**

பாசுரம் பாடி வா தென்றலே

முப்பத்து ஏழு

பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஒன்பது

13.01.15
கஷ்டம் என்பது என்ன?

நீள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பவர்களிடம் சென்று அவர்களிடம் ஒரு நகைச்சுவைத் துணுக்கு சொல்லிப் பாருங்கள். உடனே அழுவார்கள்! ஏனெனில், அவர்களுக்கு அழுவது சுலபம், சிரிப்பது கஷ்டம்.

எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. இந்த ஆண்டாள் திருப்பாவையில் நிறையபாடல்கள் எழுதியிருக்கலாமே. அதைப் படித்து இன்புற்று இருக்கலாமே. இப்படி ,30 பாடல்களில் முடித்து விட்டாளே..

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த 30 பாடல்களிலும் எல்லாவற்றையும் அழகாக அடக்கியிருக்கிறாளே, சரி தான் என்ன ஒரு தெளிவு என்று தோன்றுகிறது!

முன்னுரையில் அம்பாளைப் பார்க்கும் போது அவள் கட்டியிருக்கும் புடவையின் நிறத்தைப் பற்றித் தான் எழுத வருகிறது என எழுதியிருந்தேன். திருப்பாவைப் பாடல்களைப் படித்த பின்னர்,

‘ நெருப்பில்
விரல் பட்டால்
சுட்டு
வலியினால்
கண்ணில் நீர் வரும்..
அம்பாளின் தேஜஸால்
மனம் பிரகாசமாக
விழியில்
நீர் வருவது ஏன்?’

என எழுத வருகிறது. கொஞ்சமாவது பக்குவ நிலையைச் சுற்றிச் செல்கிறதா என்ன?

இதுவரை படித்த பாடல்களில்: ஆண்டாள் தன்னையும், தன் தோழிகளையும் ஆயச் சிறுமிகளாகக் கருதி , அவர்களை எழுப்பி நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் இவர்களையும் எழுப்பி நோன்பு நூற்று, கண்ணனை அல்லது மோட்சத்தைக் (இரண்டும் ஒன்று தானே!) கேட்கிறாள் என்று எண்ணியிருந்தேன். முந்தைய தினம் அதைப்பற்றி ஒரு பாடல் இட்டிருந்தேன்.

இன்றைய பாடல் வேறு விதமாக இருக்கிறது. அவளுக்கு மோட்சமெல்லாம் வேண்டாமாம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் கண்ணனுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டுமாம்!

அடடா, என்ன ஒரு மனது! அதுவும் ஒரு சிறுமிக்கு. எவ்வளவு பக்குவம் அடைந்திருந்தால் இப்படி ‘என்றென்றும் உன்னைத் தொழுது உனது அடியவர்களாக இருக்கும் வரம் வேண்டும்’ எனக் கேட்க முடியும்.

நாம் என்ன செய்கிறோம். அன்றாட அலுவல்களில் சில நிமிடங்கள் மட்டும் இறையைத்துதிக்கிறோம். கடுஞ்சொற்களைப் பலரிடம் பேசுகிறோம். ஆண்டாளை நினைத்து, நம்மையும் நினைத்துக் கொண்டால் கண்ணில் நீர் வருகிறது…

**

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும்குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொல்லாமற் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உமக்கே நாமாட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

**

கண்ணா,பரம்பொருளே, விடியற்காலையிலேயே எழுந்து குள்ளக் குளிர நீராடி, நோன்பு நூற்று உனது தாமரைத் திருவடியை வந்து வணங்குகின்றோம். எங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறாயா?

கறவைப் பசுக்களை மேய்த்து, பால் விற்பதால் வரும் செல்வத்தால் உணவுண்ணும் ஆயர் குலத்தில் பிறந்து நீ என்னென்ன லீலைகள் செய்தாய்! எவ்வளவு பெரியவன் நீ! எனில் எங்களுக்கு எளியவனாகவே காட்சி தந்து, எளிமையுடன் எங்களுடன் பழகி உறவாடினாயே கண்ணா, நீ எங்களை உன் கைங்கர்யத்துக்கு ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடாது!

இந்த நோன்பிற்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்கிறாயா கோவிந்தா? என்றென்றும், இந்த ஜென்மம் மட்டுமல்ல, ஏழேழு ஜென்மங்களுக்கும் நாங்கள் உனக்கே உறவாய் இருக்க வேண்டும். உனக்கே – உன்னை நினைந்தே நாங்கள் நோன்பு நூற்று உனக்கான கைங்கர்யங்கள் நாங்கள் செய்ய வேண்டும். அதற்கு அருள் புரி. மற்ற எண்ணங்கள் எங்களுள் எழுந்து எங்களை மாற்றி விடாமல் உன்னைப்பற்றியே நினைக்குமாறு வைத்திரு!

“மற்றை நம் காமங்கள்” என்பதுஇந்திரியங்களால் தூண்டப் படும் ஆசைகள்..அவற்றை அறுக்க அவனே ஒரு வழி சொல்வான். அவை அறுந்தபின் தென்படுவதும் அவனே ஆவான்!

**