-
7th March 2015, 05:56 AM
#11
Junior Member
Newbie Hubber
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th March 2015 05:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks