-
30th August 2011, 02:08 PM
#11
Senior Member
Diamond Hubber
தொடர்ச்சியாக...
தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?
N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.
"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,
"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...
காந்தி நாலணா..
நேருஜி நாலணா...
காமராஜி நாலணா..ன்னான்
அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...
என்று கலாய்க்கும் போது,
கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).
அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,
"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை. "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...
மற்றொரு சூப்பரான காட்சி...
நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"..என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?". என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.
மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.
பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,
கபாலி 'உயர்ந்த மனிதன்'
கபாலி 'கை கொடுத்த தெய்வம்'
கபாலி 'தெய்வப் பிறவி'
என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).
சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,
'உயர்ந்த மனிதன்' சிவாஜி
'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி
'தெய்வப் பிறவி' சிவாஜி
என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.
(நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 31st August 2011 at 12:14 PM.
-
30th August 2011 02:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks