-
23rd November 2015, 10:50 AM
#11
Junior Member
Platinum Hubber
பொன்மனச்செம்மல்:
துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.
அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!
திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.
தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.
மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.
எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.
எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
courtesy-ஜியாவுத்தீன்.
-
23rd November 2015 10:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks