டியர் கிருஷ்ணா சார்,

தங்களின் 'நூல்வேலி' பட பாடல்களின் ஆய்வு நன்றாக இருந்தன. (இப்போது எழுதுகிறேன் என்றால் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளலாம்). இது 'ஆ நிமிஷம்' என்ற மலையாளப்படத்தின் ரீமேக். மலையாளம் கருப்புவெள்ளை. தமிழில் வண்ணம். சரிதா நடித்திருந்த ரோல் மலையாளத்தில் ஸ்ரீதேவி செய்திருந்தார்.

மவுண்ட் ரோடு அண்ணாசிலைக்கு எதிரில் இருந்த 'நியூ எல்பின்ஸ்டன்' என்ற தியேட்டரில் 'ஆ நிமிஷம்' ஓடியது. தியேட்டர் வாசலில் கவர்ச்சியான (வெறும் உள்ளாடையுடன்) ஸ்ரீதேவி கட்-அவுட் வைத்து அதன்மீது நிஜமான ஸ்கர்ட் அணிவித்திருந்தனர். காற்றில் ஸ்கர்ட் பறக்கும்போதெல்லாம் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதைத்ததால் சில நாட்கள் கழிந்து காவல்துறையினர் அந்த கட்-அவுட்டை நீக்கும்படி உத்தரவிட்டனர்.

ஆ நிமிஷம் படத்தின் முடிவில் ஸ்ரீதேவி தற்கொலை செய்வதாக இருக்காது. அந்த தணிக்கை அதிகாரியான பெண்ணின் சிறுவயது மகள் கொலை செய்து விடுவதாக அமைந்திருக்கும். தமிழில் இயக்குனர் சிகரம் முடிவை மாற்றி, சரிதா தற்கொலை செய்துகொள்வதாக அமைத்து, முடிவில் "அவள் மரணத்தை மணந்தாள், மரணம் அவளை அவளை மன்னித்தது" என்று கார்டு போட்டார்.

நூல்வேலி சாந்தியில்தான் ரிலீசானது (ரிஷிமூலத்துக்கு முன்னதாக). சுமாராக ஓடியது. 'மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே' பாடலில் பாடல் வரிகள், பாடிய பாலமுரளி, நடித்தவர்கள் ஆகியோரைவிட அதிகம் கவர்ந்தது பி.எஸ்.லோகநாதனின் கேமரா விளையாட்டுத்தான். மூலைக்கொருவராக நிற்கும் அனைத்து பாத்திரங்களையும் மாறி மாறி கவர் பண்ணிய அழகு

கதை கொஞ்சம் விவகாரமானது. மகளைப்போல ஆதரித்த பெண்ணை சரத்பாபு 'ஒரு மாதிரியாக' அணுகுவது, அதற்கு அந்தப்பெண்ணும் ஒத்துப்போவது என்பதெல்லாம் ஜீரணிக்க முடியாததாக இருந்ததாக பாலச்சந்தர் அதிகம் விமர்சிக்கப்பட்டார்...