Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 11

Thread: பொய்கள்

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    Smile பொய்கள்

    “ மனோ, காயத்ரி ! பாட்டி வந்திருக்காங்க பாருங்க! ” அம்மா கலா கூவினாள், பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து.

    “ஐயா ! பாட்டி, பாட்டி! காயத்ரி, பாட்டி வந்திருக்காங்களாம்!” – மனோ
    “ஐயா பாட்டி !”- காயத்ரியும் கூவினாள். அண்ணன் எவ்வழி அவ்வழி அவளுக்கு தன்வழி !.

    மனோவும், காயத்ரியும் விழுந்தடித்து கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தனர்.
    மனோவிற்கு வயது ஏழு. காயத்ரி, மனோவின் தங்கை, அவளுக்கு வயது ஐந்து.

    “எப்போ பாட்டி வந்தே?”
    “இப்போதாண்டா கண்ணா! உள்ளே நுழையறேன். எனக்கு உங்களை பாக்கணும் போல இருந்தது! உடனே வந்துட்டேன்!”
    “நீ எப்போ பாட்டி திரும்பி போவே? ”
    மனோவின் அம்மா, கலா அதட்டினாள் “ உஷ் மனோ! அப்படியெல்லாம் கேக்க கூடாது!”
    “விடும்மா! குழந்தை அவனுக்கு என்ன தெரியும்?”
    “பாட்டி , நீ போகவே கூடாது ! எங்க கூடவே இருக்கணும்!” – மனோ பாட்டியை கட்டி கொண்டு.
    “கட்டாயம்! உங்க கூடவேதான் இருப்பேன்”
    “ப்ராமிஸ்?”
    “ப்ராமிஸ்!”
    காயத்ரி தன் பங்குக்கு பாட்டியை உரசிக்கொண்டே கேட்டாள் “ பாட்டி, கதை சொல்றியா?”
    “கட்டாயம், ராத்திரி தூங்க போகச்சே கதை சொல்லறேன்”
    “ராஜா கதை சொல்லணும்!” செல்லமாக மிரட்டினாள், பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டு.
    அண்ணன் விடுவானா? மனோ தனது விருப்பத்தை சொன்னான் அழுத்தமாக. “வேண்டாம் வேண்டாம் பாட்டி ! சாமி கதை சொல்லு!”
    “ரெண்டுமே சொல்றேன்! இந்தாங்க சீடை, முறுக்கு! சாப்பிட்டு விட்டு போய் சமர்த்தாய் விளையாடுங்க! ”
    கலா “ பாட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்!. அத்தை, நீங்க கொஞ்சம் படுத்துகிட்டு இருங்க! நான் சமையல் வேலை பாத்துட்டு வந்துடறேன். நிறைய வேலை இருக்கு. எல்லாத்தையும் நான் ஒருத்தியே பார்க்க வேண்டும். வேலைக்காரி வேறே வரல்லை! ”

    ****

    இரவு மணி ஒன்பது.

    மனோவின் அப்பா வாசுதேவன், வீட்டில் ஹாலில் தனது அம்மாவுடன் அரட்டை. குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
    “அம்மா! இன்னிக்கு தாம்மா உன்னை நினைச்சேன்! நீ வருவியோன்னு!”
    “சும்மா புளுகாதே! இந்த ஆறு மாசத்திலே , ஏண்டா ஒரு தடவை கூட நேரே வந்து பாக்கலே? கதை விடறான்!”
    “வேலை பளும்மா! தப்பா நினைக்காதே ! ஆனால், எப்பவும் உன் நினைப்புதான்”
    “ஏதோ சொல்லு! நம்பறேன்”

    “ஏம்மா ! இந்த தடவை , கொஞ்ச நாளாவாது எங்க கூட இருப்பியா?”

    “இல்லேடா! உன் தம்பி ஏதோ வேலையா சென்னை வந்தான். அவனோட வந்தேன். நாளைக்கே திரும்பணும், பெங்களூருக்கு.”

    “என்னம்மா இப்படி சொல்றே? நீ கொஞ்ச நாள் இங்கே தங்கிட்டு தான் போகணும். நானும் உன் பிள்ளை தானே! ”
    கலா “ஆமா அத்தை! இருங்களேன் ! குழந்தைங்க ரொம்ப ஏங்கறாங்க! ”

    "இல்லேப்பா! அங்கே, உன் தம்பி பெண்டாட்டியும் வேலைக்கு போறா! குழந்தைகளை பாத்துக்க ஆள் வேணுமே! நான் இல்லாட்டி, உன் தம்பி தவிச்சி தண்ணியா போயிடுவான்”
    “முடியாது பாட்டி, நீ எங்க கூடத்தான் இருக்கணும்”- கேட்டுக் கொண்டிருந்த மனோ சொன்னான்.

    “மனோ சும்மாயிரு. பாட்டியை தொந்தரவு பண்ணாதே. பரவாயில்லே அத்தை! என்ன தான் இருந்தாலும், இந்த வீட்டிலே உங்களுக்கு வசதி போதாது தான். பெங்களூர் தான் உங்களுக்கு தோதுப்படும்.”- மனோவின் அம்மா, கலா , குறுக்கில் புகுந்தாள்.

    “அதெல்லாம் இல்லேம்மா! எனக்கு ரெண்டு பெரும் ஒண்ணு தான். கொஞ்ச நாள் கழித்து திரும்பி வரேனே!”

    “சரிம்மா! உன் இஷ்டம்! நான் சொன்னா நீ கேக்கவா போறே? ”- வாசு அப்போதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்

    .****

    இரவு மணி 9.30

    “பாட்டி! கதை சொல்லு பாட்டி!”
    “சொல்றேன்! சொல்றேன்! என்ன கதை வேணும்?”
    “சாமி கதை!”
    “உன்னை மாதிரி குட்டி கண்ணன் கதை சொல்லட்டுமா?”
    “ம்! சொல்லு! சொல்லு !”குழந்தைகள் பாட்டி மடியில் படுத்துக்கொண்டு.
    காயத்திரி “ இதுக்கு அப்புறம் ராஜா ராணி கதை சொல்லணும்”
    “சரி அப்படியே செய்யறேன் என் ராசாத்தி !!” பாட்டி ஆரம்பித்தாள், கதை சொல்ல .

    * * * *
    “ரொம்ப நாளைக்கு முன்னாடி . டெல்லி பக்கத்திலே ஆயர் பாடி. கோகுலம்னு ஒரு ஊர் . அங்கே, குட்டி கண்ணன் , உங்களை மாதிரி தான், தன் வீட்டிலே விளயாடிண்டு இருக்கான்”
    “என்ன வயசு இருக்கும் பாட்டி, குட்டி கண்ணனுக்கு?”
    “என்ன, உன் வயசு இருக்கும், ஒரு ஐந்து வயசுன்னு வெச்சுக்கோயேன்!”
    “ஹேய் காயத்ரி, சும்மா கேள்வி கேக்க கூடாது?”அண்ணன் அதட்டினான்.”நீ சொல்லு பாட்டி!”
    “கண்ணன் மகா குறும்பு. உங்களை மாதிரிதான், ஏதாவது சேட்டை பண்ணி கொண்டே இருப்பான். மண்ணை தின்னுவான். வீடு வீடா போய் உறிலேருந்து வெண்ணை திருடி திம்பான். யாராவது பிடிக்க வந்தா ஓடிப் போயிடுவான்.”

    “உறின்னா என்ன பாட்டி?” காயத்ரி. அவளுக்கு எல்லாமே சந்தேகம்.
    பாட்டி பொறுமையாக சொன்னாள். “அந்த காலத்திலெல்லாம் குளிர் பெட்டி கிடையாதே! அதனாலே, கயிர்லெ வெண்ணை, தயிர், நெய் பானை கட்டி தொங்க விட்டுடுவாங்க. பூனைகிட்டேருந்து, எறும்பு கிட்டேயிருந்து, குட்டி பசங்க கிட்டேயிருந்து காப்பாத்த”.
    “ வெண்ணை திருடினா, அவங்க அம்மா அடிக்க மாட்டாங்களா?”
    ”அவன், நான் வெண்ணை திருடவேயில்லைன்னு சொல்வான்! யம காதகன், மனோ மாதிரி”
    “ஐயே! கண்ணன் பொய் சொல்வானா! சாமி போய் எங்கேயாவது பொய் சொல்லுமா?”
    “காயத்ரி! பேசாம இரு! நீ மேலே சொல்லு பாட்டி!”

    “நல்ல பெண்ணா, கதை கேக்கணும்! கேள்வி கேட்டுகிட்டே இருக்க கூடாது! என்ன!” –பாட்டி கதை சொல்ல ஆரம்பித்தாள்.

    ****

    குட்டி கண்ணன் தன் வீட்டிலே விளயாடி கொண்டு இருக்கிறான் . அவனது அம்மா யசோதா வீட்டுக்குள்ளே ஏதோ வேலையாக இருக்கிறாள். வாசலில் குரல் கேட்கிறது:

    அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள், கோபியர். “அம்மா யசோதா! அம்மா யசோதா!கொஞ்சம் வாங்களேன் ! ”
    “வாங்க! என்ன விஷயம்?”

    “அம்மா! உங்க பையன் கண்ணன் பண்ற விஷமம் தாங்கலை! வெண்ணையை திருடி திருடி தின்னுடறான். மத்த பசங்களுக்கு இவன்தான் குரூப் லீடர். எல்லாரும் சேர்ந்து தாழியை உடைச்சு, ரகளை தாங்கலை! உங்க பையனை கொஞ்சம் கண்டித்து வையுங்க அம்மா!”

    யசோதா சிரித்தாள். “என் பையனா! இந்த குட்டி கண்ணனா! இருக்கவே இருக்காது!”

    “உங்க பையனையே கேளுங்க!”

    “கண்ணா! இங்கே வா! நீ வெண்ணை திருடினாயா? இவங்க சொல்றாங்களே?”

    “அம்மா !நானா ! நான் எப்படி? நீ நம்பறியா? நானே குட்டி கண்ணன். என் கை பாரு. இவ்வளவூண்டு இருக்கு ! எனக்கு எப்படி உறி எட்டும்? சான்சே இல்லே!”

    “யசோதா அம்மா! உங்க பையன் பொய் சொல்றான்! நம்பாதீங்க”

    “அம்மா! நானாம்மா பொய் சொல்வேன்? இவங்க தான் பொய் சொல்றாங்க! இவங்களுக்கு என்னை பாக்கனும்ன்கிற ஆசையில், இப்படி சும்மா ஒரு நாடகம் போடறாங்க. நம்பாதீங்க! ”

    யசோதா சிரித்தாள் “ நான் உன்னை நம்பறேன் கண்ணா ! இதோ பாருங்க! இந்த குழந்தையைப்போய் திருடினான்னு சொல்றீங்களே! உங்களுக்கு வேறே வேலை இல்லே? இன்னொரு தடவை இங்க வந்தால் பாருங்க ! போங்க போங்க!”

    இரண்டு நாள் கழித்து:

    கண்ணன் தன் வீட்டிலேயே வாயில் வெண்ணையுடன்வெளியே வரும்போது, அம்மா யசோதா பார்த்து விட்டாள். கையும் களவுமாக பிடித்து விட்டாள்.

    “ஏய்! திருட்டு கண்ணா! இப்போ சொல்லு! நீ திருடினே தானே! நீ வெண்ணை சாப்பிடறதை நான் பார்த்துட்டேன்”

    மாட்டிக்கொண்டான் மாதவன். அவனை அறியாமல், வாயில் வந்தது " இல்லேம்மா! மே நஹி மக்கன் காயோ!" (நான் வெண்ணை சாப்பிடலே!)


    யசோதாவுக்கு கோபம். “நான்தான் பாத்துட்டேனே!ஏன் பொய் சொல்றே! உண்மையை ஒப்புக்கோ! உனக்கில்லாத வெண்ணையா? நானே தரேன்! ”

    கண்ணன் குழந்தைதானே ! அடம். தான் பிடித்த பிடியை விடவில்லை. “ இல்லேம்மா! மே நஹி மக்கன் காயோ!”

    “போக்கிரி கண்ணா! திரும்ப திரும்ப ஏன் பொய் சொல்றே?”

    அம்மாவை எப்படி அடக்கறது ? “அம்மா! இதோ பார், ஏன் என் பேரிலே வீண் பழி போடறே! தினமும், விடி காலையிலேயே என் கையிலே கம்பும், போர்வையும் கொடுத்து காட்டுக்கு மாடு மேய்க்க அனுப்பிடறே! சாயந்திரம்தான் திரும்பி வரேன்!. என்னைப் பார்த்து வெண்ணை திருடறேன்னு சொல்றியே! எனக்கு ஏது நேரம்? சொல்லு!”

    “ பின்ன எப்படி உன் வாயில வெண்ண? திருடா ! யாருக்கு காது குத்தற?” யசோதா மடக்கினாள்

    “ஒ! அதை கேக்கறியா! என் பிரெண்ட்ஸ் தான் அவங்க திருடி சாப்பிட்டுட்டு என் வாயிலே தடவிட்டு போயிட்டாங்க! ”

    “டேய்! அயோக்கியா! பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்! உண்மையை ஒப்புக்கோ” யசோதா அதட்டினாள்.

    கண்ணன் யோசித்தான். என்ன சொன்னாலும் இந்த அம்மா மசிய மாட்டேங்கிறாளே. ரூட்டை மாத்த வேண்டியதுதான்.

    “ அம்மா ! என்ன சும்மா சும்மா திருடன்னு சொல்றே! இனிமே நான் மாடு மேய்க்க மாட்டேன். என்னை சதாய்க்கிறாயா? முடியாது போ!” கண்ணன் இப்போது ஸ்ட்ரைக் பண்ணினான்.

    யசோதா சிரித்து கொண்டாள். விளையாட்டு குழந்தை. எப்படியெல்லாம் ஆகாத்தியம் பண்ணுகிறான், இந்த சின்ன விஷயத்திற்கு!

    ஆனாலும் அவள் இதை சும்மா விட தயாரில்லை.இந்த சின்னபையனுக்கு என்ன ஒரு அழுத்தம்? நீயா நானா பார்த்துடலாம். முடிவு பண்ணி விட்டாள். “கண்ணா!என்னை ஏமாத்தவா பாக்கிறே ! நீதான் வெண்ணை தின்றாய்! நான் பார்த்தேன்!”

    “அம்மா! இல்லை. மே நஹி மக்கன் காயோ!”

    “பொய் சொல்லாதே கண்ணா!”

    குட்டி கண்ணன் யோசித்தான். என்ன பண்ணலாம் ? இந்த அம்மா, எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டேங்கிறாளே,ஐடியா ! பாசத்துக்கு அடங்காத அம்மா எங்கேயிருக்கிறாள்?

    “எனக்கு தெரிஞ்சி போச்சிம்மா! உனக்கு சந்தேகம் . நான் உன் பிள்ளை இல்லை போலிருக்கு. நான் கருப்பா வேறே இருக்கேன்தானே! அதனாலேதான் என்னை திட்டற! திருட்டு பட்டம் சுமத்துகிறே?”

    எந்த அம்மாவிற்கு இந்த சொல்லை தாங்க முடியும்? கண்ணன் பேரில் கொள்ளை பிரியம் யசோதாவிற்கு. என் செல்ல குழந்தை மனது நோகிறதே! ச்சே! என்ன அம்மா நான்? என் குழந்தை என்ன வார்த்தை சொல்லி விட்டான்?

    உடனே கண்ணனை கட்டிக்கொண்டு சொன்னாள். “அப்படியெல்லாம் இல்லேடா கண்ணா! நீ என் கண்ணாச்சே! பட்டாச்சே ! நீ திருடுவியா என்ன? நீ சொல்றது தான் சரி. நீ வெண்ணை சாப்பிடலை தான். ஏதோ நான் தான் தப்பா பார்த்து சொல்லிட்டேன். மறந்துடுடா கண்ணா! என் செல்லமே!” கண்களில் கண்ணீர்.

    ****

    பாட்டி கதையை முடித்தாள். கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மனோவின் அப்பாவும் அங்கே வந்து விட்டார். அவரும் கதையை கேட்டு கொண்டிருந்தார்.

    மனோ கேட்டான் “ ஏன் பாட்டி, கண்ணன் பொய் சொன்னானே! அது சரியா?”

    பாட்டி " குழந்தை சொல்றது எல்லாம் பொய்யே இல்லை, மனோ "

    காயத்ரியும் “ பின்னே அம்மா சொல்வாளே எப்பவும் பொய் சொல்லக்கூடாதுன்னு. அப்போ சாமி மட்டும் பொய் சொல்லலாமா?”

    மனோவின் அப்பா, தன் அம்மா முகத்தை பார்த்தார். “இதுக்கு என்ன பதில் சொல்லப்போறே?” என்பது போல.

    “இல்லடா மனோ! கண்ணன் பொய் சொல்லலியே!அம்மாவோட வார்த்தை ஜாலம் பண்ணினான்”- பாட்டி

    “நீதான் இப்போ பொய் சொல்லறே!”- மனோ

    “இல்லே மனோ ! கண்ணன் உண்மையைத்தான் சொன்னான்”

    “என்னம்மா இது புதுக் கதை! ” – மனோவின் அப்பா.

    பாட்டி சொன்னாள்: “கண்ணன் என்ன சொல்றான்? “மேநே யி மக்கன் காயோ!”(நான்தான் வெண்ணை சாப்பிட்டேன்னு). நிஜம் தான் சொன்னான். ஆனால் அவன் அம்மாவுக்கு “மே நயி மக்கன் காயோ” (நான் வெண்ணை சாப்பிடலேன்னு) ன்னு விழுந்திருக்கு. மேநே யி (நான்தான்), மே நயி(நான் இல்லை) - அந்த ஒரு சின்ன சப்தம் தான் வித்தியாசம்”.

    பாட்டி தொடர்ந்தாள் “இப்போ சொல்லு ! கண்ணன் பொய் சொன்னானா?”
    “போ பாட்டி! நீ சொல்றது ஒன்னும் புரியலே!”

    “நாளைக்கு திரும்ப சொல்றேன்! அப்போ புரியும். இப்போ உனக்கு தூக்கம் வந்துடுத்து! தூங்கு பாக்கலாம்!”

    காயத்ரி அரைகுறை தூக்கத்தில் “அப்போ , ராஜா ராணி கதை?”

    “சொல்றேன்! சொல்றேன்! நாளைக்கு சொல்றேன்!”

    "அம்மா! நல்லா சமாளிச்சே"– மனோவின் அப்பா

    "இது சூர் தாஸ் கவிதை டா. அவர் தான் இதை அழகா சொல்லியிருக்கார். அதுவுமில்லாமே, குழந்தைகள் சாமர்த்தியத்தை, சமயோசித பேச்சு திறனை கண்ணன் மூலமா, சூர் தாஸ் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் "

    "சரிம்மா! நீ போய் தூங்கு! நாளைக்கு பாக்கலாம்!"
    ”டேய்! நான் இங்கே தங்கலைன்னு கோபப் படாதே! எனக்கு இங்கே சரிப் பட்டு வராதுடா!”

    “அம்மா! எல்லாம் எனக்கு தெரியும்மா! நீ இரேன். பாத்துக்கலாம்.”

    “மனசை போட்டு அலட்டிக்காதேடா. கொஞ்ச நாளிலே,எல்லாம் சரியாயிடும். நீ போய் நிம்மதியா தூங்கு.”

    “அங்கே என்ன பண்றீங்க! போதும் அரட்டை அடிச்சது. தூங்க வரேலே?” – கலாவின் குரல்.

    “இதோ வந்துட்டேன். வரேம்மா”-

    ****


    அடுத்த நாள் காலை

    மனோ “பாட்டி! பாட்டி!”
    காயத்ரி “ பாட்டி எங்கேம்மா?”
    உள்ளேயிருந்து கலா குரல் கொடுத்தாள் ” பாட்டி போயிட்டாங்க”
    “எங்கே!”
    “நீங்க தூங்கிட்டிருந்தீங்க! உங்களை எழுப்ப வேண்டான்னு சொல்லிட்டு பெங்களூருக்கு கிளம்பி போயிட்டாங்க, சித்தப்பா வீட்டுக்கு ”

    “நம்ப கூட இருப்பேன்னு சொன்னாங்களே” – காயத்ரி லேசான அழுகையுடன். அவளால் நம்ப முடியவில்லை.
    “பாட்டி பொய் சொன்னாங்க காயத்ரி !” – மனோ, கலங்கிய கண்களுடன்.

    “எனக்கு ராஜா ராணி கதை சொல்றேன்னாங்களே?”
    “பாட்டி பொய் சொன்னாங்க!”- மனோ. துக்கம் அவனுக்கு தொண்டையை அடைத்தது. “நாங்க பொய் சொன்னா அம்மா அடிப்பாங்க! ஆனால் பாட்டி மட்டும் சொல்லலாமா?”

    “இல்லேப்பா! நீங்க அழுவீங்கன்னுட்டுதான் பாட்டி உங்ககூடவே இருப்பேன்னு சொன்னாங்க.” அப்பா வாசு, என்ன சொல்வதென்று தெரியாமல் ஏதோ சொல்லிவைத்தார்..

    "போப்பா! எனக்கு பாட்டி வேணும்!"
    "இப்போவே எனக்கும் பாட்டி வேணும்" - காயத்ரியும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

    "அழக்கூடாது, மனோ. சொன்னா கேளு காயத்ரி! இப்போ போய் விளையாடுங்க!. நான் சீக்கிரமே பாட்டியை அழைச்சிண்டு வந்துடறேன்"

    "எப்போ?"

    "ஒரு பத்து நாளில்"

    "ப்ராமிஸ்?"
    "ப்ராமிஸ்!"

    மனோவின் அப்பா, வாசுதேவனுக்கு தெரியும் , இது ஆகிற காரியமில்லை என்று. தனது மனைவிக்கும், அம்மாவுக்கும் தான் ஒத்துப் போகாதே. ஆனால், குழந்தைகளை சமாதான படுத்த, இப்படி சொல்லித்தான் ஆகவேண்டும்.

    மனோவிற்கு குழப்பம் வேறு மாதிரி.
    பாட்டி பொய் சொல்றாங்களே. 'நாம்ப சொல்லலாமா ? கூடாதா? அது தப்பில்லையா ? எந்த விஷயத்திற்கு பொய் சொல்லலாம் ? எதுக்கெல்லாம் சொல்லக் கூடாது? '

    மனோவின் குழப்பம் தீர நாளாகும். "பொய்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்"எனும் குரளுக்கு பொருள் தெரியும் போது, அவன் குழப்பம் தெளியலாம். பின்னாளில் 'வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் தீமை இலாத சொலல்' என்பதை உணர்ந்தால், ஒரு வேளை, அவன் இந்த உலகை அறியலாம்! சமாளிக்க தெரியலாம்!

    இப்போதைக்கு மனோவும், காயத்ரியும் எல்லாவற்றையும் மறந்து விளையாட ஓடி விட்டனர்.


    ******* முற்றும்


    குறிப்பு
    இந்த கதைக்குள் கதையாக வரும் , கோகுல கண்ணனின் வார்த்தை ஜாலங்களையும், குழந்தையின் குறும்பையும் வர்ணிக்கும் சுர் தாசின் இனிமையான ஹிந்தி பஜன் : 'மே நயி மக்கன் காயோ' : பாடியவர் அனுப் ஜலோட்டா. ஹிந்தி தெரிய வேண்டும் என அவசியம் இல்லையே, இனிமையான இசையை அனுபவிக்க! அருமையான ராகங்கள்: நண்பகலை குறிக்க பைரவ் ராகம், சாயந்திரத்தை குறிக்க யமன் கல்யான் ! இந்த கதையை படித்து விட்டு , பாடலை கேட்டு ரசியுங்கள்.

    ********

    Last edited by Muralidharan S; 19th April 2016 at 08:39 PM.

  2. Likes aanaa liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    23,743
    Post Thanks / Like
    மிகவும் அருமை!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  6. #3
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நல்ல கதை..மே நயி மக்கன் காயோ எனக்குத் தெரியாது.. தாங்க்ஸ்..முர்ளிதரன்.

  7. Thanks Russellhni thanked for this post
    Likes rajeshkrv, Russellhni liked this post
  8. #4
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    அன்பு முரளி சார்

    நிறைய இல்லங்களில் இன்றும் நடந்து கொண்டு இருக்கும் 'உண்மை' சம்பவங்கள் நீங்கள் பொய்கள் என்ற தலைப்பில் எழுதி உள்ளீர்கள். மிக அருமை
    gkrishna

  9. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  10. #5
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மேநே யி மக்கன் காயோ
    மே நயி மக்கன் காயோ

    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தின் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
    பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே---திருமந்திரம் 2264

    இந்த திருமந்திரத்தை எனக்கு நினைவு கொண்டு வந்தது உங்கள் கதையும் அதனை தொடர்ந்த பாடலும்

    வாழ்க வளமுடன்
    வாழ்க வளத்துடன்
    gkrishna

  11. Likes aanaa, Russellhni liked this post
  12. #6
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    Nice one Muralidharan ...
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  13. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  14. #7
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    மேடம், சின்ன கண்ணன், கிருஷ்ணா,மதுஸ்ரீ ....
    சின்னகண்ணனின் குறும்பையும்,விஷமத்தையும் அனுப் ஜலோடா மட்டும் தான் பாட முடியுமா என்ன ?
    குழந்தையின் விளையாட்டுத்தனத்தை தமிழிலும் எவ்வளவோ சிறந்த பாடக/ பாடகிகள் பாடியிருக்கிறார்கள்.
    இதோ அருணா சாயிராம் அவர்களின் துக்கடா !வேடிக்கையான பாடல் ! உங்களுக்காக இங்கே

    Last edited by Muralidharan S; 30th December 2014 at 08:51 AM.

  15. #8
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் முரளிதரன்.. நன்றி..

  16. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  17. #9
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muralidharan S View Post
    மேடம், சின்ன கண்ணன், கிருஷ்ணா,மதுஸ்ரீ ....
    சின்னகண்ணனின் குறும்பையும்,விஷமத்தையும் அனுப் ஜலோடா மட்டும் தான் பாட முடியுமா என்ன ?
    குழந்தையின் விளையாட்டுத்தனத்தை தமிழிலும் எவ்வளவோ சிறந்த பாடக/ பாடகிகள் பாடியிருக்கிறார்கள்.
    இதோ அருணா சாயிராம் அவர்களின் துக்கடா !வேடிக்கையான பாடல் ! உங்களுக்காக இங்கே
    நல்லதொரு பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள். சி கே போலவே எனக்கும் மிகவும் பிடித்த பாடல். மார்கழி மகா உற்சவம் நினைவிற்கு வருகிறது முரளி சார்
    gkrishna

  18. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
  19. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஐயோ.. இந்தப் பொய் உண்மையாக இருக்கக் கூடாதா...
    ஐயோ... இந்த உண்மை பொய்யாக இருக்கக் கூடாதா....

    பொய் உண்மையாக மாற வேண்டும் என்று ஒரு மனது துடிப்பதும், உண்மை பொய்யாக மாற வேண்டும் என்று ஒரு மனது துடிப்பதும் மனித மனத்தின் வெளிப்பாடுகளாக இக்கதையில் வெளிப்படுகின்றன.
    இதில் வெளிப்படும் உண்மையும் ஒன்று உண்டு..

    பொய்யாக இருக்க வேண்டும் என மனிதன் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் அவனுக்கே திரும்பும் போது அது அவனுக்கு பொய்யாக இருக்காது என்பதும்,
    உண்மையாக இருக்க வேண்டும் என மனிதன் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் அவனுக்கே திரும்பும் போது அது அவனுக்கு உண்மையாக இருக்காது என்பதும் தான் அது.

    மிகவும் ஆழமான கருத்துள்ள பொய்களில் அப்பட்டமாக உண்மையைப் போட்டுடைத்து விட்டீர்கள் முரளிதரன் ...

    பாராட்டுக்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Thanks Russellhni thanked for this post
    Likes Russellhni liked this post
Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •