-
11th May 2017, 07:29 PM
#11
Junior Member
Senior Hubber

எதை எதிர்பார்த்திருந்தோமோ... அது அப்படியே
சிந்தாமல், சிதறாமல் கிடைப்பதில் கூட அத்தனை சந்தோஷமில்லை.
இங்கே நாம் எதிர்பார்த்தது எங்கே கிடைக்கப் போகிறது என்று சலித்திருக்கும் சூழலில், நாம்
எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைக்கிற
போது வருகிற சந்தோஷம் அலாதியானது.
அப்படியொரு சந்தோஷம் எனக்கு " வாணி ராணி"
திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு காட்சிகளைப் பார்க்கையில் கிடைத்தது.
*****
போன வருஷத்துக்கு முந்தின வருஷம் நான்
பணிபுரியுமிடத்தில் பெண்களெல்லாம் ஒன்று கூடி
மகளிர் தினத்தை அமர்க்களமாகக் கொண்டாடினார்கள்.
ஒரே விதமாய் உடையணிந்து, எல்லோருக்கும் இனிப்பு பரிமாறி... மிக உற்சாகமாய்க் கொண்டாடினார்கள்.
நான் மகளிர் தினத்திற்காக எழுதி வைத்திருந்த
ஒரு கவிதையை விழா துவங்குவதற்கு முன்பே
அவர்களிடம் கொடுத்து வாழ்த்துச் சொன்னேன்.
ஆனால், விழா துவங்கிய சில நிமிடங்களில் அதை
மீண்டும் என்னிடமே தந்து, என்னையே ஒலிபெருக்கியில் வாசிக்கும்படி கேட்டுக் கொள்ள,
பெண்கள் விழாவில் என் குரலா என நான் தயங்கத்துடனே வாசித்தேன்.
என் தயக்கத்தை சந்தோஷத் திகைப்பாக மாற்றியது அந்த மகளிர் அரங்கம். கைதட்டல்கள்
என் எழுத்துகளைக் கௌரவித்தன. நிறைய பாராட்டுகள்.
" வென்று சிரிக்கிற
ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால்
நின்று சிரிப்பது நீங்கள்தானே?"
- என்கிற வரிகள் மிகவும் ரசிக்கப்பட்டவை.
பெண்கள் பேசப்படுமிடத்தில், ஒரு ஆண்.. நான்
பேசப்பட்ட கர்வமிகு மகிழ்விலிருந்த எனக்கு
அப்போது "வாணி ராணி" எனும் பெண் பேசப்படும்
கலைக்களத்தில் ஒரு ஆணாக வென்று வந்த
வணங்குதலுக்குரிய முன்னோடி நடிகர் திலகம்தான் நினைவுக்கு வந்தார்.
*****
" வாணி ராணி" யில் அய்யன் ஏற்றிருக்கிற அந்த
"ரங்கன்" கதாபாத்திரத்தை வேறு யாரேனும்
செய்திருந்தால், ரங்கனை வாணியும், ராணியும்
சுலபமாய் ஜெயித்திருப்பார்கள்.
கால் பதித்த மாத்திரத்திலேயே நுழைந்த இடத்தை
தனதாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நடிகர்
திலகத்தாலேயே ரங்கன் நம் மனதில் நின்றான்.
வென்றான்.
இத்துடன் நான் இணைத்திருக்கிற 11.09 நிமிடக்
காணொளியின் முதல் 4.00 நிமிடங்களை எடுத்துக் கொண்ட இரண்டு காட்சிகளே இங்கு நான் குறிப்பிட விரும்புவது.
ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் என்கிற சராசரி
நிலையிலிருந்து ஒரு திரைப்படத்தின் போக்கை
மாற்றி, ஒரு கதாபாத்திரத்தை ஜனங்கள் ஊன்றிக்
கவனிக்கிற உயர் நிலைக்கு நடிகர் திலகம் மாற்றியிருக்கிறார்.
மூன்று மணி நேர சினிமாவில் மொத்த நேரமும்
பேசப்படுவது அந்த கதாநாயகியரின் இரட்டை
வேடங்களே. அவற்றை ஜெயித்து தன் பாத்திரத்தைப் பேச வைக்க நான்கே நிமிடங்கள்
போதுமானதாயிருக்கிறது... நடிகர் திலகத்திற்கு.
நிறையக் குடித்து விட்டு, தன் வீடே தெரியாது
தள்ளாடும் நாயகனை நாயகி அவனது குடிசை வீட்டுக்குள் அழைத்து வருகிறாள். " இதுதான்
உங்க வீடு" என்கிறாள். அங்கேயே அய்யனின்
திறமை விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது.
அவன் குடிப்பது உற்சாகத்துக்கில்லை.. உள்ளே வாட்டும் கவலை வெப்பம் தணிக்கவே என்பதும்,
அவனருந்தும் மதுத்திரவம் அவன் அநாதையாகி
அவலப்பட்ட கொடுமை எரிக்க அவன் மனதில்
ஊற்றும் அமிலமென்பதும் நமக்கு விளங்குகிறது.
படிப்பறிவற்ற ஒரு எளியவன் அவன் மீது கரிசனம்
கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், நமக்குமாக
தன் வேதனை பகிரும் அந்த முதல் காட்சி அற்புதமானது.
கிண்டல் மிகுந்த ஒரு மொழியில் நாயகன் தன் வேதனை வாழ்வுக்குத் தரும் விளக்கத்தில்தான்
எத்தனையெத்தனை உணர்வுகள் வெளிப்படுகின்றன?
" காரை உதிர்ந்து போன சுவரு, கயிறு அறுந்து
போன கட்டில், கரையான் புடிச்சுப் போன ஜன்னல்.. ஓட்டை.. உடைசல்.. ஈயம், பித்தளை.. பேரீச்சம்பழம்..." - இது, தனது ஏழ்மையில் சலித்துப் போய் கொட்டும் கேலி மழை.
" யாராவது குடியிருந்தா அது வீடு. இங்க யாரு
குடியிருக்கா? யாரு " குடி" இருக்கான்னு கேக்கிறேன்..!? - இது, தன்னையும், தனது சாராய சிநேகிதத்தையும் திறமையாய் வெளிப்படுத்தும்
சாதுர்யம்.
சிறு வயதில் தான் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட
சோகம் பகிரும் இடத்தில் அய்யனின் முகம் காட்டும் பல நூறு பாவங்களில் ஒரு அநாதை இளைஞன் தாண்டி வந்த இருபத்தைந்து வருட
வாழ்க்கை கண் முன்னே வருகிறது.
" எல்லோரும் இந்நாட்டு மன்னராம்" என்று மகா நக்கலாக சொல்லி விட்டு நமக்கு நேரே கை நீட்டி,
நாக்கு மடித்து, ஒரு கெட்ட வார்த்தையை தவிர்த்து
அவர் காட்டும் பாவனை... நம்மில் இயல்பு மீறி
வக்கணையாய்ப் பேசிப் பழகுவோருக்கு மௌன
எச்சரிக்கை.
தனக்கென்று யாருமில்லாத சோகம், உனக்கு நான் இருக்கிறேன் என்றொருத்தி வந்தவுடன் மாறுவதாய் அந்தக் குமுறல் காட்சி முடிகிறது.
*****
விடிகிறது.
இதோ... தொடரும் இந்தக் காட்சியில் வேறொரு
அய்யனைப் பார்க்கலாம்.. சற்று முன் புயல் போல்
ஆட்டங் காட்டியவர், இப்போது தென்றலாய் இதம்
பேசுகிறார்.
உறங்கி எழுந்தவனின் முகத்தை மட்டுமல்ல.. திருந்தி எழுந்தவனின் முகத்தையும் அவரில்
பார்க்கலாம்.
முன்னே பின்னே கடவுளை வணங்கியறியாதவன்
கோயிலுக்குப் போய் கடவுளிடம் மனம் விட்டுப்
பேசினால், அது இப்படித்தான் இருக்கும் என்பது
சர்வ நிச்சயம். இப்படியொரு நடிப்பற்புதம் இதற்கு
முன்போ.. இதற்குப் பின் இன்று வரையுமோ நம்
நடிகர் திலகத்தினாலன்றி வேறு யாராலும் நிகழ்ந்ததில்லை என்பதும் சத்தியம்.
பாசாங்கு என்பதே துளியும் இல்லாத ஒரு எளியவன் கடவுளை நோக்கிப் போகும் நடையைப்
பாருங்கள்.. ஏதோ.. இது வரை தவறாக நினைத்து,
இப்போதுதான் நல்லவர் என்றுணர்ந்த ஒரு பெரிய
மனிதரைப் பார்க்கப் போவது போல் ... எளிமையாக!
" நம்ம ராணி இல்ல ராணி..." தனக்கானவளை கடவுளுக்கு அறிமுகப்படுத்தும் வெள்ளந்தித்தனம், ஒரே ஒரு " ஒப்புரானே" கொண்டு செய்யும் உயர்ந்த சத்தியம், "புத்தி சொல்லி பக்கத்தில வச்சுக்கப்பா" என்று தன் தவறு திருத்தி தன்னைக் கடவுளிடம் சரண் செய்யும் நற்பண்பு, " மத்தபடி நீ அதைச் செய்யி..
நான் இதைச் செய்யறேன்னு வியாபாரம் பேச வரலே.."- என்று கடவுளிடம் கூட விட்டுக் கொடுக்காத அற்புதமான நேர்மை, " காசிருந்தா
கற்பூரம்.. இல்லாட்டி கையெடுத்து ஒரு கும்பிடு"
- என்று கடவுளின் முன் கடவுளுக்கே கற்றுத் தருகிற யதார்த்த வாழ்வியல்...
இந்த கலை வியப்புகளையெல்லாம் நான்தான்
எழுதுகிறேன் என்கிற கர்வமல்ல.. இந்தப் பதிவு.
நானும் எழுதியிருக்கிறேன் என்கிற பெருமிதம்.
*****
இந்தக் காட்சியில் முருகனிடம் வாணிஸ்ரீ வேண்டிக் கொள்வார்.. "முருகா.. அவர் உன்னை
மறந்தாலும், நீ அவரை மறக்காதே!"
நான் வேண்டிக் கொள்கிறேன்.. " முருகா.. என்
மனதிலிருந்து எந்த நினைவை மறக்கடித்தாலும்,
அய்யனை மறவாமல் நினைக்க வை!"
Vaani Rani - Sivaji Ganesan | Vanisri ( Double Ro…:
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th May 2017 07:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks