தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரே நாளில் இரு படங்களை பல முறை வெளியிட்டு அதில் இரு முறை தலா இரு படங்கள் வீதம் நான்கு படங்கள் நூறு நாள் கொண்டாடிய சாதனை புரிந்த ஒரே கதாநாயகனின் வெற்றிப் புன்னகை
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 4
தொடர்ச்சி...
திராவிட அரசியல் சுனாமியை எதிர்கொண்டு தாங்கியது மட்டுமல்லாமல் அதே திராவிட ஆட்சியில் சினிமா சுனாமியாய்ப் பொங்கி எழுந்து ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு இரண்டுமே மகத்தான வெற்றி பெற்ற அந்த தீபாவளி .. 01.11.1967.... தமிழ் சினிமா வரலாற்றிலும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சினிலும் ஆழப் பதிந்து விட்டது.
அன்று 01.11.1967 அன்று எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது ஊட்டி வரை உறவு படத்திற்கே..பல மூத்த ரசிகர்கள் மணிஜே சினி புரொடக்ஷன்ஸ் மேல் மிகவும் கோபமாக இருந்தனர். அதற்கு முன்னரும் ஒரே நாளில் இரு படங்கள் வந்துள்ளன. என்றாலும் நடிகர் திலகம் உச்சகட்ட புகழுடன் திகழ்ந்த இந்த கால கட்டத்தில் இரு படங்கள் ஒரே நாளில் வெளி வருவது முதன் முறையாக ரசிகர்கள் நெஞ்சில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. அது அன்றைய சூழ்நிலையில் நியாயமான கலக்கமாகவும் பட்டது.
சாந்தியில் எள் போட்டால் எண்ணெயாய் விழும் எனச் சொல்வார்களே அது போல கூட்டமென்றால் அவ்வளவு கூட்டம். பட்டாசு, வாண வேடிக்கை, ரசிகர் மன்ற அளப்பரை எல்லாம் திருவிழா போல ஜொலித்தன. என்றாலும் ரசிகர்கள் பக்கத்திலேயே வெலிங்டனிலும் சென்று குவிந்து விட்டனர். மேட்னி ஷோ முடிந்து மாலையில் வரும் ரசிகர்கள் முகத்தையே பார்த்த வண்ணம் ஆவலோடு காத்திருந்தோம்.. எனக்கு ஊட்டி வரை உறவு படத்திற்கு மட்டும் முதல் நாள் மாலைக்காட்சிக்கான டிக்கெட்டு கிடைத்தது.
எனவே முதல் நாள் பகல் முழுதும் சாந்தி வெலிங்டன் என தியேட்டர் கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டோம்.
வெலிங்டனில் அலங்காரம் செய்ய வாய்ப்புக் கம்மி. பேனர் மற்றும் கட்அவுட் தியேட்டர் முகப்பின் மேல் பக்கத்திலேயே வைக்கப்படும். உள்ளே டிக்கெட் கவுண்டர் இருக்குமிடம் அருகே சற்று இடம் உண்டு அங்கு மட்டும் நாம் டெகரேஷன் செய்து கொள்ளலாம். எனவே வெலிங்டன் தியேட்டர் எதிரே சாலையில் நீளமான கொம்புகளை நட்டு வைத்து அங்கிருந்து முகப்பின் உச்சியில் கொடிகளையும் தோரணங்களையும் கட்டி விடுவார்கள்.
சாந்தியில் கொண்டாட்டங்களைப் பார்த்து விட்டு சுமார் 5 மணி வாக்கில் வெலிங்டனுக்கு வந்தோம். சற்று நேரத்தில் வெலிங்டனில் மணி அடித்தது. படம் முடியப் போகிறது என்பதற்கான அறிகுறி.. பரபரப்பு, டென்ஷன், கூடிக்கொண்டே போகிறது.. கதவு திறக்கிறது. மக்கள் வெளியே வருகிறார்கள்..
ஆஹா.. ஒரே வினாடி தான்.. படம் பார்த்து விட்டு வந்தவர்கள் மட்டுமின்றி எங்கள் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒளிர்வது போல பிரகாசம்.. ரசிகர்கள் ஓ... எனக் கூச்சலிட்டுக்கொண்டே வந்தனர். படம் சூப்பர். நூறு நாள் நிச்சயம். தலைவரின் ஸ்டைல் க்ளாஸ்... நாளைக்கே இன்னொரு தரம் பார்க்கப் போகிறேன் என்றபடியெல்லாம் ரசிகர்கள் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டே வந்தனர். அதுவும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்று மாதவிப் பொன்மயிலாள் பாடலை சிலாகித்துக் கொண்டே வந்தனர். சற்றுப் பொறுத்து விட்டு சில வயதான தம்பதிகள், மூத்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.. எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னது ... படம் சூப்பர்.. சிவாஜி சிவாஜி தான்.. அவரை எவனாலும் பீட் பண்ண முடியாது..
எங்கள் உற்சாகத்திற்கு கரையேது.. அவ்வளவு தான் வெலிங்டன் தியேட்டர் வாசலே இரண்டாகி விட்டது. ரோடிலேயே பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் கொண்டாடினோம்.
இப்போது வேறு டென்ஷன்... சாந்தி ரிஸல்ட் எப்படி...உடனே ஓடினோம்.. அதற்குள் சாந்தியிலும் படம் முடிந்து விட்டிருந்தது. வாசலில் உள்ள பஸ் ஸ்டாப் ஜேஜே என இருந்த்து. உள்ளே கால் வைக்கக் கூட முடியவில்லை. சீக்கிரம் இருண்டு விட்ட படியால் விளக்கையெல்லாம் ஏற்றி விட்டிருந்தார்கள். ஹவுஸ்ஃபுல் போர்டு எங்களை உற்சாகமாய் வரவேற்றது. ஏழு மணி வரை ரிசர்வேஷன் என்பதால் படம் விட்டு வந்தவர்களில் பலர் மீண்டும் பார்ப்பதற்காக ரிசர்வேஷன் க்யூவில் நின்று கொண்டார்கள். அப்போதே தெரிந்து விட்டது. இதுவும் சூப்பர் ஹிட் என்று. இருந்தாலும் அங்கே இருந்த பல ரசிகர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். பலரும் படத்தைப் பார்த்து விட்டனர் என்றாலும் அதிலும் மெஜாரிட்டி வெலிங்கனுக்கு சென்று விட்டனர். மீதம் இருந்த நண்பர்களிடம் கேட்ட போது எல்லோருமே சந்தோஷமாக இருந்தனர். படம் சூப்பர். கொஞ்சம் கூட போரில்லை. நல்ல காமெடி. அங்கு ரிஸல்ட் எப்படி எனக் கேட்டனர். நாங்கள் இருமலர்கள் ரிஸல்ட் பற்றி சொன்னோம்..
அவ்வளவு தான் இரு படங்களும் நூறு நாள் என்பது முதல் நாளிலேயே தெரிந்து விட்டது.
உற்சாகம் கரைபுரண்டோட ஷோவுக்கு நேரமான படியால் உள்ளே ஓடினோம். நல்ல வேளை நியூஸ் ரீல் தான். நாங்கள் உள்ளே போய் அமர்ந்து கொஞ்ச நேரத்திலேயே படம் ஆரம்பித்து விட்டது.
அவ்வளவு தான்.. அதற்கப்புறம் இந்த உலகையே மறந்து விட்டோம். கூடவே இருமலர்கள் ஹிட்டான சந்தோஷமும் சேர்ந்து கொள்ள தலைவரின் சூப்பர் டூப்பர் ஸ்டைலில் ஊட்டி வரை உறவு மக்களைப் பரவசப்படுத்த ஒரே அதகளம் தான். குறிப்பாக புது நாடகத்தில் பாட்டில் குனிந்து நடக்கும் ஸ்டைல், ஹேப்பி பாட்டில் கை தட்டும் ஸ்டைல், அங்கே மாலை மயக்கம் பாட்டில் வெள்ளை உடையில் கம்பீரமாக நிற்கும் போஸ் என காது ஜவ்வு கிழியும் வண்ணம் ரசிகர்களின் உற்சாகக் குரல் தான். தேடினேன் வந்த்து பாட்டில் சிகரெட் ஸ்டைலுக்கு ஆரம்பித்த கைதட்டல் படம் முழுதும் ஓயவேயில்லை.
பலருடைய கணிப்பும் தவறவில்லை. தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா சாதனைக்கு 01.11.1967 அன்றே நடிகர் திலகம் வித்திட்டு விட்டார்.
தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் என்பதற்கு அன்றைய தினம் ஒரு அத்தாட்சியாக அமைந்து விட்டது.
.... தொடரும்....
![]()








Bookmarks