பழைய பாகங்களில் ராஜாவைத்தேடிய போது சாரதாவின் பதிவு ஒன்று கண்ணில் பட்டது. வழக்கம்போல லபக்கிட்டேன். (இதே போல முரளி சார் எழுதிய அற்புத பதிவொன்று உள்ளது. தேடிக்கொண்டிருக்கிறேன்).
இப்போதைக்கு ஓவர் டு சாரதா மேடம்.......
"எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).
முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).
படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.
அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்வியிடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.
அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............
(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே).
Thank you Saradha mam.....