அன்பு முரளி சார்,
ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்கில் கர்ணன் 25-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது பற்றி சிறப்பாக எழுதி இருந்தீர்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. கடலூரில் இருந்து சென்னை வந்து விழாவில் கலந்து கொண்ட இரு நண்பர்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்தது அனைத்தையும் இன்று அதிகாலை கைபேசியின் வழியாகத் தெரிவித்தார்கள்.
இன்னொரு சந்தோஷமான செய்தி.
என்னுடைய தங்கை தங்கள் ஊரான மதுரையில் தற்சமயம் இருக்கிறர்கள். நேற்று குடும்ப சகிதம் மதுரை மதி தியட்டரில் ஈவினிங் ஷோ பார்க்கப் போவதாக என்னிடம் தொலை பேசியில் கூறியிருந்தார்கள். எனக்கு சட்டென்று தங்கள் நினைவும், நம் அன்பு ஹப்பர் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்கள் நினைவும் வந்து விட்டது. என்னுடைய தங்கையின் கணவரிடம் தியேட்டர் செல்லும் போது கேமராவையும் எடுத்துக் கொண்டு போகச் சொல்லியிருந்தேன். பதாகைகளையும் படம் பிடிக்கச் சொல்லியிருந்தேன். (நமது திரியில் தரவேற்றத்தான்) தங்கையின் கணவரும் படம் பிடித்துக் கொண்டு இருக்கும் போதே நம் அன்பு ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு என்ன ஏது என்று விசாரிக்க என் தங்கை, "என் அண்ணன் தலைவர் ரசிகர். நெய்வேலியில் வேலை செய்கிறார். இணையத்தில் தரவேற்ற பதாகைகளை படம் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்" என்று விவரங்கள் கூறியவுடன் என் தங்கைக்கும், அவரின் கணவருக்கும் கிடைத்த மரியாதையே தனி தானாம். ரசிகர்கள் அனைவரும் தங்களுடய அன்பால் இவர்களைத் திக்கு முக்காட வைத்தார்களாம். பின் சில ரசிகர்களுடன் பேசுமாறு தங்கை எனக்கு போன் செய்து கொடுக்க அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவி தலைவரைப் பற்றி பேசி மகிழ்ந்தது மறக்க முடியாததொரு அனுபவம்.
போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே ரசிகர்களின் அலப்பறை தெளிவாக போனில் கேட்டது. ஒரே தலைவர் பாட்டு மயம்தான். பின் அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணியும், அவித்த முட்டையும் வழங்கப்பட்டதாம். தியேட்டரில் நல்ல கூட்டம் என்று தங்கை என்னிடம் கூறினார். சிறிது நேரத்திலேயே ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். காங்கிரஸ் எம்பி ஒருவர் (பெயர் தெரியவில்லை) முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரியாணி வழங்கினாராம். தியேட்டர் உள்ளே ஒரே ஆர்ப்பாட்டமும் கைத்தட்டலும்தானாம். முக்கியமாக ஓ .ஏ.கே. தேவரிடம் தலைவர் சிங்கமாய் கர்ஜிக்கும் போது கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்ததாம். படம் முழுவதும் ஆடியன்ஸ் நல்ல ரெஸ்பான்ஸாம். மிகவும் ரசித்துப் பார்த்தார்களாம். குழந்தைகளும், தாய்மார்களும் நிறைய வந்திருந்தனராம். பின் படம் முடிந்தவுடன் ரசிகர்கள் தங்கையின் குடும்பத்தை கூட இருந்து வழியனுப்பினார்களாம். என் தங்கை இவ்வளவையும் இன்று காலை என்னுடன் கைபேசியின் வழியாக பெருமகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
மதுரை மண்ணின் மைந்தர்களின் பாசத்திற்கும், அன்பிற்கும் எப்போதும் எல்லையே இல்லை என்பதும், தலைவர் மேல் அவர்கள் கொண்ட பக்திக்கு அளவே இல்லை என்பதும் எவ்வளவு உண்மை! (தங்களையும் சதீஷ் சாரையும் போல)
என் தங்கையும், தங்கை மகனும் அடிக்கடி போன் செய்து இதைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விரைவில் அங்கு எடுத்த புகைப் படங்களை மெயில் செய்வதாகவும் கூறியுள்ளார்கள். மெயில் வந்தவுடன் பதிவிட்டு விடலாம்.
அன்புடன்,
வாசுதேவன்.




Bookmarks