கதாநாயகனின் கதை - 3

தினமலர் வாரமலர் 19.10.2014



நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம்தான்; ஆனால், என் மனதுக்கு நிறைவான வேலை.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு லட்சியம் இருக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஒரு மாணவன், எதிர்காலத்தில் ஒரு வக்கீலாகவோ, டாக்டர் ஆகவோ, இன்ஜினியராகவோ, கணக்கராகவோ இப்படித் தனக்கு ஏற்ற ஒரு உத்தியோகத்தை மனதில் வைத்து, அதற்கேற்ற பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கிறான். படித்துப் பட்டம் பெற்றதும், அந்த துறையில் பெரும் புகழ் பெற வேண்டும் என்பது அவன் லட்சியமாகி விடுகிறது.
ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்கு. அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் திறமை காரணமாக, வேறு ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை, சூழ்நிலை உருவாக்கித் தந்து விடுகிறது.
நடிப்புத் துறையில் சிறு வயதிலேயே ஈடுபடும் பெரும்பாலோருக்கு, அவர்களது மனதின் அடித் தளத்தில் ஒரு ஆசை பூத்துக் கிடக்கும்.
அதை, ஆசை என்று சொல்வதை விட லட்சியம் என்றே சொல்லலாம்.
அது தான், கதாநாயகன் வேடம்! நடிப்புத் துறையில் பதவி உயர்வின் உச்சமே, கதாநாயகன் வேடம்தானே!
'என்றாவது ஒரு நாள், நாம் கதாநாயகன் வேடம் போடப் போகிறோம், கதாநாயகனாக மாறப் போகிறோம்' என்ற ஆசை, அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டே இருக்கும்.
சின்னஞ் சிறுவனாக நாடகக் கம்பெனியில் நுழைந்து, அங்கு, எடுபிடி வேடம் போட்டு கதாநாயகனாக வருவதற்குள், எப்படியெல்லாம் ஒரு நடிகன் பாடுபட வேண்டியிருக்கிறது, எத்தனை வேடங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது, என்னவெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
உண்மையிலேயே நாடக மேடைதான், ஒரு நடிகனுக்கு நல்ல பயிற்சி சாலை. அவன் பலதரப்பட்ட பாடங்களை கற்றுத் தேர்ச்சி பெற உதவும் பல்கலைக் கழகம்.
வேறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கும்போதும், ஒவ்வொரு ஊர்களாக முகாம் மாறி, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவன் வளரும் போதும், அவன் பெறும் உலக அனுபவம் பெரிது. இதனால் தான், 'பாய்ஸ் கம்பெனி'யிலிருந்து வரும் எந்த நடிகரும், எந்தப் பாத்திரத்தையும் ஏற்று திறமையாக நடித்துக் காட்ட முடிந்தது.
நான் சிறுவனாகத்தான் நாடக மேடையில் பயிற்சி பெற நுழைந்தேன்.
முதன் முதலாக நான் மேடைக்கு சென்று, மக்கள் முன் நின்றபோது, எனக்கு எப்படி இருந்தது, நான் மேடையில் ஏற்று நடித்த முதல் வேடம் என்ன என்பதும் என் நினைவில் நிலைத்துவிட்டது.
அந்த முதல் வேடத்திலிருந்து, படிப்படியாக நான் போட்டு வந்த வேடங்கள் எத்தனை...
பெண் வேடம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கூட வந்ததே... அது ஏன், எப்படி என்ற விவரங்களும் என் ஞாபகத்தில் அப்படியே நிழலாடுகின்றன.
இத்தனை வேடங்களையும் ஏற்று, கடைசியாக கதாநாயகன் வேடத்தை ஏற்று, நடிக்க வந்த போது, எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்ன, நான் முதன் முதலாக கதாநாயகனாக ஏற்று நடித்த வேடம் எது, கதாநாயகனாக மாறியது எப்போது என்பதும், என் நினைவில் அப்படியே இருக்கிறது.
நான் ஆரம்பத்தில் போட்ட அந்தச் சின்னஞ்சிறிய வேடத்திலிருந்து, கதாநாயகனாக வேடம் போட்டு நடித்தது வரை, எனக்கு நாடக மேடையிலும், நடிப்புத் துறையிலும் ஏற்பட்ட அனுபவங்களைத்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அது தான், 'கதாநாயகனின் கதை!'
கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த அன்றிரவு, எனக்கு தூக்கமே வரவில்லை. இரவு நெடுநேரம் வரை அந்த நாடகத்தைப் பற்றிய சிந்தனைகள், அடுக்கடுக்காக மனதில் வந்து கொண்டிருந்தன.
'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது... உனக்கு ஏன் நான் கப்பம் கட்ட வேண்டும்...' என்று, தன்மானத்தைத் தன் குரலாக்கி, கட்டபொம்மன் இடி முழக்கம் செய்த போது, சபையிலே எழுந்த கைதட்டல்கள் என் காதில், ரீங்காரமிட்டன.
கட்டபொம்மனாக நடித்த நடிகருக்கு கிடைத்த பாராட்டுதல்களை நினைத்து, 'ஆஹா... நடிகனாகி விட்டால் எவ்வளவு கைதட்டல்களும், பாராட்டும் கிடைக்கும்...' என்று நினைத்தேன்.
என் பிஞ்சு மனதில் ஆசைகள் எழ எழ, நாடக மேடையின் பக்கமாக நெருங்கி வந்து கொண்டிருந்தேன். நடிகனாக வேண்டும் என்ற ஆவல் என்னைத் துரத்த ஆரம்பித்தது.
நான் இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்த போது, காக்கா ராதாகிருஷ்ணன் கம்பெனியில் இருந்தார். கம்பெனியில் இருந்த எம்.ஆர்.ராதா அண்ணன் சினிமாவில் நடிப்பதற்காக அப்போது போயிருந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அவர் வந்தார்.
நாடகக் கம்பெனியில் சேர்ந்த முதல் சில நாட்கள், நான் அங்கு நடப்பவைகளை பொதுப்படையாகக் கவனித்து வந்தேன். சில நாட்களுக்குப் பின், எனக்குப் பாடம் கொடுத்து படிக்கச் சொல்லியும், சின்ன வேஷம் கொடுத்து நடிக்கவும் கூறினர்.
வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை, எந்த விதமான தப்பும் செய்யாமல், அவர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்துக் காட்டினேன். அப்போது, நான் என்னுள் இருந்து நடிக்கவில்லை; என் ஆசிரியர் தான் உள்ளிருந்து நடித்தார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
என் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால், நான் கம்பெனியில் சேர்ந்த பத்தாவது நாளிலேயே, நாடகத்தில் நடிக்க எனக்கு ஒரு வேடம் கொடுத்தனர்.
என்ன வேடம் தெரியுமா? சீதை வேடம். ஆம், நான் வாழ்க்கையில் போட்ட முதல் வேடம், பெண் வேடம் தான். அதுவும், நாடகம் முழுவதும் வரும் சீதை வேடம் அல்ல, கன்னி சீதையின் வேடம். அதாவது, கன்னிகா மாடத்தில் நின்ற சீதை, ராமனைப் பார்த்து, அவர் வில்லை ஒடித்து மணக்கும் வரை உள்ள சீதை.
மூன்றே காட்சிகள் தான் வரும்.
'யாரென இந்தக் குருடனை அறியேனே... என் ஆசைக்கினிய என் முன்னே நின்றவன்...' என்று சீதை பாடுவாள்.
கம்பெனியிலே, 'மேக்-அப்' போடுவதற்கென்று தனியாக ஒப்பனைக் கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். நடிகர்களே தங்களுக்குப் போட்டுக் கொள்வர். நடிப்போடு, கூடவே, 'மேக்-அப்' போட்டுக் கொள்வதையும் சொல்லிக் கொடுத்து விடுவர். நடிகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டு விடுவதும் உண்டு.
சில சமயங்களில் வாத்தியாரும் போட்டு விடுவார்.
நாடகம் நடக்கும் போது, வாத்தியார் மேடையின் பக்கவாட்டில் வந்து நின்று கொள்வார். முக்கியமான வேடமாக இருந்தால், அவர் தாளம் போட்டு தட்டிக் காண்பிப்பார். அவரைப் பார்க்கப் பார்க்க அப்படியே மனப்பாடம் செய்திருந்த வசனமும், சொல்லிக் கொடுத்த நடிப்பும் வந்துவிடும்.
நாடகத்தில் நடிக்காதவர்களும், பக்கவாட்டில் வந்து நின்று கொண்டு கவனிப்பர், கவனிக்க வேண்டும். இது தவிர, நாடகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளாதவர்கள், திரைக்குப் பின்னால், சீன் தள்ளுவது, காட்சிக்கான சாமான்களைப் பொருத்தமான இடத்தில் வைப்பது போன்ற வேலைகளையும் செய்வர். நீண்டநாள் அனுபவம் வாய்ந்த சில பெரியவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் உள்ளே எங்கேயாவது இருப்பர்.
சீதையாக நான் அலங்கரிக்கப்பட்டுவிட்டேன்.
மனதிற்குள்ளேயே, கடவுளை வேண்டிக் கொண்டேன். ஏதேனும் உளறிக் கொட்டி, கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாதே என்ற ஒரு வகை பயம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
நாடகம் ஆரம்பமாயிற்று, திரை தூக்கப்பட்டுவிட்டது. நான் மேடைக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
கடவுளையும், என் குருநாதரையும் மனதில் நினைத்தபடி மேடைக்குள் நுழைந்தேன்.
நான் போட்டிருந்த வேடம், என் பாவனை, என் வேடத்திற்கு வேண்டிய உணர்ச்சி மற்றும் நடிப்பு இவை மட்டும் தான் என் கவனத்திலும், கண் முன்னும் வந்து நின்றன.
எதிரே நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள், என் கண் முன் தெரியவில்லை. மூன்று காட்சிகள் முடிந்தன. நான் உள்ளே வந்தேன்.
'ரொம்ப நல்லா செஞ்சுட்டேடா...' என்று, என் வாத்தியார் சின்ன பொன்னுசாமி, இரண்டு முறை முதுகில் தட்டிக் கொடுத்தார்.
எனக்கு இமயத்தையே வென்று விட்ட எக்களிப்பு; நூற்றுக்கு நூறு வாங்கிவிட்ட மாணவனின் நிலை.
கம்பெனியில் சேர்ந்த பின், இரண்டாவது முறையாக அன்றிரவும் நான் தூங்கவில்லை. என் மனதில் ஆயிரம் கனவுகள்; ஆயிரம் கற்பனைகள்.
கம்பெனி திருச்சியில் தங்கியிருந்த கடைசி நாட்களில் தான் நான் போய்ச் சேர்ந்தேன். நான் சேர்ந்த சில நாட்களில், கம்பெனி திண்டுக்கல்லுக்கு முகாம் மாறியது.
திண்டுக்கல்லில் முகாமிட்டபோது தான், ஒரு நாள் வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
'உனக்கு பிரமோஷன் கொடுத்திருக்கிறேன்...' என்று கூறி, அந்தப் பிரமோஷன் என்ன என்பதை கூறினார். அதைக் கேட்டு, நான் அப்படியே திகைத்து நின்றுவிட்டேன்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementa...d=22365&ncat=2