-
3rd June 2016, 12:44 AM
#11
Junior Member
Senior Hubber

திருச்சி- சிவாஜி ஃபிலிம் கிளப்-
------------------------------
தீபம்- திரைத் திருவிழா.
------------------------
29.05.2016 -ஞாயிறு, மறக்க முடியாததாயிற்று.
சிவாஜி ஃபிலிம் கிளப்பைத்
துவக்கிய நாளிலிருந்தே
திரு. அண்ணாதுரை அவர்கள்
அழைத்துக் கொண்டிருந்தார்...
திருச்சிக்கு.
சென்று வர வாய்ப்பளித்தது...
கருணை மிகுந்த இந்த ஞாயிறு.
----------------------
ஆளும் பேருமாய், ஆர்ப்பரிப்பும்
மகிழ்ச்சித் துள்ளலுமாய்
ஓரிடத்தில் கூடி நடிகர் திலகத்தின் படம் பார்க்கும் சந்தோஷம் ஒருபுறம்...
ஒருநாள், ஒரு மூன்று மணி
நேரம் நடக்கும் நிகழ்வுக்கு
மாதக் கணக்கில் உழைக்கிற
திருச்சி திரு. அண்ணாதுரை
அவர்களின் சீரிய முயற்சியில்
உருவாகி, அதிவேகமாக
வளர்ந்து வரும் " சிவாஜி ஃபிலிம் கிளப்"பின் நிகழ்வில்
நானுமிருக்கிற சந்தோஷம்
ஒருபுறம்...
நடிகர் திலகத்தின் பக்தர் சென்னை திரு.சுப்பிரமணியன்
அவர்கள், சிறப்புமிகு சிவாஜி
ரசிகர் சித்தூர் திரு.வாசுதேவன்
அவர்கள், திருச்சி திரு.இளங்குமரன், திருச்சி திரு.
கமலக்கண்ணன்... இவர்களோடு நானும்
சிறப்பு விருந்தினரான சந்தோஷம் ஒருபுறம்...
கண்ணியத்துக்குரிய திருச்சி
வாழ் சிவாஜி ரசிகர்களின்
முன்னால் உரையாற்றுகிற
சந்தோஷம் ஒரு புறம்...
அன்று, எல்லாப் பக்கத்திலிருந்தும் என்னை
நோக்கி வந்த அத்தனை
சந்தோஷங்களுக்கும் காரணம்..
நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனே என்கிற நினைப்பில் நெகிழ்ந்தேன்.
அவர் நடித்த படங்களைப்
பார்த்தது தவிர அவருக்கு
எந்த விதத்திலும் நல்லது
பண்ணாத என்னைப் போன்ற
கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு எத்தனையெத்தனை மனப்
பரவசங்களை அளித்திருக்கிறார்...அந்த மகான்?
---------------------
இனிதே துவங்கிற்று...
"தீபம்" திரைத் திருவிழா.
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் திரு.
உறந்தை செல்வம் எங்கள்
ஐவரையும் சிறப்பு மிகுந்த
முன்னுரையோடு கூட்டத்திற்கு
அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தினார்.
முதலாவதாகப் பேச அழைக்கப்பட்டார்.. திருச்சி
திரு. கமலக்கண்ணன் அவர்கள்.
அர்த்தமுள்ளதாக அமைந்த
அவரது உரை அனைவரையும்
மகிழ்வித்தது. அடுத்த தலைமுறைக்கு அய்யனையும்,
அவரது கலையையும் கொண்டு
சேர்ப்பதென்பது நமது கடமை
என்று குறிப்பிட்டார். தனது
குடும்பத்திலுள்ள பெரியவர்கள்
அனைவரும் நடிகர் திலகத்தின்
ரசிகர்களே என்று குறிப்பிட்டார்.
தானும் அவ்வழியே அய்யனின்
படங்களைப் பார்த்து வியப்பதாகக் கூறினார்.அதற்கு
உதவிடும் வகையில் சிவாஜி
ஃபிலிம் கிளப்பை உருவாக்கிய
திரு.அண்ணாதுரைக்கு அவர்
நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அடுத்தபடி பேச அழைக்கப்பட்ட
சித்தூர் திரு.வாசுதேவன்
அவர்கள், எல்லோருக்கும்
வணக்கத்தையும், நன்றிகளையும் சொல்லி ரத்தினச் சுருக்கமாக முடித்துக்
கொண்டார். நடிகர் திலகம்
போற்றப்படும் இடங்களிலெல்லாம் தன்
வருகையை தவறாமல் பதிவு
செய்து விடுகிற
திரு.வாசுதேவன் தனது பேச்சை மிகச் சுருக்கமாக்கிக்
கொண்டதற்குக் காரணம் சபைக் கூச்சம் மட்டுமல்ல..
தீபத்தை விரைவில் காண
வேண்டுமென்கிற ஆவலாக
இருக்கலாம்.
அடுத்ததாக அழைக்கப்பட்டார்
சென்னை திரு.சுப்பிரமணியன்
அவர்கள். திருச்சியில் எழுச்சி
பெறும் சிவாஜி ஃபிலிம் கிளப்புக்கும், திரு.அண்ணாதுரை அவர்களின்
முயற்சிகளுக்கும் பேருதவியாய் இருந்து வரும்
திரு.சுப்பு அவர்கள் பேசும் போது அய்யா நடிகர் திலகத்தை
"அப்பா " என்று குறிப்பிட்டது
கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது. உத்தியோக நிமித்தம்
பெருநகரங்களுக்குச் செல்லும்
போதெல்லாம் அந்தந்த ஊர்
திரையரங்குகளில் ஓடுகிற
பழைய படங்களில் நடிகர் திலகத்தின் படங்களில்லாத
நிலையை மாற்றும் வகையில்
தானே நடிகர் திலகத்தின் படங்களை திரையரங்குகளில்
திரையிடத் துவங்கியதை
பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார். கோவையில்
"நீதி" திரைப்படம் மூலம்
துவங்கிய இலட்சியப் பயணம்,
திருச்சியில் அண்ணன் ஒரு
கோயில், ராஜா என்று இன்னமும் வெற்றிகரமாய் தொடர்வதை மகிழ்வோடு குறிப்பிட்டார்.
நம்மையெல்லாம் மகிழ்ச்சி
வெள்ளத்தில் ஆழ்த்த, நடிகர் திலகம் இரட்டை வேடம்
ஏற்று, இளைய திலகத்துடன் இணைந்தளித்த இணையற்ற வெற்றிக் காவியம் "வெள்ளை ரோஜா"வை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரு.சுப்பு
அவர்களே உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்.
கொஞ்சமும் தற்பெருமை இல்லாமல், நடிகர் திலகத்தின்
அதி தீவிர ரசிகரென்று தன்னை
அறிவித்துக் கொள்வதிலும்,
அடையாளப்படுத்திக்
கொள்வதிலும் திரு.சுப்பு அவர்கள் காட்டும் மும்முரம்
அற்புதமானது.
அய்யனைக் கொண்டாடும்
ஊர் மதுரையானாலும், திருச்சியானாலும் பறந்தோடி
வருகிற அவரது பக்திக்கு
நமது வந்தனங்களைச்
சொல்வோம்.
நடிகர் திலகத்தின் பெயரால்
நிகழும் நல்ல விழாக்களுக்கு
தனது உதவிகரமான பங்களிப்புகள் அத்தனையையும் தருகிற
அவரது தயாள மனதிற்கு நம்
நன்றிகளைச் சொல்வோம்.
ஆதவன் ரவியாகிய நான்
பேசும் போது திரையிடலுக்கு
வந்திருந்த கூட்டத்தைச் சுட்டிக்
காட்டி, வரும் காலங்களில்
இந்தக் கூட்டம் வாசல் தாண்டி
நீள வேண்டுமென்கிற என்
விருப்பத்தைத் தெரிவித்தேன்.
கௌரவத்துக்கு வரும் கூட்டம்
கருடா சௌக்கியமா திரையிட்டாலும் வர வேண்டும்
என்றும், புதிய பறவைக்கான
கூட்டம் ஞானப் பறவை
திரையிட்டாலும் வரவேண்டும்
எனவும் நான் விரும்புவதைத்
தெரிவித்தேன். உலகத்தில்
எந்தவொரு கலைஞனும்
தொட முடியாத உயரங்களைத்
தொட்ட ஒரே கலைஞன்
நடிகர் திலகம் என்பது எத்தனை உண்மையானதோ, அத்தனை
உண்மையானது, நடிகர்
திலகத்தின் அத்தனை விதமான
நடிப்பையும் ரசித்து ரசனையின்
உச்சம் கண்டவன் சிவாஜி ரசிகன் மட்டுமே என்பதைக்
கரகோஷத்துக்கூடே பேசினேன்.
ஒரு நட்புப் பகிர்தலுக்கும்,
திரையரங்குகள் மறந்தாலும்
நம்மால் மறக்க முடியாத
ரசிகர்கள் ஒன்றிணைந்து படம்
பார்க்கும் சந்தோஷத்தை
மீட்டெடுப்பதற்கும் உதவுகிற
சிவாஜி ஃபிலிம் கிளப்பின்
வளர்ச்சிக்கும், திரு.அண்ணாதுரை அவர்களின்
முயற்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
களப்பணியில் என்னை வியக்க
வைக்கிற திரு.அண்ணாதுரை
அவர்களுக்கு உறுதுணையாக
எனது கவிதைப் பணி என்றென்றும் இருக்கும் என்று
உறுதி தந்து விடைபெற்றேன்-------------------
அனைவரும் ஆவலோடு
காணக் காத்திருந்த "தீபம்"
திரையிடப்பட்டது.
நடிகர் திலகம் நடிப்பிலே
எவரையும் மயக்கினார்.
மயங்கித் தெளிந்தோம்..
இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு.
வந்திருந்தவர்கள் அத்தனை
பேரும் அண்ணாதுரை அவர்களுக்கு நன்றி சொல்லிப்
புறப்பட்டனர்.
முன்னதாக நன்றியுரைத்த
திரு.அண்ணாதுரை தனது
செயல்பாடுகளுக்கு களங்கம்
கற்பிக்கும் விதமாய் ஒரு சிலர் பேசுவதையும், எழுதுவதையும்
குறிப்பிட்டு வருந்தினார். அவர்
கரம் பற்றிக் கொண்டு ஒருவர்
நம்பிக்கை தெரிவித்தார்...
" எதுக்கும் கவலைப்படாதீங்க..
அண்ணாதுரை. நாங்க இருக்கோம்."
உண்மைதான்.
திரு.அண்ணாதுரை அவர்களுக்கு நாம் செய்யப்
போகிற உதவிகளால், உத்தமர்
நடிகர் திலகத்தின் படங்களை
அடிக்கடி காண முடியாத
நம் ஏக்கங்கள் பறக்கும்.
உண்மையான உழைப்பும்,
உண்மையான அன்பும்
ஒன்றிணையும் இடத்தில்
சாதனைகள் பிறக்கும்.
அவற்றைப் பெற்று விட்ட
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பும்
வென்று சிறக்கும்.
-------------------
இந்தப் படத்தின் ஒரு காட்சியில் சுஜாதாவிடம்
சொல்வார்... நடிகர் திலகம்..
"நான் யாரையும் அழிச்சுப்
பாக்கிறவன் இல்லே. ஆக்கிப்
பார்க்கிறவன்."
சென்னையில் NT FANS...
திருச்சியில் சிவாஜி ஃபிலிம்
கிளப்...
இனி எந்தெந்த ஊரில்
என்னென்ன அமைப்புகளோ..?
அய்யா நடிகர் திலகம்...
ஆக்கிப் பார்க்கிறவர்தான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
3rd June 2016 12:44 AM
# ADS
Circuit advertisement
Bookmarks