**
**

பாசுரம் பாடி வா தென்றலே

முப்பத்து நான்கு

பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஆறு

10.01.15

**
இப்பொழுது வந்துகொண்டிருக்கும் பத்திரிக்கைகளில் பொதுவான ஒரு விஷயம் உண்டு. கேள்வி – பதில் பகுதி!

‘ஆட்டின் மூக்கையும், கழுதையின் மூக்கையும் ஒப்பிடுக!” எனக் கேட்டு சில பத்திரிகைகளுக்கு அனுப்பினால் என்ன ஆகும்?

முதல்பத்திரிகையின் பதில் “ ஆட்டின் மூக்கு அது எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த நிறத்தில் இருக்கும். கழுதையின் மூக்கு எப்போதும் வெள்ளை! ஆடு ‘ம்ம்மே’ என்று தும்மும், கழுதை “ஹெஹஹ்ஹீ” எனத் தும்மும்!

இரண்டாவது பத்திரிகை : (கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ச்சியில் இறங்கி) ஆட்டுப்பால் நல்லது என்றுபாபர் காலத்திலேயே கிபி 16… (ஒரு அரைப்பக்கத்துக்கு விளக்கம்), கழுதையைப் பற்றி இதிகாசங்களிலேயே காணப்படுகிறது (மறுபடியும் அரைப்பக்க விளக்கம். – கண்டிப்பாய் பதிலின் எதிர்ப்பக்கத்தில் – குதிரையைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தைப் போட்டிருப்பார்கள்!)

மூன்றாவது பத்திரிகை: நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது! பொது ஜனத்தையும், அரசியல் வாதியையும் தானே ஒப்பிடச் சொல்கிறீர்கள்? இருவருமே ஒருவகையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான். பொது ஜனத்தின் மூக்கு – விலைவாசி ஒவ்வொரு முறையும் குறையும்குறையும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து உடையும். அரசியல் வாதியின் மூக்கு தோழமை, எதிர்க் கட்சிகளால் – சிலசமயம் தன் கட்சி ஆட்களாலேயே உடையும்!

ஆக கேள்வி ஒன்று எழுந்தால் அதற்குப் பதில் கிடைக்கத்தான் செய்யும். சிலசமயங்களில் பல பதில்களும் கிடைக்கலாம். அதற்காக கேள்வி கேட்காமல் இருக்கக் கூடாது. சிலசமயம் வேண்டுகோள்களையே கேள்விகளாகக் கேட்கலாம்..

இன்றைய திருப்பாவைப் பாடலில் தங்கள் நோன்பிற்கு வேண்டியவைகளைக் கோபியர்கள் வேண்டுகிறார்கள்.

**

,மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையர் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டி சைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

**

அன்பே வடிவெடுத்தவனே. நீலமணி போன்றவனே, மார்கழி நீராட்டம் என்ற இந்த நோன்பினை நோற்பதற்காக நாங்கள் வந்தோம், முன்னோரின் வழிமுறையைப் பின்பற்றி நாங்கள் நோற்கும் இந்த நோன்பிற்கு வேண்டியவைகளைக் கேட்பாயாக.

உலகமெல்லாம் அதிரும்படியாக முழங்கக் கூடிய பால் போன்ற, வெளுத்த உன்னுடைய பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும், எங்களது வரவை அறிவிக்க பெரிய பறைகள் வேண்டும், சங்கங்களும் , பறைகளும் முழங்க நாங்கள் செல்லும் போது, ‘உங்களுக்கு மங்களமே உண்டாகட்டும்’ என மனதார வாழ்த்துச் சொல்பவர்கள் வேண்டும்.

நாங்கள் ஒருவரைஒருவர் கண்டு மகிழ அழகிய விளக்குகள் வேண்டும், நாங்கள் வருவதை வெகுதூரத்தில் இருப்பவர்களும் அறிந்து கொள்வதற்காக, முன்னே பிடித்துச் செல்லத் தக்க கொடிகள் வேண்டும், எங்கள் மீது பனி விழாதிருக்க மேற்பந்தல் வேண்டும், பிரளய காலத்தில் உலகனைத்தையும் உண்டு ஆலிலையில் சயனித்திருந்த உனக்கு, இப்பொருள்களைத் தருவது அரிதோ!

எனவே எல்லாவற்றையும் நீயே அருள வேண்டும்!

**

எம்பெருமானுடைய அருளினாலேயே நாம் அனைத்தும் பெற முடியும் என்று இப்பாடலில் கூறப் படுகிறது.

**