Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நான் வணங்கும் தெய்வம் - Part I

    தயாரிப்பு:- சத்யநாராயணா பிக்சர்ஸ்

    இயக்கம்: - K சோமு .

    வெளியான தேதி - 12.04.1963


    திருச்சிக்கு அருகே ஒரு சிற்றூர். அங்கே வசித்து வருகிறார்கள் ருக்மணியும் அவள் சகோதரன் கோபாலும். கோபால் பரீட்சை எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருக்கின்றான். அவர்கள் இருவரின் மாமன் சுந்தரம். நகரில் ஒரு ஆலையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ருக்மணி கோபால் இருவரும் பொருளாதார ரீதியாக சுந்தரத்தை நம்பி இருக்கின்றனர். அவனும் அவர்களுக்கு மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருகின்றான். அது மட்டுமல்லாமல் சுந்தரம் ருக்மணியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஏற்கனவே பெரியோர்களால் பேசி வைக்கப்பட்டிருக்கின்றது .

    சுந்தரம் வேலை செய்யும் ஆலையில் வேலை சரியாக நடக்கவில்லை. அதன் காரணமாக சம்பளம் சரியாக வருவதில்லை என்ற சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக ருக்மணிக்கு சுந்தரத்தால் சரியான நேரத்தில் பணம் அனுப்ப முடியவில்லை. சுந்தரத்தின் சக தொழிலாளிகள் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். சுந்தரத்தையும் அவர்கள அழைக்க சுந்தரம் நலிந்த நிலையில் இருக்கும் நிறுவனத்தை விட்டு செல்வது முறையான் செயல் அல்ல என்று மறுக்கிறான்.

    இதற்கிடையில் ஊரில் ஒரு கல்யாண தரகர் ருக்மணி மற்றும் கோபாலிடம் சுந்தரம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறான் என்றும் ஆகவே ருக்மணிக்கு தான் ஒரு வரன் பார்த்திருப்பதாகவும் சொல்கிறார். அவர் சொல்வதை நம்பாத கோபால் கோவை சென்று சுந்தரத்தை நேரில் சந்திக்கிறான். சுந்தரத்திடமே வேறு கல்யாணத்தைப் பற்றி கேட்க தரகர் சொன்னது பொய் என்று தெரிகிறது. தன மாமா சுந்தரத்திடம் தன் ஹால் டிக்கெட் நம்பரை சொல்லிவிட்டு ஊருக்கு திரும்புகிறான் கோபால் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வரும் தரகர் ருக்மணி கல்யாணத்தைப் பற்றி பேச, மனைவியை இழந்த ஒரு வயதானவருக்கு இரண்டாம் தாரம் அந்த வரன் என அறியும்போது கோபால் கோவ்மடைந்து தரகரை விரட்டி விடுகிறான். ருக்மணியிடம் சுந்தரம் பற்றிய உண்மையை கூறுகிறான்.

    பரீட்சை ரிசல்ட் வருகிறது. கோபால் பாஸாகி விடுகிறான். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தும் பொருளாதார சூழலால் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுக்கிறான். கோபால் பாஸாகி விட்ட செய்தியை தெரிந்துக் கொண்டு ஊருக்கு வரும் சுந்தரம் அவன் தொடர்ந்து படிக்க வேண்டும் என வற்புறுத்துகிறான். தன் அக்கா ருக்மணியை கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கோபால் வற்புறுத்த சுந்தரம் ருக்மணி திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து மனைவியையும் கோபாலையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்படும் நேரத்தில் நிறுவனம் மூடப்பட்டு விட்டது எனவே வரவேண்டாம் என்று கடிதம் வந்து விடுகிறது. சற்று இடிந்துப் போனாலும் மனம் தளராமல் ஊருக்கு மூவரும் கிளம்புகிறார்கள்.

    அங்கே சென்று முயற்சித்தும் சுந்தரத்திற்கு வேலை கிடைக்கவில்லை அதனால் கோபால் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்லலாம் என்று முடிவெடுக்க சுந்தரம் ஒப்புக் கொள்ள மறுத்து ஒரு சில நகைகளை விற்று கல்லூரிக்கு பணம் கட்டுகின்றான்.

    அதே ஊரில் பெரிய பணக்காரர் பிள்ளை. அவரின் ஒரே மகள் லீலா. மனைவியை இழந்த அவர் பெண்ணை பாசமாக வளர்கிறார். ஆனால் அதே நேரத்தில் பணப் திமிர் பிடித்தவர். படிப்பை பாதியில் நிறுத்திய கோபால் இவரிடம் கணக்குப் பிள்ளையாக வேலைக்கு சேர்கிறான். லீலா கோபால் மேல் விருப்பம் கொள்கிறாள் ஆனால் மனதுக்குள் விருப்பம் இருப்பினும் கோபால் அதை வெளிக்காட்டவில்லை.

    குடும்பத்தை காப்பற்றுவதற்காக சுந்தரம் கூலி வேலைக்கு போகிறான். ஓரிருமுறை மூட்டை சுமந்து செல்லும்போது கோபால் எதிரே வந்துவிட அவனுக்கு தெரியாமல் ஒளிந்துக் கொள்கிறான்.

    கோபாலும் லீலாவும் வீட்டில் உட்கார்ந்து சிரித்துப் பேசுவதை காணும் லீலாவின் தந்தை கோபாலை வேலையிலிருந்து தூக்கி விடுகிறார். அடுத்து என்ன செய்வது என்று மனம் உடைந்து வீட்டில் இருக்கும் கோபாலை சந்திக்கும் லீலா தன்னால்தான் அவனுக்கு வேலை போனது என்பதனால் ஆயிரம் ருபாய் அவனிடம் தருகிறாள். முதலில் வாங்க மறுக்கும் கோபாலை கட்டாயப்படுத்தி பணத்தை கொடுக்கிறாள்.

    இதற்கிடையில் கோபாலுக்கு வேலை போய்விட்டது என்ற விஷயம் கேள்விப்பட்டு அவன் முதலாளி வீட்டிற்கு செல்லும் சுந்தரத்திடம் ரூபாய் ஆயிரத்தை திருடிக் கொண்டு கோபால் ஓடிவிட்டதாக முதலாளி சொல்கிறார். கோபால் திருடியிருக்க மாட்டான் என சுந்தரம் வாதிக்க கோபாலை கூட்டிக் கொண்டு ருக்மணி அங்கே வருகிறாள். முதலாளியும் அவர் உதவியாளரும் கோபாலை சோதனை செய்ய ஆயிரம் ரூபாய் அகப்படுகிறது. .

    தன் மருமகன் திருடி விட்டான் என்றதும் கோவத்தை அடக்க முடியாமல் கோபாலை சுந்தரம் அடித்து எங்கேயாவது போய் விடு என விரட்டி விட மனம் வெறுத்து போகிறான் கோபால். அந்நேரம் அங்கு வரும் லீலா நடந்ததென்ன என்று விளக்க ருக்மணி சுந்தரத்திடம் அநியாயமாக என் தம்பியை அடித்து விரட்டி விட்டீர்களே, அவனைப் போய் கூட்டி வாருங்கள் என்று சொல்ல சுந்தரம் கோபாலை தேடி செல்கிறான். யாரோ ஒருவன் கோபால் சென்னைக்கு சென்றிருப்பதாக சொல்ல சுந்தரமும் சென்னை செல்கிறான்.

    ஒரு முறை தெருவில் மயக்கம் போட்டு விழுந்துவிட்ட ஒரு ஏழையை சுந்தரம் ஒரு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அந்த நபருக்கு ரத்தம் கொடுக்க நேர்கிறது. அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுந்தரத்தை வைத்து ஒரு பரிசோதனை முயற்சி நடத்த முடிவு செய்கிறார். தான் கண்டுபிடித்த ஒரு வீர்ய மருந்தை ஊசி மூலம் சுந்தரத்திற்கு செலுத்த அவன் முகம் விகாரமாகி அவன் உடலில் அசுர பலம் ஏறுகிறது. .

    அசுர பலம் என்றால் மிருங்கங்களை கூட சர்வ சாதாரணமாக தூக்கி வீசக் கூடிய பலம். சோதனை முயற்சியில் ஈடுபட்ட மருத்துவர் காவல்துறையின் உதவியை நாட அவர்கள் சுந்தரத்தை பிடித்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் மீண்டும் சேர்க்க மாற்று மருந்து செலுத்தி அவனை நார்மலாக்குகிறார் அந்த தலைமை மருத்துவர். தன் கண்டுபிடிப்பு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாட அந்த அளவிட முடியா ஆனந்தம் அவருக்கு கடுமையான மாரடைப்பை ஏற்படுத்த அவர் உயிர் துறக்கிறார். ஆனால் அதற்கு முன்னரே தன் சொத்துகளையும் மருத்துவமனையையும் பராமரிக்கும் பொறுப்பை தன் உதவியாளரிடம் ஒப்படைக்க அந்த உதவியாளர் சுந்தரத்தையும் அங்கே தங்கி விடுமாறு வற்புறுத்தி இருக்க வைத்துவிடுகிறான்.

    சென்னையில் கோபாலை தேடி அலையும் சுந்தரத்தால் அவனை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு முறை ஒரு பூங்காவில் ஒருவர் ஏராளமான பணம் அடங்கிய பையை விட்டு சென்று விட அதை உரியவரிடம் சேர்கிறான் கோபால். ஒரு சாரிட்டி டிரஸ்ட் நடத்தும் அந்த மனிதர் கோபாலுக்கு அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு வேலை போட்டு தருகிறார்.

    இதற்கிடையில் கணவன் சகோதரன் இருவரும் இல்லாத சூழலில் ருக்மணி ஒரு அரிசி மில்லில் வேலைக்கு செல்கிறாள். அவளின் சூழ்நிலையை புரிந்துக் கொள்ளும் ஆலை முதலாளி அவளை அடைய திட்டம் போடுகிறான். மாற்று சேலை கூட இல்லாமல் கஷ்டப்படுகிறாள் என்பதை தெரிந்துக் கொண்டு புது சேலை வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்கே இரவு வருகிறான். ருக்மணி ஆவேசம் கொண்டு அவனை அடித்து விரட்டுகிறாள். ஆனால் இரவு முதலாளி வருவதையும் சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி போவதையும் பார்க்கும் அக்கம் பக்கத்தினர் ருக்மணியை தவறாக பேசுகின்றனர்.

    தன் மனைவி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள், எனவே அவளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று சுந்தரம் சொல்ல அதன்படி மருத்துவமனையிலிருந்து ருக்மணிக்கு பணம் அனுப்புகிறார்கள். ஊரார் பழிசொல்லால் தவிக்கும் ருக்மணி அப்படிப்பட்ட ஒரு அவப்பெயரோடு தன் கணவனிடம் சேர வேண்டாம் என நினைத்து தானும் தன் குழந்தையும் தற்கொலை செய்துக் கொண்டதாக தபால்காரரிடம் சொல்லிவிட மணியார்டர் திரும்ப போய்விடுகிறது, ஆனால் மருத்துவமனையில் இது சுந்தரத்திற்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.

    மனைவியையும் குழந்தையையும் தேடி ஊருக்கு வரும் சுந்தரம் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர் என்பதைக் கேட்டு நிலைக் குலைந்து போகின்றான். ஆனால் அவனை பார்த்துவிடும் ருக்மணி தூங்கிக் கொண்டிருக்கும் சுந்தரத்திற்கு தெரியாமலே குழந்தையை அவன் பக்கத்தில் போட்டு விட்டு போய் விடுகிறாள். அனாதை குழந்தை என நினைத்து சுந்தரம் தன்னுடன் எடுத்துச் சென்று வளர்கின்றான்.

    குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு தற்கொலை செய்துக் கொள்ளப் போகும் ருக்மணியை தடுத்து காப்பாற்றும் ஒரு பெண்மணி தான் செய்யும் கைத்தொழிலில் ருக்மணியையும் சேர்த்துக் கொள்கிறாள். விரைவில் ருக்மணி தானே அப்பளம் தயாரிக்கும் தொழிலில் கைதேர்ந்து விடுகிறாள்.

    சில வருடங்கள் கழித்து சுந்தரமும் கோபாலும் தற்செயலாய் சந்திக்க அதன் மூலம் ருக்மணி இறக்கவில்லை என்று தெரிந்து சுந்தரம் திருச்சிக்கு செல்ல அங்கே ருக்மணியை சந்திக்க அவள் குற்றமற்றவள் என்று ஆலை முதலாளியே ஒப்புக் கொள்ள தன்னிடம் வளர்பவள்தான் தன் மகள் என சுந்தரம் தெரிந்துக் கொள்ள, கோபால் லீலா இருவரும் இணைய, சுபம்!

    (தொடரும்)

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •