-
7th October 2015, 11:26 AM
#11
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
41

'ஜாம் ஜாம் என்று சந்தோஷமா'
'யானை வளர்த்த வானம்பாடி மகன்'
அடுத்து பாலாவின் தொடரில் 'யானை வளர்த்த வானம்பாடி மகன்' படப் பாடல். 1971-ல் ரிலீஸ் ஆகி நன்றாகவே ஓடிய வண்ணப்படம்.

1960-ல் நீலா ப்ரொடக்ஷன்ஸ் மலையாளத்தில் தயாரித்த 'ஆன வளர்த்திய வானம்பாடி' என்ற படம் வெளியாயிற்று. தமிழிலும் 'டப்' செய்யப்பட்டு வெளி வந்தது. இதில் வானம்பாடி ரோலுக்கு குமாரி என்ற நடிகை நடித்திருந்தார். நாயகன் ஸ்ரீராம்.
'யானை வளர்த்த வானம்பாடி மகன்' இப்படத்தின் தொடர்ச்சி என்று கொண்டாலும் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
சரி! விஷயத்திற்கு வருவோம்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்தவர் 'விஜயபுரி வீரன்' C.L.ஆனந்தன். கட்டுமஸ்தான உடல் கொண்டவர் ஆதலாலும், மிருகங்களுடன் சண்டைக் காட்சிகளில் 'டார்ஜான்' ரேஞ்சுக்கு மோதும் தைரியம் பெற்றிருந்ததாலும் இந்த ரோலுக்குப் பொருந்தினார். மனோகர் இப்படத்தின் வில்லன் என்று நினைவு.

முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்ட இந்த வண்ணப்படத்தில் கவர்ச்சி அம்சங்கள் தூக்கலாகவே இருந்தது. 'திரை இசைத் திலகம்' இப்படத்திற்கு இசை. மலையாளத்தின் தேவராஜன் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் அது தவறு. ஆனால் நான் மேற் சொன்ன 'யானை வளர்த்த வானம்பாடி' படத்திற்கு இசை 'பிரதர்' லஷ்மணன்
நிஜமாகவே பாடல்கள் நல்ல பாடல்கள்தான்.
நம் 'பேபி' ஸ்ரீதேவி சிறு பெண்ணாகவும், 'மாஸ்டர்' பிரபாகரனும் (சிறிய வயது ஆனந்தன்) இணைந்து பாடும்
'ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வந்தா ராணிப் பொண்ணு சிங்காரி'
பாடல் அப்போது பிரசித்தம்.
இப்போது தொடரின் பாடல்.

யானை வளர்க்கும் வானம்பாடி மகன் சிறுவன் பிரபாகரன் தன் அன்னையை வளர்த்த பீமா என்ற யானை மேல் அமர்ந்து பாடி வரும் பாடல். பாடலிலேயே சிறுவன் பெரியவனாக வளர்ந்து ஆனந்தன் ஆகி விடுவதைக் காட்டி விடுவார்கள். ரொம்ப அற்புதமான பாடல். நெடிதுயர்ந்த தேக்கு மற்றும் காட்டு மரங்களுக்கிடையே யானையில் புலித்தோல் உடை அணிந்து 'ஜம்'மென்று அமர்ந்து பிரபாகன் சுசீலா அம்மா குரலில் பாடி வருவது அமர்க்களம். அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். காட்டு யானைக் கூட்டம், புகையாய்க் கொட்டும் வெள்ளை வெளேர் சிலீர் அருவிகள், வாயைத் திறந்து பயமுறுத்தும் சிறுத்தைப் புலி, ஓடையில் அழகாக நீந்தும் அன்னப்பறவை என்று பாடல் முழுதும் இயற்கை ரம்மியம் ரகளை செய்கிறது.
பாடலின் இடையே சிறுவன் பெரியவனாக வளர்ந்த ஆனந்தனாக அறிமுகம். யானை மேல் பம்பை முடியுடன், விரிந்த வெற்று மார்புடன், புலித்தோல் உடையுடன், புலி நக டாலருடன் பாடியபடி சிறுவர்களைக் கவருவார். கேரக்டருக்குப் பொருத்தமான் ரோல். வீர சாகசங்களுக்கு தோதானவர். சிறுத்தை, முதலை இவற்றுடன் சண்டைகள் உண்டு. பீமா யானையின் அசைவுகளும் கொள்ளை அழகு.
நான்கு சரணங்கள் கொண்ட இப்பாடலில் முதல் மூன்று சரணங்கள் பிரபாகரன் நடிக்க சுசீலாம்மா பாடுவதாக வரும். ஆனந்தன் அறிமுகத்தில் அவருக்கு நம் பாலா அதாவது நான்காவது சரணத்திற்கு அற்புதமாகக் குரல் தந்து கம்பீரக் களையுடன் கானமிசைத்திருப்பார்.
ஒரே ஒரு சரணம் என்றாலும் பாலா 'பளிச்'
'ஹா ஹா ஹா' என்று படுகம்பீரமாக ஆனந்தன் அறிமுகத்தில் பாலா ஹம்மிங் எடுப்பது அந்தக் காடுகளில் உள்ள தேனை சுவைத்தது போல் அவ்வளவு இனிப்பு. கலக்கி விடுவார். வெகு வித்தியாசமான குரல் வளம் இந்தப் பாடலில். ஆனந்தனுக்கு அருமையாக சூட் ஆகும். காட்டுவாசிப் பாடல் என்பதால் பாலாவுக்கும் இது புது அனுபவமாய் இருந்திருக்கும். அதனால் இன்னும் அனுபவித்துப் பாடியிருப்பார்.
பிரபாகரனுக்குப் பாடும் சுசீலா அமாவின் குரல் தேவாமிர்தத்தை மிஞ்சும். அவருக்கு மூன்று சரணங்கள். இந்த தேவதையின் தெளிவான தமிழ் உச்சரிப்பையும், ('அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு') பிள்ளைக்கான அப்பாவித்தனத்தை தன் குரலில் பிரதிபலிக்க வைக்கும் அழகையும் கேளுங்கள்.
மகாதேவன் யானை அசைந்து அசைந்து செல்வதற்குத் தக்கபடி அம்சமான பின்னணிகளை ஒலிக்க வைத்திருப்பார். ரீரிகார்டிங் அவ்வளவு பிரமாதமாய் வந்திருக்கும். கிடார் ஒலிகளும், ஷெனாய் இசையும் இனிமையோ இனிமை. பிரபாகரன் ஆனந்தனாய் மாறும்போது வரும் இடையிசைப் பின்னணி நிஜமாகவே பிரம்மிக்க வைக்கிறது. இடைவிடாது ஒலிக்கும் டிரம்ஸ் ஒலிகளும், அழகான புல்லாங்குழல் இசையும், பாங்கோஸ் உருட்டல்களும் நம்மை அந்த வனாந்திர சொர்க்கத்திகே கூட்டிச் செல்கின்றன. இரண்டாவது சரணம் முடிந்து வரும் பல்லவி வரிகளை மாற்றி டியூன் போட்டிருப்பது அம்சமான அம்சம்.
'தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா'
இந்தப் பாடலின் இசைச் சங்கதிகளை மகாதேவன் 'வாணி ராணி' படத்தில் 'முல்லைப் பூ பல்லக்கு போவதெங்கே' பாலா, சுசீலா டூயட்டில் அப்படியே முச்சூட அள்ளித் தந்திருப்பார். பாடலின் பிளிரும் முடிவிசை டாப்.
பாடல் வரிகள் ரசிக்கத்தக்கவை.
நிஜமாகவே 'ஜாம் ஜாம்' பாடல்தான். எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் பாடல்தான்.

ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
தாயில்லா பிள்ளை போல் காடு கிடக்கு
அதைத் தாலாட்ட வானிலே மேகமிருக்கு
தாயில்லா பிள்ளை போல் காடு கிடக்கு
அதைத் தாலாட்ட வானிலே மேகமிருக்கு
வாயில்லா ஊமை போல் சோலையிருக்கு
அதை வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
காடெங்கும் உன் ஜாதி சொந்தமிருக்கு
அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு
காடெங்கும் உன் ஜாதி சொந்தமிருக்கு
அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தமிருக்கு
உங்களுக்கும் எனக்கும் பந்தமிருக்கு
இந்த உறவை நினைக்கையில் இன்பமிருக்கு
தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை தாத்தா என்றே நானும் சொல்லலாமா
தாயாரை வளர்த்தது நீதான் பீமா
உன்னை தாத்தா என்றே நானும் சொல்லலாமா
வாயார முத்தமொன்றை இடலாமா
என்னை வளர்க்கும் பொறுப்பையும் தரலாமா
ஹாஹாஹா ஹாஹஹஹாஹஹாஹஹாஹா
ஓஹோஹோ ஓஹஹோஹோஹோஹோஹோ
காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சுமிருக்கு
ஆனால் கடிக்கக் கூடாதென்ற நெஞ்சுமிருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலுமிருக்கு
நாட்டிலுள்ள மக்களிடம் நாலுமிருக்கு
அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலுமிருக்கு
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
நீ தளிர் நடை போடடா ராஜ பீமா
ஜாம் ஜாம் என்று சந்தோஷமா
Last edited by vasudevan31355; 7th October 2015 at 04:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
7th October 2015 11:26 AM
# ADS
Circuit advertisement
Bookmarks