-
31st December 2014, 01:34 AM
#11
Senior Member
Senior Hubber
**
பாசுரம் பாடி வா தென்றலே…
இருபத்து நான்கு
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – பதினாறு
31.12.14
*
ஒரு நல்ல காவல் காரனின் வேலை என்ன?
தினமும் எந் நேரமும் விழிப்புடன் இருந்து அன்னியர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். யாராவது தீய எண்ணத்துடன் வீட்டினுள் புக முயற்சித்தால் தடுக்க வேண்டும். இந்தச் சமயத்தில் உயிரைத் திருணமாக மதித்து வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் காக்க வேண்டும்.
சில பணக்கார வீடுகளில் வாசலுக்கு அருகில் வாயிற்காப்பவர்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.; நேர்மையாகச் சொல்லப் போனால் நம்மை, நமது உடமைகளைக் காக்கும் இந்தக் காவல்காரர்களுக்கு ஒரு மேலாளருக்குக் கொடுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இதையே என் வீட்டுக் காவல்காரனிடம் ஒரு நாள் சொன்னேன். அவன் “ நிஜமாலுமே பெரிய மனுஷன் துரே நீ. அடுத்த தேர்தலில் நீ நின்றால் என் வாக்கு உனக்குத் தான்” என்றான்.
இன்றைய பாடலில் ஆண்டாள் தன் தோழியரான கோபிகைகளை அழைத்துக் கொண்டு நந்தகோபனின் அரண்மனையை அடைகிறாள். நந்தகோபனின் அரண்மனை எது? ஸ்ரீ வில்லிப் புத்தூரில் உள்ள வடபத்ர சாயிப் பெருமாள் கோவில் தான் அது! அங்குள்ள காவல்காரனிடமும் வாயிற்காப்பவனிடமும் தங்களை உள்ளே விடுமாறு வேண்டுகிறார்கள் கோபியர்கள். எதற்கு?
கண்ணனையும் அவன் குடும்பத்தையும் எழுப்ப!
**
“ நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்போனே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
**
“ கண்ண பிரான் உலகுகெல்லாம் நாயகனாய் இருப்பவன். அவனுக்கே நாயகனாய் – தந்தைப் பாசத்தால் அறிவுரைகளைக் கூறி வழி நடத்துபவன் நந்தகோப.ன். அப்படிப்பட்ட நந்தகோபனுடைய திருமாளிகையைக் காப்பவனே! நீ அடைந்த பாக்கியம் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை! உலகை எல்லாம் காப்பவனான கண்ணபிரானையே காப்பவனாக நீ திகழ்கின்றாய் அல்லவா!
இந்த வாசல் கொடியாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருகிறது. எதற்காக? நாங்கள் இரவில் இடம் தெரியாமல் தடுமாறாமல் இருப்பதற்காக!
அப்படிப்பட்ட அழகு மிக்க வாசலைக் காப்பவனே, மாணிக்கங்களினால் இழைக்கப்பட்டிருக்கும் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே செல்ல விடுவாயாக. நாங்கள் ஆயர்கள், அதிலும் பெண்கள். அதிலும் சிறுமிகள்! எங்கள் இளைய பருவத்தைக் கண்டாலே நாங்கள் வஞ்சனை அற்றவர்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? எங்களைச் சந்தேகப் படாமல் உள்ளே அனுமதிப்பாயாக!
இன்றைய தினம் இந்த வேளையில் வந்து பாவை நோன்புக்கு வேண்டிய பறை முதலியவைகளைப் பெற்றுக் கொள்ளும் படி கண்ணன் நேற்றே சொல்லியிருக்கிறான். கண்ண பிரானுக்குத் தொண்டு செய்வதைத் தவிர வேறு எண்ணம் எங்களிடம் இல்லை. அவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடவே நாங்கள் இந்த வேளையில் இங்கு வந்திருக்கிறோம்! உன்னுடைய வாயால் மறுப்பு ஏதும் சொல்லிவிடாதே, நீயே கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுவாயாக” என்று அவர்கள் வேண்ட, அவனும் கதவைத் திறந்து அவர்கள் உள்ளே செல்ல வழி வகுத்தான்.
*
அடியவர்களுடைய அனுமதியை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானைக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்பாடலில் சொல்லப் படுகிறது..
*
நண்பர்கள் அனைவருக்கும் இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்
*
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st December 2014 01:34 AM
# ADS
Circuit advertisement
Bookmarks