**
**

பாசுரம் பாடி வா தென்றலே

முப்பத்து ஐந்து

பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
திருப்பாவைப் பாசுரம் – இருபத்து ஏழு

11.01.15





வைணவப் பெரியவர் ஒருவர் இருந்தார். மஹா விஷ்ணுவிடம் தீவிர பக்தி உடையவர். அவருக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான்.

பெரியவர் இறைவனைத் துதித்து “பெருமாளே, நீ தான் காப்பாத்தணும்” என்று வாய்விட்டுச் சொல்லும் போதெல்லாம் இவன் போய் நிற்பானாம், “கூப்பிட்டீங்களா சாமி!” ஏனெனில் அவன் பெயர் பெருமாள்!

“அடப்பாவி., நான் உன்னைக் கூப்பிடவில்லையடா! கடவுளைத் தான் கூப்பிட்டேன்” என்பார் பெரியவர்.

இப்படியே சில காலம் சென்றது. பெரியவரால் ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியவில்லை. வேலைக்காரனைக் கூப்பிட்டார். “இந்த பார் பெருமாள். நான் ஒவ்வொரு தடவையும் கடவுளை ‘பெருமாளே’ன்னு கூப்பிடறச்சே நீ வந்து நிக்கறே, ஒண்ணு செய்யலாம். பேசாம நீ பேர் மாத்திண்டுடு”

“சரிங்க சாமி. அப்படிப் பேர் மாத்தினா எனக்கு என்ன தருவீங்க?”

“பத்து ரூபா தர்றேன்” என்றார் பெரியவர்.

மறு நாள் “ சாமி, நீங்க சொன்ன படியே பேரை மாத்திட்டேன்”

“என்ன பெயர்ப்பா”

“ஹை. முதல்ல பரிசுகொடுங்க”

“எதுப்பா?”

“அதான் பத்து ரூபாய்!”

“சரி சரி இந்தா, பத்து ரூபாய்! என்ன பேர் வெச்சுண்டிருக்க?”

“பெரிய பெருமாள் சாமி” என்றானாம் வேலைக்காரன். ( பெரிய பெருமாள் என்பது அரங்க நாதனைக் குறிக்கும்)

ஆக, பரிசு கொடுத்தாலும் சில காரியங்கள் ஒழுங்காய் நடப்பதில்லை.

இந்தப் பாடலில் கோபியர்கள் நோன்பு நூற்பதற்குப் பரிசாகக் கேட்கிறார்கள். எதை?

வையத்துள் வந்துவிட்டோம் வாழ்வினைக் கண்டுவிட்டோம்
பையில் துயின்றது போதுமே நீயெழுந்து
பொய்யான இவ்வுடம்பைப் போக்கியே மோட்சமெனும்
நெய்யொழுகு வெண்பொங்கல் தா

இன்றைய பாடலில் நோன்புப்பரிசை விரிவாகக் கேட்கிறார்கள்.

*

கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்னனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

*

“ உன்னை அலட்சியம் செய்பவர்களையும் அருகில் தேடிச் சென்று அருள் பாலிப்பவன் நீ. அருகில் வந்து நின்றது நீ என்று தெரிந்தபின் உன் திருவடிகளைத் தொழுது” மன்னித்துவிடு” என்று அரற்றுபவர்களை மன்னித்து புன்முறுவல் செய்த வண்ணம் மறைந்து விடுவாயன்றோ!

உன்னை நாங்கள் பாடிப் பாடி மகிழ்கிறோமே. இதுவே எங்களுக்குப்போதும். இருப்பினும், உன் கையால் ஏதும் பரிசு தர விரும்புகிறாயா? கொடு! அள்ளிக் கொடு! எங்கள் நோன்புக்குப் பரிசாக அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்.!

நாட்டில் உள்ளவர்கள் புகழ்வதற்கு அருகதையாக உள்ள ‘சூடகம்’ எனும் கைவளையைத் தருவாயாக. தோளில் அணிந்து கொள்ளும் வங்கியைத்தருவாயாக. அவற்றுடன் பார்க்கும் போது காதில் பூதான் முளைத்து விட்டதோ என எண்ணும் வண்ணம் பளிச்சிடும் தங்க மாட்டல்களைத் தருவாயாக. காலில் அணிந்து நடந்தால் கால்கள் பேசுவதோ என எண்ணும் படி இருக்கும் ‘பாடகம்’ என்ற ஆபரணத்தைக் கொடுப்பாயாக. இப்படிப் பலவகையான ஆபரணங்களை நீ கொடுத்தால் நாங்கள் பூட்டிக் கொள்வோம், புதிய பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து கொள்வோம், அதன் பின் முழுதும் ஊற்றி விடப்பட்ட நெய்யும், பாலும்கலந்து செய்த அன்னத்தை – கையில் எடுக்கும்போதே முழங்கை வரை வழிந்தோடி விழும் அளவுக்கு நெய் சேர்த்த பொங்கலை – எல்லோருமாகச் சேர்ந்து உன்னுடன் கூடி உண்டு மனம் குளிர்வோம். இதைவிட வேறென்ன வேண்டும்?

*

‘கடவுளுடன் கூடியிருந்து கலந்திருப்பதை விட உன்னதமான் பதவி கிடையாது’ என்பது பொருள்!

கூடியிருந்து குளிர்வது – மற்ற அடியவர்களுடன் சேர்ந்து எம்பெருமானை நினைந்து உருகி, அவனது அருட்குணமாகிய பிரசாதத்தை மனதினால் உண்டு அந்த மகிழ்ச்சியிலே திளைத்திருத்தல்.

**