-
9th November 2012, 11:55 PM
#11
இன்று காலையில் சிவந்த மண் பற்றி நினைவு வந்தது. நவம்பர் 9 ஆயிற்றே. பல இனிமையான விஷயங்கள் நினைவில் அலை மோதியது. பிறகு வேலை பளுவில் முழுகி விட்டேன். மாலையில் நண்பர் சாரதி அலைபேசியில் தொடர்பு கொண்டு இது போல் சிவந்த மண் பற்றி நமது திரியில் lively discussions நடந்துக் கொண்டிருக்கிறது என கூறினார். இங்கு வந்து படித்து பார்த்தவுடன் அவர் சொன்னதில் உள்ள பொருள் புரிந்தது.
இதே திரியில் முன்பு பல முறை சிவந்த மண் பற்றி பேசியிருக்கிறோம். சிவந்த மண் படத்தின் high light ஆனா காட்சிகள் அதிலும் உள்நாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்னனின் அற்புதமான கோணங்கள் பற்றிய சாரதாவின் பதிவு நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி சந்தேகமாகவே பேசுகிறார்களே சில பேர் என்று நண்பர் ஜோ ஒரு முறை வந்து கேட்க இந்தப் படத்தின் பிரம்மாணடமான வெற்றியை வசூல் விவரங்களோடு பதிந்தது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் கூட்டத்தைப் பற்றி எழுதியது நினைவிற்கு வருகிறது, இந்தப் படத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை இங்கே எழுதியது நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தின் மறு வெளியீடுகளின் போதும் கட்டுகடங்காத கூட்டம் வந்தது நினைவிற்கு வருகிறது.
அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் நான் சிறுவனாக இருந்த போது மதுரையில் வெளியான நடிகர் திலகத்தின் படங்களை நான் ஓபனிங் ஷோ பார்க்க முயற்சி எடுத்ததைப் பற்றியும் அது எப்படி முதன் முறையாக ராஜா திரைப்படம் மூலமாக சாத்தியமாயிற்று என்பதை ஒரு சிறு தொடராக எழுதியிருந்தேன். அது இங்கே உங்கள் மீள் வாசிப்பிற்கு.
அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.
இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.
அன்புடன்
இதை எழுதுவதற்கு சற்று நேரம் முன்னர் மற்றொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிவந்த மண் பற்றி பேச்சு வந்தது. சிவந்த மண் படத்தை ஸ்கோப் ஆக உருமாற்றி Qube-ல் வெளியிட்டால் படம் மிக பிரமாதமாக போகும் என சொன்னார். உண்மைதான், இன்றைய சூழலில் படம் stero phonic sound-உடன் சினிமாஸ்கோப்-ல் மாற்றப்பட்டு வெளியிப்பட்டால் படம் பிரமாண்டமான வெற்றி பெறும் என்பது உறுதி.
-
9th November 2012 11:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks