-
12th October 2014, 06:40 AM
#11
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி . நீங்கள் துவக்கிய இந்த கீற்று கொட்டகை - திரி கடந்த கால நினைவுகளை அசை போட வைக்கிறது . இன்றைய தலை முறையினர் தெரிந்த கொள்ள வேண்டிய பல அபூர்வ தகவல்கள் இணயத்தில் கிடைப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
டூரிங் டாக்கீஸில் பார்த்திட்ட அந்த இனிமையான நாட்கள் -படங்கள் - அனுபவங்கள் நமக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு .
மறந்தே போய் விட்ட ஒரு சரித்திர சான்றை நீங்கள் நினைவு படுத்தி ,அதை திரியில் புதிய உத்வேகத்துடன் அழைத்து செல்ல காரணமான உங்களுக்கு மீண்டும் என் அன்பான நன்றி .
எம்.ஜி.ஆர்.கூட திருமலை டாக்கீஸுக்கு வந்தாரே... சிவாஜி தன்னோட பட ரிலீஸ் அன்னிக்கு இங்க வந்தாரே...’ என தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு சம்பவத்தை இந்த தியேட்டருடன் தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள் 70 வயதைக் கடந்த செங்கல்பட்டு ரசிகர்கள். 'திருமலை டூரிங் டாக்கீஸ்’- சுதந்திரத்துக்கு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் டாக்கீஸ். 'காஞ்சி முருகன் - சென்னை கெயிட்டி - செங்கல்பட்டு திருமலை’ என்பது அந்நாளில் பிரபலமான வாசகம்.

இந்த தியேட்டரை துவக்கிய திருமலை நாயுடு, திரை உலகம் மற்றும் அரசியல் பிரபலங்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஏகப்பட்ட பொறுப்புகளை வகித்தவர். 1940-ல் அவரால் துவங்கப்பட்ட திருமலை டாக்கீஸ், அவரது மறைவுக்குப் பின் மூன்றாம் தலைமுறை வரை தொடர்ந்தது. துரதிருஷ்டவசமாக பொன்விழாவைக் கொண்டாட சில மாதங்களே இருந்த நிலையில் 1989-ம் ஆண்டு இறுதியில் தன் சேவையை நிறுத்திக்கொண்டது இந்தத் திரை அரங்கம். இங்கு இறுதியாகத் திரையிடப்பட்ட படம் 'வாழ்வே மாயம்’!
''அது ஒரு பொற்காலம். 1940-களில் சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் மூணே முக்காலணா டிக்கெட். அதே வசதியைக்கொண்ட திருமலையில் ரெண்டணாதான். பி.யு.சின்னப்பா வோட 'மங்கையர்க்கரசி’, கே.பி.சுந்தரம்பாளோட 'ஒளவையார்’, எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி’னு அந்தக் கால சூப்பர் ஹிட் திரைப்படங்களை முட்டி மோதி பார்த்தது இன்னமும் நினைவில் இருக்கு. டாக்கீஸின் இன்னொரு விசேஷம் சவுண்ட் சிஸ்டம்.
ஜாவர் சீதாராமன் போலீஸா நடிச்ச 'அந்த நாள்’ படத்தை, இந்த சவுண்ட் சிஸ்டத்துக்காகவே 10 தடவைக்கு மேல் பார்த்தேன். தன் மகன்களில் ஒருத்தரான கிட்டப்பாவை இதுக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார் திருமலை நாயுடு. அப்பவே புரொஜக்டரை இத்தாலியில் இருந்து வரவழைச்சார்!'' என பழைய நினைவுகளில் மூழ்கிய காவலர் கணேசன், ''ஏதோ இன்னிக்குத்தான் நடிகர்களுக்குப் பாலாபிஷேகம் பண்றாங்கனு நினைப்பீங்க. பாகவதரோட 'திருநீலகண்டர்’ படத்துக்கு அந்த நாள்லயே அப்படி நடந்திருக்கு. 'நீலகருணாகரணே...’னு பாகவதர் பாடிட்டு வர்ற காட்சிகளில் எல்லாம் விசில் சத்தம் காதைப் பிளக்கும். இப்பவும் தியேட்டரைக் கடந்து போகும்போது அன்னிக்குப் பார்த்த படப் பாட்டு எல்லாம் மனசுல காட்சியா ஓடும்'' என்று சோகமாகிறார்.
இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கோபு இருவரும் கிட்டப்பாவின் வகுப்புத் தோழர்களாம். கிராமத்தில் இருந்து பள்ளிக்குப் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கிட்டப்பா வீட்டில் தங்கித்தான் ஸ்ரீதர் படித்து இருக்கிறார். பின்னாளில் ஸ்ரீதர் கதை, வசனம் எழுதிய முதல் படத்தை தந்தையிடம் வற்புறுத்தி இங்கு திரையிட்டாராம் கிட்டப்பா.
தியேட்டர் வாசலில் பழக் கடை நடத்தி வந்த சந்திரசேகர், ''ஓஹோனு இருந்த இந்த தியேட்டரை வெளியாட்கள் லீஸுக்கு எடுத்து நடத்தினாங்க. அவங்களும் கட்டுப்படி ஆகலைனு விட்டுட்டாங்க. 'மாட்டுக்கார வேலன்’ படம் வந்தப்ப இங்கு இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை வரிசை நின்னுச்சு. 'திருமால் பெருமை’ படத்தை ஒவ்வொரு நாளும் பூஜை போட்டுத்தான் காலைக் காட்சியை துவங்கிவைப்பார் திருமலை நாயுடு'' என்கிறார்.
தியேட்டரின் தற்போதைய நிலை குறித்து சினிமா விநியோகஸ்தரும் நாயுடுவின் பேரன்களில் ஒருவருமான நந்தகுமார், சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்... ''திரையுலகில் என்.எஸ்.கே. முதல் எம்.ஜி.ஆர். வரை பலரும் எங்கள் தாத்தாவுடன் நட்பில் இருந்தார்கள். நாகேஷ் எப்பப் படம் பார்க்க வந்தாலும் 'சவுண்ட் சிஸ்டம் சென்னையை மிஞ்சுதுய்யா. என்ன வித்தை பண்றீங்க?’னு கேட்பாராம். மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரமும் சென்னையில் இருக்கும்போது எப்போதாவது படம் பார்க்க வருவார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஸ்ரீதரோட எல்லாப் படங்களையும் நாங்க ரிலீஸ் செய்தோம். ஸ்ரீதர் எங்க சித்தப்பாவின் நண்பர். அவர் கல்யாணம்கூட எங்க தாத்தா தலைமையில்தான் நடந்தது. பாகவதர், என்.எஸ்.கே, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயானு ஏகப்பட்ட பேர் இங்க வந்து இருக்காங்க. 1979-ல் தாத்தா இறந்த பிறகு தியேட்டரை அப்பா கோவிந்தராஜன், சித்தப்பாக்கள் புருஷோத்தமன், கிட்டப்பா எடுத்து நடத்தினாங்க.
தியேட்டரை மூடினப்ப குறைந்தபட்ச கட்டணம் 65 பைசாதான். பெஞ்ச் டிக்கெட் 1.75 பைசாதான். இப்ப தியேட்டரின் பழம்பெருமையும் கட்டடமும்தான் மிஞ்சி இருக்கு. இருந்தாலும் தியேட்டரை மீண்டும் திறக்க முயற்சி எடுத்துட்டு இருக்கோம். திருமலை டாக்கீஸ் மறுபடியும் செங்கல்பட்டின் தவிர்க்கமுடியாத அடையாளமாக மாறும்னு நம்புறேன்!'' என்கிறார் நந்தகுமார்.
- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th October 2014 06:40 AM
# ADS
Circuit advertisement
Bookmarks