சுவாமி/ராகவேந்தர் சார்,

ஒரு யாத்ரா மொழி 1997 ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியானதாக நினைவு. ஒரு யாத்ரா மொழி திரைப்படத்தை பொறுத்தவரை முதலில் வேறு கதையை படமாக்குவதாக இருந்தது. 1995-ல் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்க, தந்தை கதாபாத்திரம் ஒரு நோயினால் தாக்கப்பட, அது குணமாக கூடிய வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் தந்தை மிகுந்த உடல் வேதனையை அனுபவிக்க, கருணை கொலை என்ற தீர்வு மகன் முன்னால் வைக்கப்பட, தந்தை மீது உயிரையே வைத்திருக்க கூடிய மகன் அனுபவிக்க கூடிய மன வேதனையை மையமாக கொண்ட படமாக உருவாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஹெவி சப்ஜெக்ட்-ஐ ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் அந்த கதை ட்ராப் செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக பிரியதர்சன் எழுதிய இந்த கதை தேர்வு செய்யப்பட்டு அதை பிரதாப் போத்தன் இயக்கினார். 1996 ஜனவரியில் பொள்ளாச்சி பகுதியில் வைத்து படப்பிடிப்பு தொடங்கிய இந்த படம் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன் அவர்கள் [இவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். contractor ஆக வரும் நடிகர் திலகத்திடம் தனது ஆட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என தகராறு செய்து அடி வாங்கி கொண்டு போகும் யூனியன் தலைவராக வருவார்] சற்று பொருளாதார சிரம தசையில் இருந்ததால் படப்பிடிப்பு இடை இடையில் நின்று போய் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. உடல் நலம் ஒத்துழைக்காத அந்த காலக் கட்டத்திலும் கூட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று தகவல் சொல்லியவுடன் உடனே வந்து நடிகர் திலகம் நடித்துக் கொடுத்ததை இப்போதும் மேனனும் லாலும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். [மாப்பிளை, நீங்க பிஸி ஆர்டிஸ்ட். உங்களுக்கு கால்ஷீட் கிளாஷ் வந்துடக் கூடாது. நான் கரெக்டாக வந்திர்றேன் என்று லாலிடம் சொல்வாரம் நடிகர் திலகம்].

இன்னொரு குறிப்பிட்ட தக்க விஷயம் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் நடிகர் திலகன் அவர்கள். தன்மானத்தை பெரிதாக மதிக்கும் திலகன், நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பதற்காக ஒரே ஒரே காட்சி என்ற போதிலும் தானே வலிய சென்று தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்தில் நடித்ததை இப்போதும் பெருமையுடன் சொல்வார். அது போன்றே நெடுமுடி வேணு அவர்களும் இந்த படத்தில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்ததை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.

இனி மீண்டும் ரிலீஸ் தேதிக்கு வருவோம். [அப்போது நான் கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்] அந்த வருடம் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் வந்ததாக நினைவு. அந்த நேரத்தில் மோகன்லாலின் மற்றொரு படமான சந்திரலேகா வெளியாவதாக இருந்தது. மம்மூட்டி நடித்த களியூஞ்சால் [விளையாட்டு ஊஞ்சல் என்று தமிழில் மேலோட்டமாக சொல்லலாம்] மற்றும் ஜெயராம், சுரேஷ் கோபி போன்றவர்களின் படங்களும் வெளியாவதாக இருந்ததால் திரை அரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே திரையிடப்பட்டது இந்தப் படம். விளம்பரமின்றி, பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் மலையாள திரைப்பட உலகம் சார்பில் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு ஒரு பெரிய பாராட்டு விழா அதே ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி [24-08-1997] அன்று திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் நடைபெற்றது. மலையாள திரையுலகமே திரண்டு வந்து சிறப்பித்த விழா அது.[தமிழ் திரையுலகமோ அன்றைய தமிழக அரசோ செய்ய தவறியதை அவர்கள் அழகாய் செய்தார்கள்].

அன்புடன்