'விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ' (மூடு மந்திரம்)
சின்னா!
நீர் விளையாட்டாய் என்ன மாதிரி ஒரு பாட்டை போட்டிருக்கிறீர் என்று உமக்குத் தெரியுமா? நீர் போட்டது குளியல். இப்போது அதை மறந்து விடுவோம். மாதுரியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால் பாடல்....வாவ்... எப்படிப் பாராட்டுவது? இந்த ஒரு பாடலுக்காகவே (காட்சிக்காக அல்ல...இதை விடவெல்லாம் அம்மணியை நிறைய மலையாள, தமிழ்ப் படங்களில் பார்த்தாகி விட்டது. 'பாவம் கொடூரன்' இல்லை சின்னா) 'மூடு மந்திர'த்தை அப்போது மூன்று தடவை பார்த்தேன். இயக்குனர் யார் தெரியுமா? இப்போ காமெடியில் கலக்குகிறாரே ஒல்லிக்குச்சி மனோபாலா. அவரேதான்.
சரி பாடலுக்கு வருவோம். 80-களில் வந்த பாடல்களில் எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் சின்னா! அப்போதெல்லாம் இதைக் கேட்காத நாளே இல்லை எனலாம். இப்போதும் TDK 90 கேஸட்டில் ஆனந்தமாய் டேப் ரெகார்டரில் போட்டுக் கேட்பதுண்டு. 'இன்றைய ஸ்பெஷலி'ல் கூட எழுத நினைத்ததுண்டு.
இப்படத்திற்கு இசை சங்கர் கணேஷ். இந்தப் பாடலுக்கு பட்டை கிளப்பியிருப்பார்கள் இரட்டையர்கள். பாடியது 'சின்னக் குயில்'. வெகு அழகான குரல். ஆனால் சங்கர் கணேஷ் இசையமைப்பில் இளையராஜாவின் பாதிப்பு அப்பட்டமாகத் தெரியும். பாடலின் துவக்க இசையைக் கேளுங்கள். தெரியாதவர்கள் இளையராஜா இசையா என்றுகேட்டு விடுவார்கள். முக்கியமாக விட்டு விட்டு ஒலிக்கும் புல்லாங்குழல் இசை.
'விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ
காதல் மன்மதன் பானமே! நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே!
வாலிபம் துள்ளுவதேனோ'
இந்த வரிகளை மாதுரிக்கு சித்ராவின் இரண்டு வாய்ஸாக ஒலிக்கும்படி ஜாலவித்தை புரிந்திருப்பார்கள் இரட்டையர்கள். ஒரு குரல் பாடலின் டியூனோடும், அதே சித்ராவின் இன்னொரு குரல் முன் குரலுடன் இணைந்து சற்று வசன நடையாகவும் சேர்ந்தே ஒலிக்கும். அற்புதமாக இருக்கும். பல்லவி முடிந்து இடையிசையில் அற்புதமான வயலின் இசைக் கோர்வைகளை தந்து ஆச்சர்யப்பட வைத்து விடுவார்கள் இன்னிசை வேந்தர்கள். சிகெரெட் ஆஷை விரல்கள் இடுக்குகளில் தட்டி குளிக்கும் மாதுரியை கவனிக்கும் அந்த ஆண் (Prabhu). த்ரில்லர் ரேஞ்சுக்கு. வயலின் இசை முடிந்து மேலே மலையிலிருந்து அந்த பெரிய பாறாங்கல் உருண்டு தண்ணீரில் விழும் போது கொடுக்கப்படும் சப்தமும் 'திக்திக்'.
'கன்னித் தாமரை ஆடுதே
இந்தப் பூங்குயில் பாடுதே
ஆசைகள் ஊர்வலம் போகுதே
ஆனந்த வெள்ளமும் பாயுதே'
திரும்பவும் 'கன்னித் தாமரை ஆடுதே' வரும்போது சித்ரா ஆடுதே என்பதை 'ஆஆ...டுதே' என்று இழுப்பதைப் பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும்.
'நீராட தங்கத் தேரோட
பூமேனி இங்கு போ...ரா ட'
(இனி வரும் வரி உமக்காக சின்னா)
'பார்க்கும் கண்ணிலே இன்ப போதை ஏறாதோ![]()
தேவன் கையிலே இந்த தேகம் சேராதோ'
மாதுரி அழகாகப் பண்ணியிருப்பார். பாடலை கெடுக்காமல் அம்சமாகப் படமாக்கியிருப்பார் மனோபாலா. ஆபாசமாக இல்லாமல் இயற்கையாக கொஞ்சம் கூட முகம் சுளிக்காத முடியாதபடி கலைநயத்துடன் எடுக்கப்பட்டிருக்கும். குளியல் பாட்டுத்தானே என்று சாதரணமாக நினைத்துவிட முடியாது.
மறுபடி வரும் இடையிசை. காட்டு பறவைகள், விலங்குகளின் குரல் சப்தங்கள். 'கு..ஊ' என்று ஒலிக்கும் பயமுறுத்தும் பறவை சப்தம்... தொடர்ந்து வரும் சிதாரின் சின்ன பிட்...பிறகு காட்டு மூங்கில் குழலின் அருமையான ஓசை... (இந்த இடத்தில் மாதுரி மிக அழகாக இடுப்பு வளைத்து ஆடி வருவார்) ஓடி வரும் அருவி நீரில் மிதந்து வரும் தாமரைப் பூக்களும், சாமந்திப் பூக்களும் கொள்ளை அழகு. நடுநடுவே பரபரப்பான ஜீப் டயர்களின் வேகம் காட்டும் காமெரா.. உள்ளே சிந்தனையுடன் அமர்ந்திருக்கும் கண்ணாடி போட்ட ரேகா. வேகமாக வெள்ளமென ஓடி வரும் அருவித் தண்ணீரின் 'சலசல' சவுண்ட் கலக்கலாக இருக்கும்.
இப்போது பாருங்கள்.
குளிக்கும் அந்த இளம் பெண்ணின் கர்வத்தை...தற்பெருமையை...
'சிந்தும் புன்னகை போதுமே!
தேசம் என்னிடம் சேருமே!'
அடடா! என்ன ஒரு ரசிக்கக் கூடிய அகந்தை! இவள் தன் அழகால் தேசத்தைப் பிடிக்கப் போய் விட்டாளே! அவ்வளவு தன்னம்பிக்கையா? எல்லா அழகுப் பெண்களுமே தேசத்தை ஆளக் கிளம்பிவிட்டால் சின்னாவின் நிலைமை என்ன? 'பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா' பா(ர்)ட்டிகளே தானே மிஞ்சும்? அதுகளை வைத்து என்ன பண்ண?
இன்னும் கவனியுங்கள்.
'ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே
நாளைக்கு என் துணை கேட்குமே
ராஜாங்க மங்கை நான்தானே
நான் கூட நாட்டை ஆள்வேனே'
பிடிச்சா பாருங்க பாயிண்ட்டை. இப்போது நாட்டை ஆளவே வந்து விட்டாள். பதவி ஆசை. அதுவும் இளம் கன்னிப் பெண்ணுக்கு.
'ஓரப் பார்வையில் ஆட்சி மாறும் என்னாலே'
போச்சுடா! வச்சா வேட்டு எதிர்க்கட்சிக்கு. இவ ஒரு ஓரப்பார்வை பார்த்தால் ஆட்சியே மாறிப் போய் விடுமாம்.
மாதுரியின் விழிகளில்தான் நாட்டை ஆள கனவு காணும் எத்தனை சந்தோஷம்? மாதுரி எளிமையாக அழகாகப் பண்ணியிருப்பார் சின்னப் பிள்ளை போல. அருவியில் குளிப்பதும், புரண்டு படுப்பதும், கவிழ்ந்து படுத்து கால்களை மாற்றி மாற்றி உயர்த்துவதும் என்று மிகவும் ரசிக்கும்படி பண்ணியிருப்பார்.
சின்னா! தெரிந்தோ தெரியாமலோ என் மனம் கவர்ந்த, ரொம்ப ரொம்ப மனம் கவர்ந்த பாட்டைக் கொடுத்து விட்டீர்கள். இதற்கு என்னுடைய வாழ்நாள் தேங்க்ஸ்.
இப்போது மறுபடி அந்தப் பாடலைப் பாருங்கள். வாத்தியங்களின் வலிமையை அனுபவித்து மகிழுங்கள். அருமையான இயற்கை ரம்மியங்களை ரசியுங்கள். சித்ராவின் குயில் குரலை லயித்துக் கேளுங்கள். சங்கர் கணேஷின் பின்னாளைய பாடல்களில் தலையானது.
பாடலை அமர்க்களமாக எழுதியவர் யார் தெரியுமா? புலமைப்பித்தன். இந்தப் பாடல் ஹிட் அடிக்கவில்லையே என்ற பெரும்குறை எனக்கு.
இப்பாடலைப் பற்றி ராகவேந்திரன் சார் மற்றும் மதுண்ணா கருத்தையும் அறிய ஆவல்.
இதே போல இதே ரேஞ்சில் இதே கால கட்டத்தில் இதே போன்ற ஒரு அருவிக் குளியல் பாடல் இதே போன்று அற்புதமாக அருமையாக இனிமையாக இருக்கும். நடிகை, இசையமைப்பாளர்கள் மாறுவார்கள். இந்தப் பாட்டிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அந்தப் பாடலும். வேண்டுமா?
Bookmarks