நடிகர் திலகம் - உலகெங்கும் உள்ள கோடானு கோடி தமிழர்கள் மட்டுமல்லாது, ரசிப்புத்தன்மை உள்ள அனைத்து நெஞ்சங்களிலும், நீக்கமற நிறைந்து விட்ட இந்த யுகக் கலைஞன் மறைந்து பத்து ஆண்டுகள் நிறைந்து விட்ட இந்த நிலையில் - அவரது நினைவைப் போற்றும் விதமாக இந்தக் கட்டுரையை மீண்டும் தொடர வாய்ப்பளித்த எல்லாம் வல்ல கடவுளுக்கும் - நடிப்புக் கடவுளுக்கும் நன்றி கூறி - தொடர்கிறேன்.
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)
ஏற்கனவே, "நலந்தானா", "பொன்னொன்று கண்டேன்" மற்றும் "மலர்ந்தும் மலராத" ஆகிய மூன்று பாடல்களைப் பற்றி என்னுடைய பார்வையிலிருந்து பதிந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக, ஏனைய ஏழு பாடல்களில், ஒவ்வொன்றாக மறுபடியும் பதியும் பேறு, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் கிடைத்திருக்கிறது.
4. "யாரடி நீ மோகினி" படம்: உத்தமபுத்திரன்; பாடல்: கு.மா.பாலசுப்பிரமணியம்; பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், ஜிக்கி, ஜமுனாராணி மற்றும் குழுவினர்; இசையமைப்பு:- ஜி.ராமநாதன்; இயக்கம் - டி. பிரகாஷ் ராவ்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஹெலன் மற்றும் குழுவினர்.
இந்தப் பாடலை நினைத்த மாத்திரத்தில், முப்பது வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகம் தூர்தர்ஷனில் அளித்த மலரும் நினைவுகள் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அப்போதிருந்த சில இளம் நடிகர்களில் ஆரம்பித்து, பல பழைய/புதிய இயக்குனர்களும், நடிகர்களும் அவரைப் பேட்டி காணுவதாகவும், அவருடைய படங்களில் இருந்து சிறந்த காட்சிகள் வருவதாகவும் அமைந்த நிகழ்ச்சி அது. அதில், திடீரென்று கமல் அவர்கள் அன்னை இல்லத்திற்கு நுழைந்து, நடிகர் திலகத்தை பேட்டி காணுவதாக ஒரு எபிசோட் வரும். அவர் நுழைந்தவுடன், அவரை நலம் விசாரித்தவுடன், அது எப்படி நீங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னரே எங்களை விடவும் ஸ்டைலாக கைத் தட்டிக் கொண்டே அந்த "யாரடி நீ மோகினி" பாடலில் நடித்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்து, கூடவே வேறு சில கேள்விகளையும் அவர் முன் வைத்தார். இன்னும் ஒரு முப்பது, முப்பது வருடங்கள் ஆனாலும், எப்பொழுதும் எல்லோரையும் ரசிக்க வைக்கும்படி அமைந்த பாடல். An ever enduring performance indeed!
இந்தப் பாடலைப் பொறுத்தவரை முக்கியமான அம்சம் துள்ளும் தாளகதியுடன் அமைந்த, கேட்ட/பார்த்த மாத்திரத்திலேயே, எவரையும் எழுந்து ஆட வைக்கும், திரு. ஜி.ராமநாதன் அவர்களின் மெட்டு மற்றும் இசை, அதற்கேற்றாற்போல், ultra எனர்ஜியுடன் அமைந்த நடிகர் திலகம் மற்றும் மொத்த குழுவினரின் நடனம் மற்றும் உடல் மொழி. பெரும்பாலும், கர்நாடக மற்றும் நாட்டுப்புற மெட்டுகளையே அமைக்கும், ஜி.ராமநாதன் இந்தப் படத்தில், பல பாடல்களை வித்தியாசமான களத்தில் அமைத்திருந்தார். இந்த நிமிடம் வரையிலும், என்றென்றும், உத்தமபுத்திரன் படப்பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், சாகாவரம் பெற்றவையாகவும் மட்டுமல்லாமல், தரத்திலும், உயர்வாக இருந்தது என்று கூறலாம். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கான முக்கியமான காரணங்களில், இசை மிக முக்கிய இடம் பெறும். அதே நேரத்தில், ஒவ்வொரு பாடலைப் படமாக்கிய விதமும், அவை அமைந்த சூழல்களும், அதில் நடித்த நடிக/நடிகையர்களின் பங்கும் மகத்தானது.
பாடல் துவங்கும்போதே, எனர்ஜி கொப்பளிக்கும் என்றால், முதல் சரணம் ஆரம்பித்து - "விந்தையான வேந்தனே..." என்று துவங்கி ஒரு துள்ளலான மெட்டு ஒலிக்கும். கேட்கும்/பார்க்கும் அனைவரையும் தாளம் போட வைக்கும். ஒரே பாடலில், ஒன்றுக்கும் மேற்பட்ட மெட்டுகளில் பாடல் அமைந்து, நீண்ட பாடலாயிருந்தாலும் (ஆறு நிமிடங்களுக்கு மேல்), சுவாரஸ்யம் குன்றாமல் இருப்பதற்கு வழி வகுத்தது.
அடுத்து, பாடல் வரிகள். மெட்டுக்கு அமைத்த பாடல் - அதுவும், ஜனரஞ்சக மெட்டு. இருப்பினும், தரம் குறையாது, பாடலின் துள்ளலை அதிகரிக்கும்படி அமைந்த வரிகள். கவிஞர் திரு. கு.மா. பாலசுப்பிரமணியம் இது போல் எத்தனையோ ஜனரஞ்சகப் பாடல்களுக்கு, மெட்டுகளுக்கு பாடல் எழுதுவதில் விற்பன்னர்.
அடுத்து, பாடியவர்கள். திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் அந்த வேளையில், நடிகர் திலகத்துக்காக நிறைய பாடல்கள் பாட ஆரம்பித்து விட்ட நேரம். நடிகர் திலகம் வெறும், வசனம் தான் பேசுவார் என்ற குற்றச்சாட்டை (அவரும் எத்தனை எத்தனையோ விதமான நடிப்பைக் கொடுத்து விட்டாலும், இன்று வரை இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - அதற்கு, தனியே ஒரு பெரிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது), அவர் தொடர்ந்து, முதல் படத்திலிருந்தே, உடைத்துக் கொண்டு வர, அவருக்கு, பலதரப்பட்ட பாத்திரங்கள், காட்சியமைப்புகள் மட்டுமின்றி, பாடல்களும், பெரிதும் உதவி செய்தன. அதில் மிக முக்கிய பங்கு, திரு. டி.எம்.எஸ். அவர்களுக்கும், மெல்லிசை மன்னர்களுக்கும், திரை இசைத்திலகம் மாமா கே.வி.மகாதேவன் அவர்களுக்கும், கவியரசு கண்ணதாசனுக்கும், வாலிக்கும் செல்லும். இந்தப் பாடலை, டி.எம்.எஸ். பாடிய விதம் - பாடல் நெடுகிலும், உற்சாகமும், அதே சமயத்தில், ஒரு விதமான குழைவும் (குடித்த பின் பாடுவதால், இலேசான போதையுடன் கூடிய குழைவு!) இழையோடும். திருமதி. ஜிக்கி அவர்களும், திருமதி. ஜமுனாராணி அவர்களும், அவர்கள் பங்குக்கு, குறை வைக்காமல், பிய்த்து உதறியிருப்பார்கள்.
அடுத்து, நடன இயக்குனர் ஹீராலால் மற்றும் இயக்குனர் டி. பிரகாஷ் ராவ். மேற்கத்திய பாணியில் எனக்குத் தெரிந்து, தமிழில், இந்தப் பாடல்தான் முதலில், பரிபூர்ணமாக, அமெச்சூர்தனம் இல்லாமல், அமைக்கப்பட்ட முதல் பாடல். இருப்பினும், நடிகர் திலகத்தின் படங்களின் ட்ரேட் மார்க்கான - தரம் வழுவாத தன்மை - இந்தப் பாடலிலும், அமைந்தது. முகம் சுளிக்கும்படியான அங்க அசைவுகளுக்கும், எக்கச்சக்க ஸ்கோப் இருந்தும், கடுகளவும், தரம் குறையாது அமைக்கப்பட்ட நடன அசைவுகள். அற்புதம்!
இப்போது, நடிப்பு.
பாடல் துவங்குவதற்கு முன்னரே அமர்க்களம் ஆரம்பித்து விடும். முதலில், பார்த்திபனாக வருபவர் ஸ்டன்ட் சோமுவுடன் வாள் பயிற்சியை முடித்தவுடன், கஞ்சிக் கலயத்தை எடுத்துக் குடிக்க ஆரம்பிக்கும் போதே, அலப்பறை ஆரம்பித்து விடும். ஏனென்றால், உடனே காட்சியை மாற்றி, இன்னொரு கஞ்சிக் கலயத்தைக் காட்டுவார்கள். அதைக் குடிப்பவர், விக்கிரமன். படத்தில் இன்றளவும், இந்தப் பாத்திரம் தானே, பெரிய அளவில் பேசப் படுகிறது. இந்தப் பாத்திரத்தில், நடிகர் திலகம் கையாண்ட வித்தியாசமான சில ஸ்டைல்களைத் தானே, ரஜினி அவர்கள் ரோபோவில் அவருடைய பாணியில், வித்தியாசமாகச் செய்து, கைத்தட்டல்களை அள்ளினார். சில நாட்களுக்கு முன், ரஜினிக்கு, சிறந்த வில்லன் அவார்டு கிடைத்தபோது, அதைப் பெற்றுக்கொண்ட தனுஷும், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும், வில்லன் வேடத்தை எல்லோரும் ரசிக்கும்படி ரஜினி செய்தார் என்று கூறினார். உண்மைதான்! ஆனால், இவை எல்லாவற்றுக்கும் முன்னோடி, இன்றளவும், இந்த விக்கிரமன் பாத்திரம் தானே. (இதே வேளையில், இந்தப் படத்தின் மூலத்தில் அமர்க்களமாக நடித்த திரு. பி.யு.சின்னப்பா அவர்களையும் யாரும் மறக்கக் கூடாது.).
ஸ்டைல். முதல் படம் பராசக்தியில், கடைசியில், கோட் சூட் சகிதம் பண்டரிபாயிடம், அவர் பாடிய பாடலைத் திரும்பப் பாடும்போது (லாஜிக் சறுக்கல் வேறு விஷயம்) கொப்பளிக்கும் ஸ்டைல், அவ்வப்போது, அந்த நாள், எதிர்பாராதது, அமர தீபம், பெண்ணின் பெருமை போன்ற படங்களில், ஸ்டைல் பளிச்சிட்டாலும், படம் நெடுகிலும், ஸ்டைலான நடிப்பை வழங்க ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்துதான்.
இந்தப் பாடலில் அவரது உடல் மொழி அபாரமாக இருக்கும். அடிப்படையில், குடிபோதையில் இருப்பவர், போதையையும் காட்ட வேண்டும், அதே நேரத்தில், அவர் உடலில் மது ஏற்றிய உற்சாகத்தை, தன்னை மறந்து, மற்றவர்கள் ஆடும்போது, கூடவே காட்ட வேண்டும். போதையில் இருப்பவன், என்னதான் உற்சாகமாக ஆட ஆரம்பித்தாலும், துவங்கிய சிறிது நேரத்திலேயே களைப்பை அடைவான். அதை கனகச்சிதமாக திரையில் வடித்திருப்பார். படம் நெடுகிலும், உற்சாகமும், போதையேறிய குழைவும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். யார் சொல்லிக் கொடுத்தார்கள் இந்தக் கலையை அவருக்கு? ஒருவரும் இல்லை. அது நடிப்புக்கடவுளான அவருக்கே உரிய கலை.
முதலில், ஹா! என்று துவங்கும் போது ஒரு ஸ்டைல், கைத் தட்டி நடன மங்கைகளை அழைக்கும் போது ஒரு ஸ்டைல், ஒவ்வொரு நடன மங்கையைப் பார்க்கும்போதும் ஒரு ஸ்டைல், முதல் சரணத்தில், ரீட்டா என்ற அந்த நடன நடிகை "விந்தையான வேந்தனே", என்று துவங்கி, சரணத்தை முடிக்கும் போது, அவரைப் போலவே வேகமாக நடன அசைவுடன் ஒரு நடையை நடந்து முடிக்கும் போது, இன்றும் கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறார். பின், ஒண்ணும் "ஒண்ணும் ரெண்டு" என்னும்போது, திரும்பவும், "ஹ ஹ ஹ ஹா" என்னும்போது, ஒருவிதமான ஸ்டைல். பின்னர், புகழ் பெற்ற வட நாட்டு நடன நடிகை ஹெலன் அவர்கள் வந்தபின், உற்சாகம் மேலும் கூடும். பாடல் முடிய முடிய, நடிகர் திலகத்தின் அந்தப் புகழ் பெற்ற கைத்தட்டலுடன் கூடிய நடனம். கைத்தட்டல் ஹெலன், மற்ற நடன நடிகைகள் மட்டுமல்லாது, எம்.என்.நம்பியார் மற்றும் ஒ.ஏ.கே.தேவரையும் தொற்றிக்கொள்ள, பாடல் அமர்க்களமாக ஆரம்பித்து, படு அமர்க்களமாக முடியும்.
ஒரு பாடல் சிரஞ்சீவித்தன்மையுடன் இருப்பதற்குத் தேவையான அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த மற்றுமொரு பாடல். இன்றளவும், என்றும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.
தொடரும்,
இரா. பார்த்தசாரதி