-
21st February 2011, 06:13 PM
#1201
Senior Member
Senior Hubber
Nadigar Thilagamum Remake Padangalum
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்
இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.
இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.
பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.
I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்
நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.
தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.
என் தம்பி:- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற ஆஸ்தி பருவுலு என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், தட்டட்டும்
கை தழுவட்டும் பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!
திருடன் ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் டன் என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.
எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் Aaj kal their meri pyaari
.. தமிழில், சொர்க்கம் பக்கத்தில் மற்றும் Dhil ke jaroke mein
தமிழில், எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் அதாவது பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.
எங்கிருந்தோ வந்தாள்:- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற கிலோனா. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது ஒரே பாடல் பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே சரி சரி பாடுகிறேன் என்று அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.
வசந்த மாளிகை:- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற பிரேம நகர் ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன? என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் நட சாம்ராட் அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த
ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு
இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
மீதி மற்றுமொரு பதிவில்,
அன்புடன்,
பார்த்தசாரதி
-
21st February 2011 06:13 PM
# ADS
Circuit advertisement
-
21st February 2011, 10:37 PM
#1202
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்தசாரதி,
ரீமேக் படங்களைப் பற்றிய துவக்கப் பதிவிலேயே தங்கள் ஆளுமை தெரிகிறது. எந்த அளவிற்கு நடிகர் திலகம் தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது புலனாகிறது. அதே அளவிற்கு அவர் ஒவ்வொருவருள்ளும் பாதித்திருக்கிறார் என்பதும் தங்களுடைய பதிவுகளுக்குக் கிடைக்கும் உணர்வுபூர்வமான வரவேற்பின் மூலம் உறுதியாகிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
திருடன், வசந்த மாளிகை, ராஜா என்று நீங்கள் துவங்கியிருக்கும் பட்டியலே அவருடைய சிறப்பிற்கு கட்டியம் கூறுகிறது.
இன்னும் சொல்லப் போனால் துவங்கப் பட்டு பாதியில் அல்லது துவக்க கால கட்டத்தில் கைவிடப்பட்ட அல்லது எதிர்பாராமல் நின்று போன, அல்லது வேறு நடிகர் நடிகர்களுக்கு சென்ற சில ரீமேக் படங்கள், நம்மிடையே அப்படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் நம்மிடையே சில படங்கள் ஏமாற்றங்களையும் அல்லது நல்ல வேளை, இதை நடிகர் திலகம் செய்ய வில்லை என்ற திருப்தியையும் ஏற்படுத்தின என்பதும் உண்மை.
ஆனால் நடிகர் திலகம் இப்படத்தை செய்திருந்தால் நமக்கு நிச்சயம் ஒரு சிறந்த படைப்பு கிட்டியிருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படங்களில் ஒரு சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
Koshish
மௌனம் எனது தாய்மொழி என்ற பெயரில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிக்க சில காட்சிகள் கூட படமெடுக்கப் பட்டன. வாணிஸ்ரீக்கு முன்னர் இப்பாத்திரத்திற்கு அணுகப் பட்டவர் ஹேம மாலினி. அவர் நடிக்க ஆவலுடன் ஒப்புக்கொண்டாலும் அவருடைய கால்ஷீட்டும் நடிகர் திலகத்தின் கால்ஷீட்டும் ஒத்து வரமுடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களாலும் மேலும் சில எதிர்பாராத காரணங்களாலும் இப்படம் தொடர முடியவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Sacha jhuta
இப்படத்தின் உரிமையை பாலாஜி அவர்கள் வாங்கி நடிகர் திலகத்திற்கென வைத்திருந்தார். இதுவும் எதிர்பாராத காரணத்தால் நமக்கு அமையவில்லை. இப்படம் நிச்சயம் நடிகர் திலகத்தின் நடிப்பில் வந்திருந்தால் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்து படைத்திருக்கும்.
Shaukeen
வயசு அப்படி என்கிற பெயரில் நடிகர் திலகம், வி.கே. ராமசாமி மற்றும் மற்றொரு நடிகர் - நினைவுக்கு வரவில்லை - மூவர் நடிக்க தயாராக இருந்த படம். ஹிந்தியில் உத்பத் தத், அஷோக் குமார், மற்றும் பிரேம்நாத், ரதி அக்னிஹோத்ரி நடித்திருந்தனர். அப்படியே தழுவாமல் தமிழுக்கென்று சில மாற்றங்கள் செய்து எடுத்து வெளிவந்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும்.
இது போன்று பல படங்கள் உள்ளன. இவற்றையும் பின்னர் பார்ப்போம்.
தங்களுடைய மற்ற படங்களைப் பற்றிய பதிவுகளைப் படிக்க ஆவல் மேற்படுகிறது.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st February 2011, 11:10 PM
#1203
Junior Member
Newbie Hubber
மலேசிய வாசுதேவன் தமிழில் பாடிய முதல் பாடல், குன்னக்குடி வைத்யநாதன் இசையில், குமாஸ்தாவின் மகள் திரைப்படத்தில்.
பூவை செங்குட்டுவன் பாடலை எழுதியிருந்தார். படம் வெளியான ஆண்டு 1974 . (திரு சரவணன் dhool .com இல் எழுதியிருந்தார்).
-
22nd February 2011, 12:27 AM
#1204
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டெல்லி டூ மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டு கிட்டத் தட்ட 40 ஆண்டுகள் தன் குரலால் தமிழ் மக்களை வசீகரித்த வாசுதேவன் அவர்களின் மறப்பு பின்னணிப் பாடகர் சரித்திரத்தில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நடிகர் திலகத்திற்கு அவர் பாடியுள்ள பாடல்கள் என்றும் இனிமை, குறிப்பாக பூங்காற்று திரும்புமா பாடல்.
அவர் மறைவுக்கு நம் அஞ்சலி.
அவருடைய முதல் பாடல்.
பாலு விக்கிற பத்துமா
இசை - வி.குமார்
குரல்கள் - வாசுதேவ், ஸ்வர்ணா
பாடல் - மாயவநாதன்
மலேசியா வாசுதேவனின் முதல் படம் மாயவநாதனின் கடைசிப் படமாய் அமைந்தது.
Dear Raghavendran Sir,
Thank you very much for providing the link of one of the rarest songs of the immortal singer Malaysia Vasudevan. The versatality of his voice showers in his first song itself. The modulation & control of his tremendous voice & the natural flow of gimmicks makes this number a treasure. The co-singer Swarna in this song is none other than Music Director V.Kumar's wife.
Once again, thanks a lot !
Warm Wishes,
Pammalar.
-
22nd February 2011, 10:37 AM
#1205
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்தர்,
ரீமேக் செய்ய இருந்து முடியாமல் போன மேலும் ஒரு இந்திப்படம் 'ஷோர்'. இப்படத்தின் உரிமையும் பாலாஜியால் வாங்கப்பட்டு, நடிகர்திலகத்தின் நடிப்பில் உருவாக இருந்தது. ஆனால் இப்படம் பின்னர் மோகன், நளினி, பேபி ஷாலினி நடிப்பில் "ஓசை" என்ற பெயரில் உருவாகி, வெற்றி பெற முடியாமல் போனது. இந்திப்படத்தில், தன் மகளின் அறுவை சிகிச்சை செலவுக்காக தொடர்ந்து 72 மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதாகக் காட்சியிருக்கும். ஆனால் இந்த சைக்கிள் ஓட்டும் காட்சி நடிகர்திலகம் நடித்த பாலாஜியின் 'தியாகம்' படத்தில் இடம்பெற்றுவிட்டதால், ஓசை படத்தில் மோகன் 72 மணிநேரம் பாம்புகள் நிறைந்த கூண்டுக்குள் இருப்பதாக எடுத்திருந்தனர்.
இதேபோல, நடிகர்திலகத்தை வைத்து எடுப்பதற்காக பாலாஜி வாங்கவிருந்த 'விக்டோரியா 203' படத்தின் ரீமேக் உரிமை, மயிரிழையில் தப்பி ராமண்ணாவிடம் போக, அவர் 'வைரம்' என்ற படமாக எடுத்தார்.
டியர் பார்த்தசாரதி,
உங்களின் ரீமேக் படங்களின் அலசல் அருமையாக உள்ளது. (இவற்றில் எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள் (மற்றும் நீதி) படங்களுக்கு நான் எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரைகளின் இணைப்பு இத்திரியின் முதல் பக்கத்தில் பார்த்திருப்பீர்கள். அதுபோல தங்கை, என் தம்பி, திருடன் பட ஆய்வுகளும் முரளியண்ணா மற்றும் நண்பர்களால் விரிவாக அலசப்பட்டுள்ளது).
எங்கிருந்தோ வந்தாள் - வசந்த மாளிகை படங்களுக்கிடையில் 1971-ல் 'கங்கா ஜமுனா' (இருதுருவம்), 'மிலன்' (பிராப்தம்) படங்களும் ரீமேக் செய்யப்பட்டன. பத்து படங்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்ததால் இவற்றை தவிர்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
தங்கள் பதிவுகள் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கின்றன. மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.
-
22nd February 2011, 10:52 AM
#1206
Senior Member
Veteran Hubber
டியர் பம்மலார்,
சிறிது இடைவெளிவிட்டு வந்தபோதும், அதிரடியாக பல பதிவுகளைத்தந்து அசத்தி விட்டீர்கள். நடிகர்திலகத்தின் பட மறுவெளியீட்டு தகவல், கேள்வி பிறந்தது - நல்ல பதில் கிடைத்தது போன்ற வழக்கமான அம்சங்களோடு.....
ஒப்பீடு செய்துபார்க்கும் வண்ணம் இந்தி 'ஓ மேரி ராஜா' பாடலையும், தமிழ் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலையும் ஒளிவடிவில் ஒரே பதிவில் தந்திருப்பது அருமை அல்ல அட்டகாசம். பலருக்கு பல உண்மைகளை உணர்த்தியிருக்கும் (எனது கணினியில் எப்போதுமே 'youtube' வேலை செய்யாது என்ற போதிலும். இதனால் பல நல்ல ஒளிப்பேழைகளை தவற விட்டிருக்கிறேன்).
பதிவுகளுக்கு மிக்க நன்றி...
-
22nd February 2011, 12:03 PM
#1207
Moderator
Platinum Hubber
காட்சிப்பிழை திரை என்றொரு இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. ஜனவரி இதழில் எஸ்.ஏ.கண்ணன் அவர்களின் நேர்காணல் (முதற்பகுதி) பிரசுரம் ஆகியிருக்கிறது. சக்தி நாடக சபாவில் பணியாற்றியது பற்றியும் பின்னர் சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியது பற்றியும் சொல்லியிருந்தார். ஒரு பாய்ஸ் கம்பெனியின் தினப்படி நடவடிக்கைகள், செழிப்பும், வறுமையின் என மாறிமாறி அலைக்கழிப்பதைப் பற்றிச் சரளமாகச் சொல்லியிருந்தார்.
சிவாஜியைப் பற்றி ஓரிரு சுவாரஸ்யமான தவகல்கள் சொல்லியிருந்தார்.
பராசக்தி மேக்கப் டெஸ்டுக்கு அவரமாக அழைக்கப்பட்டிருந்தாராம். அவர்கள் குழுவில் நாடகம் திருச்சியில் தொடர்ந்து வந்ததால் சென்னை சென்று வர காலையில் விமானத்தில் செல்வது தான். சென்று திரும்பி வருவதற்கு திருச்சி வரை கார் கொடுத்தார்களாம். முதல் பட மேக்கப் டெஸ்டுக்கு விமானத்தில் சென்ற ஒரே நடிகன் சிவாஜி தான் என்கிறார்.
அன்று சிவாஜியும் (அவரோடு உடன் சென்ற நம்பிராஜன் என்ற அக்குழு நடிகரும்) திரும்ப திருச்சி வர நேரமாகிவிட்டதாம். அரங்கில் சீட்டு விற்பனை ஆகி மக்கள் கூடிவிட்டதால் நிலைமையை விளக்கி வேறொரு நாடகம் அன்று நடத்துவதாக அறிவித்தார்கள். ரசிகர்களோ சிவாஜி வரும் வரை காத்திருந்து நாடகத்தைப் பார்க்கத் தயார் என்று சொல்லிவிட்டனராம். தாமதமாக வந்த சிவாஜியை ஆரவாரத்துடன் வரவேற்றபின் தான் நாடகம் தொடங்கியதாம்! திரைத்துறைக்குள் வரும் முன்னரே நாடக உலகில் சிவாஜிக்கு இத்தனை பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது.
அப்பேட்டியில் ஒரு சில தேதிகள், தகவல்கள் chronologically முரணாக இருப்பதாக (எனக்கே) தோன்றியது. இருந்தாலும் அக்கால நாடக உலகம், மக்களைக் கவரும் உத்திகள், சினிமா மூலமாக நாடக உள்ளடக்கத்துக்கு ஏற்பட்ட மாற்றங்கள் அமெரிக்கப் படங்களின் நடிப்பு ஏற்படுத்திய ஈர்ப்பு...என்று பல விஷயங்களைப் பற்றி சுவையாகப் பேசியிருந்தார்.
அடுத்த இதழில் சிவாஜி நாடக மன்ற அனுபவங்களைப் பற்றியும் தகவல்கள் எதிர்பார்க்கலாம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
22nd February 2011, 12:15 PM
#1208
Senior Member
Platinum Hubber
Parthasarathy, excellent posts. suvaarasyamAga ezhudhugiRIrgaL. One small nit pick - nata samrat in telugu actually means nadippu chakravarthy. The other facts you mentioned about trade mark dance moves of ANR are quite true.
-
22nd February 2011, 05:55 PM
#1209
Senior Member
Veteran Hubber

Originally Posted by
NAGARAJAN RAMAKRISHNAN
மலேசிய வாசுதேவன் தமிழில் பாடிய முதல் பாடல், குன்னக்குடி வைத்யநாதன் இசையில், குமாஸ்தாவின் மகள் திரைப்படத்தில்.
பூவை செங்குட்டுவன் பாடலை எழுதியிருந்தார். படம் வெளியான ஆண்டு 1974 . (திரு சரவணன் dhool .com இல் எழுதியிருந்தார்).
டியர் நாகராஜன் ராமகிருஷ்ணன் சார்,
வருக ! வருக ! தங்களுக்கு நல்வரவு !
தாங்கள் குறிப்பிட்டுள்ள "குமாஸ்தாவின் மகள்" திரைப்படம் வெளியான தேதி : 27.4.1974
நமது ராகவேந்திரன் சார் பதிவிட்டுள்ள "டெல்லி டு மெட்ராஸ்" வெளியான தேதி : 4.8.1972
இதற்கிடையில், நமது தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்" [வெளியான தேதி : 24.3.1973] திரைக்ககாவியத்தில், 'இந்திய நாடு என் வீடு' பாடலில், பஞ்சாபி மேஜருக்காக,
'சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத் சுனோ பஞ்சாப்வாலா கீத் சுனோ
தங்கக்கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேகோ தேகோ"
என வெளுத்து வாங்கியிருப்பார் வாசு.
"குமாஸ்தாவின் மகள்" திரைப்படத்தில், குன்னக்குடியின் இசையில் மலேசியா பாடிய 'காலம் செய்யும் விளையாட்டு' பாடலை அவரது ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.
அன்புடன்,
பம்மலார்.
-
22nd February 2011, 06:20 PM
#1210
Administrator
Platinum Hubber

Originally Posted by
pammalar
தாங்கள் குறிப்பிட்டுள்ள "குமாஸ்தாவின் மகள்" திரைப்படம் வெளியான தேதி : 27.4.1974
நமது ராகவேந்திரன் சார் பதிவிட்டுள்ள "டெல்லி டு மெட்ராஸ்" வெளியான தேதி : 4.8.1972
இதற்கிடையில், நமது தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்" [வெளியான தேதி : 24.3.1973]
idharkkidaiyil (1973) veliyaana innoru thiraipadam Thalai Prasavam. adhil thaan mudhal mudhalil MSV isaiyil Malaysia Vasudevan paadinaar.
paadal: maalyittu poomudiththa manamagalaaga, vidhi mounamaaga pOgudhammaa oorvalamaaga.
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks