-
11th June 2011, 12:00 AM
#11
கிருஷ்ணாஜி,
வெகு நாள் கழித்து வந்தாலும் சுவையான மலரும் நினைவுகளோடு வந்ததற்கு இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் 22-12-1973 அன்று சனிக்கிழமைதான். சில வாரங்களாக விகடனில் மூங்கில் மூச்சு என்ற பெயரில் ஒரு தொடர் வெளியாகிறது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த சுகா என்பவர் [இவர் காங்கிரஸ் பேச்சாளார் தமிழ் கடல் நெல்லை கண்ணனின் மகன்] தன் நெல்லை அனுபவங்களை அதிலும் குறிப்பாக தியேட்டர் அனுபவங்களை எழுதி வருகிறார். இந்த வாரம் கூட நெல்லையில் வெளியான பழைய படங்களைப் பற்றியும் அந்த ஊர் மனிதர்கள் எப்படி அந்தப் படங்களை துரத்தி துரத்தி பார்த்தார்கள் என்பதை சுவைப்பட எழுதியிருக்கிறார். அதை படித்து விட்டு இங்கே வந்தால் நீங்கள் பார்வதி தியேட்டர் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை என் அனுபவம் வேறு வகையானது. படம் வெளியான நாள் டிசம்பர் 22 அன்றுதான் பள்ளிக்கூடத்தில் அரை வருட தேர்வுகள் முடியும் நாள். எனவே ஓபனிங் ஷோ போக முடியவில்லை. மதுரையில் சென்ட்ரலில் ரிலீஸ். சாதாரணமாகவே அனைத்து நடிகர் திலகத்தின் படங்களையும் ஓபனிங் ஷோ பார்த்து விடக் கூடிய அன்று கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்தப் படத்தையும் ஓபனிங் ஷோ பார்த்து விட்டான். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் [தேவி சித்ரம்] வேறு அவனது நண்பனின் உறவினர் என்பதால் வேலை எளிதானது. மீண்டும் அன்றிரவு காட்சியும் வேறு நண்பர்களுடன் போய் விட்டான். எனக்கு பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவல். படத்திற்கு நல்ல ரிப்போர்ட் என்பதோடு மட்டுமல்லாமல் தியேட்டர் எங்கள் வீட்டிற்கு அருகாமையிலும் என்பதால் அடிக்கடி தியேட்டர் வாசலில் போய் பார்க்க பார்க்க ஆவல் அதிகரித்துக் கொண்டே போனது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் சோதனையாக பார்க்க முடியவில்லை. திங்களன்று போகலாம் என்று வீட்டில் ஞாயிறு அன்றே அனுமதி வாங்கியாகி விட்டது.
திங்களன்று காலை அதே நினைவோடு எழுந்து மத்தியான காட்சிக்கு காலையிலே மானசீகமாக தயாராகி கொண்டிருக்கும் போது வானொலி செய்தி வருகிறது. நோய்வாய்ப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியார் ஈ.வெ.ரா. காலமானார் என்று [24-12-1973 ]. ஐயோ இன்று படத்திற்கு போக முடியாது போலிருக்கே என்று ஒரே கவலை, வருத்தம். தியேட்டர் பக்கம் சென்று பார்த்தால், காட்சிகள் இருக்குமா என்பதைப் பற்றிய அறிவிப்பு ஒன்றுமில்லை. காலையிலிருந்து மதியம் ஒரு மணி வரை எத்தனை முறை போய் தியேட்டர் பக்கம் போய் வந்தேன் என்பதற்கு கணக்கே இல்லை.
ஒரு மணிக்கு மேல் அம்மாவை கன்வின்ஸ் செய்து அவர்களையும் அழைத்துக் கொண்டு போனேன். படம் வெளியான முதல் ஒரு சில வாரங்களில் சென்ட்ரலில் பெண்களை பின் கேட் வழியாகவே உள்ளே அனுமதிப்பார்கள். அதன் வழியே உள்ளே சென்றால் நல்ல கூட்டம். கேட் கீப்பரிடம் ஷோ இருக்கிறதா என்று கேட்ட போது இருக்கிறது என்று பதில் வந்தாலும் மனதில் ஒரு கலக்கம் .தீடிரென்று காட்சி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வருமோ என்ற பயம். டிக்கெட் வாங்கி உள்ளே சென்று உட்கார்ந்த பிறகும் பயம் விலகவில்லை. படம் தொடங்கி சற்று நேரம் வரை அதே நினைப்பு. பிறகு படத்தில் லயித்து விட்டேன், இடைவேளை வருகிறது. மீண்டும் அதே உணர்வு. அம்மா வேறு முன்பு நடந்த ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் [ இப்படிதான் தேவியில படம் பார்த்துக் கொண்டிருந்தோம். நேரு போய் விட்டார் என்று நியூஸ் வந்தது. படத்தை நிறுத்திட்டான்]. இடைவேளை சீக்கிரம் முடியாதா என்று ஒரு பதைபதைப்பு. இடைவேளை முடிந்ததும் படம் ஆரம்பித்தது, தொடர்ந்தது, நிறைவடைந்தது. படத்தை ரசித்தேன் என்றாலும் இந்த டென்ஷன் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்திருந்ததால் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் நண்பர்களுடன் சென்று படத்தை பார்த்தேன் ரசித்தேன்.
உங்கள் அனுபவத்தை படித்தவுடன் என் அனுபவம் நினைவுக்கு வந்தது. மீண்டும் நன்றி.
அன்புடன்
ஜோ போன்ற பெரியாரிஸ்ட்களுக்கு sorry.
-
11th June 2011 12:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks