங்களும் கம்போஸ் ஆகிருக்கு”. பின்னாளில் முன்னணி இயக்குனர்களின் சில பேட்டிகளில் இதே விஷயத்தினை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
    இதுபோன்று பல தருணங்கள், பல நிகழ்வுகள், பல பாடல்கள், பல செய்திகள் என மொத்தமாக சேவியர்அண்ணாவிடம் சக சினிமா பைத்தியமான என்னை வெகுவாக வசீகரித்திருந்தது. கிட்ட்த்தட்ட 1989 – 95 வரையிலும் பெரும்பாலான பாடல்களை அருண் ரெக்கார்டிங்கில்தான் பதிவு செய்திருந்தேன். பெரும்பாலான புதிய பாடல்கள் வரும்போதெல்லாம் அங்கேதான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு குறிப்பிட்ட பாட்டு மட்டும் கேட்கும் எந்தக் கணத்திலும் சேவியர் அண்ணாவை நினைவூட்ட அவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிணக்குதான் காரணமாகிவிட்டது.

    அந்த குறிப்பிட்ட சமயத்தில் என்னிடம் இருந்தவை எல்லாமே 60 கேசட்டுகள்தான். 5+5 பாட்டுகள் கொள்ளும் சில சமயங்களில் அதிசயமாக ஆறாவது பாட்டுக்கு இடம்கொடுக்கும் அவ்வளவுதான். 90 கேசட்டுகளின் விலை சற்று அதிகம் என்பதால் அதை வாங்கியதே இல்லை. திருப்பூர் மாமா ஒருநாள் ஏதோ எஸ்விசேகர் நாடகம் ஒன்றைக்கொண்டு வந்திருந்தார். செம அறுவை. ஒருதடவையோ இரண்டு தடவையோதான் கேட்டிருப்பேன். வீட்டில் பிறரும் அதன்மேல் எந்த ஆர்வமும் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. ஒரு நல்ல காலைப்பொழுதில்தான் அந்த நாடகத்தை அழித்து அதில் பாடல்களை பதிவுசெய்துகொள்ளலாம் என்ற யோசனை வந்தது.

    இளையராஜாவின் 20 கிளாசிக் டூயட் பாடல்களை அதில் பதிவு செய்வது என்ற முடிவுடன் என் நினைவுகளுக்குள் தேட ஆரம்பித்தேன். பாடப்புத்தகம் தாண்டி நான் முதன்முதலில் செய்த இளம்வயது ரிசர்ச் அதுதான். காலையில் கோயம்புத்தூர் ஸ்டேஷனில் பாட்டுகள், பள்ளிக்கு வருவதற்கு முன்னும், பின்னும் அருண் ரெக்கார்டிங் செண்டரில் பாடல்கள், சிலோன் ரேடியொ ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுதான் டியூன் செய்து எடுக்க வைக்கவேண்டும் – தெளிவாகவும் எடுக்காது – எனினும் தினமும் கஷ்டப்பட்டு கேட்டேன். என்னளவில் திறம்பட தொகுக்கப்பட்ட இளையராஜாவின் கிளாசிக் 20 டூயட் பாடல்களை அடுத்த 2 வாரத்தில் சேர்த்தேன்.
    ஒரு வெற்றிக்களிப்போடு சேவியர் அண்ணாவைச் சரணடைந்தேன். “அமர்க்களமான கலெக்ஷன் மக்கா, எந்த பொண்ணுக்கு கொடுக்கப்போற” என்றார் கண்சிமிட்டலுடன். “இல்லண்ணா இது எனக்குதான். இதை அழிச்சு ரெக்கார்ட் பண்ணாம கடைசி வரைக்கும் வச்சுக்கணும். அதுக்காகதான் தேடித் தேடி 20 பாட்டு செலக்ட் பண்ணேன்” என்றேன். சிரிப்புடன் வாங்கிக்கொண்டார்.
    அன்று மாலையே கையில் கிடைத்தது நான் எதிர்பார்த்திருந்த பொக்கிஷம். மிகுந்த மனமகிழ்வோடு அந்த பாடல்கள் கேட்டேன். முதல் பகுதியில் “பொத்தி வச்ச மல்லிகைமொட்டு”, “முத்துமணிமாலை”, “ஒருநாளும் உனை மறவாத”.. என்ற வரிசையில் பத்து பாடல்கள். முடிந்தன. இனி என்ன அடுத்த பக்கம் திருப்பி அடுத்த பத்து பாடல்களை கேட்க வேண்டியதுதான் என எண்ணி எழுந்த அடுத்த நிமிடத்தில் ஒலிக்க ஆரம்பித்தது அந்த பதினோராவது பாட்டு. இளையராஜாவின் குரலில் ஆரம்பித்தது.

    அப்போது நான் என்னதான் இளையராஜா ரசிகன், அவர் பாடல்களை திரும்ப திரும்பக் கேட்டு , அலசி அவர் புதிய பாடல்கள் என்னென்ன வரப்போகின்ற என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு காத்திருந்து ரசிப்பவன் என்றாலும், அவர் குரல் மீது எனக்கு ஒரு சிறிய அசூயை இருந்தது. என்ன இருந்தாலும் எஸ்.பி.பி., மனோ, அருண்மொழி, ஜேசுதாஸ் குரல்கள் போல அது ஒரு இள வயது குரல் அல்ல அல்லது அது ஒரு ஓல்ட் ஸ்கூல் குரல் அல்லது அது இயல்பாக ஒரு ஹீரோவின் குரலுக்கு ஒத்துப்போவதில்லை அல்லது அந்தவயதில் அந்தக்குரல் பிடிக்காமற்போனதற்கான சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு புரியாத காரணத்தினால் இளையராஜா ‘பாடிய’ எல்லா பாடல்களையுமே ஒரு ‘skip’ மோடில்தான் வைத்திருந்தேன்.

    என்னுடைய கிளாசிக் லிஸ்ட்டில் அவரது குரலில் ஒரு பாட்டா? நெவர். என்னதான் சேவியர் அண்ணா சிறந்த ரசிகராக இருந்துவிட்டுப்போகட்டுமே? என்னுடைய ரசனையில் கைவைக்க அவருக்கு என்ன உரிமை? கடுமையான் கோபம், அன்றிரவு அடுத்த பத்து பாடல்களைக்கூட கேட்கவில்லை.

    மறுநாள் காலையில் அவர் கடைக்குச்சென்றேன். அந்த குறிப்பிட்ட பாடலை மாற்ற வேண்டும் என்று சொன்னேன். அவர் அதை சட்டை கூட செய்யவில்லை. பிரமாதமான பாட்டு மக்கா. நீ கேளு, கேக்க கேக்க அது உனக்கு புடிச்சுப்போகும் என்றாரே தவிர என்னுடைய கோரிக்கையை அவர் காது கொடுத்துக்கூட கேட்கவில்லை.
    எளியனாக, இன்சிரிப்புடன் அத்தனை நாள் இருந்த சேவியர் அண்ணாவை அந்த நிமிடம் தொலைந்துபோயிருந்தார். நான் அவரிடம் இன்னும் சற்று அழுத்திக்கேட்டிருந்தால் கண்டிப்பாக அவர் அந்த பாட்டை அழித்துக்கொடுத்திருக்க் கூடும். ஆனால் எனக்கு சண்டை போடவராது. டிமாண்டிங் என்பது என் கேரக்டரிலேயே இன்றைய தேதி வரை கிடையாது. அப்போது இன்னும் 20 வயது குறைவு. இன்னும் பாந்தமாகத்தான் பேசுவேன். என்னுடைய ஏமாற்றம், என்னுடைய ரசனையில் சேவியர் அண்ணா கைவைத்தது. அத்தனை நாள் எனக்கு அழுகைதான் வந்தது. ஆனால் புறக்கணிப்பு என்பது என் ரத்த்தில் ஊறியது. எனக்கு எது ஒவ்வாத்தோ என்னை எது ஏமாற்றியதோ என்னை எது கடும் மன அழுத்த்தில் தள்ளியதோ அதனை கடுமையாக புறக்கணிப்பேன்.

    அது எவ்வளவு சின்ன விஷயம் என்று இப்போது தோன்றுகிறது.. ஆனால் அந்த சின்ன விஷயத்துக்காக நான் அருண் ரெக்கார்டிங் செண்டரை புறக்கணித்தேன்.. அடுத்து குந்தாவில் நான் இருந்த 8 மாதங்களும் நான் பாடல் பதியவே இல்லை. அந்த காம்ப்ளக்ஸ் படி கூட ஏறவில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற கணக்காய் காஜா ரெகார்டிங் செண்டருக்கும் செல்லவில்லை. சேவியர் அண்ணாவை பார்க்கமலேயே எனது குந்தா வாழ்வு முடிவுக்கு வந்தது.
    ஆனால் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணாமான அந்த பாடல் எனது எவர்கிரீன் ஃபேவரைட் ஆனது. அடுத்த 5 வருடங்களிலோ என்னவோ, இளையராஜா குரல் மீது பித்துப்பிடிக்காத குறையாக அவர் பெயரிலேயே இரண்டு மூன்று ப்ளே லிஸ்டுகளைப் போட்டுக்கேட்டுக்கொண்டிருந்த காலமெல்லாம் இருந்தது. இன்று அவர் குரல்மட்டுமே ஒலிக்கும் ஒரு ஸ்பெஷல் 100 பாடல் தொகுப்பை தனி சிடியாக்கி எப்போதும் வைத்துக்கொண்டிருக்கிறேன்.


    இனி எப்போது மஞ்சூர் செல்வேன் எனத்தெரியாது. ஆனால் எப்போது சென்றாலும் சேவியர் அண்ணாவை சந்திக்கவேண்டும். கண்டிப்பாக என்னை மறந்திருப்பார். ஞாபகப்படுதிக்கொள்ள சொல்ல வேண்டும். அதே மஞ்சூர் பஜாரில் எங்கேனும் ஒரு கடையில் வைத்து இந்த சிறிய கதையைச் சொல்லி சிரித்து, எப்போது கேட்டாலும் நினைவிற்கு வரும் “நில்லாத வெண்ணிலா” என்று இளையராஜாவும் ஸ்வர்ணலதாவும் பாடும் இந்த பிரமாதமான பாடலை அவரோடு கேட்க வேண்டும்.


    Nillatha Vennilla - Aanazhagan.wmv
    not much heard song from the movie Aanazhagan



    YOUTUBE.COM


    .
    ராஜாவின் குரலை வேண்டி விரும்பி கேட்பவர்களில் நானும் ஒன்று.
    Last edited by poem; 15th October 2014 at 03:29 AM.

  2. Thanks K, venkkiram thanked for this post
    Likes rajaramsgi, K, venkkiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •