-
27th September 2015, 04:08 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
(அமெரிக்க) நரி பரியான கதை
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சொற்றொடர் ஈசனாரை போற்றிப்பாடும் திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். அந்த திருவாசகத்தை எழுதியவர்தான் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். தலைவருக்கு பல வகையில் பெருமையும் சிறப்பும் வெற்றிகளும் பெற்றுத் தந்த, தீரர் கோட்டமாம் மதுரையில் மேலூர் அருகே வாதவூர் என்ற ஊரில் பிறந்தவர்.
நான் எல்லாரையும் அழைப்பது போல பெயருக்கு முன்னே மரியாதை விகுதியாக திரு சேர்த்ததால் திருவாதவூர். அதனால், திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக பணியாற்றினார்.
தனது படைக்கு உயர்ந்த ரக குதிரைகள் வாங்கி வர அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து அனுப்புகிறான் மன்னன். மதுரையில் இருந்து குதிரை வாங்க சோழநாட்டுக்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையை (அதுதான் இன்றைய ஆவுடையார் கோயில்) அடைந்தபோது இறைவனைக் கண்டு உபதேசம் பெற்று மந்திரி பதவியை துறந்து துறவு பூண்டார் வாதவூரார். ஆவுடையார் கோயில் என்ற புகழ்பெற்ற கோயிலை கட்டினார், குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தில்தான்.
ஆத்திரமடைந்த மன்னன் இவரை கொடுமைப்படுத்த, இறைவன் அருளால் காட்டில் இருந்த நரிகள் எல்லாம் பரிகளாகி (குதிரையாகி) மதுரை சேர்ந்தன. மன்னனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அன்றிரவு பரிகள் (குதிரைகள்) மீண்டும் நரியாக மாறி, ஏற்கனவே இருந்த குதிரைகளை கடித்து விட்டு ஓடின.
பின்னரும் மன்னன் கோபம் கொண்டு வாதவூராரை வைகை ஆற்று சுடு மணலில் நிறுத்தி வதைக்க வைகையில் தண்ணீர் வந்து ....... அதெல்லாம் பெரிய கதை . முடிவு சுபம்தான். இல்லாவிட்டால் திருவாதவூராரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நமக்கு கிடைத்திருக்குமா? நமக்கு நரி பரியான கதை வரை இப்போதைக்கு போதும்.
எதற்கு சொல்கிறேன் என்றால், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமான், நரிகளை பரிகளாக்கி (குதிரைகளாக்கி)யும் கூட, அவை மீண்டும் நரிகளாக மாறி காட்டுக்கே ஓடிவிட்டன என்கிறது புராணம்.
அமெரிக்க நரியின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அம்பலப்படுத்தியது.
இதை அமெரிக்காவும் வரவேற்று போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிலும் சில மாதங்களுக்கு முன் முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. அட, அமெரிக்காவுக்கும் நியாயம் தெரிகிறதே? அமெரிக்க நரி, ஒருவேளை பரியாகி விட்டதா? என்ற வியப்பு அடங்குவதற்கு முன்பே, பரியான அமெரிக்கா வழக்கம் போல மீண்டும் நரியாகி விட்டது.
இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு விசாரணையே போதும். சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறி தனது சுயரூபத்தை காட்டிவிட்டது அமெரிக்க ஏகாதிபத்யம். போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு பிரதிநிதிகளும் இலங்கை நீதிபதிகளும் கொண்ட கலப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கருத்து பற்றி அமெரிக்கா மூச்சு விடவில்லை.
இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற ஆதரவு கொடுத்த எல்லா கட்சிகளின் தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். காங்கிரசும் தீர்மானத்தை ஆதரித்திருப்பது முரண் நகை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தீவிரம் காட்ட வேண்டும். இலங்கையில் அநியாயமாக தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்.
சர்வதேச விசாரணைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போன்று நடித்த அமெரிக்கா, பின்னர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இதுதான் நவீன, நரி பரியாகி மீண்டும் நரியான கதை. என்ன இருந்தாலும் எந்த வேடம் போட்டாலும் சுயரூபம் மாறுமோ? மாறாது.
இதைத்தான் 1962ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற குடும்பத் தலைவன் படத்தில் தலைவர் பாடுகிறார் மாறாதய்யா மாறாது... என்று.
ஓவல் வடிவத்தில் ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ் அணிந்து மவுத் ஆர்கன் இசைத்தபடி வரும் ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகில் மயங்காதார் இருக்க முடியுமா? மேலே உள்ள படம் அந்த பாடல் காட்சிதான். (படத்தை பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.)தலைவரின் பின்னனியில் விசிறிவாழை பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் கதிர்பரப்பி நிற்பது போல காட்சி தரும். அதற்கே தனியாக கைதட்டல் அள்ளும். ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பே இந்தப் படத்தில் நடித்துள்ளார். கபடி விளையாட்டு போட்டி காட்சியில் நடுவராக வருவார்.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வென்ற வரிகளில், பாடகர் திலகத்தின் குரலில் காலத்தை வென்றவர் திரையில் பாடிய சிந்தையை விட்டு அகலாத பாடல்;
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் (மாறாதய்யா மாறாது)
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
27th September 2015 04:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks