நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


5. படித்தால் மட்டும் போதுமா (1962) / தேவர் (1966) - ஹிந்தி


நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு.



மீண்டுமொரு வெள்ளந்தியான கதாபாத்திரம். ஆனால், முந்தைய படங்களை விட வித்தியாசமானது. ஒரு விதமான முரட்டுத்தனமான, அப்பாவி வேடம். உலக விஷயங்கள் அறிந்த மனிதராக இருந்தாலும், படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்களைப் பற்றி அறிந்திராத அப்பாவி வேடம்.

நடிகர் திலகம், காமா சோமா படங்களில் நடிக்கவே மாட்டார். ஒவ்வொரு படத்திலும், ஒரு பிரச்சினை, ஒரு முடிச்சு இருக்கும் – அதாவது – சமூகப் படங்கள் – அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் – அல்லது அந்தப் பிரச்சினையால் அவரது வாழ்க்கை எப்படி தடம் புரண்டு போகிறது – இப்படித் தான் இருக்கும். (adventure டைப் படங்களில் கூட அவரது சிரத்தை பிரமிப்பாக இருக்கும் (சிவந்த மண் போன்ற படங்கள்)


இந்தப் படமும் அப்படித்தான். கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாலாஜி நடித்த அந்த அண்ணன் கதாபாத்திரத்தில் முதலில், ஜெமினி தான் நடித்திருக்க வேண்டியது. அது ஒரு விதமான எதிர்மறையான வில்லன் போன்ற கதாபாத்திரம் என்பதால், ஜெமினி நாசூக்காகக் கழன்று கொண்டார். பின்னர் அந்த வாய்ப்பு பாலாஜிக்குச் சென்றது. பாலாஜியும் நன்றாகவே செய்திருந்தார் – இந்தப் படம் பாலாஜிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து, அதன் பின் தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடிக்கவும் வழி வகுத்தது. பல இடங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

இந்தப் படத்திலும் நடிகர் திலகத்திற்கு மிக நல்ல பாடல்கள் அமைந்து அத்தனையிலும், வித்தியாசமான நடிப்பை வழங்கி எல்லோரையும் திக்குமுக்காட வைத்தார். டைட்டில் ("ஓஹோஹோ மனிதர்களே") பாடலிலேயே அவரது ஆட்சி (ஸ்டைல் தான்!) ஆரம்பித்து விடும். அவர் குதிரை ஓட்டுவதில் பிரமாதமான தேர்ச்சி பெற்றவர் என்பதால், குதிரை ஒட்டிக் கொண்டே பாடும் ஸ்டைல் - அனாயாசமாக அமைந்திருக்கும். அடுத்து, "பொன்னொன்று கண்டேன்" - இது ஒரு காவிய அந்தஸ்து பெற்ற பாடல் என்றால் அது மிகையாகாது. இதில் "விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ" என்று சொல்லி ஒரு கையை தூக்கி செய்யும் அந்த ஸ்டைலுக்கு அரங்கமே அதிரும். அடுத்து, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்", பாடலில் அவரது ஸ்டைலும், எனர்ஜியும் அபாரமாக இருக்கும். இந்தப் பாடலில் தான், நடிகர் திலகம் அதிகபட்ச கைத்தட்டலையும் ஆர்ப்பரிப்பையும் திரையரங்கத்தில் பெறுவார் எனலாம்.

அடுத்து, "நான் கவிஞனும் இல்லை" பாடலில் – இரண்டாவது சரணம் முடிந்தவுடன் – ஒரு மாதிரி தொகையறா போல் சில வரிகள் வரும் – “நான் அழுதால் சிரிக்கிறாள் – சிரித்தால் அழுகிறாள்" …. இப்படிப் போகும் – கடைசியில், “அழுவதா, சிரிப்பதா, தாயே … தாயே …” என்று முடித்து விட்டு – ஒரு மாதிரி கண் கலங்குவார். உடனேயே, ஒரு மாதிரி சமாளித்து விட்டு, இலேசாக ஒரு புன்னகையுடன், “நான் கவிஞனும் இல்லை” (நான் என்பதை ஒரு மாதிரி இழுத்து) என்று, மறுபடியும், அவருக்கேயுரிய தலையசைப்புடன் மறுபடியும் பாடி முடிப்பார். அரங்கமே மறுபடியும் அதிரும். இந்தப் பாடல் முடிந்தவுடன், ராஜ சுலோச்சனா நடிகர் திலகத்தை மோசமாக அவமானப் படுத்தி விடுவார். அவமானத்தால் கூனிக் குறுகி வெளியேறி, வீட்டிலுள்ள, குதிரை ஒட்டுபவரிடமிருந்து (திரு S.A. கண்ணன் அவர்கள்), மது பாட்டிலைப் பிடுங்கித் தானும் மதுவருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து, கோப வெறியில், ராஜ சுலோச்சனாவை சவுக்கால் வெளு வெளு வென்று வெளுத்து வாங்கி விடுவார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், தூர்தர்ஷனில், எப்போதோ ஒரு முறை தொகுத்து அளிக்கப் படும் மலரும் நினைவுகள் என்ற ஒரு நிகழ்ச்சியில், ராஜ சுலோச்சனா அவர்கள் ஒரு முறை அவரது மலரும் நினைவுகளை வழங்கும் போது, இந்தப் படத்தைப் பற்றிக் கூறினார். அப்போது, "இந்தக் காட்சியினை முதலில் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, காட்சி முடிந்தவுடன், அவரை பேட்டி கண்டு கொண்டிருந்தவரைப் பார்த்து, "இந்தக் காட்சி எப்படி" என்று கேட்டதற்கு, அவரோ "இவ்வளவு உக்கிரமாக நடிகர் திலகம் நடித்திருக்கிறாரே உங்களுக்கு எவ்வளவு அடி பட்டது?" என்று கேட்டார். அதற்கு ராஜ சுலோச்சனாவோ, "இந்தக் காட்சியில், ஒவ்வொரு முறையும், சவுக்கு என் மேல் வேகமாக உக்கிரமாகப் படுகிற மாதிரி தான் இருக்கும் . ஆனால், ஒவ்வொரு முறையும், சொல்லி வைத்ததுபோல், சவுக்கின் நுனி மட்டும் என் உடலில், மயிலிறகால் தடவுவது போல், மெதுவாக, என் உடலை வருடிவிட்டுத்தான் அந்த சவுக்கின் நுனி சென்றதே தவிர, ஒரு முறை கூட ஒரு அடியும் என் மேல் விழவில்லை; ஆனால், பார்ப்பவர் அனைவரையும் மிரள வைத்து அவர் மேல் ஒரு மாதிரி கோபத்தையும் வரவழைத்து விடும் நடிகர் திலகத்தின் ஆவேசமும் அந்தக் கைவீச்சும்" என்றாரே பார்க்கலாம். பேட்டி எடுத்தவரும் பார்த்த அனைவரும் சேர்ந்து மிரண்டு போனார்கள்.

இந்தக் காட்சி முடிந்தவுடன், ராஜ சுலோச்சனா கோபித்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று விடுவார். நடிகர் திலகத்தின் மீது, ஒவ்வொருவரும், சாவித்திரி முதற்கொண்டு, அவரது அப்பா எஸ். வி. சஹஸ்ரநாமம் வரை (இவர் கடைசிக் காட்சியில் தான் நடிகர் திலகத்திடம் கனிவைக் காட்டுவார். அதுவரை வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பார்), அவரைக் கோபித்துக்கொள்ளுவார்கள். சாவித்திரியும் அவரை நீங்கள் போய் உங்களது மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்தால் தான் உங்களோடு நான் பேசுவேன், இல்லையென்றால், என்னை நீங்கள் பார்க்கவே வரவேண்டாம் என்று கூறி விடுவார். அண்ணி சாவித்திரியை தன் சொந்த அன்னைக்கும் மேலாக பாவிக்கும் சாவித்திரியிடமிருந்து வந்த வார்த்தைகள் நடிகர் திலகத்தை நிலைகுலைய வைத்து விடும். இருப்பினும், அவரது கட்டளைக்கிணங்க, ராஜ சுலோச்சனா வீட்டிற்குச் சென்று அவரிடம் அவருடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுவார். சிறிது நேரத்தில் அங்கு வரும் ராஜ சுலோச்சனாவின் தந்தை எஸ். வி. ரங்காராவ் (அவர் ஏற்கனவே நடிகர் திலகம் மீது கோபமாக இருப்பார்), நடிகர் திலகம் ராஜ சுலோச்சனாவிடம் கோபமாக பேசுவதைப் பார்த்து விட்டு (நடிகர் திலகம் ராஜ சுலோச்சனாவை ஒரு மாதிரி அடித்தே விடுவார்), தன் கையில் இருக்கும் கழியால் நடிகர் திலகத்தை நன்றாக அடித்து விடுவார். (ஒவ்வொரு நடிகர் திலகம் ரசிகனுக்கும் ரங்கா ராவிடம் அப்போது வரும் கோபம் சொல்லி முடியாது.) உடனே, நடிகர் திலகம் ஒரு மாதிரியான முரட்டு வேகத்துடன் (ஸ்டைலாகவும்தான்) எழுந்து, திருப்பி ரங்கா ராவை அடைப்பது போல் எழுந்து, அமைதியாக அவமானத்தோடு சென்று விடுவார். அவர் அடி வாங்கி எழுந்து கொள்ளும் போது காட்டுகிற வேகமும் அந்த ferocity -யும், அவ்வளவு உக்கிரமாகவும் graceful -ஆகவும் இருக்கும். ரங்கா ராவை அடி அடி என்று அடித்திருந்தால் கூட, அந்த effect கிடைத்திருக்காது. அது தான் நடிகர் திலகம். பக்கம் பக்கமாக வசனம் பேசி (அந்தந்த வார்த்தைகளுக்கேற்ற பாவத்தோடும்தான் (அழுத்தத்தோடு)) - அத்தனை உணர்வுகளையும் வெறும் பார்வையாலும், உடல் மொழியாலும் சிறு வார்த்தைகளாலும் உடல் அசைவுகளாலும் மட்டுமே கூடக் காட்டி விடுவார்.

அதே கோபத்துடன் வெளியேறி அவரது வீட்டிற்குச் சென்று, இத்தனை குழப்பத்திற்கும் காரணம் அண்ணன் பாலாஜிதான் என்று தெரிந்தவுடன், துப்பாக்கியுடன் சென்று காட்டில் கோபத்தை வெளிப்படுத்தும் விதம், பாலாஜியுடன் நடக்கும் வாக்குவாதம், சாவித்திரி வந்து சேர்ந்து கொள்ளும்போது ஏற்படும் குழப்பம், பாலாஜிக்கு நேரும் அசம்பாவிதமான மரணம் இவை யாவும், அற்புதமாக கோர்வையாக எடுக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சிகளில் ஆரம்பித்து, பாலாஜிக்கு மரணம் நேர்ந்து கடைசியில், பிரமை பிடித்த நிலையில் சாவித்திரி (அற்புதமான நடிப்பு) கோர்ட்டுக்கு வந்து, கூண்டில் ஏறி, நடிகர் திலகத்தை விடுவித்து, அவரும், முத்துராமனும் (மிக அழகாக செய்திருப்பார்) அவர்தம் குடும்பத்தாரும் காரில் விடைபெற, நடிகர் திலகம், ராஜ சுலோச்சனா, ரங்கா ராவ், சஹஸ்ரநாமம், கண்ணாம்பா, எம்.வி. ராஜம்மா, எம். ஆர். ராதா (இவரைப் பற்றி தனியாக நிறைய எழுத வேண்டும்), ஏ. கருணாநிதி, போன்றவர்கள் அவர்களை வழியனுப்பும் வரை, எந்தத் திரையரங்கிலாவது , ஒரே ஒரு மனிதரையாவது, பேச, ஏன், அசைய வைத்திருப்பார்களா?

கூட்டு முயற்சி பற்றி வேண்டியமட்டும் உலகத்தில் எல்லோரும் பேசித் தீர்த்தாகி விட்டது. சினிமாவைப் பொறுத்தவரை, அதுவும், குறிப்பாக, தமிழ் சினிமாவில், நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் – TMS – பி. சுசீலா - கூட்டணி தமிழ் மக்களுக்கு அருளிய செல்வங்களில் இருந்தவை தானே கூட்டு முயற்சிக்கான இலக்கணங்கள்!.

இந்தப் படங்களில் மட்டுமல்லாமல், நடிகர் திலகம் பங்கு பெற்ற அனைத்து படங்களிலும், எங்காவது, தான் சிவாஜி என்று நினைத்துக் கொண்டு நடித்திருப்பாரா?. அந்தந்தப் படங்களின் கதாபாத்திரங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தானே வாழ்ந்தார். படித்தால் மட்டும் போதுமாவும், அப்படிப்பட்ட படங்களில், மகத்தான படம்.

இந்தப் படம் ஹிந்தியில் “தேவர்” (மச்சினன்) என்ற பெயரில் 1966 -இல் வெளிவந்தது. தர்மேந்திரா நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தையும், தேவன் வர்மா என்ற நடிகர் பாலாஜியின் பாத்திரத்தையும் ஏற்று நடித்தனர். ஹிந்தியிலும், ஓரளவு நன்றாகவே ஓடியது என்றாலும், நடிகர் திலகத்தின் வீச்சின் நிழலைக்கூட தர்மேந்திராவால் தொட முடியவில்லை.

அன்புடன்,

பார்த்தசாரதி