வசந்த மாளிகை கற்றுக் கொடுக்கும் பாடம்.
கர்ணனின் அசுர வெற்றிக்குப் பின் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த, அனைத்து அம்சங்களும் அமைந்த, அற்புதமான 'திருவிளையாடல்' தித்திக்கும் விருந்தாய் நமக்கு கிடைக்க மாட்டாமல் போனது. சரியான திட்டமிடாமை, விநியோக உரிமை சிக்கல்கள், வழக்கு என்ற பல்வேறு சோதனைகளுக்குள்ளாகி குடத்திலிட்ட விளக்காய் திருவிளையாடல் ஒளி குன்றியது. சரி என்று நாம் ஏற்றுக்கொண்ட பின்பு அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்படியாக வசந்தமாளிகை வெளியீடு விளம்பரம் வந்தது. விளம்பரம் வந்து படத்திற்கான ஆக்கப் பணிகள் நடைபெற்று, பின் சற்று பின்தங்கி, சென்சார் போர்டு சென்று பிறகு திரைக்கு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தங்கள் அபிமான வசந்த மாளிகையை வரவேற்க தயாரானார்கள். அதற்கு கால அவகாசம் போதுமானதாகவே இருந்தது. இந்த நேரங்களில் ரசிகர்கள் வசந்த மாளிகைக்காக தன் முழு நேரத்தையும் செலவு செய்ய ஆரம்பித்தார்கள். வசந்தமாளிகையை வரவேற்க டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள், போஸ்ட்டர்கள், மாலைகள், தோரணங்கள், அன்னதானம், திரையரங்கு அலங்காரங்கள், மலர் வெளியீடுகள், சுவர் விளம்பரங்கள் என்று தங்கள் சொந்த வீட்டு விசேஷங்களைப் போல செலவுகள் செய்து ரெடியானார்கள். நம் ரசிகர்களின் நிலைமை நாம் நன்கறிந்ததே! எந்த பக்க பலமும் இல்லாமல் நடிகர் திலகம் என்ற அந்த அற்புத மந்திர சொல்லுக்கு மயங்கி நம் தெய்வத்தை 'ஆனந்த்' தமாக தரிசிக்க தரித்திரத்திலும் சொந்த செலவுகள் செய்தார்கள். சிலர் வீட்டில் உள்ள நகைகளைக் கூட அடமானம் வைத்து செலவு செய்தார்கள். சிலர் கடன் உடன் பட்டு வசந்த மாளிகைக்கு தோரணம் அமைத்தார்கள். சிலர் வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்தார்கள். ஒவ்வொரு ரசிகரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு பணமாகவோ, பொருளாகவோ ஏதோவொரு வகையில் தங்களால் முடிந்த contribution ஐ தந்தார்கள். சிலர் வீட்டுச் செலவுகளைக் கூட சுருக்கி சுயதேவைகளுக்காக வைத்திருந்த தொகைகளைக்கூட செலவு செய்தார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு நடிகர் திலகத்தின் மீது சுயநலமில்லாத விசுவாசம். அன்பு... வெறி... அதுமட்டுமல்ல... கர்ணனின் மிகப்பெரிய வெற்றி அவர்களின் மேலான உற்சாகத்திற்கு முழு காரணமாய் அமைந்தது.
ஆனால் நடந்தது என்ன?
சற்று பின்னோக்கிப் பார்ப்போம். நடிகர் திலகம் ஒர் அட்சய பாத்திரம். எடுக்க எடுக்கக் குறையாமல் தந்து கொண்டே இருக்கும் பாத்திரம். அன்று தொட்டு இன்று வரை அவர் படங்களினால் லாபங்களைக் குவித்தவர் பலர். இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் மனசாட்சிக்கு விரோதமாய் பலர் உண்மையை மறைத்ததுண்டு... அதை விட்டு விடுவோம்.
நடிகர் திலகத்தின் படங்கள் சிறிது காலங்களாக அவ்வளவாக வெளிவராத நிலையில் பல ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'புதிய பறவை' புத்தம் புதிய காப்பியாக சென்னை சாந்தியில் திரையிடப்பட்டு அமோக வெற்றி அடைந்தது. வசூலில் பிரளயம் செய்தது. ஆனால் சென்னையில் மட்டுமே வெளியானது. சென்னை காணாத அளப்ப்பரையைக் கண்டது. நடிகர் திலகத்தின் அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது புதிய பறவை.
சாந்தியில் ராஜபாரட் ரங்கதுரை, திருவருட்செல்வர், கௌரவம், மன்னவன் வந்தானடி என்று தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் வெளியிடப்பட்டு களைகட்ட ஆரம்பித்தது. இத்தனைக்கும் பட பிரிண்ட்டுகள் சுமார் ரகம்தான். சாந்தியில் மட்டுமல்லாது சென்னையின் பிற அரங்கங்களிலும் சொர்க்கம், தங்கப்பதக்கம் என்று படங்கள் வெளியாயின.
பட பிரிண்ட்டுகள் சுமாராக இருந்தும் கூட இவையெல்லாம் விநியோகஸ்தர்களுக்கு கணிசமான லாபத்தை ஈட்டித் தந்தன. இந்தத் தொடர் வெற்றிகள் கர்ணன் என்ற அற்புத காவியத்தை சொக்கலிங்கம் அவர்கள் டிஜிட்டலில் Restoration செய்யுமளவிற்கு காரணிகளாய் அமைந்தது.
ஆயிற்று... கர்ணன் வெளிவந்து ஒரு புது சரித்திரத்தையே படைத்தது. சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் வழக்கம் போல நடிகர் திலகத்தால் தொடங்கப்பட்டது. பழைய படங்களை டிஜிட்டலில் Restoration செய்தால் பணம் பார்த்து விடலாம் என்ற எண்ணம் சிலர் மனதில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது. அதில் தவறேதும் இல்லை.. இது வியாபாரம். யாரும் எதையும் செய்யலாம். நடிகர் திலகத்தின் மதிப்பு, சந்தையில் அவரது படங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆயிரங்கள் என்று சொல்லிக் கொண்டு வியாபாரம் பேசப்பட்ட படங்கள் இப்போது லட்சங்களுக்கு எகிற ஆரம்பித்தன.
கர்ணனை சொக்கலிங்கம் Restoration செய்தார் என்றால் அவர் உழைப்பு அசாத்தியமானது. சரியான திட்டமிடுதலை அவர் மேற்கொண்டார். அதற்காக இரவு பகல் என்று பாராமல் உழைத்தார். அனைத்து ரசிகர்களின் கருத்துக்களை அவர் முதலில் கேட்டுக் கொண்டார். அவர் யாரையும் விட்டு வைக்கவில்லை. தன் வாழ்நாள் கனவுப்படமாக கர்ணனை கையில் எடுத்துக் கொண்டார். Restoration க்கு மும்பை வரை அலையாய் அலைந்தார். குவாலிட்டி முக்கியம் என்பதில் உறுதியாய் இருந்தார். Restoration செய்தவரை பலருக்கும் படத்தைப் போட்டுக் காட்டி நிறைகுறைகளை கேட்டு அறிந்து கொண்டார். முடிந்தவரை குறைகளை நிவர்த்தியும் செய்தார்.
படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையே உண்டாக்கி விட்டது. வியாபார நோக்கத்திற்காக என்று மட்டுமல்லாமல் ஒரு லட்சிய வெறியோடு இன்றைய சமூகத்திற்கு, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு படத்தை எவ்வாறு சேர்க்க வேண்டுமோ அவ்வாறு கொண்டு சேர்த்தார் சொக்கலிங்கம். அதில் மாபெரும் வெற்றியுமைடைந்தார். சாதாரண விநியோகஸ்தர் சொக்கலிங்கம் 'கர்ணன்' சொக்கலிங்கமானார். நண்டு சிண்டெல்லாம் கர்ணன் சொக்கலிங்கம் என்று கூறுமளவிற்கு பெரும் பெயரை, புகழை அவர் பட்டி தொட்டியெங்கும் அடைந்தார். ஏன்? செய்த தொழிலில் ஒரு முழு ஈடுபாடு...ஒரு perfection, dedication அவரிடம் நிச்சயமாக இருந்தது.
அதே போல ஓப்பனிங். கர்ணன் Restoration செய்து முடிந்த பிறகு பிரம்மாணடமான டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது படத்தின் தரம் நன்றாக இருந்தது ஓரளவிற்கு எல்லோராலும் உணரப்பட்டு விட்டது. நிறை குறைகள் அப்போதே தெரிய வாய்ப்பிருந்தது. திரையுலக ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கர்ணனை சிறப்பாக promote செய்தார்கள். ஆனால் இதற்கு அப்படி எதுவும் நடக்க வில்லையே... atleast டிரெய்லராவது வெளியிட்டிருந்தால் நிலைமை முன்னமேயே தெரிந்து நிலைமையை ஓரளவிற்காகவாவது சரி செய்திருக்கலாமே! உஷாராய் இருந்திருக்கலாமே!
ஆனால் வசந்த மாளிகையில் நடந்தது என்ன? இதற்கும் கர்ணனுக்குப் பிறகு வெளியான படம் இது. (முதல் வெளியீட்டிலும் சரி...மறு வெளியீட்டிலும் சரி)... கர்ணனே சிறந்த முறையில் restore செய்யப்பட்டிருக்கும் போது வசந்தமாளிகை அற்புதமாக வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்றால் துரதிருஷ்டவசமாக அது நடக்காமல் போனது.
இது யாருடைய தவறு?
படத்தின் மீது தவறா?... காலகாலமாய் கற்பகவிருட்சம் போல கொட்டிக் கொடுத்த படம். வசூலில் ஒவ்வொரு வெளியீடுகளிலும் பிரளயம் செய்து காட்டிய படம். எனவே படத்தின் மீது குற்றமில்லை.
சரி... நடிகர் திலகத்தின் மீது குற்றமா?...நினைக்கவே முடியாது... ஏற்றிவிட்ட ஏணியை யாரும் குற்றம் சொல்ல முடியுமா... அந்த வள்ளலுக்கு பிறரை வாழச் செய்து பார்த்துதான் பழக்கம்....அவர்தான் மூலாதாரம், அஸ்திவாரம் எல்லாம்.
சரி... ரசிகர்கள் மீது குற்றமா?... கந்தல் பிரிண்ட்டாக இருந்தாலும் பலதடவை பார்த்து தியேட்டர்காரர்களின் கல்லாவை ரொப்புவோர்கள் நம் ஆட்கள். நான் முதலில் குறிப்பிட்டவாறு எந்த ஆதரவும் இன்றி எவ்வளவு வறுமையில் வாடினாலும் நடிகர் திலகத்திற்காக தன் சொந்த பணத்தை செலவு செய்து அவரை அகத்திலும், புறத்திலும் வைத்து அழகு பார்ப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீதும் குற்றம் இல்லை...
சரி... பொது மக்களின் குற்றமா! அதுவும் இருக்க முடியாது... ரசிகர்கள் மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணமாகி விட முடியாது. நடிகர் திலகம் ஆதிகாலம் தொட்டு ஒவ்வொரு வருடங்களிலும் சராசரி ஐந்து அல்லது அதற்கு மேல் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பொது மக்களும் அவற்றை சலிக்காமல் கண்டு களித்து அவற்றில் பெரும்பான்மையானவற்றை வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்கள். அது மட்டுமல்லாமல் கிராமப் புறத்திலிருந்து நகர்ப்புறங்கள் வரையிலும் பாகுபாடு, வேறுபாடின்றி மறு வெளியீடு நடிகர் திலகத்தின் படங்களையும் வசூல் மழை பொழிய வைத்த பெருமைக்குரியவர்கள். கர்ணனுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை மறக்க முடியுமா?... நல்ல விஷயங்கள் எது நடந்தாலும் அதுவும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஏகோபித்த வரவேற்பை அளிப்பவர்கள் அவர்கள்.. அவர்கள் மீதும் குற்றமில்லை.
சரி திரையரங்கு உரிமையாளர்கள் மேல் குற்றமா? எப்படி இருக்க முடியும்?... நடிகர் திலகத்தின் படங்களுக்கு முதலிடம் கொடுத்து ஓட்டுபவர்கள் அவர்கள்தானே! ரசிகர்களின் அன்பு எல்லைமீறும் போது கூட பொறுமை காத்து நம் மன்னவர் class audience ஐ பெருமளவு பெற்றிருப்பதை மனதில் வைத்து மல்டி காம்ப்ளெக்ஸ் திரையரங்குகளை உற்சாகத்துடன் அளித்து தாங்களும் வாழ்ந்து மற்றவர்களையும் களிப்படைய செய்தவர்கள்
அவர்கள்தானே!
சரி... யார் மீது குற்றம் சொல்வது?
'வசந்த மாளிகை' நம்மை சற்று வாடிப்போகச் செய்ததற்கு என்னென்ன காரணங்கள்?
1.முதலில் மதர் பிரிண்ட் என்பதை நன்றாகத் தேடி ஆராய்ந்து தெரிவு செய்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானது.
2. Restoration செய்வதா வேண்டாமா என்று தெளிவாக முடிவெடுத்திருக்க வேண்டும். புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் கர்ணனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருக்க வேண்டாமே!
3. அருமை நண்பர் ஜோ அவர்கள் சொன்னது போல சினிமாஸ்கோப்போ அல்லது டிஜிட்டல் version ஒ தான் வேண்டும் என்று யாரும் அடம் பிடிக்க வில்லை. ஜாங்கிரி நன்றாக இருப்பதனால் தங்கத்தட்டில்தான் வைத்து திங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சாதாரண இலையிலும் வைத்து சாப்பிடலாம். அதே இன்பம் அதே சுவை தான் கிடைக்கும். இங்கு அப்படியல்ல... ஜாங்கிரியை கெட வைத்து பந்தி பரிமாரியிருக்கிறார்கள். 35 mm மிலேயே புத்தம் புதிய பாலியெஸ்டர் ப்ரிண்ட்டாக வெளியிட்டிருக்கலாம். கண்டிப்பாக வெற்றி மகுடம் தரித்திருக்கும்.
4. அப்படியே இல்லாமல் நான் Restoration செய்துதான் வெளியிடுவேன் என்று தீர்மானித்திருந்தால் அதற்கான முழு முயற்சில் முழுமனதாக ஈடுபட்டிருக்க வேண்டும். (உதாரணம் சொக்கலிங்கம் அவர்கள்) அப்படி எதுவும் நடந்ததாகவே தெரியவில்லை. யார் யாரை வைத்து Restoration செய்தார்கள்... பங்கு கொண்ட technical team எது?... சென்னையில் செய்தார்களா அல்லது மும்பை போன்ற வெளியிடங்களில் செய்தார்களா? (திருவிளையாடல் லண்டனில் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியுமே!)... இசைச் சேர்ப்பு அல்லது கோர்ப்பு நடந்ததா?...ஆடியோ seperation செய்யப்பட்டதா?... ஆடியோ டிஜிட்டல் செய்யப்பட்டதா?
5. சொக்கலிங்கம் அவர்கள் கர்ணனுக்காக கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாய் செலவு செய்து டிஜிட்டலாக்கினார் என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையே. ஒரு சில லட்சங்கள் கூடவோ குறைச்சலாகவோ இருந்திருக்கலாம். ஆனால் பெருந்தொகை செலவிடப்பட்டது உண்மை. அப்படி ஒரு பெருந்தொகை இந்த காஸ்ட்லியான படத்திற்கு செலவழிக்கப்பட்டதா? அதுவும் இந்தப் படத்திற்கு ரிச்னெஸ் அவசியம் தேவை.
6. கர்ணன் டிஜிட்டல் செய்ய ஏறக்குறைய ஒரு வருடங்கள் எடுத்துக் கொள்ளபப்பட்டது. ஒவ்வொரு பிரேமாக சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால் photoshop இல் மெருகேற்றப்பட்டு இசைச் சேர்ப்புகள் மிகத் துல்லியமாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அதன் தரம் மெருகு குலையாமல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் வசந்த மாளிகைக்கு போதிய அவகாச நேரங்கள் எடுத்துக் கொண்டார்களா? ஏதோ அவசர கோலம் அள்ளித் தெளித்தாற் போன்று வேலைகள் நடந்திருப்பதாகத்தான் தெரிகிறது. அதுவும் யாருக்கும் வெளியே தெரியாமலேயே.
7. Restore செய்த வகையில் முக்கியமானவர்களுக்கு, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு, திரையரங்கு உரிமையாளர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டதா? அவர்களின் திருப்தியான ஒப்புதல் கிடைத்ததா? அப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்து மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியும்.
8. எல்லாமே ரகசியமாத்தான் நடந்து அரங்கேறின. தங்களுடைய சுய லாபம் மட்டுமல்ல பல பேருடைய கௌரவம் குறிப்பாக லட்சக்கணக்கான ரசிகர்களின் கௌரவம் இதில் பாதிக்கப்படுமே என்று எண்ணிப் பார்க்கப்பட்டதா?.. ஏனென்றால் என்னதான் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலும், படத்தை பொது மக்களிடம் மிகப் பெரிய அளவில் அதிலும் குறிப்பாக வசந்த மாளிகையை கொண்டு சேர்த்ததில் ரசிகர்களுக்கு மிகப் பெரும் பங்கு இருந்தது. பலவித, அதுவும் ஆளுயர பேனர்கள், கட்-அவுட்டுகள், பந்தல்கள், நாதஸ்வரம், அன்னதானம், நற்பணிகள், அது... இதுவென்று சொந்தக் காசை இழந்து பரிதாபமாய் நிர்க்கதியாய் நிற்கும் இவர்களுக்கு யார் ஆறுதல்? (எந்த விதமான பின்புலமும் இல்லாமல் நடிகர் திலகமே உயிர் மூச்செனக் கொண்ட இந்த அப்பாவிகளுக்கு)
9. அதைக் கூட ரசிகன் பெரிதாக எண்ண மாட்டான். காசு இன்று போகும்... நாளை வரும்... ஆனால் கர்ணனை மிஞ்சும் என்று நம்பிக்கை வைத்தானே... மனக்கோட்டை கட்டினானே! அந்த நம்பிக்கையில் மண் அள்ளிக் கொட்டியதற்கு யார் காரணம்? காலம் முழுதும் அண்ணன் அண்ணன் என உயிரை விடுகிறானே... அவனுடைய கள்ளமில்லா அன்புக்கு யார் பதில் சொல்வது?
10. தவறேதும் செய்யாமல், இன்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறானே ரசிகன்! இவனுக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்? எப்போது எப்போது என்று எள்ளி நகையாடக் காத்திருக்கும் சிலர் விஷத்தைக் கக்க காத்திருப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்த காரணகர்த்தா யார்?
இத்தனை கேள்விகளும் வாசுதேவன் மனதில் மட்டுமல்ல... அத்துணை பேர் நெஞ்சிலும் தற்சமயம் குடிகொண்டிருக்கும் கேள்விகள். ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இனி நாம்தான் உஷாராக வேண்டும்.
வேதனையுடன்
வாசுதேவன் என்ற சாதாரண ரசிகன்.