நடிகர் திலகத்தின் தமிழ் பற்றிய விமர்சனம் சஞ்சய் சுப்ரமணியன் ஆங்கிலத்தில் எழுதினார் என்றால் அந்த நிகழ்ச்சி பற்றிய தமிழ் வர்ணனை இதோ. நன்றி சரவணன் பூங்காவனம்
இரண்டு நாட்களுக்கு முன் ஷெரட்டன் ஹோட்டல் சென்று இருந்தோம் சிவாஜி கணேசனின் தமிழை கேட்பதற்காக .சிவாஜியின் தமிழ் உருவங்கள் என்கிற தலைப்பில் நடிகர் மோகன் ராமன் ஒரு அற்புதமான இரவாக தன் உழைப்பால் மாற்றி இருந்தார்..சிவாஜி வருவதற்கு முன் தமிழக திரைப்படங்களின் தமிழ் எப்படி இருந்தது என காட்டி விட்டு ,அப்படியே சரஸ்வதி சபதத்தில் நடிகர் திலகம் கலைவாணியால் ஆசீர்வதிக்கப்படும் காட்சியில் எல்லாரும் தங்களை மறந்து கைதட்டினார்கள்.பராசக்தியின் வசனத்தில் அப்படியே தெறித்து விழுந்த வசனத்தில் ஆரம்பித்த பிரமிப்பு சிவாஜியாக ராமன் எத்தனை ராமனடியில் விரிந்து,மனோகாரவின் கொலைவெறி தமிழில் மெய்மறந்து ,மக்களை பெற்ற மகாராசியின் கொங்குதமிழில் சிலிர்த்து ,வியட்நாம் வீட்டின் அக்ராகர தமிழில் அப்படியே அசந்து,சிவனாக சிங்கதமிழிலில் திருவிளையாடலில் செம்மாந்து,ஒதெல்லோ நாடகத்தில் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு உயிர் கொடுத்ததில் நிமிர்ந்து உட்கார்ந்து ,தேவர் மகனின் வட்டார மொழியில் பின்னி எடுத்து இருக்கும் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டோம் என நிமிர்கிற பொழுது வீரபாண்டிய கட்டபொம்மனின் இறுதி காட்சி அப்படியே கலக்கி எடுத்துவிட்டது.அண்ணாவின் சிவாஜி நாடகத்தை ஒரே நாளில் நூற்றிபத்து பக்க வசனத்தை நடித்து காண்பித்தது;ரயில் பயணத்தில் தங்கப்பதக்க வசனத்தை கேட்டே இரண்டுமணிநேரம் பின்னி எடுத்தது ,பானர்மானின் கட்டபொம்மன் பற்றிய குறிப்போடு இவரின் நடை ஒத்துப்போனதை சொல்லி சிவாஜியிடம் கேட்டபொழுது <"நான் அதெல்லாம் எங்க படிச்சேன் ?வீரன் என்றால் அப்படித்தான் நடப்பான் என்றாராம் சாவகாசமாக !யாத்ரா ஜோதி படத்தில் மலையாளத்தில் நடிக்க கிளம்புவதற்கு முந்திய நாள் செம டென்ஷன் கொண்டு இருந்தாராம் ,"என்ன" என கேட்டபொழுது ,"நாளைக்கு ஷூட்டிங் நேஷனல் அவர்ட் வாங்குன மோகன்லால் கூட ;மிஸ் ஆகா கூடாது !அதான் என சொன்னாராம் !" அதற்கு பிறகு பின்னிஎடுத்துவிட்டு வந்தபின் "ஏன் அப்படி பயந்தீங்க 275 படம் நடிச்சு இருக்கீங்களே ?நீங்க பேசாத டயலாக்கா ?சம்பாதிக்காத பேரா "என கேட்ட பொழுது ,"275 படத்தில் சம்பாதிச்ச பேரை ஒரு படத்தில் தொலைச்சுடக்கூடாது பாரு !எப்பவும் அடிவயித்தில் பலபேரோட உழைப்பில் உருவான வசனத்தை நாம் ரசிகனுக்கு கொண்டுபோய் சேர்க்கிறோம் என்கிற பயத்தோட தான் இருக்கணும் ;அது போற அன்னைக்கு நடிக்கிறதை விட்டுடணும் !"என்றாராம் அதுதான் சிவாஜி.
அன்புடன்