-
17th December 2014, 09:41 PM
#11
Junior Member
Seasoned Hubber
பொய் கோபம்
திரு.வாசு சார், திரு. கிருஷ்ணா சார், திரு. சின்னக்கண்ணன் சார் , எல்லாருக்கும் வணக்கம்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவரான திரு.டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் அருமையான பாடலோடு விரைவில் வருகிறேன் என்று கூறியிருந்தேன். அதன்படி, அருமையான இந்த பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் திரையுலகில் உச்சத்தில் இருந்து பின்னர், சொந்தப் படங்கள் எடுத்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மறுவாழ்வு தந்த படம் கவியரசரின் மாலையிட்ட மங்கை. இப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல் செந்தமிழ் தேன் மொழியாள் என்றாலும் கூட,
எனக்கு மிகவும் பிடித்தது ‘நானன்றி யார் வருவார்...’ பாடல். அதிகபட்ச உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர் திரு.டி.ஆர்.மகாலிங்கம். ஆனால், இந்தப் பாடல் அவர் கீழ் ஸ்தாயியில் பாடியிருக்கும் வித்தியாசமான பாடல். எனது கேள்வி ஞான இசையறிவுக்கு எட்டிய வரை இந்தப் பாடல் ஆபோகி ராகம் என்று கருதுகிறேன். திரு.ஜி.கிருஷ்ணா சார் போன்ற கர்நாடக இசையில் பாண்டித்யம் உள்ளவர்கள்கள்தான் சரியா என்று கூற வேண்டும். இந்த இனிமையான ராகத்தில் திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களோடு ஏ.பி.கோமளா அவர்களின் குரலும் சேர பாடல் முழுவதும் கூடுதல் ஜிலுஜிலுப்பு.
புராண, சரித்திர படங்களில் முருகனாக ,இளவரசராக,நாரதராக, கருவூர் தேவராக பார்த்த திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் மைனாவதியுடன் பூங்காவில் ஓடியாடி டூயட் பாடும் வகையிலும் இது வித்தியாசமான பாடலே.
அதிலும், காதலனும் காதலியும் ஒருவரையொருவர் செல்லமாக பொய் கோபத்துடன் சீண்டிக் கொள்வது போல கவியரசரின் கற்பனை வளமிக்க பாடல் வரிகள்.
‘நானன்றி யார் வருவார்?
இளநங்கை உனை வேறு யார் தொடுவார்?
நானன்றி யார் வருவார்? அன்பே
நானன்றி யார் வருவார்?’
------ இந்தக் கேள்விக்கு அவருக்கு வெறுப்பேற்றும் வகையில் பதில்.
‘ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்
முத்தம் எனக்கே என்றார், சொன்னார், தந்தார்
பேசாமல் பேசுகின்றார், வண்ணம் பாடாமல் பாடுகின்றார்’
------ இந்த வரிகளால் செல்லக் கோபத்துடன் இதழில் காயம் என்ன? என்று கேட்கிறார்.
‘வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில்
இந்த காயம் என்ன? வந்த மாயம் என்ன?’
----- நானில்லாமல் இந்தக் காயம் வந்திருக்க முடியாது. ஆனாலும் வந்திருக்கிறதென்றால் (வேறு யாரையும் காதலி அனுமதிக்க மாட்டாள் என்ற நம்பிக்கையால்) அது மாயமாகத்தான் இருக்க வேண்டும். அது என்ன? என்கிறார்.
இதற்கு மேல் விளையாடினால் வினையாகி விடுமே.. காதலி உண்மையை சொல்கிறாள்.
‘கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்’
----- அதற்கு காதலனின் பதில் கேள்வி,
‘அது கோவை என நினைத்துக் கொண்டதோ?
முத்தம் தந்ததோ? சொந்தம் கொண்டதோ?’
----இதழை கோவைப் பழம் என்று நினைத்து, முத்தம் கொடுத்ததுடன் சொந்தம் கொண்டதோ? என்று கேட்டு காதலனின் பொய்க் கோபம்.
அவரை சமாதானப்படுத்தும் வகையில், காதலி,
‘இன்னும் சந்தேகமா?’
என்ற வார்த்தைகளில் பதில் கேள்வி.
சந்தேகமில்லை என்பதை
‘கண்ணே...’ என்று அன்பு காட்டி ஒரே வார்த்தை பதில்.
அதை ஏற்றுக் கொள்ளும் வகையில், பதிலுக்கு காதலி
‘கண்ணா...’ என்று அழைத்து முழுமையாக சந்தேகத்தை போக்கும் வகையில்,
‘மாதென்னை யார் தொடுவார்?
எந்தன் மன்னன் உமையன்றி யார் வருவார்?
மாதென்னை யார் தொடுவார்?’
அடுத்த பாராவின் வரிகள் இன்னும் தூக்கும்.
‘‘காதல் கரை கடந்த உள்ளமே
அது ஆசை மடை கடந்த வெள்ளமே
இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே..’’
---- கவியரசர் புல் பார்மில் இருந்திருப்பார் போலிருக்கிறது. ராகம், மெல்லிசை மன்னர்களின் அருமையான இசை, பாடகர்களின் இனிய குரல் வளம், கற்பனையைத் தூண்டும் வரிகள். பிரம்மானந்தம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2014 09:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks