-
11th October 2014, 08:05 PM
#601
Senior Member
Diamond Hubber
'சபதம்' (1971)
இது ஒரு புதிய பதிவு
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' (1971) என்ற அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். (கிருஷ்ணா! இதிலும் இந்திராதேவி உண்டு) நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.
கதை
மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.

வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.

இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.
இந்தப் படத்தில் அதே போல அருமையான ஒரு பாடல். ஆனால் அதிகம் பேசப்படாத அதிசயப் பாடல். அப்போது ஓரளவிற்குப் பிரபலம். பாடலென்றால் அப்படி ஒரு பாடல்.
'ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு'
இந்தப் பாட்டின் இடையிடையே வரும் இசை சித்து வேலைகள் நிஜமாகவே பிரமிக்கக் கூடிய வகையைச் சேர்ந்தவை. புத்திசாலித்தனமான வரிகளுக்கு கமர்ஷியல் இசை கிளாஸிக்காக. நிறைய வித்தியாசங்களை இப்பாடலில் உணர முடியும். ஒரு குத்துப் பாட்டு ரேஞ்சுக்கு இருந்தாலும் கதையோடு ஒட்டிய பாடல் வரிகளாலும், பங்கு கொண்ட நடிகர்களின் உற்சாகமான நடிப்பாலும், துள்ளல் போட வைக்கும் இசையாலும் இப்பாடல் ஜோராக மிளிர்கிறது.
பாடலின் வரிகள் அற்புதம்.
'உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்'
மகோன்னதமான வரிகள்.
"பொய் வேஷம் போடும் துரைசிங்கமே! இப்போது உயரத்தில் நிற்கலாம். என்னால் அடிவாரத்திற்கு உருண்டு வரப்போகிறாய்"
என்ற அர்த்தம் தொனிக்கும் அழகான வரிகள். கண்ணதாசன் ரகளை வரிகளை தந்திருப்பார்.
பாடலின் நடுவில் வரும் குத்திசைக்கு நாகேஷும், ரவியும் ஆடுகளின் முகமூடி அணிந்து கொண்டு குத்தாட்டம் போடுவது அமர்க்களம். நாகேஷுக்கு அவருக்காகவே பாடுவதற்கென்றே பிறந்த ஏ.எல்.ராகவனும், கே.ஆர்.விஜயாவிற்கு ராட்சஷியும், ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் அவர்களும் குரல் தந்து பின்னியிருப்பார்கள். (ஜி.கே.வெங்கடேஷின் குரல் அம்சமான ஒரு குதூகலம். சாய்பாபா குரல் போல) ஈஸ்வரின் அபரிமிதமான தெள்ளத் தெளிவான உச்சரிப்பு இப்பாடலுக்கு கூடுதல் பலம். 'பொல்லாத சபதம்' என்று அவர் 'ல்' லிற்கு படு அழுத்தம் கொடுத்து உச்சரிப்பது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

இனி பாடலின் வரிகள்.
தொகையறா
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
உறவு கலவாமை வேண்டும்
தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்... தத்தளாங்கு தகஜும்
கே.ஆர்.விஜயா
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ரவிச்சந்திரன்
கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
கட்டு கட்டா திருநீறு
கழுத்தில் ஆடும் மணிமாலை
பக்தி பொங்கும் புலியைப் பார்த்து
பயப்படாதே வெள்ளாடு
பயமில்லாமல் நீ ஆடு
அடுத்த ஆட்டம் நீ ஆடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
நாகேஷ்
தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
தகப்பன் புலியோ தள்ளாடுது
அந்த புலிக்குப் பிறந்த வெள்ளாடிது
அப்பாவி அப்பாவும்
இப்பாவி பப்பாவும்
தப்பான சொந்தங்கள் கொண்டாடுது
மொகத்தப் பார்த்து நீ ஆடு
களத்தைப் பாத்து காய் போடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
கே.ஆர்.விஜயா
உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
உயர்ந்து நின்றால் தேவாரம்
உருண்டு வந்தால் அடிவாரம்
கள்ளனாகி தோல்வி கண்டால்
கையில் உண்டு தேவாரம்
அதிகம் உண்டு ஆதாரம்
தவணை தந்தோம் ஒரு வாரம்.
பகவதி சரணாகதி அடைய ஒரு வாரம் தவணை தருகிறார்களாம். வாவ்!
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
ஆட்டத்தை ஆடு
மூவரும்
புலியுடன் ஆடு
போட்டிக்கு வருகின்ற ஆட்டம் ஆடு
இன்று ஆடுகள் மோதட்டும் புலியோடு
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
வெள்ளாட்டின் சபதம்
அது பொல்லாத சபதம்
'சபதம்' முழுப் படத்தையும் கண்டு மகிழுங்கள்.
Last edited by vasudevan31355; 11th October 2014 at 08:18 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th October 2014 08:05 PM
# ADS
Circuit advertisement
-
16th October 2014, 07:34 AM
#602
Junior Member
Newbie Hubber
Thanks Vasu.
இன்றைய ஸ்பெஷல் (94)
மூவாயிரம் முத்தான பதிவுகள் அளித்த கோபால் அவர்களுக்கு என் அன்புப் பரிசு
1969-களில் ஒரு பாடல். அப்போதும் கூட அது அபூர்வ பாடல்தான். வழமை போல் சிலோன் ரேடியோ புண்ணியம் கட்டிக் கொண்டது.
துள்ளல் இசையுடன் உற்சாகம் கொப்பளித்த அந்தப் பாடல் முதல் முறை கேட்டவுடன் வஜ்ரம் போல் அப்படியே என் மனசுக்குள் 'ப்பச்சக்' என்று குந்திக் கொண்டது. அது என்ன படம் ஏது படம் என்று தெரியாது. ஷார்ட்வேவ் (SW2) அலைவரிசைகளில் 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்' பட்டும் படாமலும், விட்டும் விடாமலும் கிடைக்கும் போது, இந்தப் பாடல் போடும் போது, அப்படியே காதை ரேடியோ பொட்டியின் ஸ்பீக்கரோடு ஸ்பீக்கராக ஒட்டி வைத்து அந்த மூன்று நிமிடங்களுக்கு மேலாக கேட்டு அனுபவித்த சில நாட்களின் இன்பங்கள் இருக்கிறதே. வார்த்தைகளில் கொட்டி விட முடியாது அதை.
அப்புறம் இந்தப் பாடல் கேட்க முடியாத பாடலாகி விட்டது. ஆனால் பசுந்தாள் உரம் போட்ட மாமரச் செடிபோல மனது உள்ளேயே இந்தப் பாடலின் தாக்கம் ராட்சஷத்தனமாக என்னையுமறியாமல் வளர்ந்து கொண்டிருந்தது.
ஒருமுறை கண்ணதாசன் அவர்களின் பாடல்களின் தொகுப்பு கொண்ட புத்தகம் ஒன்றை 1986 இல் படிக்க நேரிட்டது. அதில் கண்ணதாசனின் அபூர்வ பாடல்கள் சில தென்பட்டன. அதில் இந்தப் பாடலும் பதிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் இந்தப் பாடல் இடம் பெற்ற படம் 'ஓடும் நதி' என்று தெரிந்து கொண்டேன்.
ஏற்கனவே 'ஓடும் நதி' என்ற படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அந்த அபூர்வமான படத்தை இன்றுவரை என்னால் பார்க்க முடியவில்லை. அந்தப் படத்தில் ரவிச்சந்திரன், சரோஜாதேவி, நாகேஷ் போன்றவர்கள் நடித்திருப்பார்கள் என்று படித்திருந்தேன் நூலகங்களில். இயக்கம் தாதாமிராசி என்றும், இசை 'மெல்லிசை மன்னர்' என்றும், பாடல்கள் எழுதியது கவிஞர் என்றும் தெரிந்து கொண்டேன்.
அடுத்த நிமிடமே ஆடியோ ரிகார்டிங் கடைக்கு சென்று 'இந்தப் பாடல் கிடைக்குமா? அவசியம் வேண்டுமே" என்றேன். ம்... கடைகாரர் கைவிரித்து விட்டார். 'விழுப்புரம் சென்றால் அங்கொரு கடையில் கிடைக்கலாம்' என்று அட்ரஸ் வேறு தந்து விட்டார். அடுத்த நாள் விழுப்புரம் பயணித்து அந்த குறிப்பிட்ட கடையில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் ரிகார்ட் செய்து கொண்டு வந்து விட்டேன். என் ஆசை தீர அன்று முழுதும் இந்தப் பாடலைக் கேட்டு கேட்டுக் களித்தேன். ஒன்றிரண்டு வரிகள் மட்டுமே வானொலியில் கேட்டு தெரிந்த எனக்கு பாடல் முழுதும் அன்று மனப்பாடம் ஆயிற்று. (இந்தப் பாடலை நான் திரும்பத் திரும்ப கேட்டதனால் என் தந்தை கோபம் வந்து தாங்க முடியாமல் பக்கத்து டீக்கடைக்கு ஓடியே போய்விட்டார். ஒரு இரண்டு மணி நேரம் சென்று திரும்பி வந்தும் இதே பாடலைக் கேட்டு டென்ஷன் ஆகி விட்டார். அப்புறம் மனமில்லாமல் இப்பாடலை நிறுத்தினேன்)
அப்புறம் வீடியோக்களின் காலம் வந்ததும் இந்தப் படத்தின் கேசட் தேடித் தேடி அலைந்தேன். இப்பாடல் படத்தில் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம். ஆனால் ஏமாற்றம். 60 வருட தமிழ்ப் படங்கள் எல்லாம் ஈஸியாகக் கிடைத்தன. 1969 -ல் வெளிவந்த இப்படம் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.
கோபாலின் நட்பு கிடைத்ததும் நடிகர் திலகத்தைப் பற்றிய பேச்சுக்களை முடித்துவிட்டு பிறர் நடித்த பாடல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவோம். இருவரின் ரசனை வேறு ஒரே ராஜபாட்டையில் பயணித்ததால் இந்தப் பாடல் பற்றி விரைவிலேயே பேச்சு வந்தது. அலாவுதீன் பூத விளக்கு கிடைத்தது போல ஒருநாள் இருவரும் இந்தப் பாடலைப் பற்றி பேசிப் பேசி மகிழ்ந்தோம். இந்தப் பாடல் 'எனக்குத்தான் சொந்தம்' என்று அவர் சொந்தம் கொண்டாட, 'இல்லை இல்லை எனக்குத்தான் உரிமை' என்று நான் ராம் ஜெத்மாலனியாக வாதாட, இன்பச் சண்டை இனிதே இன்றுவரை நடந்து வருகிறது எங்களுக்கிடையில்.
தினமும் 'யூ டியூபி'ல் இப்பாடலைக் search செய்வேன். அப்படி சமீபத்தில் தேடிய போது யாரோ ஒரு புண்ணியவான் இந்தப் பாடலை அப்லோட் செய்து வைத்திருந்தார். அந்த மனிதரின் பெயரைத் தொட்டு ஒரு 'உம்மா' தந்துவிட்டு, அவரை வாயார வாழ்த்திவிட்டு, பாடலை அப்படியே 'லபக்'கிக் கொண்டேன். கோபாலின் 3000 பதிவுகளுக்காக பரிசாக கொடுக்க நினைத்து அது இன்று நிறைவேறியது.
இந்தப் படத்தின் பிற பாடல்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.
1. சுசீலாம்மா பாடும்
'காலமகள் மடியினிலே ஓடும் நதி'
என்ற பாடல் அப்படியே உள்ளத்தை பனிக்கட்டியாய் உருக வைக்கும். இது அப்போது சூப்பர் ஹிட் பாடல்.
2. 'குன்றத்தில் கோவில் கொண்ட நம்பி நம்பி' என்ற இன்னொரு அருமையான பாடல். சுசீலா பாடியது.
3. 'தங்கச் சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு'
என்ற இன்னொரு அதியற்புதமான பாடல் உண்டு. கோபாலுக்கும், எனக்கும் இதுவும் மிக மிகப் பிடித்த பாடல். இந்தப் பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியவர் 'கோ' தான். தேங்க்ஸ் கோ.
4. அடுத்தது தான் நான் பெரிய பீடிகை போட்டு உங்களை 'சொல்லித் தொலையேண்டா' என்று நீங்கள் என்னை அடிக்க வரும் 'இன்றைய ஸ்பெஷல்' பாடல்.

'வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் இங்கே'
இந்த வரிகளை டைப் செய்யும் போதே மனவலிகள் அப்படியே கற்பூரமாய் கரைந்து போகின்றன. ஒன்றுமே இல்லைதான் இந்தப் பாடலில். ஆனால் இந்தப் பாடலில் விட்டலாச்சாரியாவின் மந்திர தந்திரங்கள் போல ஏதோ ஒரு அசாத்திய ஈர்ப்பு குடிகொண்டிருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.
'வா' என்று 'பாடகர் திலகம்' முதல் எழுத்தை ஒரு இழுப்பு இழுப்பு ஆரம்பித்து பாடத் தொடங்கும் போதே செத்தான் ரசிக்கத் தெரிந்த ஒவ்வொருத்தனும்.
அப்புறம் சுசீலாவும், டி.எம்.எஸ்ஸும் சும்மா விசிறி வீசியடிக்கும்,
அந்த
'பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய'
(சுசீலாம்மா சில பாடல்களை ரொம்ப ரொம்ப அழகாகப் பாடுவார். அப்படிப்பட்ட ஒரு சில பாடல்களில் இது ஜனரஞ்சக உச்சம் என்று அடித்துச் சொல்வேன்)
அடப் போங்கப்பா! கர்ணன் காமெராவில் மாட்டி பறக்கும் 'கங்கா' குதிரை போல மனசு அப்படியே பறக்கும் பாருங்க.
பல்லவி முடிந்ததும் அந்த 'விறுவிறு' 'கிடுகிடு' வென ஒலிக்கும் புல்லாங்குழல் பிட் இடையிசை... அதை தொடர்ந்து சில வினாடிகளே வரும் அந்த ஷெனாயின் பங்கு. பட்டிக்காட்டான் 'ஒய்ங்க்' என்ற சத்தத்தை கேட்டுவிட்டு, எங்காவது ஏரோபிளேன் தென்படுகிறதா என்று கைகளை கண்களுக்கு மேல் சல்யூட் போட்டது போல் வைத்து, சூரிய வெளிச்சம் கண்களைக் கூச, வானத்தில் தேடிக் கண்டுபிடித்து 'அதோ பார்ரா 'ஏர்ர்ரோபிளேனு' என்று அதே வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதித்து குதூகலமடைவானே... அந்த குதூகலத்தையும் தாண்டிய சந்தோஷத்தை அளிக்கும் அந்த ஷெனாய் ஒலி.
இப்படி பாடல் முழுதும் இனம் காண முடியாத அற்புதம் பரவிக் கிடக்கும்.
'யோக மேடையில் மௌன நாடகம்'
ஆடிப் பார்க்கலாம் வா'
முதல் சரணத்தின் இரண்டாம் வரிகள் முடிந்ததும் 'டங் டங் டங் டங் டங்' என்று கிடார் இசை பின்னி இழையுமே! அப்படியே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆனந்த கங்கை ஓடும்.
வழக்கமான சுறுசுறு ரவி. அதே குறும்பு. அதே 'கலகல'. அதே உடல் நெளிவு டான்ஸ். சற்றே சோகமும், மகிழ்வும் கலந்து சுடிதாரில் 'சிக்'கென்று அழகு சரோஜாதேவி. வெளியில் பாலையா.
ஒரு எழுத்தை கூட மாற்றி சாமர்த்தியமாக பாடலை எழுதிய கவிஞர். கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
'என்னடா இருக்கிறது இந்தப் பாடலில்!? சாதாரண ஒரு பாடல் போலத்தானே இருக்கிறது... இதற்கு இவ்வளவு அமர்க்களமா?" என்று கண்டிப்பாக நீங்கள் நினைக்கலாம். ஒரு 3 தடவை இடைவிடாமல் நன்கு ரசித்து கேளுங்கள். என்னுடன் இசைப் பைத்தியக்கார இன்ப ஹாஸ்பிட்டலுக்கு என் பக்கத்துக்கு பக்கத்து பெட்டில் உங்களுக்கு இடம் கிடைக்கும். ரிசர்வுக்கு முந்துங்கள்.
ஏனென்றால் என் பக்கத்து பெட்டில் கோபால் அடமிட் ஆகி ரொம்ப நாளாச்சு.
இனி பாடலின் வரிகள்
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
(புல்லாங்குழலும், ஷெனாயும் பின்னி எடுக்கும்)
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
ஜன்னல் இல்லாத மாடி வீட்டிலே
மன்னன் பந்தாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்
சாயும் கண்ணாடி மேனி மீதிலே
தங்கம் கொண்டாட வேண்டும்
மூடும் கண்ணிலும் முன்னால் தரும்
மூன்று பாஷையும் தன்னால் வரும்
மூடும் கண்ணிலும் முன்னால் வரும்
மூன்று பாஷையும் தன்னால் வரும்
யோக மேடையில் மௌன நாடகம்
ஆடிப் பார்க்கலாம் வா (கிடார் பின்னல்)
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
ஹாஹஹாஹஹாஹஹாஹா
லாலலாலலாலலால டாடாடடடாஜா
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
கொஞ்சும் பெண்ணோடு பேசும் வேளையில்
மஞ்சம் திண்டாட வேண்டும்
வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்
வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே
ஒன்றில் ஒன்றாட வேண்டும்
கேள்வி ஞானத்தில் வாராதது
கேட்டுப் பார்த்த பின் தீராதது
கேள்வி ஞானத்தில் வாராதது
கேட்டுப் பார்த்த பின் தீராதது
போதும் என்பது இல்லையென்று
நாம் வாழ்ந்து பார்க்கலாம் வா
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே
காதல் பருவத்தின் மறுபக்கம் எங்கே
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா
பூவைப் பார்ப்பதே வாசமா
ஆசைப் பார்வையால் தீருமா...ஆ
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
பாயப்ப பாயப்ப பய பாயப்ப பாயப்ப பய
Last edited by Gopal.s; 16th October 2014 at 07:37 AM.
-
16th October 2014, 07:40 AM
#603
Junior Member
Newbie Hubber
Ragavendhar Response.
வாசு சார்
இது நியாயமா...
'ஓடும் நதி'யில் என்னைத் தவிக்க விட்டு விட்டு நீங்களும் கோபாலும் மட்டும் கரை கடந்து விட்டீர்களே..
நான் என்ன பாவம் செய்தேன்...
காலமகள் வழியினிலே ஓடும் நதியினில் நீந்தி வந்து தங்களுடன் இணைந்து விடுவேன்...
...
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் பாட்டைப் பொறுத்த வரையில் நான் சென்னை வானொலி நிலையத்தை கோயில் கட்டி கும்பிடுவேன்... இப்படம் ஓடிய கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் மதராஸ் ஏ அலைவரிசையிலும் இரவு 7 மணி சுமாருக்கு மதராஸ் பி அலைவரிசையிலும் இரவு விவித் பாரதியிலும் (அப்போது தான் விவித்பாரதி தமிழ் ஒலிபரப்பு ஆரம்பித்த புதிது. ஏப்ரல் 1969ல் தமிழ்ப்புத்தாண்டு நாளன்று ஆரம்பிக்கப் பட்டது.) சக்கைப் போடு போட்ட பாடல். அப்போதெல்லாம் படம் வெளியாகும் முன் விவித் பாரதியில் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார்கள். விவித்பாரதிக்கு முன்னால் படம் வெளியான பிறகு தான் மதராஸ் வானொலியில் படப்பாடல்கள் ஒலிபரப்பாகும். சிலோன் ரேடியோவில் மட்டும் தான் முன்பாகவே ஒலிபரப்புவார்கள். அதுவும் புதியதாக ஒரு பாடலை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அதை பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியில் தான் அறிமுகம் செய்வார்கள்.
இந்த ஓடும் நதி பாட்டைப் பொறுத்த வரையில் விவித்பாரதியில் அதிகம் ஒலிபரப்பினார்கள். அப்போதெல்லாம் சென்னை மற்றும் ஒரு சில ஊர்களில் மட்டும் தான் விவித்பாரதியின் ஒலிபரப்பைக் கேட்க முடியும். செங்கல்பட்டைத் தாண்டினால் அதிகம் சிக்னல் கிடைக்காது. சிலோன் ரேடியோவின் புண்ணியம் தான். அதே போல் சிலோன் ரேடியோவின் ஒலிபரப்பு சென்னைக்குக் கேட்காது. காலையில் ஒரு சில மணி நேரம், மாலையில் ஒரு சில மணி நேரம் மட்டுமே கேட்கும். ஷார்ட் வேவ் சிற்றலை ஒலிபரப்பில் தான் சிலோன் ரேடியோ கேட்கும். ஆனால் தெளிவாக இருக்காது.
அப்படி விவித்பாரதியில் இப்பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அன்று முதல் இன்று வரை என் நெஞ்சில் நிரந்தரமாகக் குடிகொண்டதுடன் நம்மையெல்லாம் தீவிர எம்எஸ்வி வெறியர்களாகவும் ஆக்கி விட்டது.
விவித்பாரதி ஆரம்பித்த புதிதில் காலை 9.30 முதல் 10.00 வரை உங்கள் விருப்பம், மதியம் 2.30 மணிக்கு திரை அமுதம், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மாலை இசை, இரவு 7.45 மணி முதல் 9.00 மணி வரை தேன்கிண்ணம், 9.00-9.15 மணி வரை வண்ணச்சுடர் இவ்வளவு தான். இதில் காலை 9.30 மணிக்கு உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில் பல நாட்கள் இடம் பெற்றது. கூடவே சிவந்த மண், நம்நாடு, தங்க சுரங்கம், அடிமைப் பெண், சாந்தி நிலையம் என கொடிகட்டிப் பறக்கும்.
சென்னை குளோப் தியேட்டர் என நினைக்கிறேன். இந்தப் பாட்டிற்காகவே சென்று படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு இது வரை பார்க்கவில்லை.
இப்பாடல் காட்சியில் சூழ்நிலையை மெல்லிசை மன்னர் தன்னுடைய இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார். கதைப்படி ஒரு நிர்ப்பந்தத்திற்காக சரோஜா தேவி ரவிச்சந்திரனுடன் டூயட் பாடுவாரே தவிர மனதில் ஒரு சோகம், பயம் போன்ற வேறு உணர்வுகள் இருக்கும். ரொம்ப நாளைக்கு முன்பு பார்த்ததால் முழுசாக நினைவில்லை. ஆனால் சரோஜா தேவி சோகமாத்தான் டூயட் பாடுவார். அவருடைய முகத்தை நன்கு கவனித்தால் தெரியும். அதை விட அருமையாக இசையரசியின் குரலில் இதை கவனிக்கலாம். இதை கவியரசர் வரிகளில் சொல்லி யிருப்பார் வஞ்சம் இல்லாமல் வாடைக் காற்றிலே ஒன்றில் ஒன்றாக வேண்டும்.. இதிலேயே பாடல் மற்றும் படத்தின் கதையையே சொல்லி யிருப்பார்.
இந்தப் பாடல் முடிவடைந்தவுடன் சரோஜா தேவியின் நடிப்பு நம் கண்களைக் குளமாக்கி விடும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இப்படம் நினைவிருக்கிறது..
அருமையான பாடலை வழங்கிய வாசு சாருக்கு பாராட்டுக்கள்..
முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்..
இப்படத்தை ரவியின் அற்புதமான நடிப்பிற்காக கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.
அப்புறம்..
ஒரு நூறு முறையாவது மெல்லிசை மன்னரின் பின்னணி இசைக்காகப் பார்க்க வேண்டும்.
-
20th October 2014, 05:23 AM
#604
Junior Member
Newbie Hubber
திரை இசைத் திலகம்” கே.வி. மகாதேவன் -26 பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்
"இசை மனிதகுலத்தை ஒன்று சேர்க்கிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த நிறத்தவராக இருந்தாலும் அனைவரும் ஒன்றுதான் என்று நிரூபிப்பது இசை." ஜான் டென்வர்.
தமிழ்த் திரை உலகின் சாதனைப் படங்களின் வரிசையில் "இதயக் கமலம்" படத்திற்கும் கண்டிப்பாக ஒரு இடம் கொடுக்கலாம்.
சிவாஜி-m.g.r போன்ற உச்ச நட்சத்திரங்கள் கிடையாது.
அப்போதுதான் திரை உலகில் அறிமுகமாகி இருந்த ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து - அதிவும் வண்ணத்திரைப்படமாக தயாரித்து ஒரு வெள்ளி விழப்படமாக கொடுக்க முடிந்தது என்றால் அது மகத்தான சாதனை தானே.
ரவிச்சந்திரன் - கே.ஆர். விஜயா ஆகிய இருவரையும் தவிர ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் என்றால் அது ஷீலா, ருக்மணி (நடிகை லக்ஷ்மியின் தாயார்) ஆகிய இருவர்தான் என்னும்போது அந்த வியப்பு அதிகமாகத்தான் செய்கிறது.
அந்த வெற்றிச் சாதனைக்கு சரியான பக்கபலமாக கே.வி. மகாதேவனின் பாடல்கள் அமைந்தன.
கவியரசு கண்ணதாசன் பாடல்கள் அனைத்தையும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதிக்கொடுக்க-அந்த வரிகளைப் பார்த்தவுடன் தானாகவே கே.வி. மகாதேவனிடமிருந்து மெட்டுக்கள் துள்ளி வந்து விழுந்தன.
பாடல்கள் அத்தனையுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
கதாநாயகன் ரவிச்சந்திரனுக்கு பி.பி. ஸ்ரீநிவாஸையும், இரட்டை வேடமேற்ற கே.ஆர். விஜயாவுக்கு பி.சுசீலா, எஸ். ஜானகி ஆகிய இருவரையும் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.
இரண்டாவது கதாநாயகியான ஷீலாவிற்கும் பி. சுசீலாவின் குரலில் ஒரு பாடல்.பாடல்
"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" - பி.பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலாவின் இணைவில் ஒரு அருமையான டூயட். விறுவிறுப்பான இணைப்பிசையும் பாடலுக்கான மெட்டும் மனதை கவருகின்றன.
"தோள் கண்டேன் தோளே கண்டேன்" - பி.பி. ஸ்ரீநிவாஸின் கந்தர்வக் குரலில் பாடல் ஒலிக்க ஹம்மிங்கிலேயே அவரைத் தொடர்வார் பி.சுசீலா. கேட்பவரை மயங்கவைக்கும் பாடலில் சரணத்துக்குச் சரணம் மாறும் இணைப்பிசையில் தான் எத்தனை பரிமாணங்கள்!
இப்போதெல்லாம் வெரைட்டி வெரைட்டி என்று பெரிதாகத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோமே அந்தச் சாதனைகளைச் சத்தமே இல்லாமல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கே.வி. மகாதேவன்.
இந்த ஒரு பாடலில் மட்டும் என்று இல்லை. கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்களில் ஒன்றுக்கொன்று அவர் கொடுத்திருக்கும் வித்தியாசமான நுணுக்கங்களும் அசைவுகளும் "அட" என்று புருவங்களை உயர்த்தவைக்கும்.
"மேளத்தை மெல்லத்தட்டு மாமா - உன் தாளம் இப்போ சரிதானா" - எஸ். ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலில் சரணங்கள் விருத்தமாகவும் பாடலாகவும் விரியும் அழகே தனி.
"மலர்கள் நனைந்தன பனியாலே" - மோகன ராகத்தில் மகாதேவன் அமைத்திருக்கும் இந்தப் பாடலின் அழகும் இனிமையும் வார்த்தைகளுக்கு அவர் கொடுத்திருக்கும் அழுத்தமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.
மோகன ராகத்தில் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் அமைந்திருந்தாலும் இந்தப் பாடல் முதலிடம் பெறும் முத்தான ஒரு பாடல்.
கதைப்படி மனைவி இறந்துவிட்டதால் அவள் நினைவாகவே வாழும் கதாநாயகனின் மனதுக்கு உற்சாகம் கொடுக்க அவனது முறைப்பெண்ணாக வரும் இரண்டாவது கதாநாயகி நடனமாடிப் பாடுவதாக ஒரு காட்சி.
அவள் ஆடிப்பாடும்போது அவளுடைய இடத்தில் கதாநாயகனின் மனக்கண் முன்னால் அவன் மனைவி தோன்றுவதாக காட்சி விரியும்.
இப்படிப்பட்ட சூழலில் அமைந்த பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதமே தனி.
முறைப்பெண் பாடும்போது ஒரு ராகத்திலும், அவனது கற்பனை நாயகி பாடுவதாக அமையும்போது வேறு ஒரு ராகத்திலும் அமைத்து ஒரே பாடலில் இரு வேறு சூழ்நிலைகளையும் வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.
ராகம் மட்டும் என்று அல்ல. தாளக் கட்டும், இணைப்பிசையுமே மாறுபடும்.
"என்னதான் ரகசியமோ இதயத்திலே.." என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் ஷீலா, கே.ஆர். விஜயா ஆகிய இருவருமே நடித்திருப்பார்கள். பி.சுசீலாதான் இருவருக்குமே பாடி இருப்பார்.
ஷீலா பாடுவதாக அமைந்த பல்லவியும், சரணங்களும் "காபி" ராகத்திலும், கே.ஆர். விஜயா பாடும் சரணங்கள் "திலங்" ராகத்திலும் முற்றிலும் மாறுபட்ட நடையில் அமைந்த பாடல் இது.
இப்படி எல்லாம் பாடல்கள் இருந்தாலும் படத்தின் பெயர் சொன்னாலே பளிச்சென்று செவிகளில் வந்து அலைமோதும் பாடல் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடல் தான்.
"பாட்டைப் பார்த்ததுமே தானாகவே மெட்டு வந்து விழுந்த பாட்டு" என்று கே.வி. மகாதேவன் சிலாகித்துக் கூறிய பாடல் இது.
சுசீலாவின் தேன்குரலில் இனிமையாக ஒலிக்கும் இந்தப் பாடலின் இணைப்பிசையில் தான் சிதாரும், குழலும், வயலினும் தான் எவ்வளவு ரம்மியமாக தபேலாவுடன் இணைந்து மனத்தைக் கவர்கின்றன.!
படத்தில் பலமுறை இடம்பெறும் பாடல் இது. தீம் சாங் என்பார்களே அது இந்தப் பாடல்தான். படம் முடிவதும் இந்தப் பாடலுடன் தான்.
ஆகமொத்தம் "இதயக் கமலத்தில்" இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றளவும் வாடாமல் திரை இசை ரசிகர்களின் மனங்களை நிறைத்துக் கொண்டு மணம் வீசிக்கொண்டே இருப்பது மறுக்க முடியாத உண்மை.
-
21st October 2014, 05:44 PM
#605
Junior Member
Veteran Hubber
Happy Diwali Greetings to all fellow hubbers and visitors to this thread on RAVI the elite hero with a flair for foot tapping and rhythmic dance movements that are enjoyable even today!
-
24th October 2014, 06:01 PM
#606
Junior Member
Veteran Hubber
SSR : Unforgettable 2nd Generation actor! May his soul rest in peace
On behalf of the 3rd Generation hero Ravi's thread, we express our heartfelt condolences for the sudden demise of beloved SSR.
-
16th November 2014, 07:38 AM
#607
Junior Member
Newbie Hubber
சிவாஜியை தவிர்த்து மிக மிக ஆண்மையான அழகு சுடர் விடும் நடிகர் என்றால் ரவிச்சந்திரனே. ஹிந்தியில் கொண்டாட பட்ட ஷம்மி கபூர் உடன் ஒப்பிட்டால் ரவி மிக இளைஞர்.மிக அழகர். நடனத்திலும் wild and graceful .மிக அழகாக choreographer திட்டத்தில் இணைவார்.மிக மிக கடினமான நடன அசைவுகளை அலட்சியமாக கையாளுவார்.
அவரின் அழகும்,இளமையும் உச்சம் தொட்ட அற்புத படம் அதே கண்கள். கண் கொட்டாமல் பார்க்கலாம். இவர் சிவாஜியின் தம்பியாக ஒரு படம் முழுதும் தோன்றியிருக்கலாம் .(தீபம் படத்தில் இவரை பயன் படுத்தியிருக்கலாமோ?)
கண்ணுக்கு தெரியாதா என்ற ஒரு கிளப் நடனம். அப்பப்பா ரவியின் spontaneous and crisp execution .
ஒரு குழு நடனம், காதலும் இணைந்து தரும் அதீத உற்சாகம்.
டீஸிங் பாடல் ஆபாசம் இல்லாமல் சுவையுடன்,சுகமாக.என்ன ஒரு ஜாலி.
படத்தில் இடம் பெறாத சின்ன பெண் ஒருத்தி சிரிக்கிறாள்.(வேறு யாரோ கொல்டி நடிகருடன் re mix )
-
21st November 2014, 03:37 PM
#608
Junior Member
Newbie Hubber
Thanks to Saradha.
ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு
நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் ‘முத்து’ என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசைஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச்சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).
மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக்கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப்பார்த்து விட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, 'ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப்போங்க' என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறி பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். 'உங்களுக்குத்தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க' என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இப்போது எங்களுக்குள், 'ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது' என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, 'நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?' என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, 'ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே' என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக்கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் 'சார்தான் பேசுறார்' என்றவர் போனில், 'சார், நான் எதிர்வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள்ஸ் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப்பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க...(gap)... அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்' என்று ரிஸீவரை வைத்தவர், 'சார் வரச்சொல்றார்' என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர்வீட்டுக்குப்போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச்சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், 'உள்ளே போங்க' என்றார்.
கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப்பார்த்ததும் பேப்பரை மடித்துக்கொண்டே, 'வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?' என்றவாறு பேச்சைத்துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 'ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?' என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக்கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப்பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத்துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், 'ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதிநாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு' என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப்போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.
'ஷீலா மேடம் இருக்காங்களா?' என்றதும், 'ஷீலா ஒரு மலையாளப்பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க' என்றார். 'அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?' என்று கேட்டோம். 'இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு' என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், 'ஏன்சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?' என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து 'ஏய் என்னடி இதெல்லாம்' என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், 'தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்' என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப்பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்.....
'அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர்கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் பைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்ட்டர் சொல்லிக்கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப்பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.
ரெண்டாவது, டூப் பைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.
அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்புக்கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப்பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்.... இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).
இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க Heros ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத்தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா?. அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?'
என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால்தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா).
மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப்பற்றிப்பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார். இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார். 'சார் நாங்க முத்துசார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்' என்று சொன்னதும், 'அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீ தானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க' என்றார்.
'சார், உங்களை சந்திப்போம்னு ஒருமணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப்போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றோம் கோரஸாக. 'என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக்கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க' என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.
முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சள சளவென்று பேசிக்கொண்டே 'லஸ்கார்னர்' வரை நடந்தே வந்தோம்.
இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார். இந்த திரி துவங்கியதற்கு அவருடன் எதிர்பாராமல் நேர்ந்த அந்த சந்திப்பும் ஒரு காரணம் எனலாம்.
-
21st November 2014, 04:11 PM
#609
Junior Member
Newbie Hubber
"மூன்றெழுத்து"(Thanks to Saradha)
ராமண்ணா - ரவிச்சந்திரன் – ராமமூர்த்தி(tk) என்ற 'r' அணியின் முந்தைய படைப்பான 'நான்' திரைப்படத்தின் அபார வெற்றியைத்தொடர்ந்து, அதே போன்றதொரு வித்தியாசமான படைப்பாக வந்தது 'மூன்றெழுத்து' திரைப்படம்.
முதல்காட்சியில், மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் கப்பல். அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் கதாநாயகன் ரவிச்சந்திரன், கப்பல் கேண்டீனில் போய் அமர, அங்குள்ள பணிப்பெண் ஒரு புத்தகத்தைக்கொடுக்கிறாள். புத்தகத்தைத் திறக்க, டைட்டில்கள் ஓடத்துவங்குகின்றன. டைட்டில் முடிந்ததும், கப்பலில் திருட்டுத்தனமாக பயணம் செய்து வரும் ஆனந்தனைக் கப்பல் காவல்துறையினர் விரட்டிவர, அவர் ரவியிடம் உதவி கேட்டுக் கெஞ்ச, இவரும் நம்பி அடைக்கலம் கொடுக்கிறார். சென்னையில் இறங்கியதும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்து விட்டு, தந்தை மேஜரைப்பார்க்கச்செல்கிறார். எங்கே?. சிறைச்சாலைக்கு. சிறைச்சந்திப்பில் மேஜர், தான் சிறைக்கு வந்த சம்பவத்தைக்கூற....... 'ப்ளாஷ்பேக்' ஆரம்பம்......
லட்சாதிபதியொருவர் தன்னுடைய பார்ட்னருடனான பார்ட்னர்ஷிப் பிஸினஸை முடித்துக்கொண்டு, தன் மனைவி மக்களோடு ஊர் திரும்பிச்செல்ல இருந்த நேரம், பார்ட்னரிடமிருந்து தனக்கு வரவேண்டிய பங்குத்தொகை வர தாமதமாகியதால், தன் குடும்பத்தினரை விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டு, தன்னிடமிருக்கும் ஐந்து லட்ச ரூபாயை (இன்றைய மதிப்பு ஐந்துகோடி) நோட்டுக்கட்டுகளாக (அப்போது அதிகபட்ச கரன்ஸி நோட்டே நூறு ரூபாய்தான், எனவே 5,000 கட்டுக்கள்) பெட்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது பார்ட்னர் 'என்னத்தே' கன்னையா தன் பரிவாரங்களுடன் வருகிறர். வீட்டில் தனியே இருப்பவரிடம், பணத்தை செட்டில் பண்ணுவதாகச்சொல்லி, எதிர்பாராத நேரம் துப்பாக்கியால் சுடுகிறார். சுடப்பட்டபோதும் அவர் கையிலிருந்த துப்பாக்கியைப்பிடுங்கி, அதைக்காட்டி மிரட்டியபடியே பணப்பெட்டியுடன் வெளியேறும் அந்தப்பணக்காரர், அப்போதுதான் தன் குடும்பத்தை விமானத்தில் அனுப்பி விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் தன் விசுவாசமான டிரைவரான மேஜர் சுந்தர்ராஜனிடம் பணப்ப்ட்டியை ஒப்படைத்துவிட்டு உயிரை விடுகிறார். பணப்பெட்டியுடன் காட்டுக்குள் ஓடும் டிரைவர், அதை ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அது எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பேப்பரில் குறிப்பு எழுதிக்கொண்டிருக்கும்போது, தன்னைத்தாக்கி பெட்டியை அபகரிக்க வரும் ஒருவனைக்கொன்று விடுகிறார். பின்னர் குறிப்பை பூர்த்தி செய்து, அதை மூன்று பகுதிகளாகக்கிழித்து, தன் நண்பர்களான ஊட்டியிலிருக்கும் அசோகனிடம் ஒரு பகுதியையும், நாகர்கோயிலில் இருக்கும் ஓ.ஏ.கே.தேவரிடம் ஒரு பகுதியையும், ஐதராபாத்திலிருக்கும் சுருளிராஜனிடம் ஒரு பகுதியையும் கொடுத்துவிட்டு, போலீஸில் சரண்டர் ஆகி சிறைக்குச்செல்கிறார்.
ஃப்ளாஷ்பேக் முடிகிறது. தான் குறிப்புக்களைக்கொடுத்த அம்மூவரின் விலாசங்களையும் ரவியிடம் மேஜர் கொடுத்து, அந்தக்குறிப்புகளை ஒன்று சேர்த்து அவற்றின் உதவியுடன் பணப்பெட்டியை எடுத்து, தன் முதலாளி குடும்பத்திடம் ஒப்படைக்குமாறு தன் மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். வீட்டுக்குச் செல்லும் அவர் தன்னுடன் தங்கியிருக்கும் ஆனந்தனிடம் பேச்சோடு பேச்சாக அந்த விலாசங்களைச்சொல்லி விட்டுப்புறப்படுகிறார். வந்தது வில்லங்கம். ஆம்... ஆனந்தன் யாருமல்ல வில்லன் 'என்னத்தே' கன்னையாவின் கையாள்தான். அட்ரஸைக் கைப்பற்றியதுபோல அந்த குறிப்புகளையும் கைப்பற்றுமாறு ஆனந்தனை அனுப்ப, ரவிக்கு முன்பாகவே ஒவ்வொரு இடத்துக்கும் ஆனந்தனும் போகிறார். அந்த குறிப்புகளை எப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் கைப்பற்றி அந்தப்பணப்பெட்டியை எடுக்கின்றனர் என்பதை, மூன்று மணி நேரம் படு சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்
முதலில் அசோகனைத்தேடி தன் நண்பன் தேங்காயுடன் ரவி போவதற்குள், அசோகனை வில்லனின் ஆட்கள் கடத்தியிருப்பார்கள். அவரைத்தேடிப்போகும்போது, அசோகனின் மகள் ஜெயலலிதாவும் இவர்களோடு சேர்ந்துகொண்டு அப்பாவைத்தேடி புறப்படுவார். (அப்படிப்போகும்போது, நாளடைவில் ரவியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கிவிடுவார்கள் என்பதை ஊகிக்காவிட்டால் நாம் தமிழ்ப்படம் பார்க்க லாயக்கில்லாதவர்கள்). ........(2)
இரண்டாவது ஆளான ஓ.ஏ.கே.தேவரோ, தன்னிடம் இருக்கும் குறிப்புக்களைத்தராமல் அடம் பிடிப்பார். அங்கே தேவரின் மைத்துனரும் தெருக்கூத்தாடியுமான நாகேஷும் இவர்களுடன் சேர்ந்துகொள்வார். ஏகப்பட்ட மின்சார வேலிகளுக்கு மத்தியில் அதைப்பதுக்கி வைத்திருப்பார். அவரை ஏமாற்றி அதை எடுக்கும் நேரம் ஆனந்தனும் அவரது ஆட்களும் வர, கடுமையாக சண்டையிட்டு, வில்லன் கோஷ்டியை மின்சார வேலிகளுக்குள் மாட்டிவிட்டு, இவர்கள் தப்பிப்பார்கள். அப்பாடா ஒரு குறிப்பு கிடைத்தது. அசோகனிடம் இருப்பதைக்கைப்பற்ற வேண்டுமே. அதைத்தேடி, அவரைப்பிடித்து வைத்திருக்கும் வில்லன் கூட்டம் தங்கியிருக்கும் இடத்துக்கு இரவில் போய்த்தேட, அவர் தன் குடுமிக்குள் மறைத்து வைத்திருப்பார். விளைவு?. அசோகனின் குடுமி கட். குறிப்பு ரவியின் குரூப் கையில்.
இதனிடையே, முதலாளியின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. முதலாளியின் மூத்த மகள் ஷீலா, ஓட்டலில் நடனமாடி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அதைப் பார்த்து தவறாகப் புரிந்துகொண்டு ரவி ஷீலாவைக்கண்டிக்க, அந்த வேலையையும் விட்டுவிடுகிறார். அடுத்த முறை அவர்களை ரவி சந்திக்கும்போது, அம்மாவைத்தவிர மொத்தக்குடும்பமும் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது. அதிர்ந்து போன ரவி அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனால், அங்கே ஷீலாவின் அம்மா தற்கொலைக்கு முயற்சிப்பதைப்பார்த்து அவரைக் காப்பாற்றி, குடும்ப மொத்தத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, பிளானின் மூன்றாவது பகுதியைப்பெற ஐதராபாத் போகிறார்.
மூன்றாவதாக ஐதரபாத்திலிருக்கும் சுருளியிடம் போனாலோ, அவர் ரவி தன் மகளான ஷ்ரீவித்யாவை ரவி ஊட்டி ஏரியில் காப்பாற்றியதிலிருந்து அவரையே நினைத்து உருகுவதாகவும், வித்யாவை திருமணம் செய்ய ரவி சம்மதித்தால் மட்டுமே குறிப்பைத்தர முடியும் என்றும் கறார் செய்ய, ரவிக்கு (ஷண்முகி கமல் பாணியில்) 'போங்கடா' என்றாகிறது. ஆனாலும், ரவி தன் முயற்சியில் வெற்றிபெற்று, அந்தப்பணப்பெட்டியை கண்டெடுத்து, வறுமையில் வாடும் முதலாளியின் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா, ரவியுடனான தன் காதலை விட்டுத்தர சம்மதிக்கிறார். (இந்த இடத்தில் ஒவ்வொருவரும் பேசுவதாக டி.என்.பாலு 'மூன்றெழுத்து வசனம்' எழுதியிருப்பார் பாருங்க... வாவ்....). இறுதியில் மனம் நெகிழ்ந்துபோன சுருளி, தன் குறிப்பைத்தர சம்மதிக்கிறார்.
மூன்று குறிப்பும் கையில் ரெடி. ஒன்றாக சேர்த்துப்பார்த்தால் 'தி.மு.க.' என்று வருகிறது. (நாகேஷ்: “ஏண்டாப்பா, உங்க அப்பா பெரிய அரசியல்வாதியாக இருப்பாரோ?”). அப்புறம் மாற்றி மாற்றி வைத்துப்பார்த்தால் வருவது 'கமுதி ‘. ஓ... அந்த ஊரில்தான் புதைக்கப்பட்டிருக்கிறதா?. அதே வரிசையில் வைத்து பிளானைத்திருப்பினால், பணப்பெட்டி எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பதை பிளான் தெளிவாகக் காட்டுகிறது. என்ன பயன்?. திடீர் பவர் கட். மீண்டும் கரண்ட் வந்தபோது மொத்த பிளானும் மாயம். சரி, இடம்தான் தெரிந்துவிட்டதே என்று அங்கு போனால், கையில் பிளானுடன் பணப்பெட்டியை தோண்டியெடுத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் வில்லன் மனோகர் (கிளைமாக்ஸில் மட்டும் வருவார்). வழக்கம்போல கிளைமாக்ஸ் சண்டை.
அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நவீன எந்திரங்கள் உதவியுடன் சண்டை போடுகின்றனர். ஓடிக்கொண்டிருக்கும் புல்டோஸரின் பிளேடுக்கு முன்னால், டூப் போடாமல் ரவி, வில்லன் ஆட்களுடன் புரண்டு புரண்டு சண்டை போடுவது நம் உடலை சிலிர்க்க வைக்கும். ஒருவழியாக வில்லன் கோஷ்டியுடன் சண்டையிட்டு பணப்பெட்டியைக் கைப்பற்றியாகிவிட்டது. ஆனால் அதற்குள் மெயின் வில்லன் 'என்னத்தே' கன்னையா தன் ஆட்களுடன் சுருளியின் வீட்டுக்கு வந்து அங்கிருக்கும் சுருளி, அவர் மகள் வித்யா, ஜெயலலிதா மற்றும் முதலாளியின் மொத்தக்குடும்பத்தையும் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக வைத்து, சோபாவின் பின்னால் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டு பணப்பெட்டியுடன் ரவியின் வரவை எதிர்பார்த்திருக்க, வெற்றிகரமாக பெட்டியுடன் ரவி, தேங்காய், நாகேஷ் கோஷ்டி வர..... யாரும் எதுவும் பேசவில்லை, எல்லோரும் பிரமைபிடித்தவர்கள் போல சோபாக்களில் உட்கார்ந்திருக்க, சுற்றும் முற்றும் பார்க்கும் ரவிக்கு, சற்று தொலைவில் கிடக்கும் கன்னையாவின் அந்த ஃபேமஸான தொப்பி கண்ணில் படுகிறது....... புரிஞ்சு போச்சு. எதிர்பாராமல் மின்னல்வேகத்தில் வில்லன் கூட்டத்தின்மேல் தாக்குதல் நடத்த, கிளைமாக்ஸ் சண்டையாச்சே. சொல்லணுமா?. பயங்கரமாக சண்டையிட்டு எல்லோருடைய கையும் ஓயும்நேரம் அசோகன் போலீஸுடன் நுழைய... அப்புறம் என்ன முதலாளி மனைவியிடம் பணப்பெட்டியை ஒப்படைப்பதும், ரவியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்வதும், எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதும்.... கொடுத்த காசுக்கு மேலேயே படம் திருப்தியளித்த சந்தோஷத்துடன் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறுவதுமாக.........
"மூன்றெழுத்து"ரவிச்சந்திரனின் புகழ் மகுடத்தில் மற்றுமோர வைரம் என்றால் அது மிகையில்லை. 'மாறன்' என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், படம் முழுக்க அற்புதமான பங்களிப்பைத் தந்திருப்பார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு, பாடல் காட்சிகளில் வேகம் என்று அசரவைத்திருப்பார்.
பளபளவென்ற தங்க நிற முழு கோட், அதே நிறத்தில் தொப்பி இவற்றுடன் மெயின் வில்லனாக வரும் 'என்னத்தே' கன்னையாவை அந்தப் பாத்திரத்தில் போட்ட இயக்குனர் ராமண்ணாவின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அவரும் வழக்கமான வில்லன்களின் உறுமல் பாணியை விட்டுவிலகி நாசூக்கான வில்லனாக, ஆனால் செயலில் படுபயங்கரமான ஆளாக அந்த வேடத்துக்கே புதுப்பொலிவைத் தந்திருந்தார். பிற்காலத்தில் சத்யராஜ் போன்றோர் நடித்த அலட்சிய வில்லன் ரோல்களுக்கு முன்மாதிரி இவர்தான். நெடுநாளைக்குப்பிறகு ஆனந்தன் முழுப்படத்திலும் வில்லனாக வந்து நிறைய சண்டைகள் போட்டார். அசோகனின் நடிப்பை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, அந்த அளவுக்கு 'நான்' படத்தில் பெற்ற நல்ல பெயரைத் தொடர்ந்தார்.
ஜெயலலிதா மாடர்ன் உடைகளில் வந்து இளைஞர்களைக் கவர்ந்ததுடன், வித்தியாசமான நடிப்பையும் தந்திருந்தார். குறிப்பாக, பாதியில் நின்று போன நாகேஷின் வள்ளித்திருமணம் தெருக்கூத்தை, ('கொஞ்சும் கிளி குருவி மைனாவே, கூட்டமாய் இங்கு வராதே') ஆங்கில மெட்டில் தொடர்வது. மெல்லிசை மன்னர் t.k.ராமமூர்த்தி, டி.எம்.எஸ்., l.r.ஈஸ்வரி மூவரின் அபார உழைப்புக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு.
ரவியின் படமென்றால் கதாநாயகியை டீஸ் செய்யும் பாடல் இருக்க வேண்டுமே...!. இருக்கின்றன, ஒன்றுக்கு இரண்டாக. முதல் பாடல், தங்கள் அறையில் புகுந்துவிட்ட பாம்புக்கு பயந்து ரவியிடம் தஞ்சம் புகும் ஜெயலலிதா மற்றும் தோழிகளை கிண்டலடித்து அவரும் தேங்காயும் பாடும் "இரவில் வந்த் குருவிகளா... அடி குட்டிகளா" tms மற்றும் பொன்னுசாமி பாடியது. செட்டுக்குள் படமாக்கப்பட்டது. இன்னொன்று, கிராமத்துப்பெண்களிடம் காருக்கு தண்ணீர் கேட்டு அடாவடியாக நடந்துகொள்ளும் ஜெயலலிதாவை டீஸ் செய்து "ஆடு பார்க்கலாம் ஆடு, இடையழகைப் பார்க்கும் என்னோடு" பாடல் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது.
ஓட்டல் அறையில் தங்கியிருக்கும்போது, குளிக்கும் இடத்தில் ரவியை நினைத்து ஜெயலலிதா பாடும் "காதலன் வந்தான் கண்களில் நின்றான்" பாடல் (சுசீலா) அருமையான மெலோடி.
ஏற்கெனவே நான் படத்தில் ஃபியட் காருக்குள் ஒரு டூயட் எடுத்தாச்சு. இப்போ அதைவிட சின்ன இடம் கிடைக்குமா என்று பார்த்தார் ராமண்ணா. வில்லனிடம் அகப்பட்ட ரவியையும் ஜெயாவையும், ஒரு பெட்டியில் அடைத்து லாரியில் அனுப்ப, நிமிர்ந்துகூட உட்கார முடியாத அந்தப்பெட்டியில் (tms, சுசீலா) டூயட் பாட்டு "பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி, பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சேவல்" அருமையான மெட்டு. அதைவிட அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு. ஒரு ஒளிப்பதிவாளரின் திறமை, இம்மாதிரி சவால் பாடல்களைப் படமாக்குவதில்தான் தெரியும்.
வில்லனின் கோட்டைக்குள் நுழைய தந்திரம் செய்து அவனுடைய அடியாட்களிடம் மயங்கியது போல ஜெயலலிதா பாடும் "பச்சைக்கிளி... இச்சைமொழி... பன்னீரில் போட்டெடுத்த மாங்கனி" பாடலை l.r.ஈஸ்வரி பாடியிருந்தார்.
இத்தகைய, மனதை வருடும் பாடல்களுக்கு நடுவே நம் மனதை உருக வைப்பது ஷீலாவும், அவரது தம்பி தங்கைகளும் தெருவில் பிச்சையெடுக்கும்போது பாடும் பாடல்....
"தெய்வத்தின் கோயில் தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி மனிதன்தான் இல்லையே
இவை இரண்டும் இல்லா வேளையிலே ஏழைப்பெண்கள் வீதியிலே..
..........................................
வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப்போலே
ஆண்டவன் காட்டிய பாதை, ஒரு ஆண்டியின் பிள்ளையைப்போலே"
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இப்பாடல் நம் நெஞ்சை கனக்கச்செய்யும். கந்தல் உடையுடன் குழந்தைகள் தட்டேந்தி பிச்சையெடுக்கும்போது (எப்படி வாழ்ந்த குடும்பம்) நம் கண்கள் கண்ணீரைச் சிந்தும்.
ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், ஆனந்தன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், என்னத்தே கன்னையா, ஓ.ஏ.கே.தேவர், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர் (கௌரவத்தோற்றம்), ஷீலா, அம்முக்குட்டி புஷ்பமாலா, மாஸ்டர் பிரபாகர், 'பராசக்தி' ரஞ்சனி இவர்களோடு ஜெயலலிதாவின் தோழிகள் கூட்டம், வில்லனின் அடியாட்கள் கூட்டம் என்று படம் முழுக்க ஆட்கள் நிறைந்திருப்பார்கள்.
மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி படத்தின் அத்தனை பாடல்களையும் hit பண்ணியிருந்தார். இந்த அருமையான வண்ணப்படத்தை கொஞ்சமும் தொய்வின்றி இயக்கியிருந்தார் ராமண்ணா. கதை வசனத்தை டி.என்.பாலு எழுதியிருந்தார். (டி.என்.பாலு அடுத்த ஆண்டில் (1969) நடிகர்திலகத்தின் 'அஞ்சல்பெட்டி 520' மூலம் இயக்குனர் ஆனார். பின்னர் ரவி நடித்த 'மீண்டும் வாழ்வேன்', கமல் நடித்த 'சட்டம் என் கையில்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கினார்).
ஒரு முக்கியமான கொசுறு தகவல்: 1970-ல் தயாரிக்கத்துவங்கி 1973-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதை 'மூன்றெழுத்து' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.
'மூன்றெழுத்து' 1968-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக, சிறப்பாக ஓடியது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st November 2014, 05:16 PM
#610
Junior Member
Junior Hubber
தற்போது வெகு பிரபலமாக இருக்கும் லெக்கின்ஸ் உடையில் அந்தக்கால ஜெயா வெகு அழகாகத் தோன்றுவார். அவருக்குப் பொருந்தியது போன்று வேறெந்த தமிழ் நடிகைக்கும் லெக்கின்ஸ் பொருந்தியதாக எனக்குத் தெரியவில்லை. ( விஜயஸ்ரீ மட்டும் விதிவிலக்கு. அவர் இன்னும் அழகாக, கவர்ச்சியாகத் தோன்றுவார்.)
நாகேஷ், பூசாரியாக `நானி`ல் கலக்கினார் என்றால், இப்படத்தில் பிள்ளைத்தாய்ச்சியாக வந்து அசத்தியிருப்பார்.. வில்லன் நடிகர்களான அசோகனும், தேவரும் மூன்றெழுத்தில் நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார்கள். தேங்காயும் இப்படத்தில் தன் பங்குக்கு அதகளம் நடத்துவார். சுருளியைப்பற்றி சொல்லவே வேண்டாம்..
முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு இது.. ( நான் மற்றும் இப்படத்திலிருந்தே எம்ஜிஆருக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் புகைச்சல் ஆரம்பமானதாகச் சொல்வார்கள்.)
ஷீலா ( பின்னாட்களில் ரவியின் காதல் மனைவி ) ஹோட்டலில் நடனமாடும் காட்சியில், துணை ஆட்டக்காரர்களுக்கு பொன்வண்ணம் பூசி ஆடவிட்டிருந்தது அந்நாட்களில் வியந்து பேசப்பட்டது. ஷீலாவின் தாயாக ஸ்ரீரஞ்சனி என்று நினைவு( பராசக்தி தங்கை கல்யாணி ). அனேகமாக அவர் நடித்த முதல் வண்ணப்படமாக இருந்திருக்கக்கூடும்..
மிக நல்ல பொழுதுபோக்குச் சித்திரம்.
எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!
Bookmarks