அந்தக் கால சினிமாக்களில் ஊடால கூத்து, டிராமா, ஓரங்க நாடகம் போன்ற அயிட்டங்கள் பாடல்களுடன் அம்சமாக வந்து போகும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் அது மாதிரி அதிகமாகவே இருக்கும். உடனே நம் நினைவுக்கு வருபவை நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை. இதெல்லாம் அடிக்கடி பார்த்தாயிற்று. இருந்தாலும் சலிக்காது.
'சபாஷ் மீனா' வில் ஒரு நாடகம்.
கனவான்களின் கூத்து. கும்மாளம். கன்னி மயில்களுடன் ஆட்டம். அங்கு வருகிறார் கோமாளி வேடத்தில் நடிகர் திலகம். நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறார். மிக வித்தியாசமான கெட்-அப்பில் புளோரசென்ட் லிப்ஸ்டிக் அடித்து அவர் ஒரிஜினல் கோமாளி போல் மேடையில் சுற்றி வருவது நம்மை வாய் பிளக்கச் செய்யும். நடன அசைவுகளை ரொம்ப அலட்சியமாக பண்ணுவார். கால்களை கவனித்தீர்களானால் ஒரு இடத்தில் கூட நில்லாது. கடினமான வரிகள். வார்த்தைகள். விறுவிறு என்று வேறு பாடுவார் பாடகர் திலகம்.
புத்தி சொல்லும் கோமாளியின் முகத்தில் கனவான் ஒருவன் கிரீம் எடுத்து அடித்து அவமானப்படுத்தி 'நிறுத்து' என்று கத்த,
அந்த ஏழைக் கோமாளியோ,
'நிறுத்து நிறுத்து நிறுத்து என்று கத்தாதே'
என்று எலும்பும், தோலும் காட்டும் வறுமைக் குழந்தைகளோடு பாடுகிறான்.
படத்தில் தந்தைக்கு நடிகர் திலகம் கூத்தாடுவது பிடிக்காது. அப்படிப்பட்டவர் இந்த ட்ராமாவுக்கு வந்துவிட, மேடையில் ஏழைகளுக்கு ஆதரவாக பாடி ஏய்ப்பவர் கூட்டத்திடம் சவால் விடும் நடிகர் திலகம்,
'கொற்றவனே வந்தாலும்
என்னைப் பெற்றவனே வந்தாலும்'
என்று பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் இருந்து தந்தையைப் பார்த்துவிட்டு, பயத்தில் பாடத்தை மறந்துவிட்டு, திரை மறைவில் ஒருவர் வசனத்தை எடுத்துக் கொடுக்க, ('முடியாது' என்று எடுத்துக் கொடுப்பார்) அதையே நடிகர் திலகமும் இனி தந்தை முன்னால் தன்னால் நடிக்க முடியாது என்பதை அதே
'முடியாது'
வார்த்தையை வைத்தே நடுங்கிப் பாடி பயந்து ஓட. இழுத்து மூடு ஸ்க்ரீனை.
செம ரகளை. சிரித்து சிரித்து வயிறே புண்ணாகி விடும். நடிகர் திலகத்தில் அசாத்திய கோமாளித் திறமை சேட்டைகளை அனுபவித்து பார்த்து ரசிக்கலாம். வழக்கம் போல வியக்கலாம்.
Bookmarks