-
18th December 2016, 01:39 AM
#11
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 156 – சுதாங்கன்.

1965ம் வருடம் வந்த சிவாஜியின் படங்கள் ‘பழநி’, ‘அன்புக்கரங்கள்’, ‘சாந்தி’, ‘திருவிளையாடல்’, ‘நீலவானம்’ ஆகிய படங்கள் வெளியாகின. ‘பழநி’ படத்தை இயக்குநர் பீம்சிங் இயக்கியிருந்தார். கிராமிய சூழலில் சகோதர பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள்.
பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட்! இதில் முதல் பாடலான `ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’ பாடலை டி.எம்.ஸ்., சீர்காழி, பி.பி.எஸ். மூவருமே பாடியிருப்பார்கள். பாடல்கள் பிரபலமான அளவிற்கு படம் பிரபலமாகவில்லை! `அன்புக்கரங்கள்’ படத்தில் அவருக்கு ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரம்! இந்த படத்திற்கு ஆர். சுதர்ஸனம் இசையமைத்து, எல்லா பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். `ஒண்ணா இருக்க கத்துக்கணும், இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்’ பாடல் மிகவும் பிரபலம்! இந்த படமும் சுமாரான வெற்றியைத்தான் அடைந்தது.
`சாந்தி’– இது சிவாஜியின் சொந்தப் படம்! படத்தின் கிளைமாக்ஸினால் ஒரு படம் தோல்வி அடைந்தது என்றால் தமிழில் இரண்டு பிரபலமான படங்களைச் சொல்லலாம். ஒன்று– சிவாஜி நடித்த ` சாந்தி.’ இன்னொன்று– எம்.ஜி.ஆர் நடித்த `பாசம்.’ `சாந்தி’ படத்தில் கிளைமாக்ஸில் எஸ்.எஸ். ஆர்.– விஜயகுமாரி ஜோடி தற்கொலை செய்து கொள்வதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல் `பாசம்’ படத்தில் எம்.ஜி.ஆர். இறப்பது மாதிரி காட்டியிருப்பார்கள். இதையும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இத்தனைக்கும் `சாந்தி,’ `பாசம்’ இரண்டு படங்களுக்கும் விஸ்வநாதன்– ராமமூர்த்தி இசை. அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட்டாகின. `சாந்தி’ படத்தில் ‘செந்தூர் முருகன் கோவிலிலே,’ `யார் அந்த நிலவு,’ ‘ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்’ போன்ற பாடல்கள் மிகவும் பாப்புலர்.
இந்த `சாந்தி’ படத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உண்டு. இந்த படத்தில் வரும் ` யாரந்த நிலவு’ பாடலை கம்போஸ் செய்ய எம்.எஸ். வி. 15 நாட்கள் எடுத்துக்கொண்டார். இந்த பாடலின் மெட்டைக் கேட்ட கண்ணதாசன் விஸ்வநாதனிடம் ` இது கரடுமுரடான டியூன். இதுக்கு நான் எப்படி பாட்டு எழுதறது?’ என்று சொல்லி பாட்டு எழுத 15 நாள் எடுத்துக் கொண்டார்.
இந்த பாட்டை சிவாஜி கேட்டார். ஆனால் படப்பிடிப்பு 15 நாட்கள் கழித்தே தேதி கொடுத்தார். 15 நாட்கள் கழித்து நடித்துக் கொடுத்தபின், `ஏன் இவ்வளவு தாமதமாக டேட் கொடுத்தேன் தெரியுமா ? இந்த பாட்டை கம்போஸ் பண்ண விஸ்வநாதன் 15 நாட்கள் எடுத்துக்கிட்டாரு. கண்ணதாசன் பாட்டெழுத 15 நாள் எடுத்துக்கிட்டாரு. இந்த பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் கிடையாது. இந்த பாட்டுக்கு நான் எப்படி நடந்து வரணும்னு யோசிக்கவே எனக்கு 15 நாட்கள் தேவைப்பட்டது’ என்றார்.
இந்த பாடலில் நடந்து வரும்போது அவர் சிகரெட் புகைத்தபடியே பாடிக்கொண்டு வருவார். அதனால் படப்பிடிப்பின்போது தொடர்ச்சி கெடாமல் இருக்க பல சிகரெட்டுக்களை பல்வேறு சைஸ்களில் வெட்டி வைத்திருந்தார்கள். படம் வெளியானதும், இந்த கடுமையான பாடலை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்க்க கண்ணதாசன் சாந்தி தியேட்டருக்கு போயிருந்தார். படம் பார்த்துவிட்டு, எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு போன் செய்தார் கண்ணதாசன். ` உன் டியூனும், என் பாட்டும் எடுபடலே. சிவாஜியின் நடிப்பு இரண்டையும் தூக்கி சாப்பிட்டுடுச்சு. மக்கள் சிவாஜி ஸ்டைலான நடைக்குத்தான் கை தட்டறாங்க’ என்றார்.
`நீலவானம்’ சிவாஜி,- தேவிகா ஜோடியாக நடித்த படம்! படத்திற்கு வசனம் கே. பாலசந்தர். இந்த படத்தை பி. மாதவன் இயக்கியிருந்தார். `கை கொடுத்த தெய்வம்’ எப்படி சாவித்திரியின் படமோ அதே போல் `நீலவானம்’ தேவிகாவின் படம் என்றே சொல்லலாம்.
ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய `திருவிளையாடல்’ புராணப்படம் என்றாலும் அதை நவீன முறையில் வழங்கினார். இதில் சிவாஜி சிவபெருமானாக நடித்தார். ஆனாலும், விதவிதமான தோற்றங்களில் தோன்றி, மாறுபட்ட நடிப்பை வழங்கினார். சிவாஜி புலவராகவும், நாகேஷ் தருமியாகவும் நடித்த காட்சி உயர்தரமான நகைச்சுவையை ரசிகர்களுக்குக் கொடுத்தது.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் முதல் காப்பியை பார்த்த சிவாஜி, நாகேஷ் நடித்த காட்சியை மறுபடியும் போடச் சொன்னார்.
பொதுவாக கதாநாயகர்கள், மற்ற நடிகர்கள் மிகச் சிறப்பாக நடிக்கும் காட்சி தன் படத்தில் இடம்பெறுவதை விரும்பமாட்டார்கள். `சிவாஜி இந்தக் காட்சியை குறைக்கச் சொல்லப்போகிறார்’ என்றுதான் நினைத்தார் நாகேஷ். ஆனால் அதற்கு மாறாக, நாகேஷ் நடிப்பை வெகுவாகப் பாராட்டி தட்டிக்கொடுத்தார் சிவாஜி. இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இந்தப் படம் சென்னை சாந்தி தியேட்டரில் 200 நாட்களுக்கு மேலாக ஓடியது. நாத்திக பிரசாரம் தமிழகத்தில் தழைத்தோங்கிக் கொண்டிருந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த புராணப்படம் இது.
1966ம் வருடம் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘மகாகவி காளிதாஸ்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘செல்வம்’ ‘தாயே உனக்காக’ ஆகிய படங்கள் வந்தன. ஜெமினி எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கிய படம். இந்த படத்தில் ஜெயலலிதா, சிவாஜியின் மகளாக நடித்திருப்பார். சிவாஜிக்கு ஜோடி சவுகார் ஜானகி. இந்தப் படத்திற்கு இசை விஸ்வநாதன் -– ராமமூர்த்தி. இந்த படத்தில் சிவாஜிக்கு பாடலே கிடையாது.
`மனமே முருகனின் மயில் வாகனம்,’ `துள்ளித்துள்ளி விளையாட துடிக்குது மனசு,’ ‘சிகு சிகு நான் இன்ஜின்,’ ` காத்திருந்த கண்களே’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம்.
`மகாகவி காளிதாஸ்’ படத்தில் சிவாஜியின் நடிப்பு மிகவும் அருமையான இருந்தது. ஆனால் சுவையான திரைக்கதை இல்லாததால் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.
ஏ.பி. நாகராஜனின் இன்னொரு மாபெரும் வெற்றிப்படம் ‘சரஸ்வதி சபதம்’.
இந்த படத்திற்கும் கே.வி. மகாதேவன்தான். அத்தனை பாடல்களும் மிக அருமை.
இந்த படமும் சாந்தி தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எழுத்தில், இயக்கத்தில் வெளியான படம் ‘செல்வம்’
மிக அருமையான கதையை தேர்ந்தெடுத்திருந்தார்.
ஜோசியத்தை வெகுவாக நம்பும் பணக்கார தாயாரின் மகன் சிவாஜி.
அவர் உயிருக்குயிராய் காதலித்த, ஏற்கனவே வீட்டில் நிச்சயித்த பெண்ணை ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதாக சொல்லி தாயார் ஜோடிகளை பிரித்துவிடுவார்.
அந்த ஜோடிகளில் உணர்ச்சி கொந்தளிப்புத்தான் படம். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடி கே.ஆர். விஜயா. இந்த படத்தை நடிகர் வி.கே. ராமசாமி தயாரித்திருந்தார். படத்திற்கு இசை, கே.வி. மகாதேவன்.
இந்த படத்தில் நாகேஷின் மிக நெருங்கிய நண்பரான தாராபுரம் சுந்தரராஜனை பாட வைத்திருப்பார் கே.வி. மகாதேவன்.
(தொடரும்)
-
18th December 2016 01:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks