அன்புள்ள திரு. முரளி அவர்களே,
நடிகர் திலகத்தின் "சிவகாமியின் செல்வன்" படத்தைப் பற்றிய மிகவும் சுவையான செய்திகளைப் பகிர்ந்து எல்லோரையும் அந்த நினைவுகளில் மூழ்கடித்து விட்டீர்கள்.
நடிகர் திலகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக பல படங்களைச் சொல்லலாம். இந்த வரிசையில் சிவகாமியின் செல்வன், வாணி ராணி, புண்ணிய பூமி, போன்ற படங்களையும், மேலும் சில படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆராதனா சிவகாமியின் செல்வனாக ஆகப் போகிறது என்னும்போதே, நாங்கள் "நடிகர் திலகம் எதற்கு இது போன்ற கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் படத்தில் நடிக்க ஒத்துக் கொள்கிறார்" என்று புலம்ப ஆரம்பித்தோம். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நீங்கள் குறிப்பிட்ட அந்த 35 நிமிடங்கள். தந்தை பாத்திரம் இறந்து, பின்னர், மகனாக வரும் நடிகர் திலகம் வரும் வரை. இந்தியிலும், இதே போல் வரும் என்பதால், எப்படி நடிகர் திலகம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், இவ்வளவு பெரிய இடைவெளி வர ஒத்துக் கொள்ள முடியும் என்பதால் எங்களுக்குள் ஒரு apprehension (நீங்கள் சொன்னது போல்).
ஆனாலும், அவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பின்னர், மகனாக நடிப்பவர் அறிமுகக் காட்சியில், அந்தக் குறையை முழுவதுமாக மறக்கடிக்கிறார்ப் போல் நடிகர் திலகம் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வேகமாகவும், ஸ்டைலாகவும் நடந்து வரும் காட்சி. ரொம்ப நேரமாக நடிகர் திலகத்தைத் திரையில் பார்க்க முடியாத வேதனையில் அனைவரும் இருக்கும் வேளையில், அவருடைய இந்த அறிமுகக் காட்சி ஒட்டு மொத்த ரசிகர்களையும் மறக்கடிக்க வைத்தது - அரங்கமும் அதிர்ந்தது, ஆனந்தப் பேரலையில்! இந்தப் பாத்திரத்தில், அவருடைய சிகை அலங்காரமும், மீசையும் ரொம்பவே நன்றாக இருக்கும். அதிலும், பைலட்டுகள் எப்படி அந்த ஹெல்மெட்டை இடுப்பில் வைத்துக் கொண்டு நடப்பார்களோ அதை அப்படியே கனகச்சிதமாகச் செய்து, தொய்ந்து போய்க் கொண்டிருக்கும் படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருப்பார். அதே ஜீவனுடன், படமும் முடியும். சாரதா மேடம் குறிப்பிட்டதுபோல், தமிழில், வழக்கம் போல், நடிகர் திலகம் இரு வேறு பாத்திரங்களுக்கு அற்புதமாக வித்தியாசம் காட்டியிருந்தார்.
தந்தை பாத்திரத்தில் வருபவரின் சிகை அலங்காரமாகட்டும், உடை அலங்காரமாகட்டும், கொள்ளை அழகாக இருக்கும். எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாடல் திரு. ராகவேந்தர் அவர்கள் குறிப்பிட்ட அந்த "மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக" பாடல்தான். இந்தப் படமும் அவன் தான் மனிதனைப் போல், முதல் வெளியீட்டுக்குப் பின் இன்னமும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவன்தான் மனிதனை சமீபத்தில் குறுந்தகடு வடிவில் பார்த்து இன்புற்றேன். ஒட்டுமொத்த தர அடிப்படையில், அவன்தான் மனிதனை சிவகாமியின் செல்வனுடன் compare செய்யவே முடியாது என்பது வேறு விஷயம்.
இசையமைப்பைப் பொறுத்தவரை, மெல்லிசை மன்னர் ஒவ்வொரு பாடலையும் அசலை ஓட்டிப் போடாமல், சொந்த மெட்டைப் போட்டு பிரமாதப்படுத்தியிருந்தார். இதே போல் பல படங்களைச் சொல்லலாம் - ஹிந்தி பிரம்மச்சாரி தமிழில் எங்க மாமாவானபோது, ஹிந்தியை விடத் தமிழில் அற்புதமான பாடல்கள் - ஒரு பாடலைக் கூடக் காப்பியடிக்காமல் கொடுத்திருந்தார்.
"மேள தாளம் கேட்கும் காலம்" - இனிய நினைவுகளைக் கிளறிய தங்களுக்கு நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி
Bookmarks