Originally Posted by
mr_karthik
'இதயம் பேசுகிறது' பத்திரிகையின் நடவடிக்கை பற்றிச் சொன்னீர்கள். அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.
1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.
பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் உட்காரவைத்து, சுற்றிலும் போலீஸார் காவலுக்கு நின்றனர்.
ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே நடிகர்திலகம் போன் மூலம் ஸ்பென்ஸர் கம்பெனிக்கு குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார். வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்குள் குளிர்பானமும் வந்துவிடவே, அவர் எங்களைப்பார்த்து 'இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக்கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி அவர் கையாலேயே எல்லோருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இப்போது அவற்றையெல்லாம் அசைபோட வாய்ப்பளித்த முரளி சார், மற்றும் ராகவேந்தர் சார் ஆகியோருக்கும் நன்றி.