-
11th April 2015, 03:14 PM
#11
சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,
கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.
ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?
அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.
இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?
இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்
இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!
நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th April 2015 03:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks