-
7th August 2014, 09:42 AM
#11
மாலைமலர் 06/08/14 வாலி


கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
'தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?' என்று கேட்டார், கண்ணதாசன்.
அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.
'நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்' என்று வாலி கூற, 'நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்' என்றார், கண்ணதாசன்.
வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.
'காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.
'நாம் அடிக்கடி சந்திக்கலாம்...' என்று கண்ணதாசன் கூறினார்.
ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.
இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான 'தீதார்' படத்தின் கதையை 'நீங்காத நினைவு' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.
இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.
வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா 'மா.ரா.'வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், 'நீங்காத நினைவு' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.
(ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)
இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.
முக்தா பிலிம்சார் அப்போது 'இதயத்தில் நீ' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் 'நீங்காத நினைவு' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா 'மா.ரா.'வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:
'என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!
1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.
நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.
'நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.
'ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.
உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.
'பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?
பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?'
- என்பதுதான் அந்தப் பல்லவி.
'பூவைக்கு என்பதெல்லாம், டினுக்கு சரியாக வராதே...' என்றார் எம்.எஸ்.வி.
உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.
ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.
நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.
'சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.
விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.
சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.
பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:
'இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?' என்பதுதான் அந்த கேள்வி.
நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.
சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.
'சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...' என்றார் விசு.
சொன்னார் சீனிவாசன்.
உடனே நான் எழுதினேன்:
`ஒடிவது போல் இடையிருக்கும்
இருக்கட்டுமே! - அது
ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே!
சுடுவது போல் கண் சிவக்கும்
சிவக்கட்டுமே! - அது
சுட்டுவிட்டால் கவி பிறக்கும்
பிறக்கட்டுமே!
விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.
பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.
விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.
`என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!
'உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது' என்றார் முக்தா.
எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.
முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை'
இவ்வாறு வாலி கூறினார்.

Last edited by gkrishna; 7th August 2014 at 09:49 AM.
gkrishna
-
7th August 2014 09:42 AM
# ADS
Circuit advertisement
Bookmarks