Results 1 to 10 of 10

Thread: ஜில்லென்று! யமனுடன் ஒரு சந்திப்பு

Threaded View

  1. #5
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    ஜில்லென்று! யமனுடன் ஒரு சந்திப்பு - 2

    யமன் நகைத்தார் “நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் ! நான் உன்னோட உயிரை வேற யாராவது உடம்பிலே செலுத்திடறேன். அந்த உடம்பிலே நீ இருக்கலாம். அவங்க உயிரை, உன்னோட உடம்பிலே செலுத்திடறேன். யார் உடம்பு உனக்கு வேணும், நீயே சொல்லு?”

    “ அடே ! இந்த டீல் நல்லா இருக்கே? கூடு விட்டு கூடு பாயற மாதிரி தானே ? இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே?”

    “ஒ. இருக்கலாமே!”

    “அப்படின்னா, கால பைரவரே! எனக்கு சம்மதம் ! எனது தம்பி மகன், வரதனின் உடலுக்குள் நான் கூடு பாயணும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க!”



    “ ஆனால், அந்த பையன் வரதனின் கதி? நினைத்து பார்த்தாயா? அவன் உன் தம்பி பிள்ளையாச்சே கந்தசாமி ! உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா?”

    ”அதெல்லாம் பாத்தா நடக்குமா தர்ம ராஜா ? எல்லாம் அவன் தலையெழுத்து!”- அழுத்தமாக சொன்னார் கந்தசாமி.

    “சரி! அப்படியே ஆகட்டும்! இந்த நிமிடத்திலிருந்து உனது உயிர் , குணம் எல்லாம் உன் தம்பி மகன், வரதன் உடலில். அவன் உயிர், குணாதிசயங்கள் எல்லாம் உன் உடலில்.”

    ***

    அடுத்த நாள்:

    கந்தசாமியின் தம்பி ரங்கசாமியின் வீடு. வீட்டு வாசலில், தெரு வரை, கூட்டம் கூடியிருந்தது. வாசல் வராந்தாவில் ரங்கசாமியின் பூத உடல் வைக்கப் பட்டிருந்தது. . சுற்றிலும் உறவினர்கள், நண்பர்கள், தொழிற்சாலை ஊழியர்கள்.

    விஷயம் இதுதான்:



    முந்திய நாள் மாலை, நான்கு மணிக்கு, ஊட்டி அருகே அவரது கார், வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி, அந்த இடத்திலேயே ரங்கசாமியின் மரணம் சம்பவித்தது. அவர் ஏன் அங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவிக்கும் கூட எதற்காக அவர் அவ்வளவு அவரசமாக ஊட்டி போனார் என்ற காரணம் புரியவில்லை. “அவர் மட்டும் ஊட்டி போகாம இருந்திருந்தால், இப்படி ஆகியிருக்காதே” என்று மூக்கை சிந்திக் கொண்டிருந்தாள்.

    இந்த களேபரத்தில், ரங்கசாமியின் மகன் வரதன் மட்டும் விறைப்பாக இருந்தான். அப்பாவின் மரணம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. இது குடும்பத்து உறவு எல்லோருக்கும் ஆச்சரியம். அப்பாவுக்கு பிரியமான மகனாயிற்றே!. ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?

    இன்னொரு ஆச்சரியம் , அவனது எண்ணம் பேச்சு செயல் எல்லாம், அப்பாவின் சொத்து எவ்வளவு தேறும் என்பது பற்றியே இருந்தது. இழவு வீட்டிலேயே, அவனது பேச்சில், அது நன்றாக தெரிந்தது. அவன் அம்மாவுக்கும் அவனது போக்கு புரிபடவேயில்லை.

    ஆனால், அதற்கு நேர்மாறாக, ரங்கசாமியின் உடலுக்கு முன் , அழுத முதத்துடனிருந்த தொழிலதிபர் கந்தசாமியின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். அனைவருக்கும் அதிசயம். எதற்கும் கலங்காத கந்தசாமியா இப்படி தம்பிக்காக அழுகிறார். தம்பியை துச்சமாக நடத்துவாரே!

    கந்தசாமி, வந்திருந்த உறவினர் , நண்பர்கள் அனைவரது கையையும் பிடித்து கொண்டு உருக்கமாக கண்ணீர் மல்க பேசினார். ‘என் தம்பிக்கு இப்படி ஒரு துர்மரணமாகி விட்டதே! அவன் மட்டும் ஊட்டிக்கு போகாமல் இருந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பானே! எதுக்காக போனான்னே தெரியலியே?’-தம்பிக்காக உருகினார்.


    கந்தசாமியின் நடவடிக்கை அனைவருக்கும் புரியாத புதிராக இருந்தது. இதுவரை அவர் இப்படி நடந்து கொண்டதேயில்லையே! ஏழைகளை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரே. தம்பியின் துர்மரணம் அவரை வெகுவாக மாற்றிவிட்டது போல என எல்லாரும் பேசிக் கொண்டனர்.

    ***
    இரண்டு நாள் கழித்து:

    ரங்கசாமியின் மகன் வரதன் , தன் பெரியப்பாவை தேடி தொழிற்சாலைக்கே வந்து விட்டான்.

    “வா வரதா! வா!” வரவேற்றார் கந்தசாமி.

    “பெரியப்பா! அப்பாவுக்கு பதிலா என்னை இப்போவே நிர்வாக டைரக்டர் ஆக்கணும்.”

    “அப்படியே செய்யலாம் வரதா! அதுக்கு முன்னாடி நீ நிர்வாக நெளிவு சுளிவு தெரிஞ்சுக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்றேன். சரியா?”

    “வேண்டாம் பெரியப்பா! இதெல்லாம், எனக்கு நல்லாவே தெரியும். ஏதாவது குறுக்கு வழியிலே என்னை டைரக்டர் ஆக்கிடுங்க.”

    “அதுக்கு வழியே இல்லையே வரதா! . போர்டு ஒப்புக்காதே. நீ ஒன்னு செய். முதல்லே மார்க்கெட்டிங் மேனேஜர் கிட்டே போய் பயிற்சி எடுத்துக்கோ”- கண்டிப்பாக சொல்லிவிட்டார் கந்தசாமி.

    வேண்டா வெறுப்பாக வரதன் அங்கே இருந்து நகன்றான். இருக்கட்டும், கான்சர் நோயாளி பெரியப்பாக்கு மிஞ்சி போனால், இன்னும் மூணு மாசம். தனிக்கட்டை. வாரிசு இல்லாதவர். அவருக்கு பின் கம்பனி என் கையில் வந்து விடும். பார்த்துக் கொள்கிறேன், பத்தே வருஷத்தில், பத்து மடங்கு பெரியதாக்கி காட்டுகிறேன்.

    ****

    பத்து நாள் கழித்து.

    கந்தசாமியை பரிசோதித்த டாக்டருக்கு கொஞ்சம் தலை சுற்றியது. இது எப்படி சாத்தியம் ? .

    “கந்தசாமி சார், எதுக்கும் உங்களை இன்னொரு தடவை ஸ்கேன் பண்ணிடலாமா?”

    “என்ன டாக்டர், என்ன விஷயம்?”

    “ஒண்ணுமில்லே, அதிசயமாயிருக்கு! ம்! இந்த ரிப்போர்ட் பிரகாரம், உங்க புற்றுநோயின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ரெமிஷன். எப்படி? அதான் புரியலே! இது ஒரு மெடிக்கல் மிரகல்”

    “தெரியலே டாக்டர்! இப்போவெல்லாம் எனக்கு சிகரெட்டு, மதுவை கண்டாலே குமட்டுது. அந்த சனியங்களை விட்டே பத்து நாளாச்சு.”

    “அப்படியா ? எதுக்கும் ஒரு மாசம் கழிச்சி இன்னொரு டெஸ்ட் எடுத்து பாப்போம்.”

    “ரொம்ப சந்தோஷம் டாக்டர்! அப்ப நான் கிளம்பறேன் !எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு”.

    கந்தசாமி வெளியே வந்தார். அவரது கார் டிரைவர் கதவை திறந்தான். “என்ன மணி! எப்படி இருக்கே? உன் சம்சாரம் ஊரிலிருந்து வந்துட்டாங்களா?”

    “வந்துட்டாங்கய்யா!”. மணிக்கு புரியவேயில்லை ! நம்ம எசமானா இது?நம்பவே முடியலியே?இவ்வளவு பிரியமா பேசறாரே?

    ****.
    அடுத்த நாள்.



    கந்தசாமி கம்பனி போர்டு மெம்பர்களை கூப்பிட்டார்.

    “நம்ப பாக்டரி கழிவு விஷயமா கோர்ட் ஆர்டர் 200 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டி வந்திருக்கில்லே?”

    “ஆமா சார், நீங்க சொன்ன மாதிரி நாம்ப மேல் முறையீடு பண்ண போறோம் சார்.”

    “மேல் முறையீடு வேண்டாம், கீழ் முறையீடும் வேண்டாம். பேசாம இழப்பீடு கொடுத்திடுங்க. பாவம், ஏழைகள், அவங்க மருத்துவத்துக்கு தேவைப்படும்..”

    அனைவருக்கும் ஆச்சரியம். கந்தசாமியா இது? என்னாச்சு இவருக்கு?

    “அப்புறம், நமக்கு நிறைய லாபம் வருதில்லே! அதிலேருந்து தொழிற்சாலை கழிவு சுத்தம் பண்ண இயந்திரம் வாங்குங்க”
    என்னையா இது, சிக்ஸர் சிக்ஸரா அடிக்கிறார்?

    “இன்னொன்னு, சொல்ல மறந்திட்டேன், நம்ப தொழிலாளர் எல்லோருக்கும், சம்பளத்தை 30% இந்த மாசத்திலேருந்து உசத்துங்க.”

    “அப்போ நம்ப லாபம்? பங்குதாரருக்கு என்ன பதில் சொல்றது?”- நிதி டைரக்டர்.

    “கவலையே படாதிங்க! நிச்சயம் லாபம் பண்ணலாம். நியாயமா பண்ணலாம். அதுக்கு நான் உத்திரவாதம்”


    ***

    கிட்ட தட்ட இரண்டு மாதம் கழித்து

    “ஐயா!உங்களுக்கு டாக்டர் கிட்டேயிருந்து போன்” வேலைக்காரன் பவ்யமாக போனை கொடுத்தான்.

    “நாந்தான் கந்த சாமி பேசறேன். சொல்லுங்க டாக்டர்!”

    “சார், நான் உங்க டாக்டர் பேசறேன். ஒரு சந்தோஷமான் செய்தி. உங்களுக்கு புற்றுநோய் நல்லாவே ரெமிஷன் ஆயிடுச்சி. இன்னும் ஒரு வருஷத்தில் பூரண குனமாயிடுவீங்க. கவலையே பட வேண்டாம். ஆரோக்கியமா இருப்பீங்க”

    “ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். எல்லாம் உங்க திறமை”

    கொஞ்ச நேரத்தில், கந்தசாமியை தேடி வக்கீல் அவரது அறையினுள் நுழைந்தார்.

    “வாங்க வக்கீல் சார், எனது உயிலை மாத்தி எழுதணும். எனது ஊட்டி எஸ்டேட் இருக்கில்லே, அதை ஊட்டி முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பா ரெஜிஸ்டர் பண்ணிடுங்க. எனது சொத்தில் ஒரு 50 கோடி ரூபாய் அனாதை இல்ல டிரஸ்ட்காக ஒதுக்குங்க. இன்னொரு 50 கோடி ஆஸ்பத்திரி டிரஸ்ட்காக போட்டுடுங்க. நம்ப தொழிலாளர் குடும்ப டிரஸ்ட், பள்ளிக்கூடம், கல்லூரி இதுக்காக மீதி சொத்தை எனது உயிலில் பிரித்து எழுதிடுங்க. ”

    “அப்படியே ஆகட்டும் சார்”. என்ன ஆச்சு கந்தசாமி சாருக்கு! எப்படிஇருந்தவர் இப்படி ஆயிட்டார்?

    ****
    சில நாள் கழித்து : வரதன் வீட்டில்:

    “என்னது! என்னம்மா சொல்றே? பெரியப்பா அவரோட சொத்தில் எனக்கு எதுவும் வைக்கவில்லையா? இதோ நேரே போறேன் அவர்கிட்டே. நாக்கை பிடுங்கிக்கராமாதிரி நாலு வார்த்தை கேக்கிறேன்” வரதன் கத்தினான். முகம் சிவந்து இருந்தது. குடி போதையில், கோபத்தில் அவனது கை நடுங்கியது.

    வரதனின் அம்மா “வரதா! சொல்றதை கேளு. நமக்கு எதுக்கு இன்னும் சொத்து? உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே! அது, பெரியப்பா, அவர் சம்பாதித்த சொத்து , என்ன வேணா செஞ்சுக்கட்டும். சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே!”

    “சும்மா இரும்மா! உனக்கு ஒன்றும் தெரியாது!”

    வரதன் வேகமாக மாடியிலிருந்து , படிக்கட்டில் இறங்கினான். கண் மண் தெரியாத ஆத்திரம். கண்மூடித்தனமான கோபம். கால் தடுக்கியது. இடறி விழுந்தான். உருண்டான். மண்டை உடைந்தது.

    கழுத்து மளுக்கென்றது. அவனது ஆவி பிரிந்தது. அங்கே இருந்த காலாந்தகன் , சிரித்த படியே பாசக் கயிறை வீசி, உயிரை எடுத்துக் கொண்டான்.

    யம கிரந்தப் படி, கந்தசாமியின் உயிர் பிரிய வேண்டிய நாள் அன்றுதான்.

    ****

    யமலோகம் :



    கந்தசாமியின் ஆத்மா, யமன் எதிரில்.
    அது யமனை கேட்டது “இது நியாயமா தர்மா? நீ உன் சொல்படி நடக்கவில்லையே? வாக்கு தவறி விட்டாயே?”

    யமன் “கந்தசாமி, நான் விதி என்ன சொன்னதோ அது படி தான் நடந்தேன். விதிப் படிதான் உனக்கு மரணம் சம்பவித்தது.”

    “இது என்ன ஏமாற்று கால தேவா?”- கந்தசாமியின் ஆத்மா கேட்டது.

    யம தர்மன் சிரித்தார் “நீ என்ன நினைத்தாய் கந்தசாமி ? சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலிலிலிருந்து உயிர் பிரிவதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அது புற்றுநோயாலும் போகலாம், கார் விபத்தினாலேயும் போகலாம், அல்லது படிக்கட்டில் விழுந்தும் போகலாம்”

    கால தேவர் தொடர்ந்தார் ."எங்கள் கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வந்து விட்டாய். வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. விதியை மாற்ற யாராலும் முடியாது. என்னாலும் முடியாது, எந்நாளும் முடியாது. என்ன புரிந்ததா?”


    *** முற்றும்
    Last edited by Muralidharan S; 1st January 2015 at 11:24 AM.

  2. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •