நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை டால்பி சவுண்ட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (பிப்.21) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்ணன் படத்திற்கு இசையமைத்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பாடல் பாடிய பி.சுசீலா, பாட்கர் பி.பி.சீனிவாஸ், படத்தின் இயக்குநர் பந்துலு சார்பாக அவருடைய குடும்பத்தார். படத்தில் நடித்த நடிகர்கள் சண்முகசுந்தரம், மாஸ்ட்டர் ஸ்ரீதர், வி.எஸ்.ராகவன் இயக்குநர் குகுநாதன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் இயக்குநர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கர்ணன் படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம் பேசுகையில், “லண்டன் நாட்டில் ஒரு இடத்தில் உலகத்தில் உள்ள பிரபலமானவர்கள் அனைவருக்கும் மெழுகு சிலை இருக்கிறது. நம்ம ஊரு அமிதாப் பச்சானுக்கு கூட இருக்கிறது. அவர் நல்லவர்தான். நான் என்ன சொல்றனே, அந்த இடத்தில நம்ம சிவாஜி கணேசனுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும். அதற்காக நம்ம தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் யாராவது முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு என்ன செலவு ஆகிறதோ அதற்குண்டான செலவில் நான் ரூ.1 லட்சத்தை கொடுக்கிறேன்.” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சேரன், “அமிதாப் பச்சனுக்கு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் அவருக்கு ஒரு முகம் தான், ஒரு பாவனை தான். ஆனால், சிவாஜி சாருக்கு பல முகம், பல பாவனைகள். சிலை செய்பவர்கூட அவருடைய பாவனையை சரியாக செய்ய முடியாது அதனால்தான் அவருக்கு இதுவரை சிலை வைக்க வில்லை.
சிவாஜி சார் கலைக்காகவே வாழ்ந்த ஒரு சிறந்த நடிகர். அதனால்தான் அவரால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. வாழ்க்கையில் நடிக்க தெரியாத நடிகர் அவர். போலியாக பேச தெரியாதவர், அதனால்தான் அவர் அரசியலுக்கு வந்தபோது அவரை தஞ்சாவூரில் தோற்கடித்தீர்கள் நீங்கள். நான் ஒன்றை இங்கு கேட்கிறேன். ரீமேக் என்ற பெயரில் பில்லா, மாப்பிள்ளை என்று எந்த எந்த படத்தையோ மீண்டும் எடுக்கிறீர்களே, சிவாஜி சார் நடித்த ஒரு படத்தை ரீமேக் செய்து பாருங்களே பார்க்கலாம். அது முடியாது எந்த நடிகராலும், சிவாஜி போன்று நடிக்க முடியாது.
அதேபோல நான் இங்கே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிவாஜி சார் படத்தலைப்புகளை பிற படங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவது ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.” என்று ஆவேசமாகப் பேசினார்.
கர்ணன் படத்தின் உலக உரிமையை ராஜ் தொலைக்காட்சியிடம் இருந்து பெற்று திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாந்தி சொக்கலிங்கம் மறு உருவாக்கம் செய்து வெளியிடுகிறார்.
Bookmarks