Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Dinamani

    டி.ஆர். ராஜகுமாரி: 3.கூண்டுக்கிளி !

    1948--ல் டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு ஜாக்பாட் கிருஷ்ணபக்தி. லேனா செட்டியாரின் கிருஷ்ணா பிக்சர்ஸ் உருவாக்கிய உன்னதச் சித்திரம்!

    ரஸ்புடினின் பிரெஞ்சு நாவல் தி மான்க் அதைத் தமிழுக்கேற்றாற் போல் வெற்றிகரமாகப் படைத்திருந்தார் டைரக்டர் ஆர்.எஸ். மணி.

    கண்ணகி போல் அவரது படைப்புகளில் மறக்க முடியாத ஓர் அற்புத சிருஷ்டி கிருஷ்ணபக்தி.

    முதலில் ஸ்திரிலோலன் என்பதை மறைத்து வாழும் கபட சந்நியாசி, பிற்பாதியில் தவறை உணர்ந்து திருந்தும் ஸ்வாமிகள் என்று பி.யூ. சின்னப்பா சிறந்த நடிப்பின் சிகரத்தில் பின்னிப் பிணைந்து நின்றார்.

    வழக்கமாகத் திரையில் வசீகரமான தாசியாக வலம் வந்து, தனது கற்கண்டு பேச்சாலும், காண்போர் மயங்கும் கண் கவர் ஆடைகளாலும், கண்களின் வீச்சாலும், குளிர்ச்சி தரும் சந்தனப் புன்னகையாலும், நாயகர்களை மோகவலையில் விழ வைத்து, மோசம் செய்து ஏமாற்றித் துடிதுடிக்கச் செய்வார் டி.ஆர். ராஜகுமாரி.

    கிருஷ்ணபக்தியில் அவர் ராஜநர்த்தகி தேவகுமாரி! - டி.ஆர். ராஜகுமாரியின் அபார நடிப்பாற்றலை அரங்கேற்றிய அட்சயப்பாத்திரம்!



    மன்னனின் மஞ்சத்தில் விழ வேண்டிய மந்தார மலர் தேவா சரஸத்தை ஏற்க மறுத்து, பி.யூ. சின்னப்பாவைச் சரணடைவார் நாயகி.

    சாரஸம் - வசீகர கண்கள் சீர் தரும் - முகம் சந்திர பிம்பம்

    செக்ஸ் சாமியார் பி.யூ. சின்னப்பா சொப்பனத்தில் மோகனாங்கி டி.ஆர். ராஜகுமாரியை வர்ணித்துப் பாடிய, கேட்கத் தெவிட்டாத கானம்!

    தட்டு வாணிக்குத் தாலி பாக்கியம் கிடையாது என்று வசனம் பேசி,

    தேவதாசிகளின் அவலத்தைக் கண்ணீர் மல்கச் சொல்லிக் கதறிய டி.ஆர். ராஜகுமாரி ரசிகர்களுக்குப் புதுசு!

    தன் ஆசைக்கு இணங்காத ஆடல் அரசியின் கற்பைப் பறிக்க முயல்கிறான் அரசன்.

    மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி தன் மான்விழிகளைக் கத்தியால் குத்திக்கொண்டு, குருடாகிறாள் தேவா.

    துறவறமே சிறப்பு என்று வாழும் தேவாவுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிரசன்னமாகி மீண்டும் கண் ஒளி தருகிறார்.

    கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டி.ஆர்.ராஜகுமாரி குணச்சித்திர நடிப்பின் உச்சம் தொட்டார்.

    இன்றைக்கும் அவ்வப்போது சின்னத் திரைகளில் அதிசயமாகக் காணக் கிடைக்கிறது கிருஷ்ணபக்தி. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்த டி.ஆர். ராஜகுமாரியின் மகத்தான வெற்றிச் சித்திரம்!

    பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடுவின் மற்றொரு தயாரிப்பிலும் டி.ஆர். ராஜகுமாரிக்கு அழைப்பு வந்தது. சூப்பர் ஸ்டார்களுடன் மாத்திரமே நடிப்பேன் என்று ஒருபோதும் டி.ஆர். ராஜகுமாரி அடம் பிடித்ததில்லை.

    டி.ஈ. வரதன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க, டி.ஆர். ராஜகுமாரி நாயகியாக பவளக்கொடி சினிமாவில் நடித்தார். 1949 தமிழ்ப் புத்தாண்டில் வெளியானது.

    டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்களில் முதலும் கடைசியுமாகத் தோன்றிய டாக்கி விஜயகுமாரி. ஜூபிடர் தயாரிப்பு. எம்.ஜி.ஆரை ஹீரோவாக்கிய ஏ.எஸ். ஏ. சாமியின் இயக்கத்தில் 1950ல் வெளியானது.



    அண்ணாவின் வேலைக்காரியை அடுத்து வெளியான ஜூபிடர் படம்.

    வேலைக்காரி மாதிரி சமூக விழிப்புணர்வுச் சித்திரமாக அமையவில்லை. மாயாஜாலக் கதையாகப் போனதால் மக்கள் நிராகரித்தனர்.

    டி.ஆர். ராஜகுமாரியுடனானத் தனது அனுபவங்களை ஏ.எஸ். ஏ. சாமி எழுதி இருக்கிறார்.-

    ஒன்பது மணி கால்ஷீட்டுக்கு எட்டு ஐம்பத்தைந்துக்கெல்லாம் முழு மேக் அப்போடு செட்டுக்குள் தயாராக இருப்பார்.

    யூனிட்டின் ஃபேனை எதிர்பார்த்துக் காத்திராமல், அவருடைய பிரத்யேக மின்விசிறியைச் சுழல விடுவார்.

    ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போகும் வரை டி.ஆர். ராஜகுமாரி நடந்து கொள்ளும் விதமும் அவரது பண்பாடும் இருக்கிறதே ... அப்பப்பா!

    சினிமா ஸ்டார்கள் குறிப்பாக நடிகைகள் பலரிடமும் காண முடியாத ஒரு தனித்தன்மையோடு நடந்து கொள்வார்.

    இத்தனைக்கும் அம்மையார் புகழின் உச்சத்தில் இருந்த சமயம்!

    தனக்கான காட்சிகள் ஓவர் என்று டைரக்டர் கூறுகிற வரையில் சேரை விட்டு எழுந்தது இல்லை. அங்கும் இங்கும் போவது, அரங்குக்கு வெளியே சென்று அரட்டை அடித்துத் திரிவது அறவே கிடையாது.

    யாராக இருப்பினும் ஒரு வார்த்தை கூட வீணாகப் பேச மாட்டார்.

    படப்பிடிப்பு சமயத்தில் நான் எடுக்க இருக்கும் காட்சியைப் பற்றி, இது எதற்கு அது எதற்கு என்றெல்லாம் குறுக்கு கேள்விகள் இருக்காது.

    வீண் விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பு நேரத்தையும், தயாரிப்பாளரின் முதலீட்டையும் விரயம் செய்ய மாட்டார்.

    ஷூட்டிங்குக்கு வருவதற்கு முதல் நாளே ஏதாவது சந்தேகங்கள் தோன்றினால், இயக்குநரிடம் முழு விளக்கமும் கேட்டுக் கொள்வார். தன் இஷ்டத்துக்குக் கருத்து சொல்ல மாட்டார். தேவை இருந்தால் மாத்திரமே அபிப்ராயங்களைத் தெரிவிப்பார்.

    டைரக்டர் சொல்கிற மாதிரி நடிப்பில் செயல்படுவதைத் தனது தலையாய கடமையாகக் கருதியவர் டி.ஆர். ராஜகுமாரி.

    ----------------

    டி.ஆர். ராஜகுமாரியுடன் மனோன்மணி, பவளக்கொடி ஆகிய டாக்கிகளில் இடம் பெற்றார் டி.ஆர். மகாலிங்கம்.

    டி.ஆர்.கள் இருவரும் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த படம் சிட்டாடலின் இதயகீதம்.

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்திய ஜோசப் தளியத்தின் படைப்பு. இனிய பாடல்களுடன் கூடிய காதல் சித்திரம். வெற்றிகரமாக ஓடியது.

    1951ல் டி.ஆர். ராஜகுமாரி- பி.யூ. சின்னப்பா நிறைவாக இணைந்து நடித்த வனசுந்தரி, 1952ல் டி.ஆர். ராஜகுமாரி முதலும் கடைசியுமாக பாகவதருடன் ஜோடி சேர்ந்த எம்.கே. டி.யின் தயாரிப்பு அமரகவி இரண்டும் தோல்வி அடைந்தன.

    1953ல் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்து, சித்தூர் வி. நாகையா இசை அமைத்து உருவாக்கிய சிறந்த படைப்பு என் வீடு பிரமாதமாக ஓடியது.

    அதே ஆண்டில் எம்.ஜி.ஆர்.- டி.ஆர்.ராஜகுமாரி தோன்றிய பணக்காரி வசூலில் வறுமையைத் தழுவியது.



    1954 ன் மனோகரா. மார்ச் 3ல் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்தது.

    தொடர்ந்து சில தோல்விகளைச் சந்தித்துப் பொருளாதார ரீதியில், மிகவும் நலிவடைந்தது ஜூபிடர். நன்றி மறவாமல் மனோகராவில் பங்கேற்று டி.ஆர். ராஜகுமாரி ஜூபிடரைக் கைத்தூக்கி விட்டார்.

    டி.ஆர். ராஜகுமாரி பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர் அல்ல.

    தனது புகழ் பெற்ற சொந்தத் தியேட்டரில் மனோகராவை திரையிட்ட அன்று, ஈவினிங் ஷோவில் இன்டர்வெல் நேரத்தில்,

    அவையில் தோன்றி ரசிகர்களுக்கு அதிசயக் காட்சியும் அளித்தார் டி.ஆர். ராஜகுமாரி.

    வசந்தசேனை வேடத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்திருக்காவிடின், மனோகராவுக்கு மாபெரும் வெற்றி வாய்த்திருக்காது!

    1936ல் தயாரான மனோகரா ஓடவில்லை. மனோகரா நாடகத்தை எழுதிய பம்மல் சம்பந்த முதலியாரே அதில் மனோகரனாக நடித்திருந்தார்.

    ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவான டி.ஆர். ராஜகுமாரி படம் மனோகரா மாத்திரமே.

    நடிகர்திலகமும் வசந்தசேனையாக அநேக முறை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

    கணேசனின் கண் எதிரிலேயே ஆளை மயக்கும் காஸ்ட்யூமில், போதை வழியும் விழி அசைவில், புருவங்களை உயர்த்தி, புயலின் சீற்றத்தைச் செந்தமிழ் உதடுகளில் உயர்த்திப் பிடித்து ... டி.ஆர். ராஜகுமாரி புத்தம் புது வசந்தசேனையாக வடிவெடுத்தார்.

    கதைப்படி மட்டுமல்லாமல் நடிப்பிலும் வீழ்த்தி விடுவாரோ சிவாஜியை...! என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

    அத்தனை எளிதில் மறக்க முடியுமா...! டி.ஆர்.ராஜகுமாரி எழிலாகத் தோன்றி வஞ்சக மொழி பேசி வசீகரிக்கும் முதல் காட்சியை...

    நான் சிரித்தால் போதும்... சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வையை வீசினால் இந்த மண்டலமே என் காலடியில்..!

    நான் நினைத்தால் இப்போதே ராணி. என் மகன் வசந்தன் இளவரசன்

    மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் டி.ஆர். ராஜகுமாரி நடித்த முதல் படம் மனோகரா.

    முந்தானை நுனியைக் கைகளில் சுற்றிக் கொண்டு மந்திர ஆலோசனை புரிவது டி.ஆர். ராஜகுமாரி ஸ்டைல்! மனோகராவிலும் அது மகிழ வைத்தது.

    -------------
    மனோகராவோடு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் டி.ஆர். ராஜகுமாரி.

    ஒவ்வொர் விடியலிலும் சூர்யோதயமாக டி.ஆர். ராஜகுமாரியின் முகம் பார்க்கும் சுற்றம். சம்சாரக் கப்பலை எந்த வித சேதாரமும் இன்றி கரை சேர்த்தாக வேண்டும்.

    பல ஆண்டுகள் அரிதாரம் பூசி செயற்கை அனலில் பாடுபட்டு சம்பாதித்த காசு பணம்... தன் தம்பிக்காகத் தைரியமாகப் படத் தொழிலில் முதலீடு செய்தார்.

    டி.ஆர். ராஜகுமாரி கனவுக்கன்னியாக மட்டும் வெற்றி பெறவில்லை. தரமான படத் தயாரிப்பாளராகவும் பிரமாதப்படுத்தினார்.

    தனது தம்பி டி.ஆர். ராமண்ணாவை பிரபல டைரக்டராக்கி அழகு பார்த்தார். ராமண்ணாவுக்காக அக்கா ஆரம்பித்த நிறுவனம் ஆர்.ஆர். பிக்சர்ஸ்.

    நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளர் ராமச்சந்திரன். இளைய சகோதரர்கள் ராமு அண்ணா என்று சேர்த்து அழைக்க, ராமண்ணாவானார்.

    அக்கா நடிக்கும் காட்சிகள் இன்னமும் தரமானவையாக இருந்திருக்கலாம்... என்று தினந்தோறும் டி.ஆர். ராஜகுமாரியுடன் தர்க்கம் செய்வார் ராமண்ணா.

    ராமு, டைரக்டர் எப்படி நடிக்கச் சொல்றாரோ... அப்படியே நடிக்கிறேன். என் படத்துக்கு நீயா டைரக்டர்...?

    நீ சினிமா டைரக்டர் ஆகும் போது என் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கணும்னு சொல்லு. அப்பப் பார்த்துக்கலாம்.

    வெளியார் யாரும் நிச்சயம் உனக்குத் துணிஞ்சு டைரக்டர் சான்ஸ் தர மாட்டாங்க. நாமே சொந்தமாப் படம் தயாரிச்சா நீ சொல்றது நடக்கும்.

    உன்னை டைரக்டராக ஆக்குறதுதான் அதுக்கு ஒரே வழி.

    டி.ஆர். ராஜகுமாரிக்கு மூன்று தம்பிகள். 1.ராமச்சந்திரன் என்கிற ராமண்ணா 2. சக்கரவர்த்தி 3.பார்த்தசாரதி

    இரண்டு தங்கைகள் சேதுலட்சுமி மற்றும் ரங்க நாயகி.

    எஸ்.பி. எல். தனலட்சுமி கடைசி சித்தி. விகடயோகியில் டி.ஆர். ராஜகுமாரியுடன் நடித்த டி.எஸ். தமயந்தி ராஜகுமாரியின் பெரியம்மா பெண். சொந்தங்களில் முதலில் திரையில் முகம் காட்டியவர் அவரே.

    டி.எஸ். தமயந்தியின் மகள் குசலகுமாரி. கூண்டுக்கிளியில் சிவாஜியின் காதலியாகவும், கல்கியின் கள்வனின் காதலியில் தங்கை அபிராமியாகவும் நடித்திருப்பார். ஜெமினியின் அவ்வையாரில் இளைய அவ்வை.



    நேற்றைய தமிழகத்தின் நாட்டிய நடிகை. கொஞ்சும் சலங்கையில் குமாரி கமலாவுடன் அவர் ஆடிய போட்டி நடனம் வெகு பிரபலம்.

    கவர்ச்சி சுனாமிகளில் உடன்பிறப்புகளான ஜோதிலட்சுமியும் -ஜெயமாலினியும் டி.ஆர். ராஜகுமாரியின் கலைக் குடும்ப வாரிசுகளே!

    அவர்கள் இருவரும் டி.ஆர். ராமண்ணாவால் முறையே பெரிய இடத்துப் பெண், தாலியா சலங்கையா ஆகிய படங்களில் அறிமுகமாயினர். டாக்டர் சிவா ரிலிசில் முந்திக் கொண்டு ஜெயமாலினிக்குப் புகழ் பெற்றுத் தந்தது.

    மேற்கூறிய அனைவரும் டி.ஆர். ராஜகுமாரியின் கன்னியாகுமரி பவனத்தில் ஒன்றாக வாழ்ந்தனர்.

    டி.ஆர். ராஜகுமாரியின் கடுமையான உழைப்பு அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் தந்தது.

    குசலகுமாரி முதுமையாலும் வறுமையாலும் அவதியுற்றதை அறிந்ததும், முதல்வர் ஜெயலலிதா கருணையுடன் வீடு ஒன்றை ஒதுக்கித் தந்து அவர் கண்ணீரைத் துடைத்தார் என்பது வரலாறு.

    சாய்பாபாவை கும்பிட்டு விட்டு ஆர்.ஆர். பிக்சர்ஸ் தன் சரித்திரத்தைத் தொடங்கியது. முதலில் வாழப்பிறந்தவள் படத்துக்கு பூஜை போட்டார்கள்.

    இதோ பார்... நான் உன் சிஸ்டர், அது இதுன்றதெல்லாம் வீட்டோட. செட்ல நீதான் கமாண்டர். நீ சொல்ற மாதிரிதான் நாங்க நடக்கணும்.

    நடிக்கும் போது நான் ஏதாவது தவறா செஞ்சிட்டா அதைத் திருத்தறதுக்கு நீ தயங்கக் கூடாது. ஆர்ட்டிஸ்டை கண்டிக்கப் பின் வாங்கக் கூடாது.

    உன் படம் நல்லா இல்லேன்னா... பாதிக்கப்படப் போற முதல் நபர் நீ தான்... அதைப் புரிஞ்சி நடந்துக்க.

    கட்டளை போல் ஒலித்தது அக்கா டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்.

    அடுத்து கூண்டுக்கிளி.

    தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க?

    போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.

    டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!

    நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன்.

    சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

    ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!

    நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்!

    நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே.

    அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க?

    கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க.

    நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.

    சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.

    நாம் படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.

    கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.

    அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.

    சினிமா பாஷையில் கேட்கிறார்... என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

    அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.

    என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.

    ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.

    எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •