-
15th November 2016, 06:11 PM
#11
Junior Member
Senior Hubber
நன்றி வாசு சார்...
பாராட்டுகளுக்கு,
தாங்கள் விரைவில் எனக்குத்
தரவிருக்கிற ஞான ஒளிப் பரிசுக்கு,
இவனெழுதுவான் என்ற நம்பிக்கையோடு எனக்கு "இரு மலர்கள்" பரீட்சை வைத்த அன்புக்கு,
இன்னும் அத்தனைக்கும்.
இதோ.. எனக்குத் தெரிந்த வரை தேர்வு எழுதியிருக்கிறேன்.
திருத்துங்கள்.. ( சரியான வார்த்தை!)

* அந்த அழகு விழி இரண்டும்
அன்றிருந்தது
காதலிக்கான வரவேற்பறையாக.
இன்று ஆனது..
அவளைக் கொல்ல
ஆயுதங்கள் தயாராகும்
பட்டறையாக.
நல்லவர்களின் கோபம் சக்தி வாய்ந்தது என்பதற்கு சுந்தரின் கோபம் விளக்கம். கனல்
கக்கும் அவன் கண்களிரண்டும் காதலி மீதான
ஈவு, இரக்கத்தை எல்லாம் விலக்கும்.
* அந்த காந்த விழி இரண்டும்
அன்றிருந்தது
காதலெனும் கோயிலிலே
தீபமாக.
இன்று ஆனது
காதலியின் துரோகத்தைக்
கொளுத்த வந்த
தீப்பந்தமாக.
சுந்தரின் கோபம் சாதாரணமானதல்ல. 'சாம்பார்
சரியில்லை' என்று மனைவியோடு மதியம் துவங்கி, சாயங்காலம் சமாதானமாகி விடுகிற
சராசரிகளின் கோபமில்லை. தாமத வருகைக்காக
மேலதிகாரி கடிந்து கொள்ளும் போது கனிந்து
சிவந்து, மறுநாள் அவரே மன்னிப்புக் கேட்டதும் மடிந்து விடுகிற கோபமில்லை. அது, ஒரு ஆண்மகனின் கோபம் மட்டுமல்ல. ஆண்மையின் கோபம்.
கண் மண் தெரியாத கோபமல்ல. கண்ணுக்குள் உறுத்தலாய் இருப்பவளின் மீதான கோபம்.
வலிக்க,வலிக்கத் தாக்கும் கோபமல்ல. வலி தாங்கிய உள்ளத்தின் கோபம்.
இழப்பை உண்டாக்க முனையும் கோபமல்ல.
இழப்பின் கோபம்.
தன்னை விலக்கிச் சென்றவளின் வாழ்வழியச்
சாபமிடும் வக்கிரக் கோபமல்ல. தன் பக்கம்
இருக்கும் நியாயத்தையும்,உண்மையையும்
உணர்த்தும் உக்கிரக் கோபம்.
* அந்த எழில் விழி இரண்டும்
அன்றிருந்தது
காதலுக்கும்,காதலிக்குமான
வழிபாட்டுத் தலமாக.
இன்று ஆனது
காதலிக்கான
தண்டனைக் களமாக.
சுந்தரின் கோபத்தில் நியாயமிருக்கிறது. அவனது
கோபம் "பதிலுக்குப் பதில்" என்கிற வன்மமில்லை.
"உமா ஏன் தன் வாழ்வினின்றும் நீங்கினாள்.. ஏன்
தனக்கு அவள் துரோகம் செய்தாள்" என்றெல்லாம்
அவனைத் துளைத்தெடுக்கும் அவனது மனசாட்சியின் கேள்விகளுக்கு அவனால் சொல்ல முடிந்த ஒரே பதில் அந்தக் கோபம்.
* அந்தக் காந்த விழி இரண்டும்
அன்றிருந்தது
காதல் கவிதைகளின்
அடிகளாக.
இன்று ஆனது
காதலியைத் தகர்க்க வந்த
வெடிகளாக.
'காதலி துரோகம் செய்யவில்லை..தியாகம்
செய்திருக்கிறாள்' என்பது கதையின் நாயகன்
சுந்தருக்குத்தான் தெரியாது. நம் காவிய நாயகனுக்கு நன்றாகவே தெரியும். ஒன்றும்
தெரியாதது போல், நிஜ சுந்தராகவே ஆகி,நடிகர் திலகம் பார்க்கும் அந்த அக்கினிப்பார்வை..
காலகாலத்துக்கும் வியப்பல்லவோ?
* அந்த வெளிச்ச விழி இரண்டும்
அன்றிருந்தது
அன்பு மொழிப் பேச்சாக.
இன்று ஆனது
புயலொன்றின் வீச்சாக.
காதலையும், காதலனையும் தியாகம் செய்த
ஒருத்தி வேதனை மிகுதியில் பாடுகிறாள்.. அவள்
பாடுவதை இன்றைக்கு மற்றொரு குணவதியின்
கணவனாக,ஒரு அழகுப் பெண் குழந்தையின்
தகப்பனாக இருக்கிற அவளது முன்னாள் காதலன் ஒரு வெறுப்பான, அலட்சியம் மிகுந்த கோபமான பார்வை கொண்டு பார்க்கிறான்.
இது காட்சி.
ஒரு தியாகவதி பாடுவதாய் வரும் இப்பாடல்
தாய்க்குலத்தைத் தன் வசம் ஈர்க்கிற பாடல்.
நியாயமாக இந்தப் பாடல், நாட்டியப் பேரொளியை
கவனிக்க வைக்கிற பாடல். அதில் ஒரு நெருப்புப்
பார்வை பார்க்கும் ஒரு விநாடியை எடுத்துக்
கொண்டு, எலலோரின் கவனத்தையும் தன் வசம்
ஈர்க்கிறார்..நடிகர் திலகம்.
உப்பரிகையில் கையூன்றி அய்யன் பார்க்கும்
அந்தக் கூர்மைப் பார்வை என்னவோ நொடிப் பொழுதுதான்.
ஆனால் அந்த அற்புதப் பார்வை நம் நெஞ்சங்களில் நிலைப்பதென்னவோ..யுகக்
கணக்கிலன்றோ..?
Sent from my P01Y using Tapatalk
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th November 2016 06:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks