-
27th May 2011, 05:14 PM
#11
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற மிகச்சிறந்த பாடல்கள் (தொடர்ச்சி...)
2. பொன்னொன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா, 1962) - பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசையமைப்பு - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி; பாடியவர்கள் - டி.எம்.சௌந்தரராஜன் / பி.பி.ஸ்ரீனிவாஸ்; இயக்கம் - பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலாஜி
இந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட முதல் பாடலான "நலந்தானா" மட்டும் தான் தர வரிசையில் இனம் பிரிக்க முடிகின்ற பாடல். மற்ற ஒன்பது பாடல்களை அதே போல், இரண்டு, மூன்று என்று பிரிக்க முயல்வது குதிரைக் கொம்பு; அதனால், மற்ற ஒன்பது பாடல்களை என் போக்கில் எழுதுகிறேன்.
இந்தப் பாடல் இந்த வகையில் அமைந்த பத்து சிரஞ்சீவித்தன்மை அடைந்த பாடல்களுள் ஒன்று. இந்தப் பாடலை உடனே எழுதுவதற்குக் காரணம், ஆண் பாலர் டூயட் பாடல்களைப் பற்றிய மற்ற அன்பர்களின் கலந்துரையாடல். நிறைய பாடல்கள் இந்த வகையில் வந்து விட்டாலும், சிரஞ்சீவித் தன்மையில், என்றும் முதல் இடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த "பொன் ஒன்று கண்டேன்" பாடல் தான் - அதாவது, கேட்க மட்டுமின்றி, பார்த்து ரசிக்கவும், அனைத்து அம்சங்களும் தலை சிறந்து விளங்கும் விதத்தில்.
இந்த வகை ஆண் பாலர் டூயட்டுகளில் கூட, இந்த நிமிடம் வரை, நடிகர் திலகமே முந்துவதற்குக் காரணம், அவருக்கு எந்த விதமான சோதனை முயற்சியிலும் இறங்குவதற்கு அவருக்கிருந்த மனோதிடம், ஆர்வம் மற்றும் முயற்சி; அவர் மேல் அனைத்து படைப்பாளிகளுக்கும் இருந்த நம்பிக்கை; இதற்கும் மேல், அவர் எந்த வகை சோதனை முயற்சியில் இறங்கினாலும், பாராட்டுகள் மட்டுமல்லாமல், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று விடுவார் என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.
இன்னொரு விஷயம் - இந்த வகை பாடல்கள் ஏன் மற்ற வெற்றிகரமான கதாநாயகர்களுக்கு - இன்றளவும் - பெரிய அளவில் கிடைக்கவில்லை? காரணம், அவர் மட்டுமே, மற்ற கதாநாயகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கும் பாடல்கள் பாடவும், அவர்களது திறமையைக் காட்டவும் தொடர்ந்து சந்தர்ப்பம் கொடுத்தார். எத்தனை வெற்றிகரமான பாடல்கள் – ஆசைக்கிளியே கோபமா, நல்லவன் எனக்கு நானே நல்லவன், கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, அவள் பறந்து போனாளே, வாழ்ந்து பார்க்க வேண்டும், ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - இப்படி. எத்தனை கலைஞர்கள், உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருந்த போதும், நடிகர் திலகம் அளவுக்கு மற்றவர்களுக்கு நிறைய பாடல்கள் கொடுத்து, தான் ஒரு பாடல் கூட பாடாமல் நடித்திருக்கிறார்கள் (தில்லானா மோகனாம்பாள், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ...).
இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமான ஒன்று. இன்றைக்கும் புதியது. ஒரு மாறுதலுக்கு, அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் பெண் பார்க்கப் போய், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனுக்குப் பிடித்து விட, எப்படியாவது, அந்தப் பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து, குயுக்தியாகத் திட்டம் தீட்டி, அந்தப் பெண்ணை மணம் முடித்து தம்பியின் வாழ்வை திசை திருப்பி விடுவார்.
இந்தப் பாடல், அப்படி, சகோதரர்கள் பெண் பார்த்து விட்டு வந்தவுடன், பேசிக் கலந்து கொள்வதற்கு பதிலாக பாடுவதாக அமைந்த பாடல். படம் பார்க்கின்ற மக்களுக்கு, சகோதரர்கள் இருவரும் இப்படிப் பெண் பார்த்து விட்டு வந்த அனுபவத்தையும், அந்தப் பெண்ணைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொல்வதை, வித்தியாசமான யுக்தியின் மூலம் வடிவமைத்த, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா? (எப்போதும் போல், பேசிக் கொள்வதாக அமைத்திருந்தால், மக்களுக்கு அது பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்காது.)
அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை சரியாக உள்வாங்கி, அற்புதமாக கனகச்சிதமாக எழுதிக் கொடுத்த கவியரசு கண்ணதாசனைப் பாராட்டுவதா?
அது மெட்டாகவே இருந்த போதிலும் (அதுவும் இருவரும் மாறி மாறி சொல்லிக் (பாடிக்) கொண்டே போக வேண்டும்), சங்கீதத்தின் தன்மையைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல், மெட்டின் இலக்கணமாக ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற நடையைக் கடைசி வரையிலும் maintain செய்து அந்தப் பாடலை சுவையாக இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்டுவதா?
இயக்குனரும், பாடலாசிரியரும், இசை அமைத்தவரும் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொண்டு, அந்தப் அந்தப் பாடலில் நடித்த நடிகர்களுக்கேற்றவாறு அற்புதமாகப் பாடிய பாடகர்கள் டி.எம்.எஸ் / பி.பி.எஸ்ஸைப் பாராட்டுவதா?
மேற்க்கூறிய கலைஞர்களின் படைப்பின் தன்மையை மிகச்சரியாக உள்வாங்கி மிக அற்புதமாக நடித்துக் கொடுத்த நடிகர் திலகம் மற்றும் பாலாஜியைப் பாராட்டுவதா?
பாடல், ஆரம்பத்தில் ஒரு நீச்சல் குளத்தில் இருவரும் பாடுவது போல் துவங்கும். நடிகர் திலகம், பாலாஜி இருவரில், பாலாஜிக்கு மட்டுமே அவர் பார்த்த பெண் (சாவித்திரி அவர்கள்) பிடித்திருந்ததால், அவர் பாடும்போது, அதாவது வர்ணிக்கும்போது, அவர் காதல் வயப்பட்டவராகக் காட்சியளித்து, நடித்திருப்பார். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அந்த உணர்வு எதுவும் இல்லை என்பதால், அந்தக் காதல் உணர்வை இம்மி கூடக் காட்டாமல், அவருக்கே உரிய ஸ்டைலில் குழந்தைத் தனத்துடன் கூடிய ஸ்டைலில் - நடித்திருப்பார். (அந்த பாத்திரமே ஒரு வகையான வெள்ளந்தியான முரட்டுத்தனமான பாத்திரமல்லவா?) ஆரம்பத்தில், அந்த மெட்டின் லயத்திற்கேற்ப, நடிகர் திலகம் ஒவ்வொரு கையாக தண்ணீரில் தட்டித் தட்டி ஸ்டைலாக நீந்தியபடியே துவங்க, பாலாஜி நிதானமாகத் தொடருவார்.
பல்லவி முடிந்தவுடன், இருவரும் தண்ணீருக்குள் முங்கும் போது, நடிகர் திலகம் முங்குவது, ஒரு குழந்தையின் குதூகலம் மற்றும் வெகுளித்தனத்துக்கு ஒப்பாகும்.
நீச்சல் முடிந்து வெளியில் வரும் போது, பாலாஜி கைத்துண்டால் அழகாக முதுகைத் துடைத்தவாறே பாடுவது கொள்ளை அழகு. முதல் சரணம் முடியும் தருவாயில், நடிகர் திலகம் கையை ஸ்டைலாக உயர்த்தி "விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ!" எனும் போது, இன்னமும் திரை அரங்குகள் அலறிக் கொண்டிருக்கிறது!! உடனே, அனு பல்லவி துவங்கும் போது, பாலாஜி பாடப் பாட, நடிகர் திலகம் அவரை ஸ்டைலாக கவனித்து மறு மொழி கொடுப்பது அதியற்புதம்!!!
இரண்டாவது சரணம் துவங்குவதற்கு முன் வரும் அந்த இசையிலும், நடிகர் திலகம் குழந்தை போல் அந்த திண்டுகளில் மேல் தாவி ஏறி மறுபடி கீழே குதிப்பது - ஒரு குழந்தையின் குதூகலம் அதில் மறுபடியும் கொப்பளிக்கும்.
இரண்டாவது சரணத்தில் "என் விழியில் நீ இருந்தால்" எனும் போது, அவரது அகன்ற (பேசும்) விழிகளும் நடிக்குமே!
இந்தப் பாடலில், நடிகர் திலகத்துடன் சிறந்து, பாலாஜி அவர்களும் இயல்பாக நடித்து, பாடலுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்திருப்பார்.
தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 27th May 2011 at 05:23 PM.
-
27th May 2011 05:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks