http://i61.tinypic.com/1zlrkpd.jpg
1972-ம் ஆண்டு இந்த வார்த்தையை சொன்னவுடன் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனின் மனத்திலும் மகிழ்ச்சி அலையடிக்கும். அது சாதனை படைத்த ஆண்டு என்பதனாலா? ஒரேடியாக அப்படி சொல்லிவிட முடியாது.காரணம் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் சாதனைகள் படைத்த காலண்டர் வருடங்களை சிவாஜி ரசிகன் சந்தித்திருக்கிறான்.சிகரம் தொட்ட சாதனைகளை தந்த ஆண்டு என்பதனால் மட்டுமல்ல பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆண்டு என்பதனாலுமே அது மனதிற்கு நெருக்கமான ஆண்டாக மாறிப் போனது.
அந்த ஆண்டு தொடக்கம் முதல் இறுதி வரை சரமாரியான சந்தோஷங்களை சிவாஜி ரசிகன் அனுபவித்தான். ராஜா, ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா என்ற முதல் பாதி. தவப்புதல்வன்,வசந்த மாளிகை, நீதி என்ற இரண்டாம் பகுதி.
இதற்கு நடுவில் 1971-ல் ஏமாற்றத்தை சந்தித்த சிவாஜி ரசிகனும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டனும் மாற்றார் ஆச்சரியப்படும் வண்ணம் அந்த சோர்வை அறவே உதறி புத்துணர்வுடன் செயல்பட தொடங்கி இருந்தனர்.
ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க
ஏமாற்றி பொழச்சதில்லை முத்துமாரி
என்ற வரிகளுக்கும்
சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்
செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி
மகராசன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி; இந்த
மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி!
என்ற வரிகளுக்கெல்லாம் ஓபனிங் ஷோவில் மட்டுமல்ல அனைத்து காட்சிகளிலும் கைதட்டல் விழுந்தது எனபதில் அன்றைய நாட்களில் திரையரங்கில் படத்தை நேரில் பார்த்தவர்கள் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
1971-ல் நடந்தது போல் நாம் ஏமாறாமல் எமாற்றபடாமல் இருக்க ஒவ்வொரு சிவாஜி ரசிகனும், காங்கிரஸ் தொண்டனும் விழிப்போடு இருக்க, பொது மக்களும் தங்களை கைவிரலில் ரஷ்ய மையேந்தி விளையாடிய ஆட்களை இனம் கண்டு கொண்டிருந்த காலகட்டம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியோடு திகழ்ந்தது என்பதும் அதை பொறுத்துக் கொள்ள முடியாத அன்றைய ஆட்சியாளர்கள் அதை அழிக்க முயற்சித்தனர் என்பதும் வரலாறு. பல்கலைகழக விதிமுறைகளை காற்றிலே பறக்க விட்டு ஆட்சியாளர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டு அங்கே இருந்த குளத்தில் பிணமாக மிதந்தார். இறந்தவன் தங்கள் மகன்தான் என்று சொல்லக் கூட உதயகுமாரின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் தமிழகமெங்கும் எழுந்த மாணவர் போராட்டத்தின் காரணமாக உண்மை வெளியே வந்தது. அப்போது ஆளும் கட்சியில் இருந்த சிலர் இதை பற்றி ஒரு வார்த்தை கூட கண்டித்து பேசாமல் பின்னாளில் கட்சியை விட்டு வெளியேற்றபப்ட்டவுடன் அதுவும் ஐந்து வருடம் கழித்து தங்கள் படத்தில் இதை காட்சியாக வைத்துக் கொண்டனர்.
நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்று முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம்.
பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்தப் படம் வெளிவந்து 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.
தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.
இவை அனைத்தையும் இப்போது விளக்க காரணம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள். [மீண்டும் நான் அதை பதிவு செய்திருக்கிறேன்] இந்த் சிலிர்ப்பூட்டும் நினைவுகளை மீண்டும் அசை போட வாய்ப்பளித்த வினோத் சாருக்கு நன்றி.
அன்புடன்
அதே போன்ற மதுரையில் 1972 அக்டோபர் 1,2 தேதிகளில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி மாநாட்டைப் பற்றிய என் நினைவுகளை விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.