-
24th August 2016, 08:15 AM
#2091
Junior Member
Newbie Hubber
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.
நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.
"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"
இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.
"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"
"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.
"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.
"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.
பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.
"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.
ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.
ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"
இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).
தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே
பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.
தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".
கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.
ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.
பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....
என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.
கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.
"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.
வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.
ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.
இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.
ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.
அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th August 2016 08:15 AM
# ADS
Circuit advertisement
-
25th August 2016, 12:03 AM
#2092
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
சென்ற ஜூலை மாதம் 22-ந் தேதி முதல் நமது மய்யம் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலோனாரால் மய்யத்தை பார்வையிடவோ அல்லது பதிவுகள் இடவோ முடியாமல் போனது. அவர்களில் நானும் ஒருவன். சில தினங்கள் கழித்து Proxy Server மூலமாக இணையதளத்தை பார்வையிட முடிந்தபோதும் பதிவுகள் மேற்கொள்ளவோ அல்லது தரவேற்றப்பட்ட வீடியோ காட்சிகளை பார்க்க முடியாமல் போனது.
இத்தகைய சூழலில் திரியின் பயணத்தில் தொய்வு விழாத வண்ணம் அவ்வப்போது பதிவுகள் மேற்கொண்டு திரியை முன்னெடுத்து சென்ற கோபால் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்! இதற்கு உதவி செய்யும் வண்ணம் ஒரு சில பதிவுகள் இட்ட திரு சந்திரசேகர் அவர்களுக்கும் பரணி அவர்களுக்கும் நன்றிகள்!
விரைவில் தடை நீங்கி மீண்டும் மய்யம் இணையதளம் பழைய பொலிவோடு செயல்படும் நாளை விரைவில் எதிர்பார்க்கும்
அன்புடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
25th August 2016, 12:07 AM
#2093
அன்றும் இன்றும் என்றென்றும் நடிகர் திலகத்திற்கும் அவரது படங்களுக்கும் மாபெரும் ஆதரவு கொடுக்கும் மதுரை சிவாஜி அடியார்களுக்கு அடுத்த விருந்து படைக்க 20,000 acres of fertile land + மில் ஓனர் ராஜசேகர் அடுத்த மாதம் விஜயம் செய்கிறார்.
அனைத்து துறைகளிலும் உயர்ந்த மனிதனாக விளங்கிய நடிகர் திலகம் underplay நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த உயர்ந்த மனிதன் திரைக்காவியம் ஆகஸ்ட் 12 முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில்!
மேலே காணப்படுவது சென்ற மாதம் நான் இட்ட பதிவு. இந்த மாதம் 12-ந் தேதி வெளியான உயர்ந்த மனிதன் ராஜசேகர் மதுரை சென்ட்ரலில் ஒரு புதிய சாதனை புரிந்திருக்கிறார். 4,5 புதிய படங்கள் அதே நாளில் வெளியானபோதும், கடைசி ஆடி வெள்ளி என்பதனால் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றபோதும் அதன் காரணமாகவே தாய்மார்கள் கூட்டம் அன்றைய தினம் திரையரங்கிற்கு வராமல் இருந்தபோதும் ஒரு வார மொத்த வசூல் Rs 93,000/- ஐ [ரூபாய் 93 ஆயிரத்தை] தொட்டிருக்கிறது.
இதன் சிறப்பு என்னவென்றால் நடைபெறும் இந்த 2016-ம் ஆண்டில் சென்ட்ரலில் வெளியான வேறு எந்த கருப்பு வெள்ளைப் படமும் Rs 90,000/- த்தை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை எனும்போது mass மசாலா items எதுவும் இல்லாத high class படமான உயர்ந்த மனிதன் இப்படிப்பட்ட சாதனை வசூலை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது ஒரு வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே போல் சென்ற 2015-ம் வருடத்தில் அதிக வசூல் பெற்ற கருப்பு வெள்ளை படம் நமது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு என்பதை வாசகர்கள் நினைவு வைத்திருக்க கூடும். அது மட்டுமல்ல இந்த 2016-ம் ஆண்டில் சென்ட்ரலில் வெளியான படங்களிலே ஒரு லட்சத்திற்கு மேல் வசூல் செய்த ஒரே படம் நமது வசந்த மாளிகை மட்டுமே!
என்றென்றும் நமது சாதனைகளுக்கு உறுதுணையாக விளங்கும் மதுரைக்கும் மதுரை வாழ் மக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
PS: இந்த வருடம் சென்ட்ரலில் வெளியான அனைத்து படங்களின் வசூல் விவரங்களை பெற்று அவற்றை அரங்க மேலாளர் திரு பாலமுருகன் அவர்களிடம் சரி பார்த்து இந்த தகவலை இங்கே பதிவு செய்கிறோம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th August 2016, 07:47 AM
#2094
Junior Member
Newbie Hubber
ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமல், தான் சிவாஜி பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கலவை என்றும் ,மரபணு ஆராய்ச்சி செய்தால் ,சிவாஜியின் மரபணு தன்னில் இருப்பதை காண முடியும் என்று கூறியுள்ளார்.
சத்யஜித்ரே ,சிவாஜி வரிசையில் தனக்கும் கிடைத்த கௌரவத்தை பெருமையோடு ஏற்பதாக கூறியுள்ளார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th August 2016, 08:27 AM
#2095
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th August 2016, 09:09 AM
#2096
Junior Member
Newbie Hubber
திரி நண்பர்களுக்கு கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th August 2016, 01:57 PM
#2097
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th August 2016, 01:58 PM
#2098
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th August 2016, 08:04 PM
#2099
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th August 2016, 06:44 PM
#2100
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 141 – சுதாங்கன்.

பீம்சிங், ஒரு சிக்கல் என்று ஏவி.எம். சரவணனிடம் சொன்னார்.
அது என்ன சிக்கல்?
`நான் ஏற்கனவே இந்த படத்தில் நாலரை லட்சம் என்று உங்கள் தந்தையாரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது பெரிய நடிகர்கள் நடிப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும். நாம் போட்ட பட்ஜெட்டை ரீ – ஒர்க் பண்ணணும்’ என்றார் பீம்சிங்.
நாலரை லட்சமாக இருந்தது, இப்போது பத்தரை லட்சமானது.
ஏவி.எம். செட்டியாரும் அதை ஏற்றுக்கொண்டார்.
சிவாஜியை போட்டு எடுப்பதால் செலவில் நியாயமிருந்ததை அவர் உணர்ந்து கொண்டார்.
திட்டப்படி 1960 அக்டோபர் 26ம்தேதி ‘பாவ மன்னிப்பு’ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.
ஆனால், படம் முடியும் வேளையில் படத்தில் தாயார் வேடத்தில் நடித்த கண்ணாம்பா இறந்துவிட்டார்.
மறுபடியும் எம்.வி. ராஜம்மாவை வைத்து படத்தை முடித்தோம்.
படத்தின் இசையமைப்பாளர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் திறமையை கண்டு ஏவி.எம். சரவணன் வியந்தே போனார்.
அவர்களும், கண்ணதாசனும் இணைந்தால் அங்கே வரிகளுக்கும் ஸ்வரங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
விஸ்வநாதன், கண்ணதாசன் இருவரையும் எப்போதுமே சரவணன் `மேதைக் குழந்தைகள்’ என்பார்.
இப்போதும் கூட ஏவி.எம். சரவணன், பல வருடங்கள் கழிந்தும் ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் ஆறாம் நம்பர் அறையைக் கடக்கும் போது, கண்ணதாசனும், விஸ்வநாதனும் அங்கே பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு பிரமை அவருக்கு ஏற்படுமாம்.
அவர்கள் இருவரும் ஓர் அற்புத காம்பினேஷன்!
பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவானதும், `மாதிரி இசைத்தட்டு’ வரும். அதை ` வொயிட் ரிகார்ட்’ என்பார்கள்.
`பாவமன்னிப்பு’ படத்தின் `வொயிட் ரிகார்ட்’ தயாரானவுடன், சரவணன், அதை அன்றைய ரேடியோ பிரபலம் எல்.ஆர். நாரயணன் மூலமாக இலங்கை வானொலியில் இருந்த மயில்வாகனனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த நாட்களில் வர்த்தக ஒலிபரப்பெல்லாம் கிடையாது.
மயில்வாகனன் `பாவமன்னிப்பு’ பாடல்களை இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டே வந்தார்.
படம் வெளியாவதற்கு முன்பே எல்லா பாடல்களுமே பிரபலமாகிவிட்டன.
`இப்படி பாடல்கள் முன்கூட்டியே நிறைய தடவை நேயர்கள் கேட்டுவிட்டால், அப்புறம் படம் வெளியாகும்போது அவை `ஸ்டேல்’ ஆகிவிடுமே! எனவே போதும், பாடல் ஒலிபரப்பு இனி வேண்டாம் என்று சொல்லி விடுவோமே’ என்றார் இயக்குநர் பீம்சிங்!
`அப்படி எந்த அபாயமும் இல்லை. நாம் ஒலிபரப்பை நிறுத்தச் சொல்ல வேண்டியதில்லை. அப்படியே போகட்டும்’ என்று உறுதியாக சொன்னார் ஏவி.எம். சரவணன்.
அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார் சரவணன்.
அந்த காலத்தில் நவுஷத் இசையமைத்த ‘கோஹினூர்’ போன்ற படப் பாடல்களை வருடக்கணக்கில் முன்கூட்டியே நேயர்கள் பலமுறை கேட்டும் அவர்களுக்கு சலித்ததில்லை என்றார்.
இவருடைய உறுதியில் அவருடைய தந்தைக்கும் உடன்பாடு இருந்தது.
படம் வெளியானதும் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் நல்ல வரவேற்பு.
குறிப்பாக பாடல் காட்சியின்போது ரசிகர்களின் கையொலியும், சந்தோஷக் குரல்களும் உச்சத்தில் இருந்தன.
பல மாதங்களாக அந்த பாடல்களை ரேடியோவில் பல முறை கேட்டிருந்தும் ரசிகர்களின் காதுகளுக்கு அவை பழசாகிப் போய்விடவில்லை.
அப்படி அந்தப் பாடல்களில் கண்ணதாசனும், விஸ்வநாதனும் தேன் கலந்திருந்தார்கள்.
`பாவமன்னிப்பு’ படத்தை சித்ரா தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று பீம்சிங்கும் மற்றவர்களும் கருதினார்கள்.
அப்போது சிவாஜி படங்கள் சித்ரா, சயானி, கிரவுன் தியேட்டர்களில்தான் ரிலீசாகும்.
ஆனால், இந்த படத்தை சாந்தி தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யவேண்டுமென்று செட்டியாருக்கு விருப்பமாக இருந்தது.
பெரிய தியேட்டரில் சிவாஜி படத்தை வெளியிட வேண்டும் என்பது மட்டுமல்ல.
அப்போது சாந்தி தியேட்டர் பால்கனிதான் தியேட்டர்களிலேயே பெரியதாக இருந்தது.
பால்கனியில் மட்டும் 421 சீட்டுகள் இருந்தன!
அதையும் சேர்த்து மொத்தம் 1212 சீட்டுகள்.
அதைவிட பெரிய சீட்டுகள் கொண்ட தியேட்டர் அதுதான்.
அதுவரையில் சாந்தி தியேட்டர் கட்டிய பிறகு அதில் எந்தவொரு படமும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.
`பாவமன்னிப்பு’ படத்தின் மீது செட்டியாருக்கும் மிகுந்த நம்பிக்கை இருந்தது.
அதனால் படத்தை சாந்தி தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அவர் நினைத்தார்.
சிவாஜியின் தம்பி சண்முகம் கூட படத்தை சின்ன தியேட்டரில் வெளியிடலாமே என்று சொல்லிப் பார்த்தார்!
`சித்ரா’வில் வெளியிட்டால் நூறு நாட்கள் நிச்சயம்’ என்று சிலர் சொல்லிப் பார்த்தார்கள்.
ஆனால் அதையெல்லாம் மீறி சாந்தி தியேட்டரில் `பாவமன்னிப்பு’ படம் வெளியானது.
அதற்காக விசேஷமான விளம்பரம் செய்யவும் முடிவு செய்தது ஏவி.எம். நிறுவனம்.
ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ‘மெகா’ சைஸ் பலுானை சாந்தி தியேட்டரின் மேலே பறக்க விட்டு, அந்தப் படத்திற்கான விளம்பரத்தில் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தினார்கள்.
அந்த பலூனில் ` ஏவி.எம்.’ என்ற எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பெரிதாகவும், வாலில் ` பாவமன்னிப்பு’ என்ற எழுத்துக்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக தமிழிலும் அமைக்கப்பட்டிருந்தன.
அன்றைய மவுண்ட் ரோட்டில் அந்தப் பலூனை அண்ணாந்து பார்த்து அதிசயிக்காதவர்கள் இல்லை.
சென்னை மாநகர மக்களுக்கு அந்த பலூன் ஒரு வித்தியாசமான அனுபவம்.
ஆனால், அந்த விளம்பரம் மக்களை ஈர்த்த அதே நேரம்–
மக்கள் தினமும் வந்து அதிசயமாக பார்த்து போன போதும்,
அதனாலும் தியேட்டருக்கு மக்கள் படம் பார்க்க வந்தபோதும்–
ஏவி.எம்.முக்கு அந்த விளம்பரத்தின் மூலமாக வேறொரு அனுபவம் கிடைத்தது!
(தொடரும்)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks