அவன்தான் மனிதன் (நடிகன்).
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் கட்டுரையில், இன்னும் மூன்று படங்கள் பாக்கி இருக்கும் நிலையில், இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சிறு பதிவு.
நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் உருவான இந்தப் படத்தை கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து நேற்றுதான் பார்த்தேன். ஆம். படம் முதன்முதலில் 1975-இல் வெளிவந்தபோது பார்த்தபின், அதற்கப்புறம் நேற்றுதான் பார்த்தேன். இதற்கு முக்கிய தூண்டுதல், திரு ராகேஷ் அவர்களின் பதிவினைப் பார்த்தது. மேலும், நேற்று, ஏவிஎம்-இன் Sound Zone கடையில், வழக்கம் போல், நடிகர் திலகத்தின் புதிய படங்கள் ஏதாவது வெளி வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தப் படத்தின் குறுந்தகடு கண்ணில் பட, உடனேயே அதை வாங்கினேன். நடிகர் திலகத்தின் எத்தனையோ படங்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களிலோ அல்லது டிவியிலோ பார்த்துக் கொண்டே வந்திருந்தாலும், அதென்னமோ தெரியவில்லை இந்தப் படத்தை மட்டும், நான் டிவியிலோ தியேட்டரிலோ, 1975-க்கப்புறம் பார்க்கும் சந்தர்ப்பத்தை, கடவுள் ஏனோ எனக்கு நேற்று தான் அளித்தார். எனக்குத் தெரிந்து, இந்தப் படம் பெரிய அளவில், சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டதில்லை. அதுவும், ஒரு காரணமாயிருக்கலாம்.
இத்தனைக்கும், இந்தப் படம் வெளி வந்த காலத்திலேயே, இந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த ஸ்டைல், majesty, சோகத்தை வித்தியாசமாகக் காட்டியிருந்த விதம் என்னை மட்டுமல்லாமல், அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்த ஒன்று. குறிப்பாக, அவரது சிகை அலங்காரம். ரொம்ப காலத்திற்கு, இந்த சிகை அலங்காரத்தைத்தான் நானும் வைத்துக் கொண்டிருந்தேன்.
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்கிற சொலவடைக்கு நடிகர் திலகம் அற்புதமான உருவகம் கொடுத்திருந்த அந்த ரவிகுமார் கதாபாத்திரம் என்னை அப்படியே ஆட்டிப் படைத்து விட்டது. இரவு தூங்கச் செல்லுகிறவரையிலும், ஏன், தூக்கத்திலும் கூட ரவிகுமார் தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்.
சிறிய வயதில், இந்தப் படத்தைப் பார்த்தபோதே, ஒரு விதமான தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தி இருந்தாலும் (அந்த வயதில், நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் ஒரு மாதிரியான கம்பீரமான உடல் மொழி தான் பெரிதும் உடனே ஈர்க்கும்!), வாழ்க்கையில் சில அனுபவங்கள் கிடைத்து, ஒரு விதமான பக்குவம் வந்த பிறகு, இந்தப் படத்தை இப்போது பார்த்தபோது, ..................... வார்த்தைகளைத் தேடுகின்றேன்.
தெய்வ மகன், வசந்த மாளிகை வரிசையில் இந்தப் படத்திலும், ஒரு காட்சியைக் கூட விடாமல், அவரும் ரசித்து நடித்து, நம்மையும் ரசிக்க/அழ வைத்து விட்டிருக்கிறார். அத்தனை படங்களையும் அவர் ரசித்து ரசித்துதான் செய்திருக்கிறார் என்றாலும், பல படங்கள் ரொம்பவே சிலாகித்து செய்திருப்பார். அதில், அவன் தான் மனிதனும் முக்கிய இடம் பெறும். இந்தப் படம் என்னதான் நடிகர் திலகம் அற்புதமாக செய்திருந்தாலும், அளவு கடந்த சோகம் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் செய்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நெஞ்சிருக்கும் வரை படமும் கிட்டத்தட்ட இந்த அளவு சோகத்தோடு இருந்தாலும், அந்தப் படத்தில் இடை வேளைக்குப் பின்னர் ரொம்பவே சொதப்பியிருந்ததால், படம் தோல்வியைத் தான் தழுவியது. அவன்தான் மனிதனில் வரும் சோகம் இயல்பாக இருந்ததால், படம் பல சென்டர்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. தெய்வ மகனும் அவன்தான் மனிதனும் நிச்சயமாக வெள்ளி விழாப் படங்களாக அமைந்திருக்க வேண்டியவைதான். இது போல் எத்தனை எத்தனை படங்கள் வெள்ளி விழா இலக்கைத் தொட முடியாமல் போயிருக்கின்றன - கிட்டத்தட்ட இருபது வாரங்களைத் தொட்ட பிறகு - பாலும் பழமும், தில்லானா மோகனாம்பாள், மனோகரா, பதிபக்தி, சிவந்த மண், ராஜா, ஞான ஒளி, உட்பட! இதற்குரிய விவரங்கள், ஏற்கனவே, திரு முரளி மற்றும் திரு பம்மலார் அவர்களால், விரிவாக இந்தத் திரியில் எழுதப் பட்டு விட்டது.
அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks